Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

பூவா முல்லை
புலவர் குழந்தை



 


1.  பூவா முல்லை
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  பதிப்புரை
    4.  புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
    5.  மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
    6.  முன்னுரை
2.  பூவா முல்லை
3.  ஏறுதழுவல்
4.  கல்லாக் கவித்திறம்
5.  போலிச் சோழர்
6.  ஓரவஞ்சனை
7.  இந்திர விழா
8.  கலப்புக் கலை
9.  தமிழ்க் கொலை
10. யார் குற்றவாளி
11. ஊமும் செவிடும்
12. ஒருநாள் இரவு
13. வள்ளுவன் வாயது
14. முத்தார முத்தம்
15. ஊழ்
16. பாட்டியற் பரிசு
17. நனி நாகரிகம்
18. முன்னுக்குப் பின்
19. நெல்லிடைப் புல்


பூவா முல்லை

 

புலவர் குழந்தை

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : பூவா முல்லை

  தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 9

  ஆசிரியர் : புலவர் குழந்தை

  பதிப்பாளர் : இ. இனியன்

  முதல் பதிப்பு : 2008

  தாள் : 16 கி வெள்ளைத் தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11 புள்ளி

  பக்கம் : 16+ 392 = 408

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 255/-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030


பதிப்புரை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர்.

தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை.

குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப் பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள்.

(இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.)

கோ. இளவழகன்


புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு

இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார்.

தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது.

இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார்.

இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார்.

இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர் களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் -குமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார்.

வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற் காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத் திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.

வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும்.

இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன.

இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை.

‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும்.

புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன.

தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது.

1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்ழு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது.

புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர்.

புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார்.

நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006)


மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை

பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.

புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமை யாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.

பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.

அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.

4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.

அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.

அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தை யானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.

“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும்.

நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.

புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத் துரைத்தார்கள்.

சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை

1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.

1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!

எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.

வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.

இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!

கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.

“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”

நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.

கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.

“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”

என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.

இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.

கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.

தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

இராவண காவிய மாநாடு

இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.

இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசை யில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.

தீர்மானங்கள்

28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.

மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.

இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)

அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.

மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.

கலைஞரின் சாதனை!

இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.

வாழ்க அப்பெருமகனார்!


முன்னுரை

பூவா முல்லை என்னும் இந்நூலில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலான முத்தாரம் என்னும் மாத இதழில் வெளிவந்தவை யாகும். தமிழ் மக்களின் பயன்பாடு கருதி நூல் வடிவில் வெளி வருகிறது. தமிழ் மக்கள் படித்துப் பயனுறுக.

  7-12-61
  பவானி

  புலவர் குழந்தை

பூவா முல்லை


“அன்னாய்! தமிழ்முழு தறிந்த உனக்கு நான் எடுத்துச் சொல்ல என்ன இருக்கிறது? மாந்தளிரன்ன நின் மாமேனி உண்ணா திருந்திருந்து உதிர்ந்த அவ்விலை போல வாடி விட்டது. கருங்குவளையைப் பழித்த நின் கயலுண்கண்கள் உறங்கா திருந்திருந்து குவிந்த அம் மலர்போல ஒளி மழுங்கி விட்டன. ஒளிமதி போன்ற நின் மலர் முகம் எண்ணக் கவலையின் எழுவேக் காட்டால் உவாமதிபோல ஒளியிழந்து விட்டது. ஆம்பலிதழ் போன்ற நின் அமுதவாய் அரற்றியரற்றி வண்டுண் மலர்போல் பசை யிழந்து விட்டது. நான் பொய் கூறவில்லை, மெய். ஆடியிற் பார்த்து நீயே அறிவாய்.

இங்ஙனம் நீ ஆற்றாது வருந்தினால், இயற்கையின் அமைந்த நின் கட்டழ கென்னாம்? பசப்பென்னும் பாவி உண்டேப்ப மிட்டுக் களிப்பானன்றோ? அன்னாய்! பொறையே பெண்டிர்க்குப் பூண் என்பது, புலவர் பெரு மக்களின் பொருளுரை யன்றோ? அன்றியும், நீயோ தொல்காப்பியத்தை எழுத்தெண்ணிப் படித்தவள். நீ கொண்டுள்ள இவ்வாற்றாமையை அவர், “தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்” என்னும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணை யென்றல்லவோ புகல்கின்றார்? தொல்குடிப் பிறந்த உனக்கு அது தகுமோ? அன்னாய்! எண்ணிப்பார்.”

“போடி!வாயால் சொல்லுகிறவளுக் கென்ன? பொறு மைக்கும் ஓர் எல்லை யில்லையா? பொறுமை பொறுமை! நல்ல பொறுமை! என்னைப் பொறுமையில்லாதவளென்று குறைகூறுதல் உனக்கே தகும். யார் என்னைப் போல் பொறுமையுடையவர்? ஒன்றா இரண்டா? முப்பத்திரண்டு மாதங்கள்! பொறுத்தாச்சு பொறு பொறென்று. இத்தனை மாதங்கள் என்போற் பொறுமை யாக இருந்தவர் யார்? ஓர் எடுத்துக்காட்டுச் சொல் பார்க்கலாம்?”

“நான் சொல்ல வேண்டுமா? நீயே கற்றறிந்திருப்பாயல்லவா? உன்போற் பிரிவாற்றாது வருந்துவதை ஒவ்வாக் காமம் என்னும் அதே தொல்காப்பியர், தலiயைப் பிரிந்துவெளி நாடுகட்குச் சென்று அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை, தொழிற்றிற மைகளை, நாகரிக நல்வாழ்வினை நேரிற் கண்டறிந்து வரப் பிரியும் அவ்வோதற் பிரிவு மூன்றாண்டு வரை உண்டென் கின்றாரல்லவா? நம் முன்னோராகிய தலைவியர், அம்மூன்றாண்டுக் காலமும் ஆற்றியிருந்த அவ்வாழ்வியலை யல்லவோ தொல் காப்பியர் இலக்கணமாகச் செய்துள்ளார்?”

“ஆமாம், இவ்வாறு இலக்கணங் காட்டி வருத்துவது தானே உன் போன்ற தோழியரின் தொழில்? நீ யென்ன அதில் இளைத்தவளா? ஆற்றியிருத்தற்கும் ஓர் எல்லையே இல்லைப் போலும்!”

“கொங்குச் செல்வி! நின் பிறந்த குடிப் பெருமையை எண்ணிப்பார். கொங்கு நாட்டார் பொறுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர். நம்மவரென்று இங்ஙனம் கூறவில்லை. மயிலுக்குப் போர்வை போர்த்த வள்ளல் பேகன், தன்னைப் பிரிந்து வெளிநாடுகூடச் செல்லவில்லை. உள்ளூரிலேயே அதுவும் மற்றொருத்தியின் வீட்டில் இருந்தும், அப்பேகன் மனைவியாகிய கண்ணகி என்னும் கொங்கர் குலக் கொம்பர் ஆற்றியிருந் தனள் என்பதை நீ புறநானூற்றில் படித்தறிந்துள்ளா யல்லவா? கொங்கு வேளிர்குடி சிறப்பு மிக்க தொன்முது குடி. அக்குடியிற் பிறந்த நீ பிறந்த அக்குடிப் பெருமையைக் கெடுக்கலாமா? கொங்கு நாட்டுக் குரிசிலான இளங்கோவேளின் மகள், இளங்கோ வேண்மாள், பெண்டிர்க்குப் பூணாக விளங்கும் பொறையிறந்து அக்குடிப் பெருமையைக் கெடுத்தாள் என்னும் பழிச் சொல்லை. நிலை நாட்டுதல் உன்போன்ற நற்குடிப் பிறந்த நங்கையர்க் கழகாகுமோ!”

“இன்னுங்கேள். நின் மாமியாரின் மாமியாரான வெளியன் வேண்மாள் என்னும் நின் குலக் கொடி, தன் கொழுநரான உதியஞ்சேரல் என்பார், பல போரில் ஈடுபட்டிருந்த போதும், வடநாட்டில் நடந்தபாரதப் போரின் போது பாண்டவர்க்குப் படைத்துணையாகி, அன்னார் படைக்குப் பெருஞ்சோறளித்துக் கொண்டிருந்த போதும் ஆற்றியிருக்க வில்லையா?”

“ஏன்? நின் மாமியார் நற்சோணை யம்மையாரையே எடுத்துக்கொள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நின் மாமனார், யவனர் என்னும் மேனாட்டினர், நமது நாட்டை அடுத்துள்ள கடல் தீவுகளில் வந்து தங்கியிருந்து அடிக்கடி நம் நாட்டிடைப் புகுந்து குடிமக்கட்குத் தொல்லை கொடுத்து வந்த அன்னாரை, கடலிடைப் பலகலஞ் செலுத்திச் சென்று வென்று சிறைபிடித்து, அன்னார் ஆங்கு அணுகாதபடி செய்யப் பிரிந்த போதும், இமயம் வரைப் படையெடுத்துச் சென்று, பல மாதங்கள் ஆங்குள்ள வடவரச ரோடு பொருது வென்று, இமயத்தில் விற்பொறித்து மீளும் வரை ஆற்றியிருக்க வில்லையா? பிறந்த குடிக்கும் புகுந்த குடிக்கும் பெருமை யுண்டாகும்படி நடந்து கொள்வதே, அக்குடிப் பெருமையினைக் கெடுக்காதிருப்பதே பெண்ணின் கடமை யாகும். அன்னாய் நன்கு எண்ணிப்பார்.”

“நீ சொல்வ தெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நான் தப்பென்று சொல்லவில்லை. நீ சொல்லின் செல்வியல்லவா? சொல்வன்மை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லும் சொல்வன்மை யிலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழும் நீ சொல்வதை என்னால் மறுக்க வியலாதுதான் ஆனால்?”

“அன்னாய்! ஆனால் என்பதன் பொருள். ‘ஆனால், நீ சொல்வதை ஒப்புக் கொண்டாலும், சொல்வது உண்மை என்பதை உணர்ந்தாலும் என்னால் ஆற்றியிருக்க முடிய வில்லையே என் செய்யட்டும்? நீர்மலிவான் எனத் தமிழகத்தை வளப்படுத்துத் தமிழ்மொழி போல மக்கள் வாழ்தற் கினிமையுடைய தாக்கி, மேனாட்டினரும் வட நாட்டினரும் விரும்பி வந்து தங்கி வாழும் படி செய்வித்த பெருமையுடையது நீலமலைத் தொடர். உலகிலுள்ள பெருமலை களில் தன் னிருபால் உள்ள நிலத்தையும் வளமுறச் செய்யும் மலைத் தொடர் இதுவே யாமெனில் அது மிகைபடக் கூறலாகாது. அத்தகைய பெருமை பொருந்திய நீலமலையின் மேற்குச் சாரலில் தோன்றி, தன் மேல்பாலுள்ள நிலத்தை வளஞ் செய்து மேல் கடலில் - அரபிக்கடலில் - சென்று கலக்கும் பேராறு, ஆன்பொருநை என்னும் பேராறே யாகும். அவ் வான் பொருந்தத்தினையே அகழாகக் கொண்டு விளங்கும் மேல் கடற்கரைப் பட்டினமாகிய நமது வஞ்சிமாநகர் அவரில்லாத காரணத்தால் பொலிவற்றிருக்கிறது. அப்பழம் பெருமுது நகரின் நடுவே, எல்லாச் செல்வமும் பொருந்திய அகன்றுயர்ந்த கோயிலின் கண்ணே, நெடிய அடுக்குகளுடன் உயர்ந்து, ஞாயிறு கடந்து செல்ல முடியாமல் விலகிச் செல்லும் இப்பொன் மாளிகையில், சுற்றிலும் முத்தாரங்கள் தொங்கும் ஓவியக் கூடம் போல விளங்கும் மேற்கட்டினையுடைய, தங்கத் தகடு போர்த்து அதன் மேல் வைர மணிகள் பதிக்கப் பெற்ற குத்துக்கால்களையும் சட்டங்களையும் உடைய இப்பொற்பாடிலின் மீது, தன் சேவலுடன் கூடிய உணர்ச்சியால் அனைப்பேடை உதிர்த்த மென்மையான அடி வயிற்றுத் தூவிகளையிட்டுப் பல அடுக்குகளாகத் தைத்து விரிக்கப் பட்ட இப்பஞ்சணை, அவரில்லாத பொலிவின்றிப் புல்லென்று கிடக்கின்றது’ என்பது தானே?”

“ஆமாம். அதற்கென்ன ஐயம்? சென்ற ஆண்டு அவர் பிறந்த நாள் விழா நடந்ததா என்ன? இவ்வாண்டு தான் என்ன? நாளை அந்நன்னாள் நடக்கவா போகிறது? அவர் பிரிந்து சென்றதிலிருந்து இப்பஞ்சணை பயனின்றித் தானே கிடக்கின்றது? அவர் இங்கிருந்திருந்தால் நகர மக்கள் எத்தனை திருநாளும் பெருநாளும் கொண்டாடிக் களித்திருப்பர்? மக்கள் மகிழ்ச்சி தானே நம் மகிழ்ச்சி?”

“ஆம், அன்னாய்! ஆனாலும் மகிழ்ச்சியைவிட மானக் கேடு பெரிதல்லவா? வடவராகிய கனகனும் விசயனும் மானத்தின் செல்வர்களாகிய தமிழர்களைத் திறமையற்றவர் என்று பழித்த அப்பழியைத் துடைக்க வல்லவோ நம் தலைவர் சென்றிருக்கிறார் ஆண்மையற்றவரென அயலார் பழித்த பழியைப் போக்கிப் பழியற்றவர்களாய், மானத்தோடு வாழ்வதை விடவா மக்கள் திரு நாளையும் பெருநாளையும் விரும்புவர்? மானங் கெடவரின் உயிர் நீங்கும் மாண்புடைய ரல்லரோ தமிழர்?”

“இல்லை, மானத்தோடு வாழ்வதைத் தான் விரும்புவர். தன்மானம் என்பது தமிழரின் தனிப்பண்பாடு என்பதை நான் மறுக்கவில்லை. தமிழ்மக்களின் பழி துடைக்கச் சென்றுள்ளதை நான் பாராட்டுகிறேன். ஆனாலும், என் ஆற்றாமை என்னவோ என் மனவுறுதியையுங் குலைத்து என்னை வருந்தும் படி செய்கிறது. அதை அடக்கும் ஆற்றல் இல்லாதவளாக நான் இருக்கின்றேன். என் ஆற்றாமை, நாணுத்தாழ் இட்ட நிறை என்னும் கதவை உடைத்துக் கொண்டு வெளிக் கிளம்புகிறது. இன்ன செய்வ தென்றே எனக்குத் தோன்றவில்லை. தோழி! நின் ஆறுதல் மொழிகள் என் செவியில் புக இடமில்லாமல் செய்கிறது அவ்வாற் றாமை!”

“சேரமாதேவி! பத்துப் பாட்டினுள் ஒன்றான முல்லைப் பாட்டை நீ படித்தறியாதவள் அல்லள். அம்முல்லைப் பாட்டு என்ன கூறுகிறது? அதில் கூறும் முல்லைத்திணையின் இலக்கணம் என்ன? பிரிந்துசென்ற தலைவன் வரும் வரை, அவன் எதகற்காகப் பிரிந்து சென்றானோ அத்தொழில் வெற்றியில் மனத்தைச் செலுத்தி, அதாவது தலைவன் மேற் கொண்டுள்ள தொழில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ண முடையளாய் அவன் வெற்றி தன் வெற்றியாகக் கொண்டு தலைவி ஆற்றியிருத்தல் தானே முல்லைத்திணை என்கின்றது அம்முல்லைப்பாட்டு? அப்பாட்டினைப் பன்முறை பயின்றுள்ள நீ அதன் பயனை யிழத்தல் முயைhகுமா? ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்பது பொய்யா மொழியன்றோ? கற்றதன்படி நடப்பது தானே கல்வியின் பயன்?”

“அன்னாய்! நம் பொன்மாளிகையின் புறத்தே நாம் வைத்து வளர்த்து வரும் முல்லைக் கொடியின் அரும்புகள், தம்மைப் பிரிந்து சென்ற மாலைக்காலம் வந்த பின் தானே மலர்கின்றன? ஓரறிவுயிராகிய அக்கொடி முல்லையின் இச்செயலைக் கொண்டு தானே நம் முன்னோர்கள் ஆற்றி யிருத்தற்கு முல்லை என்று பெயரிட்டுள்ளனர்? இது பற்றித் தானே இத்திணையைப் பூவா முல்லை எனச் சிறப்பித்துப் போற்றலாயினர்? வாடா வஞ்சிக் கொடியாகிய நீ, பூவா முல்லைக் கொடிபோன்றிருப்பது தானே முறை? அன்னாய்! நின் தமிழுள்ளத்தால் நன்கு எண்ணிப்பார்!”

“எண்ணிப் பார்க்காமலில்லை. எண்ணி யெண்ணி என் மனம் புண்ணானது தான் மிச்சம்! ஓரறிவுயிராகிய அப்பூக்கும் முல்லைபோல ஆறறிவினளாகிய என்னால் அப்பூவா முல்லை யைப் போற்ற முடிய வில்லையே.ஆற்றுதல் என்பது என் ஆற்றலை மீறிய ஒன்றாகி விட்டது. யார் வெளியில்?”

“கூனும்குறளுமாகிய நம் குற்றேவல் மகளிர் வருகின்றனர்.”

“அன்னாய்! வாழ்க நின் பெண்மை! வளர்க நின் இன்பம்! நம் தலைவர் வந்து விட்டார்.”

“வந்து விட்டாரா! இந்தா! இம் முத்துமாலையை அணிந்து கொள்.”

“அன்னாய்! தமிழரின் பழியைத் துடைக்கச் சென்ற நம் தலைவர், தமிழ் பழித்த கனக விசயரைச் சிறைபிடித்து வருகின் றாராம்; அவர் தம் முடித்தலையில் கண்ணகியின் படிமக்கல் ஏற்றி வருகின்றாராம்; நம் வளமார் வஞ்சியினின்று வஞ்சிசூடிச் சென்ற அவர், தும்பை வேய்ந்து சில நாழிகையில் வாகை புனைந்து வெற்றிக் களிப்புடன் நம் நகர்நோக்கி வந்து கொண்டிருக் கிறாராம். சோழ பாண்டியர்க்குக் காட்டி மகிழ்ச்சி யூட்டிவர, வில்லவன் கோதை அவ்வடவரை அழைத்துச் சென்றிருக் கிறாராம். அன்னாய்! நின் ஆற்றாமை ஒழிக! வாழ்க பல்லாண்டு! வெற்றிக் களிப்புடன் வரும் தலைவரை வரவேற்கச் செல்வோம்; ஒப்பனை செய்து கொள்க. அன்னாய்! பட்டாடையும் பன்மணிக் கலன்களும் நின் மேனியைப் பொருந்துவதாக. ஒருங்குபன் நறுமலர் நன் கருங்குழலின் மருங்கடைக! அன்னாய்! வாழ்க நின் எழில் நலம்!”

“அன்னாய்! இங்கே வருக! அதோ பாரும், நகரின் கீழ் பால் உள்ள அச் சில்குன்றில் ஒரு யானை அசைவற்று நிற்பதை. ஏன்அவ்வாறு வாளா நிற்கின்றது? அதோ அத்தினைப்புனத்தின் அருகில் உள்ள வேங்கை மரத்தின் கீழ் ஒரு கானவன் உட்கார்ந் திருப்பதைப் பாரும். அவன் மூங்கிற் குழலிலிட்டுப் புதைத்து வைத்த முதிர்ந்த தேனையுண்டு மயங்கிக் கவண்கல் எறிவதை விட்டு அயர்ந்து அவ்வாறு வாளா உட்கார்ந்திருக்கிறான். அவன் அவ்வாறு உட்கார்ந்திருப்பது கண்ட யானை தினை யுண்ண வந்தது. பின் ஏன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அப்படியே நிற்கிறது? ‘வஞ்சிசூடி வடநாடு சென்று வாகை சூடிய யானை விரைந்து வருகிறது. அது வரும் வழியில் சென்று அதனைக் கண்டு களிப்பாய்’ என்று உயர்ந்த பரண் மீதிருந்து நம் தலைவரின் வெற்றிச் செயலைப் பாடும் குறத்தியரின் குறிஞ்சிப் பாடலைக் கேட்டுத்தான் அவ்யானை அவ்வாறு நிற்கிறது. தமிழிசையின் பெருமையே பெருமை!”

“அதோ அவ்வயலிடை உழும் உழவன் பாடும் மருதப் பாடலைக் கேட்பாயாக. அவன் பாடுவதென்ன? ‘என் அருமை எருதுகளே! வடநாடு சென்ற நம் மன்னவன், வடவரின் கொட்டத்தை யடக்கி மீண்டனன். நாளை நமது மன்னனின் பிறந்த நாள். சிறையிலிருக்கும் பகைவர்களின் விலங்கு நீங்கும் அப்பெருமங்கல நாளில் நான் கலந்துகொள் வேனாதலால், உங்களுக்கும் நாளை விடுமுறை நாளாகும். நீங்களும் நாளை நுகம் பூணுதல் தவிர்வீர்’ என்பதே அவன் பாடும் பாட்டின் பொருளாகும்.”

“அதோ குளிர்ச்சி பொருந்திய ஆன்பொருநை யாற்றில் நீராடும் அம்மகளிர் வழித்தெறிந்த தொய்யிற் குழம்பும், முகத்துக்குப் பூசிய பொற் சுண்ணமும், கூந்தலிற் சூடிய நறுமலர்களும் வானவிற் போலத் தோன்றும் அப்பேரியாற்றின் பெருந்துறையில், வண்ண வண்டுகள் உண்ணும்படி மலர்ந்த நீலமணி போலும் நிறத்தினை யுடைய குவளை மலரையும், முள்ளிப் பூக்களையும், மலர்களின் தலைமையேற் றொளிறும் தாமரை மலரையும் கலந்து சூடிய கோவலர்கள், அவ் வகன் கரையிலுள்ள, வெள்ளைக் கொக்குப் போல மலர்ந்த தாழை மரத்தின் கிளையின் மேல் இருந்து கொண்டு, ‘ஏ! எம் அன்புக்குரிய ஆக்களே! விற்கொடியை யுடைய நம் மன்னவன் வெற்றிக் கொடியுடன் மீண்டனன். இமயமலைப் பக்கத்தே யிருந்து அவன் கொண்டு வந்துள்ள ஆநிரைகளைக் கண்டு அவற்றுடன் அளவளாவுவீர்’ என்று, அவ் வாநிரைகளை நீர்குடிக்க விட்டு அக் கோவலரூதும் குழலிசையைக் கேட்பாயாக.”

“அதோ அலை வீசுகின்ற அக்கடற்கரையைப் பாரும். அதோ அக்கடற்கரை மணல் மேட்டிலுள்ள புன்னை மரத்தின் கீழ் வெண்சங்கீன்ற ஒளிவெண் முத்துக்களைக் கொண்டு பாடிக் கொண்டு கழங்காடும் மகளிரைப் பாரும். அவர்கள் என்ன பாடுகின்றார்கள்? ‘எங்கைமீர்! வடநாடு சென்ற நம் மன்னர் பெருமான் வந்தனன். நீண்ட நாளாய் அவனைக் காணாத நம் கண்கள் கண்டு களிக்க; பனை மாலையுடன் சூடிய வஞ்சியும் தும்பையும் வாகையும் வாழ்க’ என்பதேஅவர் பாடும் பாட்டு.”

“குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானிலங் களும் சூழ்ந்து விளங்கும் நமது வஞ்சிமா நகரின் சிறப்பே சிறப்பு!”

“அம்மா! அதோ, வெற்றி முரசொலி முழக்கம்!”

“ஆமாம், அன்னாய்! அதோ யானையின் மீது நம் அரசர் பெருமான்! வாருங்கள் போய் எதிர்சென்றழைக்க ஏற்பாடு செய்வோம்.”

“இதோ! நம் தலைவியின் தளர்ந்த வளையல்கள் செறிந்து விட்டன.”

“வளையல்கள் செறியவில்லை. வாடிய முன்கை பெருத்து விட்டது.”

“நீங்கள் இருவர் சொல்வதும் ஒரே பொருள் தான்.”

“நமது தலைவி, பொறையெருப் போட்டு, அன்பு நீர் பாய்ச்சி முப்பத்திரண்டு மாதங்களாய் அருமையாக வளர்த்து வந்த பூவா முல்லை இன்று பூத்து விட்டது. பூத்துப் பொலிவதைப் பாருங்கள். வாழ்க நம் தலைவியின் அப்பூவா முல்லை!”

ஏறுதழுவல்


வீரம், கொடை, புகழ் என்னும் இம்மூன்றுமே மக்கள் வாழ்வின் பயன்பாட்டுக் குறிக்கோளாகும். இம்மூன்றனுள் வீரமே ஏனையிரண்டிற்கும் காரணம் எனலாம். வீரத்தாற் பொருளீட்டி எளியவர்க்குக் கொடுத்துப் புகழ் பெறுதல் முறை யாதல் காண்க. வீரமற்றவர் வாழ்வின் குறிக்கோளை உள்ளபடி அடைய முடியாது. நம் முன்னையோராகிய பழந்தமிழ் மக்கள் இவ்வுண்மையையுணர்ந்து கடைப்பிடித்து உயர்வாழ்வு வாழ்ந்து வந்தனர் என்பது அறிந்து இன்புறற்பால தொன்றாகும்.

தமிழ்நாடு வீரத்தின் விளைநிலம். வீரக் குடிமக்களின் வாழ்விடமாய் அமைந்தது தமிழ் நாடு. தமிழ் நாட்டின் வீரம் உலகப் புகழ் பெற்றது; உவமைப்பொருளற்றது;உயர்வுக் குயர் வுற்றது. தமிழர் வீரம் கதிரவனின் ஒளி போன்றது; காற்றின் அலை போன்று; கனை கடலின் நிலை போன்றது. வீரமே உருவானவர் தமிழ் மக்கள் என்பது சுருங்கக் கூறி விளங்க வைத்தலாகும்.

புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க நூல்களில் தமிழர் வீரத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளக்கமாகக் காணலாம். அகம், புறம் என்னும் தமிழர் ஒழுக்கக் கூறுபாட்டில் புறம் என்பது வீரத்தின் திரட்சியேயாகும். பழந்தமிழ் மக்களின் வீரக் கருவூலமே புறப்பொருள் என்னலாம்.

பழந்தமிழ் மக்கள் வீரத்திற்கு இலக்கியங் கண்ட தோடு மட்டும் நிற்கவில்லை; வீர இலக்கியத்திற்கு இலக்கணமும் கண்டு எழுச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தொல்காப்பியப் பொருளதி காரப் புறத்திணையியல் என்பது வீர இலக்கணப் பிழம்பாகும். வீரத்தை ஓர் ஒழுக்கமாகக் கொண்டு, அதற்கு இலக்கியமும் இலக்கணமும் கண்ட பெருமை தமிழ் மக்களுக்கே உரிய தனிப்பெரு மையாகும்.

பழந்தமிழ் வீரம் புறவாழ்வோடு மட்டும் நின்று விட வில்லை; அவர்தம் அகவாழ்வும் வீரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. வீரமற்ற ஆடவரை மகளிர் விரும்பாமையும், கற்பென்னும் திண்மையும், உடனுயிர் நீத்தலும், ஆடவரும் காதல் தப்பின் சாதலை மேற் கொண்டதும் இதற்குச் சான்றாகும். அக்கால ஆடவரும் மகளிரும் தபுதார நிலையும், தாபத நிலையும் மேற்கொண்டு வாழ்ந்ததும் வீரத்தின் பாலதேயாகும். அகவாழ்வு, புறவாழ்வு என்னும் வாழ்வின் இரு கூற்றினும் வீரம் பொருந்த வாழ்ந்து வந்த நம் முன்னையோர் வாழ்க்கை முறை நம்மனோரால் மேற்கொள்ளத் தக்க தொன்றன்றோ? அன்னார் நடக்கை முறைகளைக் கைவிட்டுப் பெயரை மட்டும் விடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கும் தற்காலத் தமிழர் வீரமே வீரம்!

போர்க் காலத்தே மட்டுமன்றி, திருநாள், பெருநாள் ஆகிய சிறப்புக் காலத்தும் பழந்தமிழ் மக்கள் வீரக் குறிப்பு நிகழ்த்தி வந்தனர். போர்க்குப் புறப்படும் முன் ஒரு நாள், மறக்குடிமக்கள் வாளும் வேலும் கொற்றக் குடையும் உயர்த்தி, ஆடல் பாடலுடன் நகர்வலம் வருவர். அது வாள் நாட்கோள், குடைநாட்கோள் எனப்படும். வாணாள் குடைநாட்கோ ளன்று, மறவர்கள் வாளை நாட்டித் துடியென்னும் ஒருவகைப் பறையடித்துக்கொண்டு அவ்வாளைச் சுற்றி ஆடிவந்து, அவ்வாள் முனையில் வீழ்ந்து உயிர்விடுவர் ஒரு சிலர். இவ்வீரக்குறிப்பை அவிப்பலி என்பர் தொல்காப்பியர். அதாவது வெற்றி வாளுக்கு,வெற்றியின் உருவ மான கொற்ற வைக்குத் தம் ஆவியைப் பலியிடுதல் என்பது பொருள். அதனால், இது கொற்றவை நிலை எனவும் வழங்கும். இது வியத்தகு வீரக்குறிப்பாகு மன்றோ? இன்று தேர்த்திருநாளின் போது அலகுகுத்திக்கொண்டாடுதல் அத்தகைய வீரக் குறிப்பின் நினைவு நிகழ்வேயாகும்.

இன்று தமிழ் மக்கள் தமிழ்த்திருநாள் என உரிமை யுணர்ச்சி யுடன் கொண்டாடி வரும் தைப்பொங்கல் திரு நாளின் போது, தமிழ் நாட்டின் சில பகுதிகளில் ஒரு காளையை விரட்டிவிட்டு, அதனைப் பிடித்தடக்குவோர்க்குப் பரிசு வழங்கிப் பெருமைப் படுத்தி வருகின்றனர். இது சல்லிக்கட்டு, மாடுபிடித்தல், காளைப்போர், மஞ்சிவிரட்டு என, இடத்துக் கிடம் வெவ்வேறு பெயர்களில் வழங்கி வருகிறது. இது தமிழர்க்குப் புதிதன்று; பழந்தமிழ் மக்கள் நிகழ்த்தி வந்த ஏறுதழுவல் என்னும் வீரக் குறிப்பைப் பின்பற்றியதேயாகும். ஏறு - காளை. தழுவுதல் - பிடித்தடக்குதல்.

ஏறுதழுவல் : ஏறுதழுவல் என்பது, தைப்பொங்கற்றிரு நாளின் போது பழந்தமிழ் மக்கள் கொண்டாடி வந்த ஒரு வீர விளையாட்டாகும். தைப் பொங்கலின் போது, இன்று பந்தயக் குதிரைகள் வளர்ப்பது போல, அதற்கெனவே வளர்க்கப்பட்ட காளைகளைக் கூராகக் கொம்புகளைச் சீவி ஒரு தொழுவத்தில் விட்டு, பறையறைந்து வெருளச் செய்வர். அவை வெருண்டு கண்கொண்டு அங்குமிங்கும் ஓடித்திரியும்.

ஏறுதழுவும் காளையர் அத்தொழுவத்திற்குட் புகுவர். புகவே, இக்காளையரைக் கண்ட அக்காளைகள் சினங் கொண்டு சீறிச் செருக்கடித்துக் கொண்டு பாயவரும். அக்காளையர் அஞ்சாது எதிர்த்துச் சென்று அக்காளைகளைப் பிடிப்பர். கண்கொண்ட காளைகட்கும் கைகொண்ட காளை யர்க்கும் கடும் போர் நடக்கும். போர்க்களத்தில் நடக்கும் களிற்றுப் போர் இங்கு நினைவு கூரப்படும். இக்காளைப் போரில் ஒரு சிலர் வீரச்சா வெய்துவர். வென்றவர் வீரப்பரிசு பெறுவர். அக்காளைய ரால் பிடித்தடக்க முடியாத காளைகள் வீரப்பரிசு பெற்றுத் தம்மை வளர்த்த வரைப் பெருமைப் படுத்தும். இதுவே பழந்தமிழ் மக்கள் நிகழ்த்தி வந்த ஏறு தழுவல் செய்தியாகும்.

கண்கொண்ட அக்காளைகள் தம்மைத் தழுவு வோரைக் கூரிய கொம்பால் குத்திக் குடரைச் சரித்துக் கொல்வதைக் கண்டும், பழந்தமிழ்க் காளையர் மேலும் மேலும் அடுத்துச் சென்று அக்காளைகளைத் தழுவிய வண்ணம் இருப்பர். சாவுக் கஞ்சுதல் எங்ஙனம் வீரத்தின் பாற்படும்? அப் பழந்தமிழ் வீரம் இன்று தமிழ் மக்களிடை அருகினமையே, தமிழ் நாடு இன்று தன் பெயர் சொல்லவும் அஞ்சி அடங்கி ஒடுங்கி அலமந்து கிடப்பதற்குக் காரணமாகும்.

அவ்வேறுதழுவலில், அப்பழந்தமிழ்க் காளையர்கள் தம் வீரச் செயலைக் காட்டி அக்காளைகளைப் பிடித்தடக்கி வீரப் பரிசு பெற்று விளங்கினமை போலவே அக்காளைகளும், அன்று போரில் யானைகளும் குதிரைகளும் தாமாகவே வீரங் கொண்டு பொருது, யானைமறம், குதிரைமறம் என்னும் புறத்திணைத் துறைச் சிறப்புப் பெற்றமை போலத் தம் வீரச் செயலைக் காட்டி வீரப் பரிசு பெற்று விளங்கின. வீரத்தின் பிறப்பிடமான தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவை யன்றோ அக்காளைகள். இக்காளை யர்களுக்குள்ள வீரம் அக்காளை களுக்கில்லாமலா போகும்?

நம் முன்னையோர் ஏறுதழுவிய இச்செய்தி, எட்டுத் தொகையில் ஒன்றான, ‘கற்றறிந்தார் போற்றும் கலி’ என்று சிறப்பிக்கப்படும் கலித்தொகையின் முல்லைக் கலியிற் கூறப் படுகிறது. அது இக்காலத் தமிழ் மக்கள் அறிந்து பெருமை கொள்ளற்குரிய பெருமையுடைய தொன்றாகும்.

ஆனால், அது காலத்துக்கேற்ற மாறுதலையடைந்துள்ளது. புறப்பொருளாகிய அது, காதற்கலப்புடன் இணைக்கப்பட்டு, கற்பனை நலம் பொலிய அகப் பொருளின் கருப் பொருளாகக் கொள்ளப்பட்டு, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அவ்வளவில் உருப்பெற்றுள்ளது; முல்லை நில மக்களாகிய ஆயர்களின் காதற் கலப்பின் கடப்பாட்டுக் கருவியாக அமைந்துள்ளது. ஒருவன் ஒருத்தியின் கூட்டு வாழ்வை யுண்டாக்கி,அன்னார் இனிது இன்புற்று வாழ ஏதுவாக இனிதின் அமைந்துள்ளது அவ்வேறு தழுவல்.

ஆயர் என்பது, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் அகவொழுக்கம் ஐந்தனுள் ஒன்றான முல்லை யொழுக்கம் - இருத்தல் ஒழுக்கம் - நிகழ்தற்குரிய இடமான முல்லை நில மக்களைக் குறிக்கும் பெயரே யன்றி இனப்பெய ரன்று. இது நிலம் அல்லதுஇடத்தாற் பெற்ற பெயராகும். முல்லை, குறிஞ்சி முதலிய எல்லா நிலமக்களும் ஒத்த தன்மையையுடைய ஓரின மக்களே யாவர். அகப் பொருட்ட லைவனும் தலைவியும் அவ்வவ் வொழுக்கம் நிகழ்த்தும் போது அவ்வந் நிலமக்களாகக் குறிக்கப் பெறுவர்.

பருவமுற்ற ஒவ்வொரு ஆயர் மகளிரும் ஒவ்வொரு காளை வளர்த்து வருவர். அவை அன்னார் தம் காதலரின் வீரத்தின் அளவை அளக்கும் கருவியாகப் பொலிவுற்று வளர்ந்து வரும். ஏறுதழுவற்குரிய காலத்தே, ‘எம்மகள் வளர்க்கும் காளையைத் தழுவிய காளைக்கு எம்மகளைக் கொடுப்போம்’ என, அம்மகளிரின் பெற்றோர் பறையறைந் தறிவிப்பர். பறை யொலி கேட்ட அக்காளைகட் குரியாரின் காதலங் காளையர் உவப்பால் உள்ளம் உப்பி, ஊக்கத்தால் உடல்வலியுற்று, ஏறுதழுவும் அந்நன்னாளை ஆவலுடன்எதிர் நோக்கியிருப்பர்.

பழந்தமிழரிடை நிகழ்ந்து வந்த ஏறுதழுவற் செய்தி போலவே, இன்னுயிருண்ணும் ஈட்டிபோலக் கொம்பு சீவப்பட்ட அக்காளை களை அதற்கென உள்ள பெரிய தொழுவத்தில் விடுவர். தொழுவத் தைச் சுற்றிலும் உட்புறத்தில் சுவரையடுத்து அமைக்கப்பட்டுள்ள பரண்களில் அக்காளை கட்குரிய ஆயர் மகளிர் ஒவ்வொருவரும் தத்தம் தோழி மாருடன் அமர்வர்.

குறித்த நேரத்தில் முரசொடு பறையும் துடியும், சங்கொடு கொம்பும் குழலும் முதலிய பல்லியம் கார் காலத்து இடியென முழங்கும். அம்முழக்கங் கேட்டு, மலையினினின்றும் வீழ்கின்ற அருவி போல வெள்ளிய கால்களையுடைய காரி, மீன் பூத்து விளங்கும் மாலைக் காலத்து வான் போன்ற வெள்ளிய புள்ளி களையுடைய சிவலை, ஒளி பொருந்திய இளம்பிறை போல வளைந்து நீண்ட கூரிய கொம்புகளையுடைய சிவலை, பலராமன் மார்பில் அணிந்த சிவந்த மாலை போலக் கழுத்தில் சிவந்த மறுவினையுடைய வெள்ளை, சிவபெருமான் நிறம்போன்ற கபிலை முதலிய வெவ்வேறு நிறங்களுடன் விளங்கும் அக்காளைகள் வெருண்டு கண்கொண்டு சினத்துடன் செருக் கடித்துக் கொண்டு தொழுவத்துள் திரியும்.

அவ்வேளை, பிடவம் காயா செங்காந்தள் முல்லை குல்லை குருந்து கோடல் முதலிய பூக்களால் கட்டிய கண்ணிகளை அணிந்த ஆயர்கள் ஏறுதழுவும் விருப்போடு தொழுவினுள் புகுவர். புகவே, அக்காளைகள் கதங் கொண்டு இக்காளையரைப் பாய வரும். காளையர்க்கும் காளைகட்கும் கடும்போர் நடக்கும்.

“தொழுவினுள்,
புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு”

முல்லைக் - 3

“எழுந்தது துகள்
ஏற்றறர் மார்பு
கவிழ்ந்தன மருப்புக்
கலங்கினர் பலர்”

-   முல்லைக் - 2

என, அப்போரின் கொடுமை புகலப்படுகிறது கலித் தொகையில்.

இங்ஙனம் ஏற்றுப்போர் நிகழும் போது, விண் மீன்களாற் சூழப்பட்ட மதியைப் போலத் தோழியரால் சூழப்பட்டுப் பரண்மேல் உள்ள தலைவியர்க்கு அன்னார் தோழியர் தத்தம் காளைகளின் வீரச் செயலையும், அக்காளைகளைத் தழுவும் காளையரின் வீரச் செயலையும் உவமை நயத்துடன் எடுத்தியம்புவர். அக்காதலங் கன்னியர் அவ்வீரச் செயல்களைக் கண்டுங் கேட்டுங் களித்துழியிருப்பர். அத்தோழியர் கூற்றுள் ஒரு சில வருமாறு:

“அன்னாய்! உயர்ந்த மரக்கிளையினிடத்தே யுள்ள கூட்டினுள் இருக்கும் அழகிய பட்டுப் புழுப் போன்ற நிறத்தையுடைய ஏற்றினைக் கண்டு, அஞ்சாது அதன் மேற் பாய்ந்தானைச் சாவக் குத்திக் கொம்பினிடத்தே எடுத்துக் கொண்டு, அவன் உடலை உருக்குலையச் செய்யும் அவ்வேற்றின் தோற்றத்தைப் பாராய்! பாரதப் போரில் துரோபதையைத் துகிலுரிந்து மானக் கேடுறச் செய்த துச்சாதனனுடைய நெஞ்சைப் பிளந்து, பகைவர் நடுவே தனது வஞ்சினத்தைத் தீர்த்துக் கொண்ட வீமசேனனைப் போலும்!”

“தோழீஇ! செவியில் மறுவையுடைய சிவந்த சிறிய புள்ளி களையுடைய அவ்வெள்ளை, ஒருவனைக் குடர் சரியக் குத்திக் கொம்பிடைக் கொண்டு, அவன் உடலை உருக்குலைப் பதன் தோற்றத்தைப் பாராய்! பாரதப் போரில் கண்ணஞ்சுங் கங்குற் போதில், துரோணாச் சாரியைக் கொன்ற சிகண்டி யென்பானைக் கொன்று, தன் கைகளால் அவன் தலையைத் திருகும் அசுவத்தா மனைப் போலும்!”

“இகுளைஇ! இதோ ஈங்’கொன்று. ஒளிமிக்க வெண்மதி போன்ற நெற்றிச் சுட்டியையுடைய அக் காரி, ஒருவனைக் குடர் சரியும்படி குத்திக் கோட்டிடைக்கொண்டு குலைப்பதன் தோற்றத்தைக் காணாய். உயிர்களெல்லாம் வருந்தும் ஊழி முடிவில், பசிய நிறத்தைத் தன் பாகத்தேயுடைய உருத்திரன், கூற்றுவனுடைய நெஞ்சைப் பிளந்து குடரைக் கூளிகட் கிட்டு அவற்றை நிறைக் கின்றதனைப் போலும்!”

“அன்னாய்! அதோ பார்! சிவபெருமான் சடையில் விளங்கும் பிறையில் சூடிய சிவந்த மாலைபோல அவ்வேற்றின் கொம்பிடைக் குடர்கள் தொங்குகின்றன. அங்ஙனம் தொங்கும் குடரை இருகையாலும் இழுத்துத் தன் வயிற்றினுள் இடுகின்றவன் தோற்றத்தைப் பாராய்! சிவந்த நூற்கழியை ஒருவன் இரண்டு கையாலும் கோத்துப் பிடித்திருக்க, அந்நூலை முந்நூல் பிடிக் கின்றவனை ஒக்கும். என்னே அன்னான்றன் வீரம் இருந்தவாறு!”

“அணியிழாய்! ஆங்கொருவனைப் பாராய்! அவ் விகலேற்றின் கழுத்திலே பாய்ந்து, அக் கழுத்திலிட்ட மாலை போல விளங்கு வதைக் காண். இனி அவன் அதனை விடான்!”

“எல்வளாய்! ஈங்கொரு காட்சியைக்காண்! தன்னைப் பாயவந்த ஏற்றைப் பிடித்தடக்கி அதன் முதுகின் மேல் ஏறியிருந்து, அதனை ஊர்கின்றவன் தோற்றம்., தெப்பத்தின் மேலிருந்து அதனைச் செலுத்துகின்றவனைப் போலும்!”

“அன்னாய்! அதோ, விடாது கழுத்தைத் தழுவினவனோடே பரணின் மீது பாயும் அவ்வெள்ளேற்றின் தோற்றத்தைக் காணாய்! சிறிது விழுங்கப்பட்ட பாம்புடனே விசும்பிற் செல்லும் வெண் ணிலவு போலும்! தனது வீரச் செயலைத் தன் தலைவிக்குக் காட்டச் சென்றது போலும்!”

“அம்பன்ன கண்ணாய்! அதோபார்! ஒருவன் ஒரு வெள்ளைக் காளையின் கழுத்திலே பாய்கிறான். அதுகண்டு அவனைக் குத்தும் அக்காரிக் காளையின் தோற்றத்தைக் காணாய்! மதியை மறைத்த பாம்பினது மறைத்த தன்மையை விடுக்கும் மாயோனைப் போலும்! என்னே காலத்தினாற் செய்யும் நன்றி! இவை காலுடைய மக்கள் போலும்!”

“கருநெடுங் கண்ணாய்! அக் கபிலைக்காளையின் வீரச் செயலினைப்பார்! தன்னைத் தழுவிக் கீழே விழுந்தவனைக் கொல்லாது செல்லும் தோற்றம், வாளோடு தன் கையிலகப்பட்ட பகைவனை வெட்டாமல் செல்லும் வீரனை யொக்கும்! புறங் காட்டினோர் மீது படையேவாத தமிழர் பண்பாட்டினை இவ்வேறு களும் உடையன போலும்! ஏன்? இவையும் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த தமிழ்க்காளைகள் தானே!”

இத்தகு வீரக்காட்சிகள், வியத்தகு செயல்கள் முதலிய வற்றை முல்லைக்கலியில் கண்டு இன்புற்று, நீவிரும் அத்தகு வீர உணர்ச்சி பெறுக!

இவ்வேறுதழுவல் விழா, உருவமும் பருவமும் ஒத்த ஒருவனும், ஒருத்தியும் எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் காதலித்து, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப் பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் காதற் கலப்புக் கட்டங்களில் திளைத்துக் காதற் கலப்புற்று வரும் போது நிகழும். எனவே, ஒவ்வொரு காளையரும் தம் தலைவியர் காளையினையே பிடித்தடக்குவர். இறந்தவ ரொழிய வென்றவர் தம் காதலியரை மணந்து, கூடிக்களித்து இல்லறம் இனிது நடத்தி இன்புறுவர். இது வீரக் காதற் கலப்பாகும்.

“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”

(முல் - 3)

ஏற்றின் கூரிய கொம்புகளைக் கண்டஞ்சி அதைத் தழுவாத வனை இம்மையிலே யன்றி, மறுமையிலும் ஆய மகள் புல்லாள் என்பது எத்தகைய வீரக் குறிப்பு! இத்தகைய வீரத்தமிழ் மகளிர் இன்று ஒருவராவது இருப்பர் என்பது ஐயுறவே.

“வளியா அறியா உயிர்க்காவல் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்
கெளியவோ ஆயமகள் தோள்”

(முல் - 3)

உயிரை ஒரு காற்றென உணராது, அதனைக் காவல் கொண்டு - உயிருக்கஞ்சி - ஏற்றின் கூரிய கொம்புக் கஞ்சு வோர் தழுவ ஆயமகளிர் தோள் எளியவோ?

‘உயிர் ஒரு காற்று’ இதில் பகுத்தறிவுக் கொள்கை அப்படியே பொதிந்துள்ள தல்லவா? உயிர் ஒரு தனிப் பொரு ளெனவும், அது ஊழ்வினைக் கேற்ப உடலெடுக் கிறதெனவும், மக்கட் பிறப்பின், புண்ணியத்தால் அது வீடு பெறுகிறதெனவும் நம்பும் பிற்காலத்தே புகுந்த அயற் கொள்கையாலன்றோ பழந்தமிழ் மக்களின் பகுத் தறிவுக் கொள்கை பாழ்பட் டொழிந்தது? உயிர் ஒரு காற்றென்பதே உயிராராய்ச்சி வல்லுநர் முடிவு.

“தாம் விரும்பும் மகளிர் மார்பிடை வீழ்தல் போல ஏற்றின் கொம்பிடை வீழின், ஆயர் மகளிர் தோள் எளிதில் கிட்டும்.”(முல் - 3)

இக்கூற்றுக்களால், அக்காலத் தமிழ் மகளிர் காதல் வாழ்வு எத்தகையது என்பது இனிது புலப்படும். தன் காதற் றுணைவன் வீரனாக இருந்தால் தான் தாம் வீர வாழ்வு, நாகரிக நல்வாழ்வு வாழ்வதோடு, வீர மக்களைப் பெற்ற வீரமரபை நிலைபெறச் செய்யலாம் என்பதைப் பழந்தமிழ்ப் பெண் மணிகள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கு இவ்வேறு தழுவற் செய்தியே சான்றாகும்.

உருத்திரன் கூற்றுவனைக் கொல்லல், மதியைப்பாம்பு கடித்தல் போன்ற உவமைகளால், கடைச் சங்க காலத்திலேயே புராணக் கொள்கைகள் தமிழரிடை ஆதிக்கம் பெற்று விட்டமை தெரியப்படும். எனினும், இன்று போல் அன்று அவ்வயற் கொள்கைகளைத் தமிழ் மக்கள் உவமையாகக் கொண்டனரே யன்றிப் பொருளாகக் கொண்டு தமது சொந்தக் கொள்கைகளைக் கைவிடவில்லை. அயற் சமயங் கட்கு அடிமைப்பட்ட பிற்காலத்தி லேயே அவற்றைப் பொருளாகக் கொண்டு தம் புலமை நிறுவத் தலைப்பட்டனர்.

இனி, இம் முல்லைக் கலியில் கூறப்படும் ஏறு தழுவல் செய்தி, கண்ணன் மனைவியரில் ஒருத்தியான நப்பின்னை என்பாளை, அவள் வளர்த்த காளை ஒன்றை அடக்கிக் கண்ணன் மணந்தனன். அச் செய்தியைப் பின்பற்றியதேயாகும் என்பர் ஒருசிலர்.

அது தவறு. கண்ணன் பிறப்பதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்னிருந்தே நடந்து வருவது தமிழ் மக்களின் ஏறுதழுவல் செய்தி. தைப் பொங்கற்றிரு நாளின் போது வீர விளையாட்டாக நடந்து வந்து அது, அங்ஙனம் ஏறுதழுவிய வீர இளைஞர்களை மறத்தமிழ் மகளிர் விரும்பி மணந்து வந்ததால், பிற்காலத்தே அது, அக வொழுக்கத்தின் ஒரு கூறாகக் கொள்ளப்பட்டது. தனிப்பட நடந்து வந்த அவ்வீரச் செயல் வாழ்க்கையின் ஒரு கூறாக்கப் பட்டது. இத்தமிழர் ஒழுக்க முறையினையே ஆயர் என்னும் மரபு பற்றி நப்பின்னை மரபினர் மேற் கொண்டனர் போலும்! இது தமிழர் நாகரிகம் பிற இடங்களிலும் பரவியுள்ளமைக்குச் சான்றாகும்.

இனி, பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்னும் ஆரிய மணம் எட்டனுள், அசுரம் என்பது - கொல்லேறு கோடல், வில்லேற்றுதல், திரிபன்றி எய்தல் முதலியன செய்து ஒருவன் ஒருத்தியைக் கொள்ளுதலாகும். கண்ணன் கொல்லேற கொண்டு நம்பின்னையை மணந்ததும், இராமன் வில்லேற்றிச் சீதையை மணந்ததும் அசுர மணத்தின் பாற்படும். அர்ச்சுனன் வில்லை வளைத்து மச்சக்குறி எய்து துரோபதையை மணந்ததும் இதன் பாற்படும். எனவே, முல்லைக் கலியிற் கூறப்படும் ஏறு தழுவலும் அசுர மணத்தின் பாற்படும் என்பர் ஒருசாரார்.

அது பொருந்தாக் கூற்றேயாகும். அசுர மணத்தின் கொல் லேறு கோடல் - யார் கொள்கிறார்களோ அவர்க்கு, பெற்றோர் தம் மகளைக் கொடுப்பது. அவள் விரும்ப வேண்டும் என்ப தில்லை. முன்பின் அறிமுக மில்லாத ஒருவன் கொல்லேறு கொள்ளினும், வில்லேற்றினும் அவனுக்கு ஒருத்தியை அவள் பெற்றோர் கொடுக்கும் அளவினது அசுரமணம்.

முல்லைக் கலியில் வரும் ஏறுதழுவலோ, களவொழுக்க மொழுகி வரும் காதலியின் ஏற்றை அவள் காதலனே தழுவும் ஒருவகை வீரக் குறிப்பாகும். அயலானொருவன் ஏறுதழுவல் முல்லைத் திணையாகாது.

ஒருத்தி ஏற்றை அவள் காதலன் தழுவின் அவர்தம் களவு கற்பாக மாறும். அஃதாவது மணஞ் செய்து கொண்டு இல்லறம் நடத்துவர். அங்ஙனம் தழுவாது அவன் கொல்லேற்றின் கோட்டுக் கிரையானால் அவள் நிலை என்னென்பது முல்லைக் கலியில் கூறப்படவில்லை. அங்ஙனம் முடிவு கூறுதல் செய்யுள் வழக்கத்தின் மரபாகாது. உய்த்தறியும்படி விட்டுவிடுவதே இலக்கியச் சுவையும் இலக்கண அமைவும் உடையதாகும். ‘காதல் தப்பின் சாதல்’ என்பதே பெரும்பான்மை முடிவாகும்.

இலக்கிய நயந்தோன்ற, அதாவது, தழுவுவோனின் வீரக் குறிப்பு மிக்குத் தோன்றத் தழுவுவோரைக் குத்திக் கொல்லும் ஏற்றின் வீரச் செயல் மிகைப்படுத்திக் கூறப்பட்டதே யன்றிக் கொலை அரிதாகவே நிகழும். அங்ஙனம் மிகைப்படக் கூறாவிடின், ஏறுதழுவுவோரின் வீரச் செயல் சுவையற்ற தாகிவிடு மென்க. நூற்றுக்கு இரண்டொருவர் அரிதாக இறத்தலுங்கூடும். பெரும் பாலும் தழுவுவோரே வென்று களங்கொண்டு வீரப்பரிசு பெறுவ ரென்க.

ஏறுதழுவல் நிகழும் போது தலைவியரும் தோழியரும் தத்தம் ஏற்றைத் தழுவுமாறு கைதட்டியும் ஆரவாரம் செய்தும் தத்தம் தலைவர்களை ஊக்குவிப்பர். தமது காதலியின் குழலினும் யாழினும், பாலினும் தேனினும்இனிய ஊக்க வுரையைச் செவி மடுத்த காதலர்கள் தம் உயிராற்றல் எவ்வளவுண்டோ அவ்வள வையும் காட்டி, ஊக்க முடைமை, ஆள்வினையுடைமை என்னும் மனமுயற்சி மெய்ம் முயற்சி ஆகிய இருவகை முயற்சியுங் கொண்டு கொல்லேறு தழுவி வீரப் பரிசாகத் தம் காதலியை அடைந்தின்புறுவரென்க.

அத்தகைய வீரக் காதல் வாழ்வு வீழ்ந்து பட்டதே இன்று தமிழினம் இரங்கத்தக்கஇத்தகு இழிநிலை எய்தியதற்குக் காரண மாகும். இன்று அகப்பொருட்கே யன்றிப் புறப்பொருள் பற்றி ஏறுதழுவுதலும் குற்றமென ஆள்வோர் தடைவிதிக்கும் அத்தகு நிலையில் உள்ளது தமிழ்நாடு

இனி, முல்லை குறிஞ்சிபாலை மருதம் நெய்தல் என்னும் அகத்திணை ஐந்தனுள், முல்லைத்திணை என்பது, ‘இல்லிருத்தல் முல்லை’ என்றபடி இருத்தல் ஒழுக்கமாகும். அதாவது, தலைவன் பிரியின், தலைவி அவன் கூறிச் சென்ற நாள் வரும் வரையிலும் ஆற்றியிருத்தலாம். இது களவு கற்பு என்னும் இருவகை அக வொழுக்கத்திற்கும் உரியது. களவில் ஒருவழித் தணித்தல், வரை விடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலும், கற்பில் ஓதல் பகை தூது பொருள் முதலிய பிரிவிலும் தலைவன் பிரியத் தலைவி ஆற்றியிருப்பாள். இவ்விருத்தல் ஒழுக்கம் எல்லா நிலங்களிலும் நிகழினும், முல்லை நிலத்தில் நிகழும் என்பது புலனெறி வழக்கம்.

ஆனால், கலித்தொகை முல்லைக் கலியில் இருத்தல் ஒழுக்க மட்டும் கூறாமல், புணர்தல் முதலிய மற்றை ஒழுக்கங்களுங் கூறப்படுகின்றன. எனவே, இது அவ்வைந் திணையுள் ஒன்றான முல்லைத் திணையில் வேறுபட்டதாகும். இங்கு முல்லை நில மக்களிடை நிகழும் ஐவகை ஒழுக்கமும் ஒருங்கு கலந்து கூறப்படு கின்றன என்பது, ஐந்திணையிலக்கண வரம்பிற்குட்பட்ட வர்க்கும் பெரியதொரு வியப்பினை யுண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. அங்ஙனம் கற்றோர் வியக்கும் புதிய முறையில் அமைந்ததே முல்லைக்கலி. இதனாற்றான் இதைக் ‘கற்றறிந்தார் போற்றுங் கலி’ எனப் பழந்தமிழ்ச் சான்றோர் சிறப்பித்துக் கூறலாயினர்.

ஒரு சிலர் இதனை, ‘ஏறுதழுவற் கைக்கிளை’ என்பர். அது பொருந்தாது. கைக்கிளை ஒருதலைக் காமம். அதாவது, தலைவன் தலைவி இருவருள் ஒருவர்பால் நிகழ்வது. இருவரும் விரும்பாமல் ஒருவர் மட்டும் விரும்புவது. ஆனால், இவ்வேறுதழுவலோ, தன்னேற்றைத் தழுவும் தலைவனைத் தலைவியும், தான் தழுவும் ஏற்றிற்குரிய தலைவியைத் தலைவனும் விரும்புதலான் இது ஒத்தகாமம் ஆகுமேயன்றி ஒவ்வாக் காமமாகிய கைக்கிளை யாகாது. இத்தகு ஆழமுடைத்து, ‘கற்றறிந்தார் போற்றுங் கலி!’

கல்லாக் கவித்திறம்


பசும்பொற் பட்டாடையின்கண் அமர்ந்து பண்ணியம் தின்பார்போல, ஒரு பசும்புற்றரையில் ஆடுகள் மேய்ந்து கொண் டிருக்கின்றன. அவ்வாடுகட்குப் பாதுகாப்பாக ஆடுமேய்க்கிச் சிறுவன் ஒருபுறம் நின்று கொண்டிருக்கிறான். அவன் ஆடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கவில்லை. ஆடுகள் புல் மேய்கின்றன. அவனுக்கு வேலை வேண்டுமே? சும்மா நின்று கொண்டிருப்பது சிறுவர்க் கியல்பா? மேய்கின்ற ஆடுகளைப் பார்த்துக் கொண்டே அவன் எவ்வளவு நேரம் சும்மா நின்று கொண்டே இருப்பான் நடுகற் போல? அவ்வாறு சும்மா இருப்பது மக்கட் பண்பாட்டுக் கேற்றதா? அப்பண்ட மேய்க்கிச் சிறுவன் சும்மா நிற்கவில்லை;பாட்டுப் பாடுகிறான். அவன் பொழுது போக்காக நின்று பாடிக் கொண்டிருக்கிறான்.

அச்சிறுவன் வாய்க்கு வந்த சொற்களை அடுக்கி அழகாகப் பாடுகிறான். அவன் காரிகை கற்றுக் கவிபாடும் கவிஞன் அல்லன். எனினும், அவன் பாடும்பாட்டு, பாட்டு என்னும் பெயருக் கேற்றவாறு பாட்டாகவே அமைந்துள்ளது. கேட்போரை இன்புறச்செய்யும் நடையழகும், மோனை எதுகை முதலிய தொடையழகுங் கூட அப்பாட்டில் நன்கு அமைந்துள்ளன. வெறும் சொல்லடுக்கு மட்டுமல்ல, பொருட் செறிவும் நன்கு அமைந்துள்ளது அப்பாட்டில்.

எழுத்தறி வில்லாத அப்பண்ட மேய்க்கிச் சிறுவனுக்கு, இலக்கிய இலக்கணம் இன்னவென்றே அறியாத அச்சிறுவனுக்கு, யாப்பறிவில்லாத அவ்விளவலுக்கு எங்ஙனம் அத்தகைய பாட்டுப் பாட முடிந்தது? அதன் காரணம் என்ன? அதுதான் தமிழ் மொழிக்குரிய தனிப்பெருந்தன்மை! இது எல்லா மொழிக்கும் உரிய தெனினும், தமிழ்மொழிக்குள்ள அத்தகு தகுதியும் சிறப்பும் மற்ற மொழிகளுக்கு அமையவில்லை. காரணம், தமிழ்மொழியின் இயற்கைத் தன்மையும், வேண்டிய அளவு மோனை எதுகைச் சொற்கள் இருத்தலுமேயாகும். தமிழ் மொழி போல் கல்லாக் கவிஞர்களையுடைய மொழி உலகில் வேறொன்றும் இல்லை என்பது பொய்யுரை யாகாது; பொருள் பொதிந்த பொன்னுரை யேயாகும்.

இனி, அக்கல்லாச் சிறுவன் அத்தகு கவி பாடும் திறமை பெற்றதற் கேது என்னவெனில், உரிமை வேட்கையுடைய அவனது இயற்கையுள்ளத் தெழுந்த உணர்ச்சிப் பெருக்கே யாகும். இதுவே கவிதை தோன்றுதற்குரிய கருக்கூடு எனலாம். ஆம், அக்கருப்பையில் உருவாகிய கவியே கவி என்னும் பெயருக்கேற்ற கவியாகும்.

அக்கல்லாச் சிறுவன், கற்று வல்ல கவிஞர் போலப் பிறருக் காகக் கவி பாடவில்லை.அவன் தனக்காகவே பாடினான்; தன்னுணர்ச்சி யால் தூண்டப்பட்டுத் தன் உள்ளக் கிளர்ச்சிக்காகவே பாடினான். தன் போக்கில் பாடிப்பாடி அவன் தமிழின் இனிமையை நுகர்ந்தான்; தமிழன் தனியின்பம் பெற்றான். அவன் தமிழன்னையின் அழகுக் கழகு செய்தான்; தாய்மொழித் தொண்டு செய்தான்.

அச்சிறுவன் பாடிய பாட்டு இனிய இசைத் தமிழ்ப் பாட்டு. அவன் சும்மா நின்று கொண்டே இசையுடன் பாட வில்லை. பாட்டின் பொருளுக் கேற்றவாறு ஆடிக் கொண்டே பாடினான். அவன் இனிய இசையுடன் ஆடிக்கொண்டு பாடினான். அவ்விசை அவனாகவே அமைத்துக் கொண்ட தனியிசையாகும். ஓரிசையை அவன் தழுவிப் பாடவில்லை. அது கல்லாக் கவிஞனாகிய அச்சிறுவனின் பண்பாடன்று. அவ்வாறு பாடியிருந்தால் அவன் கவி அவ்வளவு சிறப்புடைய சீரிய கவியாக அமைந்திருக்காது.

கல்லாக் கவிஞனாகிய அப்பண்ட மேய்க்கிச் சிறுவன் புதிதாகக் கவி பாடுகிறான்; அக்கவியை இசையுடன் பாடுகிறான்; இசையோடு பாடிக் கொண்டே பாட்டின் பொருளுக் கேற்ற வாறு ஆடுகிறான். எனவே, அச்சிறுவன் ஒரு முத்தமிழ்க் கவிஞனாக வன்றோ திகழ்கின்றான்? ஆம், அவனொரு முத்தமிழ்க் கவிஞன் தான். புதிதாக இசையுடன் பாடியாடுவது தானே முத்தமிழின் இலக்கணம்? இப்பொல்லாச் சிறுவனின் கல்லாக் கவித் திறமே கவித் திறம்! இதோ அக்கல்லாக் கவிஞனின் கவிஒன்று,

“மத்தியான நேரத்திலே
மாடுகன்றி னோரத்திலே
பத்திபத்தி யாகமேயும்
வெள்ளைக் கொக்காரே! - மாட்டுப்
பாலைப்போல பறந்துசாயும்
வெள்ளைக் கொக்காரே!”

பாட்டு எப்படி? மோனையும் எதுகையும் இயைபும் துள்ளி விளையாடுகின்றன வல்லவா? ‘நேரத்திலே… ஓரத்திலே, மேயும்… சாயும்’ எத்தகைய இயை பின்பம்! ‘மாடு கன்று’ என உம்மைத் தொகையும், பத்திபத்தியாக என இணைச் சொற் றொடரும் இன்பந் தருகின்றன வல்லவா? கருத்துக்குத் தான் என்ன? கொக்குகள் பத்திபத்தியாக மேய்கின்றனவாம். கொக்குக் கூட்டமொன்று மாட்டுப் பாலைப் போல வெள்ளை வெளேரெனப் பறந்து வந்து மாடுகளுக்குப் பக்கத்தில் உட்காருகின்றனவாம். உவமை எப்படி? அருமையான உவமை யல்லவா! மடியிலிருந்து மாட்டுப் பால் வீழ்வது போல வானிலிருந்து கொக்குகள் பறந்து வருகின்றன வாம். என்னே! கல்லாக் கவிஞனின் கவித்திறம்! இனி, அஃறிணைப் பொருளாகிய கொக்குகளைக் ‘கொக்காரே’ என உயர்திணைப் பொருள் போல விளித்திருப்பதும், கேளாதவற்றைக் கேட்பன போலப் பாடும் இலக்கண விதிப்படி ‘கொக்காரே’ என்பதும் எத்தகைய சொன்னயமும் பொருணயமும் உடையவை!

செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று மரபு என்பது. அது, பெயர்ச் சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச் சொல் என்னும் உலக வழக்குச் சொற்களை அடுக்கிப் பாட்டாகப் பாடுவதாகும்.

“மரபேதானும்,
நாற்பால் இயலான் யாப்புவழிப் பட்டன.”

என்பது தொல்காப்பியம் (செய். 80). நம் பண்ட மேய்க்கி பாட்டு அம்மரபு என்னும் இலக்கணப்படி அமைந்த தேயாகும். இத்தகைய இயற்கைக் கவிகளைப் பிற்காலத்தார் தெம்பாங்கு என்றனர். இன்றுகூடப் பண்ட மேய்க்கிகள் பாடும் பாடல்களை எழுதினால், அவை சிறந்த சீரிய பெரிய இலக்கியச் செல்வங் களாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

முறையாக இலக்கிய இலக்கணங் கற்றுச் செய்யுளி யற்றுந் திறம் பெற்றுச் சிறந்த புலவர்களான பின்னர், ஒருவர் இப்பண்ட மேய்க்கி போல் பாடும் பாடலைப் பிற்காலத்தினர் ஆசுகவி எனவும், அவ்வாறு ஆசுகவி பாடும் கவிஞரையும் ஆசுகவி எனவும் கூறிச் சிறப்பித்தனர். ஆனால், இலக்கிய இலக்கணம் இன்ன வென்றே அறியாது, ஏன்? எழுத்தறிவே இல்லாது ஆசுகவி பாடும் நம் பண்டமேய்க்கி போன்ற கல்லாக் கவிஞரை என்னென் றழைப்பது? இத்தகைய இயற்கைக் கவிகளின் தமிழ்த் தொண்டைப் புறக்கணித்து வாழ்வது தமிழ்த் தாயின் குறைபாடேயாகும். என்று தமிழ் மக்கள் இக்குறை பாட்டைக் களைந்து தமிழன்னையைப் பெருமைப்படுத்துவார்களோ?

பண்ட மேய்க்கிகள் மட்டுமா இத்தகைய தமிழ்த் தொண்டு செய்து வருகிறார்கள்? இல்லை, இன்னும் இவர் போன்றார் எத்தனையோ பேர் இத்தகைய தொண்டினைச் செய்து வருகிறார்கள்; கல்லாக் கவிஞர்களாய்த் திகழ்கிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் கவித் திறத்தினை இங்குக் காண்போம்.

இரவு பத்து மணிக்குமேல் இருக்கும். வழியில் பார வண்டிகள் வரிசையாகச் செல்கின்றன. அவ்வண்டிகள் செல்வதை அவ்வண்டிச் சக்கரங்களின் கீச்சுக் குரல் நமக்குத் தெரிவிக்கின்றது. அவ்வண்டிக்காரரில் ஒருவன் பாடுகிறான். அப்பாடல் சக்கரங் களின் கீச்சுக் குரலோசையோடு இணைந்து கேட்போருக்கு இன்ப மூட்டுகிறது. அவ்வண்டிக்காரனும் நம் பண்ட மேய்க்கிச் சிறுவனைப் போல எழுத்தறி வில்லாதவனே யாவான்; காரிகை என்பதைக் காதாலும் கேட்டறியாதவனே அவனும். அப்பண்ட மேய்க்கி போல உணர்ச்சிப் பெருக்கினாற்றான். உள்ளக் கிளர்ச்சிக்காகத்தான் அவ்வாறு கற்று வல்ல கவிஞர் போலப் புதுப்புதுக் கவிதை புனைந்து கொண்டு, தான் இரவில் வண்டி யோட்டுகிறோம் என்பதையே மறந்து, தமிழின் தனியின்பத்தில் திளைத்துக் களித்துக் கொண்டு செல்கிறான். இவ்வண்டிக்காரன் பாடல்களும் நம் பண்ட மேய்க்கி பாடல்கள் போல நடை யழகும் தொடை யழகும் உடையவையே; பொருட் பொலிவு பொலிந்து விளங்குபவையே. இப்பாடல்களையும் பிற்காலத்தார் தெம்பாங்கு என்றே பெயரிட்டழைக்கலாயினர். இதோ அவ்வண்டிக்காரன் பாடலில் ஒன்று,

“காடுவெட்டிச் சிறையொதுக்கிக்
கபிலைபூட்டி ஏருழுது
வீடுமுட்ட நெற்குவித்தேன்
விருந்துகண்டு வருந்தலாமோ”

ஏன் பண்டமேய்க்கி பாட்டுப் போல் இல்லையா? இத்தகைய முயற்சி தானே இன்றுமிகமிகத் தேவையாக உள்ளது? ‘விருந்தோம்பல்’ என்னும் தமிழரின் தனிப் பண்பாடு இப்பாடலில் திகழ்கின்ற தன்றோ? ஒவ்வொரு உழவனும் அவ்வாறு குவித்தால் விருந்து கண்டு எதற்காக வருந்த வேண்டும்?

அடுத்து கல்லாக் கவிஞர்கள் துணியை வண்ணஞ் செய்யும் தொழிலாளர்கள், பூசாரிகள் முதலியோர். இவர்களும் சிறந்த கல்லாக் கவிஞர்களே.

ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டு அன்பு கொள்ளும் காதற் கலப்பில், இற்செறிப்பினால் குறியிடம் சென்று தலைவனைக் காணப் பெறாத தலைவி, அப்பிரிவுத் துன்பத்தால் வருந்துவாள். தலைவிக்குற்ற அந்நோயின் காரண மறியாத செவிலி, வேலன் என்பானை வரவழைத்து நோயின் காரணங் கேட்பாள். அவ்வேலன் வெறியாடித் தலைவிக்குற்ற நோயின் காரணத்தைக் கூறிச் செவிலியைத் தேற்றுவான் என்கின்றது தொல்காப்பியம்.

ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே சாமியாடி வாக்குச் சொல்லும் பூசாரிகள் இருந்துவந்திருப்பதால், இலக்கிய இலக்கணச் சிறப்புப் பெற்றி ருப்பதால், இக்கல்லாக் கவிஞர்களின் கவித்திறத்தின் பழமையும் பெருமையும் அறிந்து இன்புறத்தக்கனவாகு மன்றோ?

இப்பூசாரி வேலைக் கையில் கொண்டு ஆடுவதால் வேலன் எனவும், வெறியாடுவதால் வெறியாட்டாளன் எனவும் பெயர் பெறுவான். பழந்தமிழ்ப் புலவர்கள் இவ்வெறியாட்டாளர்களை அகத்திணையின் ஓர் உறுப்பாகக் கொண்டு போற்றுதலைச் சங்க நூல்களில் காணலாம்.

அத்தகைய பழமையும் பெருமையும் உடைய வேலன் என்னும் இவ்வெறியாட்டாளனே இன்று பூசாரி எனப்படுவான். இவன் இன்று குல தெய்வங்கட்குப் பூசை செய்வதால் பூசாரி எனப்பட்டான். இன்றும் இப்பூசாரிகள் வேலைக் கையிற் கொண்டு சாமியாடுவார். பிரம்பைக் கையிற்கொண்டு ஆடுவதும் உண்டு. வெறியாடலே இன்று சாமியாடல் எனப்படுகிறது.

இப்பூசாரி சாமியாடிக் கொண்டே கேட்பவர்களுக்குப் பலன் சொல்லுவான். அது வாக்குப் பிரித்தல், வாக்குச் சொல்லுதல் எனப்படும். முற்கூறிய கல்லாக் கவிஞர்கள் போல இவன் கவியாகவே வாக்குச் சொல்வான். அக்கவிகளும் முற்கூறிய கல்லாக் கவிஞர்கள் கவிபோலவே சீருஞ்சிறப்பும் பொருந்தி யிருக்கும். பூசாரி வாக்குச் சொல்லும் போது, ஒருவர் ‘சாமி, சாமி’ என்று கேட்பர்.

“கேட்ட வரங்கொடுக்கக்
கெடுதலெல்லாம் தீhத்துவைக்க
ஓட்ட நடையுமாக
ஓடியே வந்தனப்பா”

- சாமி!

வாக்கு எப்படி? இவ்வாறு மோனை எதுகை பொருந்தக் கேட்டதை யெல்லாம் பாட்டாகவே சொல்வர்.

இன்னும் கல்லாமல் கவிபாடும் கல்லாக் கவிஞர்கள் பலர் உண்டு எனினும், அவர்களுள் ஒருவகையினரின் கவித்திறத் தினை இங்கு கூறாமல் விடுவது அறிவுடமையாகாது. தமிழ் மொழியைத் தமிழ்த் தாய் என வாயினிக்கக் கூறிக் கொண்டு, அத்தமிழ்த் தாயினத்தைக் கல்லாக் கவிஞர்களாக்கிய பெருமை தமிழ் ஆண் பாலர்க்கே உரிய தனிப் பெருமையாகும். ‘அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பெதற்கு?’ என்று அடக்கி யாண்டுங் கூட அத் தண்டமிழ்ப் பெண்டிர் எப்படியோ கல்லாக் கவிஞர் ஆகி விட்டனர்.

அக்கல்லாக் காரிகையரின் கவித்திறம் இரு வகையில் வெளிப்படுகிறது. ஒன்று தாலாட்டு, மற்றொன்று ஒப்பாரி. இவ்விருவகைக் கவி பாடுவதிலும் அவர்க்கு நிகர் அவரே யாவர். அக்கவிகள் பாடும் திறம் அன்னாரின் தனியுடைமையாகும்.

‘இயன்மொழி வாழ்த்து’ என்பது புறத்திணைப் பாடாண் துறைகளுள் ஒன்று. அது, ஒருவரைப் பாடும் போது, அவர் பெருமையோடு அவர்குல முன்னோர் பெருமையினையும் அவர் மேலேற்றிப் பாடுவதாகும். அதாவது, ஒருவர் முன்னோர் செய்ததை அவர் செய்ததாகவே கூறுவது. இதைத் தாய்மார்கள் பாடும் தாலாட்டில் அப்படியே காணலாம். அத்தாலாட்டுப் பாடல்கள் இத்தகைய துறையாயமைவதோடு, உவமை உருவகம் முதலிய பலவகை அணி நலமும், மோனை எதுகை இயைபு முதலிய தொடை நலமும் பொருந்தியவாய் விளங்கும். பழந் தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ள எந்த ஓர் இயன்மொழி வாழ்த்துப் பாடலுக்கும் இத்தாலாட்டுப் பாடல்கள் இளைத்தவையல்ல.

அடுத்த ஒப்பாரியோ ஒப்புயர்வற்றதாகும். ஒப்பாரி பாடுவதில் இப்பாரில் ஒப்பாரு மில்லாதார் துப்பாரிதழுடைத் தோகையரே யாவர் என்பது மிகைபடக் கூறலாகாது. கல்லன்ன மனத்தையும் கரைவிக்கும் தன்மை வாய்ந்த ஒப்பாரி. பெற்ற தாய் தந்தையரையோ, பெற்று வளர்த்த பிள்ளையையோ, கொண்ட கணவனையோ இழந்து தலைவிரி கோலமாய் அழுது புலம்பும் ஒருத்தி, ஆறாத் துயர்க் கடலில் வீழ்ந்தாழ்ந்து கரைகாணாமல் தவிக்கும் அது போது, மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்னும் ஐந்து தொடையும் அப்படியே அமைய, காலத்துக் கேற்ற கருத்துச் செறிவுடன் செய்யுள் நலம் திகழும்படி பாடும் அப்பாடலை நோக்கின், காரிகையரின் கல்லாக் கவித் திறத்தின் சிறப்பினை என்னென்றியம்புவது? உவமை உருவகம் முதலிய பொருளணிகளோடு, திரிபு மடக்கு என்னும் சொல்லணிகளும் பொருந்தி விளங்குவன அப்பாடல்கள்.

தற்குறி என்னும் பெயரைத் தகவுடன் தாங்கிய ஒருத்தி, காரிகை என்னு நூலைக் காதாலுங் கேட்டறியாத ஒரு காரிகை எங்ஙனம் இத்தகைய சிறப்புடைய சீரிய பாடலைப் பாடுகிறாள்? எவ்வாறு அவளால் அவ்வாறு பாட முடிகிறது? இஃதொரு புதிராகவன்றோ உள்ளது? புலவர் பட்டம் பெற்றவர்களில் ஒரு சிலரே மோனையும் எதுகையும் நன்கு அமையப் பாட முடியாது யாப்புக் குறையுடைய பாட்டுக்களைப் பாடும்போது, எழுத்தறி வில்லா ஏந்திழை நல்லாரால் எங்ஙனம் அத்தகு சிறந்த சீரிய பாடல்கள் பாடமுடிகிறது? அதுதான் இயற்கையெழுச்சியின் இயல்பாகும். அதுதான் உணர்ச்சிப் பெருக்கின் ஒதுக்கிடமாகும். காரிகை கற்றுக் கவிபாடுவோர்க்கு அத்தகு உணர்ச்சி யின்மையால் கவித்திறம் நன்கு அமைவதில்லை. அகராதியிலிருந்து தேடி யெடுத்து அவர்கள் மோனையும் எதுகையும் அமைப்பதால் கருத்து நன்கு அமைவதில்லை. கருத்தமைந்தால் யாப்பமைவ தில்லை. யாப்பமைந்தால் கருத்தமைவதில்லை. கவியுள்ள முடை யோர்க்கே எளிதில் இயல்பாகச் சிறந்த கவிகள் அமையும்.

காலத்துக் கேற்ற கருத்தமை வுடையதே கவி எனப்படும். பழமையை விளம்பிக் கொண்டே இருப்பது சிறந்த கவியா காது. பழமையும் புதுமையும் கொஞ்சிக் குலவி விளையாடு வதே கவி எனப்படும். இவ்வாறு அமையுங் கவிகளை மறுமலர்ச்சிக்கவி என்பர். மறு மலர்ச்சியை யுண்டாக்குங் கருத்தமை வில்லாத கவி உயர்கவியாகாது.

எடுத்துக்காட்டாக, இக்கால ஆண்மக்கள் அத்தனை பேரும் குறுங்குஞ்சியுடையராய் இருக்க, ஓர் ஆண்மகனை வருணிக்கும் கவிஞரொருவர், உருவக உவமை ததும்ப அவன் குடுமியை வருணிப்பது எங்ஙனம் கவி எனப்படும்? அவனது குறுங்குஞ்சியை வருணிப்பதன்றோ கருத்துடைக் கவியாகும்? கல்லாக் கவிஞர்களாகிய காரிகையார் அத்தகு பழமை பாராட்டி களல்லர்; காலத்துக் கேற்ற கருத்தமைவுடைய கவிபாடுங் கவிஞர்களாவர்.

இன்று ஒருத்தி பாடும் ஒப்பாரியில் வானூர்தி வட்ட மிடும், அணுகுண்டு தணதணக்கும், வானொலி தேனினிக்கும். ஏன்? செயற்கைத் திங்கள் கூடச் செவிகேட்கும். மறுமலர்ச்சி மறுமலர்ச்சி என்போர் இத்தகைய பாடல்களுக்கு என்ன பெயரிடப் போ கிறார்கள்? அம்மங்கையர் மறுமலர்ச்சியை எங்கே கற்றனர்? அவர் தாம் எழுத்தறிவில்லாதவராயிற்றே, எவ்விதழ் அல்லது நூலிலிருந்து கற்றுத் தெரிந்து காலத்துக் கேற்ற கருத்தமைத்து மறுமலர்ச்சிக் கவி பாடுகின்றனர்? உள்ளத்துணர்ச்சியின் சிறப்பே இதற்குக் காரணமாகும்.

இன்னும் ஒரு புதுமை. ஒருத்தி தானும் பாடி யழுது கொண்டே மற்ற மகளிர் பாடும் பாட்டுக்களையும் மனப் பாடம் செய்து கொள்வாள். ஒரு பாட்டை இருபாலில் இரண்டு முறை சொன்னால் - மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்பர். ஆனால், இவர்களோ ஒரு முறை சொன்னதும் மனப்பாடம் செய்து கொள்ளும் அவ்வளவு மதியுடையோராய் உள்ளனர். இதுவும் இயற்கை எழுச்சியின் இயல்பேயாகும்.

இவ்வாறு பாலர் பாடும் பாட்டுக்களைப் படித்துக் கொண்டு ஊருக்கு வந்ததும், ஊர்மகளிரைக் கூட்டி வைத்துக் கொண்டு, தாம் கற்று வந்த புதுப்பாடல்களை அம்மகளிர் பாடிய இசையுடன் பாடிக் காட்டுவர். ஊர்மகளிர் அவற்றைக் கற்றுக் கொள்வர். ஓர் இழவு வீட்டில் பலர் கூடி ‘ஓஒ’ வென்று அழும் அக் கூப்பீட் டொலிக் கிடையே, பிறர்பாடும் பாட்டை ஒரு முறை கேட்டதும் மனப்பாடம் செய்வதும், அப்பாட்டுகளை அப்படியே மாலை வரை மறவாமல் இருப்பதும், அவர்கள் பாடினது போலவே பாடிக்காட்டுவதும், வியப்பினும் வியப்பாகவன்றோ உள்ளன? இயற்கையுணர்ச்சியின் பெருமையே பெருமை!

இன்னும் இத்தகைய கல்லாக் கவிஞர்கள் பலர் உண்டு. அவ்வெல்லாக் கல்லாக் கவிஞர் கவிகளும் மேற்கூறிய கவிகள் போன்றே சீருஞ் சிறப்புடன் திகழும். அக்கல்லாக் கவிஞர்களின் கவிகளை யெல்லாம் எழுதி இனப்படுத்தினால் அவை அரும் பெரும் இலக்கியச் செல்வங்களாகும். தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெற்றுத் திகழும் தமிழில் காலத்துக் கேற்ற இலக்கியம் வளர வில்லை. என்னும் குறைபாடு நீங்கும். இது தமிழர் முன்னிற்கும் தலையாய பணியாகும்.

‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’ என்பது இலக்கிய இலக்கண வரன்முறை. தமிழில் முதன் முதல், இலக்கணம் தோன்று முன்னரே கல்லாக் கவிகள் தோன்றி மிளிர்ந்தனவாகும். அக்கவிகளுக்கே பிற்காலப் புலவர்கள் இலக்கணம் கண்டனர்; அக்கவிகளின் அமைப்பினை எழுதி அவற்றிற்குக் குறியீடு இட்டனர். அக்குறியீடுகளே யாப்பிலக்கணம் எனப்படும். இயல்பாக எழுந்த அக் கல்லாக் கவிகளைப் பின்பற்றி, அவற்றின் இலக்கண மரபைத் தழுவி அமைத்தவையே வெண்பா, ஆசிரியப்பா கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாக்கள்.

பின்னர் யாப்பிலக்கணம் கற்று, யாப்பின் மரபு வழுவாமல் நால்வகைப் பாக்களும் பாடித் தமிழ் இலக்கியச் செல்வத்தை வளர்த்து வந்தனர், பிற்காலத் தமிழ்ப் புலவர்கள். காலப்போக்கு அவ்வரம்புக் குட்பட வில்லை. இயற்கையைச் சிறைப்படுத்த யாரால் முடியும்? காலப் போக்கு அவ்வரம்பைக் கடந்து விட்டது; இயற்கையின் திசையை நோக்கிச் சென்றது. அதனால், பிற்காலத்தே தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் தோன்றின. பின்னர்ப் பாவும் பாவினமும் பாடித் தமிழ் வளர்த்து வந்தனர் நம் தமிழ்ப் புலவர் பெருமக்கள். எனினும், பண்டமேய்க்கி முதலிய கல்லாக் கவிஞர் மரபு அழிந்து படவில்லை. அக்கவிமரபும் அன்று முதல் இன்றளவும் அப்படியே நடந்து கொண்டுதான் வருகிறது. பாவும் பாவினத்துக்கும் உட்படாது, தனித்து நடந்து வந்த அச் செய்யுள் மரபினையே, ஆசிரியர் தொல்காப்பியர் தொல் காப்பியச் செய்யுளியலில், “அவ்வேழ் நிலத்தும்”(79), “அடி வரை யில்லன ஆறென மொழிப”(264) என்னும் சூத்திரங்களில், ‘வாய் மொழி, பிசி’ முதலியனவாகக் குறித்துள்ளார்.

பிற்காலத்தார் அக்கல்லாக் கவிகளை ஒட்டிப் பாடிய வையே கும்மி, சிந்து முதலிய பாவகைகள். இவற்றிற்கு இலக்கணம். என்னால் எழுதப்பட்ட யாப்பதிகாரம் என்னும் நூலில் காண்க.

நம் முன்னோர்கள் இயல்பாக எழுந்த அக்கல்லாக் கவி களைப் பின்பற்றிப் பாவும் பாவினமும் வகுத்துப் பாடித் தமிழ் வளர்த்து வந்தனர். அயல் மொழி யாட்சியால் அம்மரபு தடைப் பட்டுப் போய் விட்டது. அம்மரபை மீண்டும் நடை முறைக்குக் கொண்டு வந்து, நமது தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்ப்பது தற்காலத் தமிழ்க் கவிஞர்களின் நீங்காக் கடப் பாடாகும். வெண்பா முதலிய பாமரபு, தாழிசை முதலிய பாவின மரபு, கும்மி சிந்து முதலிய கல்லாக் கவிமரபு ஆகிய மும்மரபி னையும் முறையொடு வளர்க்க, அம்மூவகைக் கவிகளையும் முறையொடு பாடத் தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் முற்படு வார்களாக. தமிழ்ச்செய்யுள் மரபு தோன்றுவதற்குக் காரணமான, அடிப்படையான அக்கல்லாக் கவிஞர்கள் வாழ்க!

போலிச் சோழர்


தலைப்பைப் பார்த்ததும் வியப்புறுவீர்கள். ஆம் வியப்புறச் செய்யுந் தலைப்புத்தான்! தமது பழமையின் பெருமையை மறந்த இக்காலத் தமிழர்க்கு இத்தலைப்பு வியப்பைத் தருவதில் வியப் பொன்றுமில்லை. தமிழகத்தில் அரசியல் முறை என்று ஏற்பட்ட தோ அன்றிருந்து, தமிழ் நாட்டின் குணபுலத்தைச் சீரும் சிறப்புடன் ஆண்டு வந்த, வண்புகழ் மூவர் என ஆசிரியர் தொல்காப்பிய ரால் சிறப்பித்துக் கூறப்பட்ட முடியுடை மூவேந்தருள் ஒருவரான செம்பியர் மரபினரா போலிச் சோழர்? தமிழர் பெருமை யறியாது, தமிழ் நாட்டின் மேற் படையெடுத்து வந்த மோரிய ராகிய வடவர் வெரீஇ வெந்நிட் டோடும்படி துரத்தியடித்த செருப்பாழி வென்ற இளஞ்சேட் சென்னி வழிவந்தவரா போலிச் சோழர்? தமிழரின் தனிப் பெருமை கண்டு வடவர் அஞ்சும்படி பனிமலையில் புலிபொறித்த கரிகாலன் மரபினரா போலிச் சோழர்? - என்று வியப்போடு அயிர்ப்புங் கொள்ளத்தான் செய்யும் இத்தலைப்பு! இங்ஙனம் தமிழர் தங்ஙனம் மறந்தனர் பாவம்! அம்மறதியால் எழுந்ததே இத்தலைப்பு!

1070-ஆம் ஆண்டு, ஐந்தா மாதம், ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். கங்கை கொண்ட சோழபுரத்தில், தனது விடுதியில், குலோத்துங்கன் ஏனோ ஒருவகை முகவாட்டத் துடன் தனியாக உட்கார்ந்திருந்தான். வாழ்க்கையில் வெறுப்புத் தட்டியவன் போல் அவன் அவ்வளவு கவலையுடன் காணப்பட்டான். அவன் பித்துப் பிடித்தவன் போல் வாய்க்குள் என்னென்னவோ முணுகிக் கொண்டிருந்தான். அப்போது ஒருவன் அங்கு வந்தான்.

“கருணாகரா! ஏன் இவ்வளவு நேரம்? உன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டே இருந்து விட்டேன்; இன்னும் சாப்பிடக் கூட இல்லை. நம் குருதேவர் என்ன சொன்னார்? மதுராந்தகன் வரவில்லை?”

“இளவரசே! குருதேவரே இங்கு வருகிறார்கள்.”

“அவரே இங்கு வருகிறரா?”

“ஆம், மதுராந்தகன் குருதேவருடன் வருகிறான். தமது வருகையை உனக்குத் தெரிவிக்கும்படி என்னை முன்னர் அனுப்பினர். ஏன் ஒரு வகையாய்?”

“ஒன்றுமில்லை கருணாகரா! நான் இக்கங்கை கொண்ட சோழபுரத்திலேயே பிறந்தேன்; பிறந்ததிலிருந்து இங்கேயே தான் வளர்ந்து வருகிறேன்; சோழ நாட்டு இளவரசன் போலவே இருந்து வருகின்றேன். யாதொரு குறையும் இல்லை. எனினும், என் பாட்டனார் காலமுதல் நாங்கள் சோழர்களின் அருளினா லேயே வாழ்ந்து வருகிறோம். எங்கள் வேங்கி நாடோ சோழர்க்குச் சொந்தமாகி விட்டது. அச்சோழர் கீழ்ச்சிற்றரசர்களாகத்தான் நாங்கள் இருந்து வருகின்றோம். இத்தன்மானமற்ற அடிமை வாழ்வுதான் என் மனத்தை வாட்டுகிறது. கருணாகரா! நாம் கட்டிய மனக் கோட்டை இடிந்து தகர்ந்து விடும்போல் இருக்கிறது.”

“இளவரசே! அவ்வாறு நிகழாமல் செய்யத்தானே இன்று இங்கு கூடுகின்றோம்? நம் குருதேவர் இருக்கையில் நமக்கென்ன குறை? நாம் கட்டிய மனக்கோட்டையை அவர் ஒருபோதும் அவ்வாறு அழிந் தொழிந்து போக விடமாட்டார். அவரும் சேர்ந்து கட்டினது தானே அக்கோட்டை?”

“இல்லை கருணாகரா! காரியம் வேறு வகையாகப் போய் விட்டது. முதலாவது, என் காதற் கனியை, நான் என் உயிரினும் பெரிதாக எண்ணிவரும் என் கண்மணி மதுராந்தகியை எனக்குக் கொடுப்பதில்லையாம். எனது குலப்பகைவன் விக்கிரமாதித்தன் இல்லை? அவன் தம்பி சய சிம்மனுக்குக் கொடுக்கப் போகிறானாம் மடயன்! அதன் பின் எனக்கு இங்கு என்ன வேலை? அப்புறம் நானெங்கே இச்சோழ நாட்டுக்கு அரசனாவது? இரண்டாவது, எனது அம்மான் இறந்ததிலிருந்து நான் இங்கு இருப்பதையே அவன் விரும்ப வில்லையாம்; மதுராந்தகி சொன்னாள். இன்று அதிராசேந்திரன் பார்த்து வெளியில் நட என்றால் என் நிலை என்னாவது?”

“இளவரசே! அவனுக்கு அவ்வளவு நெஞ்சத் துணிவு ஒரு போதும் வராது. உன்னைச் சோழப் பேரரசனாக்குவது நம் குருதேவரின் கடமையும் பொறுப்புமாகும். அதற்காகவே அவர் உயிர் வாழ்கிறார். நானும் என் கடமையைச் செய்யத் தவறேன்; மதுராந்தகனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.”

குருதேவரும் மதுராந்தகனும் வர, இருவரும் எழுந்து குருதேவரை வணங்கினர். குலோத்துங்கன் தன் எண்ணத்தை எடுத்துரைத்தான். குருதேவர்,

“குலோத்துங்க! அது பற்றி நீ சிறிதும் கவலைப் படாதே. உன்னை இந்தச் சோழ நாட்டுக்கு அரசன் ஆக்காவிட்டால், என் பெயர் ஈசான சிவனா! சோழ நா டென்ன? இத்தமிழக முழுமைக்கும் நீயே தான் தலைவன்! இதில் உனக்கு ஐயம் வேண்டாம். ஆரியச் சூழ்ச்சிக்கு மேற்பட்டதும் ஒன்றுண்டோ? எத்தனையோ தமிழ் முடிமன்னர்களைத் தம் அடி வருடச் செய்துள்ளனர் நம் முன்னையோர். அன்னார் வழியில் வந்தவன் அல்லனோ யான்? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆரியத்தை எதிர்த்தஇரணியன், இரணியாக்கன், மாவலி, சூரபதுமன், நரகாசுரன் முதலிய பன்னூற்றுக் கணக்கான தமிழர் தலைவர் களை ஒழித்துக் கட்டி, அன்னார்க்கு அரக்கர், அசுரர் எனப் பெயர் சூட்டி, தமிழர்களே அவர்களைக் கொடியவர்கள் என்று வெறுக்கும் படி செய்யவில்லையா? இராவணன் முதலிய தமிழர் தலைவர்கள் வெறுத்தழித்த கொலை வேள்வியை. அவர்கள் வழிவந்த தமிழரசர்களே விரும்பிச் செய்து, பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சிறப்புப் பெயருடன் விளங்கும்படி செய்யவில்லையா?”

“ஆரியக் குரிசில்! நம் தசரத ராமனைக் கொண்டே ஆரிய ஆட்சியைத் தமிழகத்தில் நிலை நாட்ட முயன்றனர் அகத்தியர் முதலிய நம் முன்னையோர். ஆனால், அது கை கூடாமற் போயிற்று. நமது முன்னோர்கள் அரும்பாடு பட்டுத் தமிழகத்திற் பயிர் செய்த ஆரிய நச்சு மரங்கள் தழைத்துச் செழித்துப் பயன்தர வொட்டாமல் விழிப்புள்ள தமிழர் தலைவர்கள் அவ்வப்போது வெட்டி யெறிந்து வந்தனர். இனி அம்மரங்களை வெட்டாமலும், மேலும் நிரம்ப ஆரிய நச்சு மரம் செடி கொடிகளனைத்தையும் பயிர் செய்து பயன் தரும் படி பாதுகாக்கவும், தமிழகத்தில் ஆரிய ஆட்சியை ஏற்படுத்தவே நான் உயிர்வாழ்ந்து வருகின்றேன். அதற்கேற்ற நல்ல வேளையும் அடுத்து விட்டது.”

“அரசிளங்குமர! சேர சோழ பாண்டியர்களாகிய செந்தமிழ் வேந்தர்கள் மூவரும் அன்று இமய நெற்றியில் புலிவிற்கெண்டை பொறித்து நம் முன்னோர்களை இழிவு படுத்திய அச்செயலை நினைக்க நினைக்க என் நெஞ்சம் குமுறுகிறது. நல்ல குருதி யோட்டமுள்ள எந்த ஓர் ஆரியன் நெஞ்சமும் குமுறத்தான் செய்யும். அன்று செங்குட்டுவன் கனகவிசயர்தம் முடித்தலையில் கண்ணகியின் படிமக்கல் ஏற்றிய கொடுமையை நினைத்துப்பார். ஏன் உன் பாட்டனைப் பல ஆண்டுகள் சிறையிலடைத்துச் சிறுமைப் படுத்திய செயல்தான் என்ன மறக்கக் கூடியதா? இவற்றிற்கெல்லாம் பழிக்குப் பழி வாங்கி நமது இன இழிவைப் போக்க வேண்டாமா? சோழர்கள் தாய்வழிச் சொந்தம் என்று எண்ணாதே. விக்கிர மாதித்தன் என்ன உனக்கு அயலானா? இதற்கு ஒரே வழி உன்னைத் தமிழ் நாட்டின் தனித்தலைவன் ஆக்குவதே. அது என் வேலை.”

“குருதேவ! உய்ந்தேன். தாங்கள் இருக்க எனக்கு என்ன குறை? அவ்வினவிழிவு என் உள்ளத்தை உறுத்தாமலா இருக்கிறது?”

“குலோத்துங்க! எத்தனையோ மறத் தமிழர்களை எளிதில் ஒழித்துக் கட்டிய அவ்வாரிய மேலோர் வழிவந்த எனக்கு இந்த அதிராசேந்திரனை ஒழித்துக் கட்டுவதாமலை? அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்து விட்டேன். அவனுக்குப் பிறகு மதுராந்தகியை உனக்குக் கொடுக்க மறுப்பவர் யார்? அவள் உனது உடைமையானால், சோழ அரசமரபின் முடி காலடியில் வந்து விழுமன்றோ?”

“இளவரசே! அதிராசேந்திரன் இக்கொடிய நோயினின்றும் இனித்தப்ப முடியாது. இந்நோய் தீரக் கூகூர் இறைவன் திருமுன் தேவாரம் ஓத ஏற்பாடு செய்துள்ளானாம். இரவு பகல் எந்நேரமும் ஓயாது ஓதினாலும் கூகூர் இறைவனால் இனிஅவனைக் காப்பாற்ற முடியாது; அவ்வளவு கொடிய நோய்! நான் ஏற்பாடு செய்திருக்கும் உள்நாட்டுக்குழப்பம், அவன் விரைவில் ஒழிவதற்கும், நீ சோழப் பேரரசனாவதற்கும் தோன்றாத் துணையாகும் என்பதில் ஐயமும் உண்டோ? கருணாகரனும் மதுராந்தகனும் அதற்கு ஆவன வெல்லாம் செய்து வருகிறார்கள். ஆகையால், நீ கவலையின்றியிரு. நாங்கள் வருகிறோம்.”

முதல் இராசராசன் காலத்திலிருந்தே (985 - 1014) வட நாட்டிலிருந்து ஓர் ஆரியப் பிராமணனை அழைத்து வந்து அரசகுரு ஆக்கிக் கொள்வதைச் சோழமன்னர்கள் வழக்க மாகக் கொண்டு வந்தனர். அவ்வாறு சோழ அரசகுரு ஆனவரே ஈசான சிவனார் என்பவர். ஆனால், இவர் யாருக்குக் குருவானாரோ, யாரால் குருவாக்கிக் கொள்ளப் பட்டாரோ அம் மரபையே ஒழித்துக் கட்டி, தமது இனத்தைத் தமிழ் நாட்டுக்குத் தலைமை யாக்கத் தலைப்பட்டு விட்டார். தமிழ் நாட்டில் ஆரியரைக் குடியேற்றுவதையும் ஆரிய நச்சுவிதைகளை விதைப்பதையுமே இவர் தமது வாழ்க்கைப் பயனாக்கொண்டவர். தமிழ் நாட்டை ஆரிய மயமாக்கக் காப்புக் கட்டிக் கொண்டு வேலை செய்தவர் என்று சுருங்கக் கூறி விளங்க வைக்கலாம்.

கருணாகரன் என்பவன், ஆரிய இனத்தைச் சேர்ந்த பல்லவ மரபினன்; கலிங்கத்துப் பரணி கூறுகின்ற கலிங்கப் போர் வென்ற கருணாகரத் தொண்டைமான் என்பவன் இவனே. மதுராந்தகனும் ஆரிய இனத்தினனே; நல்லூர் என்னும் ஊரினன்; குலோத்துங் கனால், ‘பிரமாதிராசன்’ என்னும் பட்டஞ் சூட்டிப் பெருமைப் படுத்தப்பட்டவன். இவர்களும், இன்னும் சில இரண்டகர்களும் சேர்ந்தே சோழ அரசை, ஏன்? தமிழ் அரசையே ஒழித்துக் கட்டச் சூழ்ச்சி செய்து வந்தனர். முடிவில் வெற்றியும் பெற்றனர். தமிழ் நாடு இன்று இந்நிலையை அடைந்ததற்கு, தமிழர்கள் இன்று தன்னரசையிழந்து தவிப்பதற்கு இவர்களே காரணமாவர்.

பம்பாய் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள வாதாவியைத் தலைநகராகக் கொண்ட இரட்டபாடி நாட்டைச் சாளுக்கியர் என்போர் ஆண்டு வந்தனர். இவர் வடநாட்டிலிருந்து புதிதாகக் குடியேறிய ஆரிய வகுப்பினராவர். அச்சாளுக்கியர் மரபில் வந்த இரண்டாம் புலிகேசியின் தம்பியான குப்தவிஷ்ணு வர்த்தனன் என்பான், கிருஷ்ணை கோதாவிரி யாறுகட் கிடையே கீழ்க்கடலை யடுத்திருந்த வேங்கி நாட்டை வென்று அதற்கு அரசனானான். இவன் வழி வந்தோர் கீழைச் சாளுக்கியர் எனவும், வாதாவிச் சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர் எனவும் பெயர் பெற்றனர்.

இவ்விரு சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் அடிக்கடி போர் நடந்து வந்தது. ‘மத்தளத்துக்கு இரு புறம் இடி’ என்பது போல, அவ்விருவகைச் சாளுக்கியர்களும் சோழ நாட்டை இரு முனையிலும் தாக்கி வந்தனர்.

முதல் இராசராச சோழன் வேங்கியை வென்று, விமலாதித்தன் என்னும் வேங்கி வேந்தனைப் பிடித்து வந்து சிறை வைத்தான். அவன் பல ஆண்டுகள் சோழ நாட்டுச் சிறையிலிருந்தான். பின், இராசராசன் தன் மகள் குந்தவை என்பாளை அவனுக்குக் கொடுத்து மருமகனாக்கி வேங்கியை ஆளச் செய்தான்.

இராசராசன் மகனாகிய கங்கை கொண்ட சோழன் என்னும் இராசேந்திரயை சோழன் தன் மகள் அம்மங்கை தேவி என்பாளை, தன் தங்கை குந்தவையை விமலாதித்தன் மகன், இராசராச நரேந்திரன் என்பானுக்குக் கொடுத்தான். இவ்வம் மங்கை தேவியின் மகனே சோழ அரசைக் கைப்பற்றச் சூழ்ச்சி செய்யும் குலோத்துங்கன் என்பான். இவ்வாறு சோழர்கள் கீழைச் சாளுக்கியர்க்குப் பெண் கொடுத்துத் தம் நாட்டின் ஒரு பக்கத்து இடியைத் தவிர்த்துக் கொண்டனர்.

கங்கை கொண்ட சோழன் மக்களில் முதல் இராசாதி ராசன், இரண்டாம் இராசேந்திரனுக்குப் பின், வீர ராசேந்திரன் என்பான் ஆட்சிக்கு வந்தான். இவன் தன் மகளை மேலைச் சாளுக்கியனான ஆறாம் விக்கிரமாதித்தனுக்குக் கொடுத்து மற்றொரு புற இடியையும் நீக்கிக் கொண்டான்.

தமிழ் நாட்டில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகத்தைச் சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மரபினரே ஆண்டு வந்தனர். இவர்கள் ஒருவர்க்கொருவர் ஒவ்வொருகால் பகை கொண்டு பொரு தனரேனும், ஒருவர் மற்றவர் நாட்டைப் பிடித்து ஆளாமல் தத்தம் நாடுகளையே ஆண்டு வந்தனர். ஆனால், அத்தமிழ் மரபுக்கு மாறாக, முதல் இராசராசன் முதல், முதல் வீரராசேந்திரன் ஈறான சோழ மன்னர்கள் சேரபாண்டியரை வென்று, தமிழ்நாடு முழுமையும் தாங்களே ஆண்டு வந்தனர். ‘வண்புகழ் மூவர்’ ‘முடியுடை மூவேந்தர்’ என்ற முறையை இவர்கள் அழித்தொழித்து விட்டனர். அச்சோழ மன்னர்கள் செய்த அத்தகாச் செயலே தமிழ் நாட்டில் தமிழ் அரச மரபு ஒழிந்ததற்குக் காரணமாகும்.

வீரராசேந்திரனுக்கு அதிராசேந்திரன் என்ற ஒரே மகன். கி.பி. 1070-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வீரராசேந்திரன் இறக்கவே, அதிராசேந்திரன் சோழப் பேரரசன் ஆனான். அவனுக்குப் பிள்ளை இல்லாததால், அவனை விரைவில் ஒழித்துச் சோழப் பேரரசைப் பெறவே குலோத்துங்கன் முதலிய நால்வரும் கூடிப் பேசினர்.

குலோத்துங்கன் தாயான அம்மங்கை தேவி தான் கருவுற்றதி லிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திலேயே இருந்து வந்தாள். குலோத்துங்கன் சோழ அரச குமரன் போலவே வளர்ந்து வந்தான். வீரராசேந்திரன் தன் தங்கை மகனான குலோத்துங்கனை இளவரச நிலையிலேயே வளர்த்து வந்தான். அதாவது, தன் மகன் போலவே வளர்த்து வந்தான் எனலாம். தன் அண்ணன் இரண்டாம் இராசேந்திரன் மகளான மதுராந்தகியைக் குலோத்துங்கனுக்குக் கொடுக்க முடிவு செய்திருந்தான். மதுராந்தகியும் குலோத்துங்கனும் காதலர்கள் போலவே பழகி வந்தார்கள். அதிராசேந்திரனும் இதை மறுக்கவில்லை.

ஆனால், தன்னை ஒழித்து விட்டுச் சோழப் பேரரசனாகச் சூழ்ச்சி செய்வதை அறிந்தபின், அவன் மதுராந்தகியைக் குலோத்துங் கனுக்குக் கொடுக்க விரும்பாததோடு, குலோத்துங்கன் சோழ நாட்டில் இருப்பதையே வெறுத்தான். தன் மைத்துனன் ஆறாம் விக்கிரமாதித்தன் தம்பியாகிய சயசிம்மனுக்கு மதுராந்தகியைக் கொடுத்துத் தனக்கு வரவிருக்கும் கேட்டினைத் தடுக்க எண்ணினான். இது இயல்புதானே? ஆனால், கொடிய நோயால் வருந்திய அதிராசேந்திரன், ஈசான சிவன் உண்டாக்கிய உள்நாட்டுக் குழப்பத்தால் உண்டான கவலையால் உயிர் துறந்தான். குலோத்துங்கன் மதுராந்தகியை மணந்து கொண்டு சோழப் பேரரசனானான். நாட்டுக்கு அரசனில்லாக் குறையையும், குலோத்துங்கன் இளவரசன் போலவே இருந்து வந்த பழக்கத்தையும் எண்ணி, அரசியல் அதிகாரிகளும் பெருமக்களும் அவன் சோழப் பேரரசனாக உடன்பட்டனர் போலும்!

குலோத்துங்கன் 9-6-1070ல் சோழப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டான். அன்றிருந்து சோழ நாட்டில் தமிழ் அரசமரபு ஒழிந்து ஆரிய அரசமரபு ஏற்பட்டது.

அரசியல் முறைப்படி மதுராந்தகிதான் அரசுக்குரியவள். அவளுக்குத் தான் முடி சூட்டியிருக்க வேண்டும். அவளைத் தான் சோழப் பேரரசியாக்கியிருக்க வேண்டும். அல்லி, மீனாட்சி முதலிய தமிழரசியரும், விக்டோரியா முதலிய ஆங்கில அரசியரும் நாடாண்டு வந்ததையும், அவர்கள் கணவன்மார் புது மாப்பிள்ளை போல இருந்து வந்ததையும் அறிக. இன்றும் எலிசபெத்து அரசியின் கணவன் என்ற அளவில் தானே எடின்பரோக் கோமகன் இருந்து வருகிறார்? இன்றும் மதுரை மீனாட்சிக்கு வழிபாடு செய்தபின் தானே சொக்கருக்குச் செய்யப்படுகிறது?

மீன்+ ஆட்சி - மீனாட்சி. மீன் என்பது பாண்டிய அரச முத்திரையும் கொடியும் ஆகும். அது ஆகுபெயராய் அரசையும் நாட்டையும் குறிக்கும். பாண்டி நாட்டை, பாண்டிய அரசை ஆண்டதால், மீன் ஆட்சி -மீனாட்சி என்றபெயர் ஏற்பட்டது. அவள் பிள்ளை பெயர் தடாதகை என்பதாகும். பிற்காலத்தார் இவ்வுண்மையை அறியாது, மீனம்+அட்சி-மீன+அட்சி - மீனாட்சி என வடமொழித் தீர்க்க சந்தியாகக் கொண்டு, அங்கயற் கண்ணி எனக் கொள்ளலாயினர். அட்சம்-கண். அட்சி - கண்ணை யுடைவள். மீன் போன்ற-கயல் போன்ற கண்ணையுடையவள் எனக் கொண்டனர். எல்லாப் பெண்கள் கண்ணும் கயல் போன்றது தானே!

ஆனால், அரசியல் முறைக்கு மாறாக, சூழ்ச்சித் திறத் தினால், அரசுக்குரிய மதுராந்தகியிருக்கக் குலோத்துங்கன் சோழப் பேரரசனானான்.

1602-ல் குலோத்துங்கன் தந்தையிறந்தான். குலோத்துங்கன் வேங்கி வேந்தனாக முடிசூட்டப் பெற்றான். ஆனால், அவன் வேங்கியை ஆளவில்லை. வேங்கியை அவன் சிற்றப்பன் விசயாதித்தன் என்பவன் ஆண்டு வந்தான். இவன் சோழப் பேரரசனாகச் சூழ்ச்சி செய்து கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்திலேயே இருந்து வந்தான்; முடிவில் வெற்றியும் பெற்றான்.

குலோத்துங்கனுக்குப் பிறகு, விக்கிரமன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதி ராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இரசேந்திரன் ஆகிய ஆரிய அரசர்கள் 209 ஆண்டுகள் (1070-1279) தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர். அவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தே தமிழ் நாட்டில் ஆரிய நச்சு மரம் செடி கொடிகள் நன்கு வளர்ந்து, பூத்துக் காய்த்துப் பழுத்துப் பயன் தரப் பாதுகாவலராக இருந்து வந்தனர். ஈசான சிவனின் திட்டம் நிறைவேறியது. அவன் திட்டத்தை இவர்கள் நிறைவேற்றி வைத்தனர். அவ்வாரிய நச்சு மரங்களில் இராமாயணமும் பாரதமும் தலையாயவை.

தமிழ் நாட்டில் ஆரியப் பாதுகாப்பு அரண்களாக அமைந்தவை இராமாயணமும் பாரதமுமேயாகும். கடைச் சங்கப் புலவர்களில் ஒருவரான பெருந்தேவனார் என்பவரால் பாரதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. அதனால் அவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்றே அழைக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அப்பாரதம் இப்போது இல்லை. அதற்கு முற்பட்ட நூல்களெல்லாம் அப்படியே இருக்க, அது அழிந் தொழிந்ததன் காரணம் புலப்பட வில்லை. பிற்காலத்தே கவிசாகரப் பெருந்தேவனார் என்பார் ஒருவர் பாரதத்தைத் தமிழ்ப் படுத்தி யிருக்கிறார். அதன் சில பகுதிகள் இப்போதுள்ளன. இவரும் முன்னவரும் இருவரோ ஒருவரோ என்பது ஆராய்ச்சிக்குரியது.

ஆனால், இராமாயணமோ, கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரைத் தமிழ் நாட்டில் தலைகாட்ட முடியவில்லை. முதற் குலோத்துங்கன் காலம் முதல், மூன்றாங் குலோத்துங்கன் காலம் வரை (1070-1200) 130 ஆண்டுகள் ஆரிய ஆட்சியின் கீழ் அரும்பாடு பட்ட பின்னரே மூன்றாங் குலோத்துங்கன் காலத் திற்றான் அதைத் தமிழில் மொழி பெயர்க்க முடிந்தது. காரணம், இராமாயணம் தமிழரின் பகைக் கதை. தமிழரை இழிவு படுத்துங் கதை; தமிழரால் அறவே வெறுக்கப்பட்ட கதை. கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றுவதற்குப் பட்ட பாட்டைப் பார்த்தாலே இது விளங்கும். மூன்றாங் குலோத்துங்கனின் அரசகுருவான ஈசுவரசிவனின் ஆரிய இனவெறியாலும், குலோத்துங்கனின் அதிகார வெறியாலுமே அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. கம்பரின் மகனான அம்பிகாபதியைப் பாடும்படி எவ்வளவோ வற்புறுத்தியும் தன்மான முள்ள அவன் மறுத்து விடவே, பின் கம்பரைக் கொண்டு பாடப்பட்டதாகக் கதையும் உண்டு. கம்பரும், ‘வையம் என்னை இகழவும் மாசென’ என்றே பாடியுள்ளார்.

ஆரிய ஆட்சி தமிழ் நாட்டில் ஏற்படாதிருந்திருக்குமானால், இராமாயணம் ஒருக்காலும் தமிழாக்கப்பட்டிருக்காது; தமிழ் இலக்கிய மரபு இந்நிலையை அடைந்திருக்காது; தமிழர் வாழ்வு இவ்வாறு தாழ்ந்திருக்காது; தமிழாட்சி ஒழிந்திருக்காது.

இப்போது விளங்கிற்றா தலைப்பின் பொருள்? சோழர் வரலாறு எழுதியுள்ள எல்லா வரலாற்றாசிரியர்களும் இவ்வுண்மையை விட்டு, முதற் குலோத்துங்கன் முதல், மூன்றாம் இராசேந்திரன் ஈறாகவுள்ள எண்மரையும் ‘சோழர்’ என்றே குறித்துள்ளனர்; பிற்காலச் சோழப் பேரரசரின் குறியீட்டுச் சொற்களான இராசகேசரி, பரகேசரி என்பவற்றைக் கொண்டு, சோழ மன்னர்களோடு இவர்களைத் தொடர்புபடுத்தியும் உள்ளனர். சோழர் ஆட்சியைப் பேராட்சி யாக்கிய சோழர்கள் என இவர்களிற் பலரைப் புகழ்ந்தும் உள்ளனர். அவர்கள் அவ்வாறு எழுதியதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. இது வரலாற்றி லக்கணத்திற்குப் புறம் பானதேயாகும். முதற் குலோத்துங்கன் முதலியோர் எவ் வகையிலும் சோழராகார்.

எழுத்துப் போலியும் இலக்கணப் போலியும் கண்டவர் தமிழர். ‘முகம் - முகன்’ என ஓரெழுத்து நின்றவிடத்து வேறோ ரெழுத்து நின்று பொருள் வேறு படாதது எழுத்துப் போலி. ‘இல்வாய் - வாயில்’ எனச் சொல் நிலைமாறி அதே பொருள் படுவது இலக்கணப் போலி. ஆனால், குலோத்துங்கன் முதலிய வர்களைச் ‘சோழர்’ என்றதில் அத்தகைய பொருள் அமைய வில்லை. பட்டல்லாததை - பார்ப்பதற்குப் பட்டுப் போல இருப்பதை - போலிப்பட்டு எனவும், முத்தல்லாததை - முத்தைப் போன்ற வடிவும் நிறமும் உடையதை - போலி முத்து எனவும் கூறுவது போல, சோழர் - அல்லாத அவர்களை - சோழ நாட்டை ஆண்டமையால் - போலிச் சோழர் எனலே பொருந்தும். போலிப்பட்டைப் பட்டெனல் எங்ஙனம் பொருந்தாதோ, அங்ஙனமே போலிச் சோழரைச் சோழர் எனலும் பொருந்தாது. போலிப் பட்டைப் பட்டெனக் கூறி விற்கின் எங்ஙனம் குற்ற முடையதோ, அங்ஙனமே போலிச் சோழரைச் சோழரெனக் கூறித் தமிழரை ஏமாற்றுவதும் குற்றமுடையதேயாகும். இது வரலாற்று மரபுக்கு மாறானது.

சோழ நாட்டை ஆண்டதால் இவர்கள் சோழர் எனப் பெயர் பெற்றனர் எனில், பல்லவர் பல நூற்றாண்டுகள் சோழ நாட்டை ஆண்டனர், சோழர் எனப் பெயர் பெறவில்லை. மராட்டியர் சோழ நாட்டை ஆண்டனர், சோழர் எனப் பெயர் பெறவில்லை. நாயக்கர் பாண்டி நாட்டை ஆண்டனர், பாண்டியர் எனப் பெயர் பெறவில்லை. இவர்கள் மட்டும் சோழர் எனப் பெயர் பெறக் காரணம் என்னவோ?

குலோத்துங்கன் சோழப் பெண்ணுக்குப் பிறந்ததால், சோழன் எனப் பெயர் பெற்றனன் எனில், இவன் தந்தையும் சோழப் பெண்ணுக்குப் பிறந்தவன்தானே, ஏன் அவன் சோழன் எனப் பெயர் பெறவில்லை? தமிழ்ப் பெண்கட்குப் பிறந்த சட்டைக்காரர் ஏன் தமிழர் எனப் பெயர்பெறவில்லை? எவ்வகை யிலும் இவர்களைச் சோழர் எனல் பொருந்துவதாக இல்லை.

சோழர் வரலாற்றாசிரியர்கள் இனியேனும், குலோத்துங்கன் முதலிய எண்மரையும் ‘சோழர்’ என்று எழுதியிருப்பதைப் ‘போலிச் சோழர்’ என்று திருத்தி வெளியிட்டு வரலாற்று ஓர வஞ்சனை மரபைத் தூய்மைப்படுத்துவார்களாக.

ஓரவஞ்சனை


ஒரு நாள் மாலை மணி ஐந்தரையிருக்கும். ஆடு மாடுகள் அங்குமிங்கும் நகர்ந்து மேய்ச்சற் காட்டில் மேய்வது போல, முகிற் கூட்டம் வான வெளியில் அங்கு மிங்கும் நகர்ந்து கொண் டிருந்தன. வீட்டுக்கு வந்த விருந்தினர், ‘போய் வருகிறேன்’ என்று தம் இருகைகளையும் கூப்ப, வீட்டரசியார் அவ்விருந்தினரைப் பிரிய மனமில்லாது, தன் ஒண்ணில வெறிக்கும் தண்மதி முகம் ஒருவகை வாட்டத்தையுடைய, கொற்கை முத்துப் போன்ற வெண் பற்கள் தோன்றப் புன்னகை பூத்த வண்ணம், “போய் வாருங்கள்”என்று விடை கொடுத்தனுப்புதலைப் போல, அந்த மெல்லியலின் முகத்தினைப் போன்ற தாமரை மலர்கள் குவியவும், அன்னாள் முருந்தன்ன மூரல் போன்ற முல்லை முகைகள் மலரவும், ஞாயிறு தன் ஒளிக் கைகளைக் குவித்து,செம்முகம் பொலியக்காட்டிப் “போய் வருகிறேன்”என்று உலகம் என்னும் நல்லாள் பால் விடை பெற்றுக் கொண்டிருந்தது.

ஓர் அழகிய மாடி வீடு. அதன் புறக்கடையில் ஒரு முல்லைப் பந்தர். ஓர் அழகிய இள நங்கை, அப்பந்தரில் அவளைப் புன்னகை பூப்ப அன்புடன் வரவேற்பது போலப் பூத்துப் பொலிவுடன் விளங்கும் அம்முல்லைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். தம் தலைவியின் வெண்பற் களுக்கு ஒப்பாமோ வெனப் பறித்து ஒப்பிட்டுப் பார்த்துப் பார்த்து ஒவ்வாவென எறிவது போல அவள் கரும்புக் கைகள் அம்முல்லை முகைகளைப் பூந்தட்டத்தில் போட்டுக் கொண்டிருந்தன.

“தேமொழி! இங்கு என்ன செய்கிறாய்? தமிழ்ப் புலவர்கள் மகளிர் பல்லுக்கு முல்லை முகையை ஒப்புமை சொன்னது சரியா தப்பா என்று உன் பற்களுடன் அம்முகைகளை ஒத்திட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றனையா ஏன்? புலவர் சொல் பொய்யா மெய்யா?”என்று கேட்டபடி அங்கு வந்தான் அவள் கொழுநன்.

“தமிழ்ப் புலவர்கள் சொல் பொய்க்கவா! அங்ஙனம் ஆராய்ந்து பாராது அரைகுறை யாகவா உவமை கூறியுள்ளனர் அவர்கள்?”

“மலரா முல்லை மகளிர் பல்லுக் குவமை, மலர்ந்த முல்லை?”

“மலர்ந்த முல்லை ஆடவர் பல்லுக் குவமை!”

“பல்லிதழ் விரித்துச் சில்லென மணங் கமழும் அம் மலர்ந்த முல்லை எங்ஙனம் ஆடவர் பல்லுக் கொவ்வும்? நீ நகையாடு கின்றனை. இங்ஙனம் பொருந்தா உவமை கூறுதல் தமிழ் மரபுக்கு ஒவ்வாததாகும்.”

“இல்லை, ஒத்த உவமையே தான். ஆடவரின் அகன்ற பற்களுக்கு அம்மலர்ந்த முல்லையின் இதழ்கள் ஒத்த உவமை யாகும். வேண்டுமானால் பறித்து ஒப்பிட்டுப் பாருங்கள்.”

“ஆமாம், அக்காரணத்தினால் தான் மலர்ந்த பூக்களைப் பறிக்காமல் விட்டு வைத்தனை போலும்! நீ இன்று தப்பிப் பிறந்தனை. நீ சங்க முற்காலத்தே பிறந்திருக்க வேண்டியவள். அன்று நீ பிறந்திருந்தால் இவ்வுவமை சொல்லாத ஒரு குறை, தமிழ் மொழிக்கில்லாதிருக்கும். ஒளவை முதலிய பழந்தமிழ் நல்லாரையும் நீ புறங்கண்டு விட்டனை. ஒரு முல்லை மகளிர், ஆடவர் இருவர் பல்லுக்கும் உவமையாகும் உண்மையைக் கண்டறிந்த உன் நுண்மாண் நுழைபுலத்தைப் பாராட்டுகின்றேன்.”

“இல்லை, நான் அவர்களைப் புறங்காணவில்லை. பெண் களின் இயற்கையழகில் ஈடுபட்ட ஆடவர்கள், அன்னாரின் பல்லுக்கும் சொல்லுக்கும், கண்ணுக்கும் மூக்குக்கும். கைக்கும் காலுக்கும் உவமை கண்டு இன்புறுவதையே பொழுது போக் காகக் கொண்டனர். புலமை வாழ்வு வாழ்ந்த பெண்பாலார் சிறுபான்மையின ராதலான் பெரும் பான்மையினரைப் பின் பற்றிச் சென்றனர். இல்லையேல், ஆடவர்கள் பொதுநோக்குடன் இருந்திருந்தால், கருங்குழல், தாழ்குழல், சுரிகுழல், பூங்குழல், பவளவாய், மதிமுகம், முத்துப்பல், துடியிடை, பொற்றொடி போன்ற மகளிரைக் குறிக்கும் அன்மொழித் தொகைகள் போல ஆடவரைக் குறிக்கும் அன்மொழித் தொகைகளும் தமிழ் மொழியில் இருக்குமல்லவா? இவ்வுண்மையை விட்டு, ஒளவை போன்ற பழந்தமிழ்ப் புலவர்களை நான் புறங்கண்டதாகக் கூறுதல் உண்மையுரை யாகாது.”

“தேமொழி! உன்னுடைய தமிழறிவையும், தமிழினப் பற்றையும் நான் பாராட்டுகிறேன்! நீ சொல்வது முழுதும் அப்படியே உண்மை. அன்றென்ன? இன்றும் ஆடவர்கள் பெண்டிரைச் சரிநிகராக எண்ணி நடத்துவதில்லை தானே? நமது தமிழ்ச் சட்ட மன்றமே இதற்குத் தக்க சான்று பகருமே. இரு நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அச்சட்ட மன்றத்தில், பாதிப்பங்காளிகளான பெண்கள், விரல்விட் டெண்ணக் கூடிய அளவில் தானே இருக்கின்றனர்? ஆண்கள் வெட்கித் தலை குனியும்படி சீரும் சிறப்புடன் திறம்பட ஆட்சி நடத்திய இலங் கணியும் தாடகையும் காமவல்லியும் சிந்தாதேவியும் மதுராபதியும் மீனாட்சியும் அல்லியும் வந்த வழியில் வந்த மகளிர் குலத்திற்கு என்ன ஆளுந்திறமையா இல்லை? வாயால்,”ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சாமானமாக வாழ்வமிந்த நாட்டிலே“என அழகாகப் பேசுவதைத் தவிர, நடைமுறையில் ஆடவர்கள் கடைப்பிடித்து நடப்பதில்லை யென்பதை நான் முழுமனத்துடன் ஒப்புக் கொள்கிறேன். இதற்காக நான் வெட்கமும் படுகிறேன்.”

“ஆமாம், நீங்களும் அழகாகத்தான் பேசுகின்றீர்கள். ஆனால்…”

“ஆனாலென்ன?”

“ஒன்றுமில்லை”

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டே பூப்பறித்துக் கொண்டிருக்கையில், ஓர் இளம்பெண், ஆண்டு பதினெட்டுக் குள்தான் இருக்கும்; பூவா முல்லைபோல வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து, இவர்கள் இருவரும் முல்லைப் பந்தரின் எதிரெதிராக நின்று பூப்பறித்துக் கொண்டே பேசிக் கொண்டதைக் கேட்டுக் கொண்டு நின்று விட்டுத் திரும்பி வீட்டுக்குட் சென்று விட்டாள்.

அவள் யாருமல்லள்; தேமொழியின் கொழுந்தி, தீந்தமிழனின் தங்கை- துளசிதான். துளசி வைத்து வளர்த்தது தான் அம் முல்லைக்கொடி. அவளும் அம்முல்லை மலரைப் பறித்து மாலையாகத் தொடுத்து அத்தொடையைத் தன் மொய் குழலில் அணிந்து, “பூங்குழல்”என்னும் பொலிவுடன் விளங்கி வந்தாள். அப்புறம்? அப்புறம் கீழே படியுங்கள்:

மேட்டுப்புதூர் என்பது ஒரு நாட்டுப்புற ஊர். பேர் என்னவோ மேடானாலும், அது நெல்லுங் கரும்பும் விளையும் வயல் சூழ்ந்த ஊர். வேங்கடம் பிள்ளை என்பவர் அவ்வூரின் பெருஞ் செல்வர். இவர்தான் அவ்வூர்த் தலைவரும். மாங்குயில் மொழியம்மையார் என்பவர் வேங்கடம் பிள்ளையின் வாழ்க்கைத் துணைவியார். அவ்விரு பெற்றோரின் செல்வ மகனும் செல்வ மகளுந்தான் நம் தீந்தமிழனும் துளசியும்.

அவர்கள் இருவரும் செல்வமாக வளர்ந்தனர். செல்வமாக வளர்ந்தனர் என்பதைச் சொல்லவா வேண்டும்? அவர்கள் செல்வமாக வளர்ந்து மணப் பருவத்தையடைந்தனர். தீந்தமிழன் ஈரொன்பானாண் டகவையும், துளசி ஈராறாண்டகவையும் அடைந்தனர் எனலாம், இலக்கிய நடையில் - இளங்கோ வடிகள் நடையில்.

“ஏனுங்க! நீங்கென்ன இப்படி உங்க பாட்டிலே இருக்கறீங் களே! நான் சொல்லறதெக் காதில் போட்டுக்காமே - இதென்ன நல்லாவா இருக்கும்? நாலு பேரு என்ன பேசிக்கு வாங்க? புள்ளெ பருவமாயி ஒரு வருசத்துக்கு மேலாவுது; இன்னும் வீட்டிலெ வெச்சுக்கிட்டிருந்தா ஊருவாயே மூட ஒலெ மூடியா உண்டு? அதோடு அதன் பருவத்திலே செய்து முடிச்சிட்டாத்தானே நம்ம பாரமுங் குறையும்? வந்த இடத்தையெல்லாந் தட்டிக் கழிச்சுக் கிட்டே இருந்தா அப்புறம் வார வங்க ஒருவிதமா நினைக்க மாட்டாங்க?”

“நானென்ன சும்மாவா இருக்கிறேன்? நம்ம செல்வாக்குக்கும் தகுதிக்கும் செரியா இருக்க வேண்டாமா? படிப்பிருந்தால் பணமில்லை, பணமிருந்தால் படிப்பில்லை. அந்த இரண்டு மிருந்தாக் குலமில்லை.”வழி வழியாக வந்த குடும்பப் பெருமையை வேங்கடம் பிள்ளை கெடுத்து விட்டான்“என்ற கெட்ட பெயரையா வாங்கச் சொல்லுகிறாய்?”

“ஏன் அந்தக் குடும்பத்துக் கென்ன? பையனும் படிச் சிருக்குது, பணமுமிருக்குது. குலங் குல மின்னு குலமா சோறு போடுது? பணம் பந்தியிலே குலங் குப்பையிலே தானே? எங்கூருலே வடக்கு வளவாரு புள்ளையைக் குடுத்திருக்குது பாருங்க, அந்தப் பையன் பாட்டன் அவுங்க பண்ணையத்திலே இருந்தானாம். இப்ப நெரயாக் காடு தோட்டம் சொத்துச் சொகமெல்லாம் வர, அவன் பேரன் மருமகனாகிவிடவில்லையா? பண்ணையக்காரக் குடும்பங் கடனாளியா இருக்குது. பண்ணையத்தி லிருந்தவங்க குடும்பம் இப்பப் பணத்திலே வாழுது. அவுங்க கடனை யெல்லாம் மருமகன் கட்டிப் போடப் போறானாம்; ஒன்னுக்கு ரண்டு காரிருக்குது, சும்மா குலங்குலமின்னு நாளைக் கடத்தாதீங்க. அந்தப் பையனுக்கே குடுத்துக் கில்லாம். அழகான பையன்.”

“சரி! அப்படியே செய்திட்டாப் போவுது. புள்ளெ யென்னுங்கு தோ?”

“புள்ளை யென்னுங்கு? எருத்தைக் கேட்டா பொதி வைப்பது? அதையே முடிச்சுப் போடலாம்!”

வேங்கடம் பிள்ளை மனைவியின் பேச்சுக்குக் கட்டுப் பட்டவர். “சரி அப்படியே செய்து விடலாம்”என்றார். புரோகி தனைக் கூப்பிட்டுப் பொருத்தம் பார்த்தார்கள். பத்துப் பொருத்தமும் அப்படியே அமைந்திருக்கிறதென்றான் அவன். நல்ல முகூர்த் தத்தில் துளசிக்கும் தோலா மொழிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது.

பருவமான பெண் வீட்டிலிருக்க, பையனுக்கு மணஞ் செய்யக் கூடாது என்ற குல வழக்கப்படி தள்ளி வைத்திருந்த தீந்தமிழன் திருமணம், துளசி திருமணம் நடந்த அடுத்த மாதத்திலே அவ்வாறே சீரும் சிறப்புடன் நடந்தது. இவனுக்கும் பொருத்தம் பார்த்து, நல்ல முகூர்த்தத்தில் எல்லாச் சடங்குகளும் செய்துதான் திருமணம் செய்தார்கள்.

தீந்தமிழன் திருமணம் நடந்து ஒரு மாதங்கூட இன்னும் முடியவில்லை. வேங்கடம் பிள்ளையும் மாங்குயில் மொழி யம்மையும் மக்கள் மருமக்களுடன் தென்னாட்டுத் திருக் கோயில் களைத் தரிசித்து வரப் புறப்பட்டனர். பழனி யாண்டவனையும், மதுரை மீனாட்சி சொக்கரையும், திருப்பரங்குன்றச் செவ்வேளையும் தரிசித்துக் கொண்டு, செந்தூர் வேலாண்டியைத் தரிசிக்கச் சென்றனர். திருச் செந்தூர் செல்லும் வழியில் குற்றால அருவியில் நீராடிக் குறும் பலா இறைவனையும் தரிசித்து விட்டுச் செல்லலா மெனச் சென்றனர். செல்லும் வழியில் அவர்கள் சென்ற இன்னூர்தி சாலை யோரமிருந்த ஒரு மரத்தில் மோதியது. வண்டி பள்ளத்தில் விழுந்துவிட்டது. அந்தோ! துளசியின் கணவனும் தீந்தமிழனின் மனைவியும் பிணமாயினர். மற்றவர்களுக்கும் நல்ல அடி. வணங்கி வழிபட்டுச் சென்ற அத்தனை தெய்வங்களும் காப்பாற்ற வில்லை. துளசி கைம்மையானாள். தீந்தமிழன் தபுதாரன் ஆனான். திருக்கோயில்களைத் தரிசித்து, தெய்வங்களை வணங்கி வழிபட்டு வரம் பெற்று வரச் சென்ற வேங்கடம் பிள்ளையும் அவர் மனைவியும், மருமகனையும் மருமகளையும் இழந்து, கணவனையும், மனைவியையும் இழந்த தன் மக்களுடன் ஊர் வந்து சேர்ந்தார்கள்.

ஒரு மாதம் அவர்கட்குத் துன்பத்துடன் கழிந்தது. ‘ஊரி (மோட்டார்) கவிழ்ந்தது’ என்னும் செய்தியைச் செய்தித்தாளில் பார்த்தால் அன்று முழுதும் வேங்கடம் பிள்ளையும் அவர் மனைவியும் உண்ணாமல் உறங்காமல் அழுது கொண்டேயிருப் பார்கள்; நம்பிக் கைவிட்டதெய்வங்களை நொந்து கொள் வார்கள்; உலக வாழ்வையே வெறுப்பார்கள். அடுத்த மாதம் பிறந்தது.

“ஏனுங்க! பையன் தண்டுவனாட்ட இருந்தா நல்லாவா இருக்கும்? நாலு என்ன நினைக்கும்? பையன் தனியா நல்லது பொல்லாதுக்குப் போகவர இல்லாமெ எத்தனை நாளைக்கு இப்படி இருப்பான்? இந்த மாதத்திலேயே எப்படியாவது தேவையை முடிச்சுப் போடோணும்”என்று கணவனை வற்புறுத்தி னாள் மாங்குயில் மொழியம்மை.

ஆனால், யாதொரு மாறுபாடு மின்றி முன்போலவே இருக்கும் தன் மகனைப் பற்றி இவ்வாறு தன் கணவனிடம் வற்புறுத்தி வந்தாளேயன்றி, அத்தாய், சுமக்க முடியாது சுமந்திருந்த நகைகளையிழந்து, வகை வகையானவண்ணப் பட்டாடைகளை யிழந்து, மஞ்சளிழந்து, மணப்பொடியை இழந்து, பொட்டை யிழந்து, பூவை இழந்து, வெள்ளையுடுத்து, பூத்து மாறின பூங்கொடி போல் பொலிவின்றி, வெளியிற் செல்லாது வீட்டுக் குள்ளேயே ஊணுறக்கமின்றி அழுத கண்ணுஞ் சிந்தையுமாய்ப் படுத்துக் கிடக்கும் தன் மகளைப் பற்றிக் கனவிற் கூட நினைக்க வில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் அவளைப் பற்றி, அவள் தனிமையைப் பற்றி அவ்வளவு அக்கறையும் அவசரமும் பட்ட அத்தாய், ஏனோ இப்போது அவள் தனிமையை மறந்து விட்டாள். அவளை அங்ஙனம் நினைக்க முடியாத நிலையில் வைத்து விட்டது அவள் குலச் சட்டம்!

அடுத்த மாதம் தீந்தமிழனுக்கும் தேமொழிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. அவர்கள் இனிது இல்லறம் நடத்தி வந்தார்கள். ஆண்டுகள் இரண்டு உருண்டோடின. ஆனால், துளசியோ, சென்னைக் கீழ்ப்பாக்க மருத்துவ சாலையிலுள்ள மகளிரைப் போல், நடைப்பிணமாக அவ் விரண்டாண்டையும் கழித்து வந்தாள். கோயில் கட்டியவர்கள் அக்கோயிலுக்குட் போக முடியாமலும் இருப்பதைப் போல், தான் வைத்து அன்போடு வளர்த்த முல்லைக் கொடியைத் தீண்டாத நிலையில் இருந்து வந்தாள் துளசி.

புறக்கடைக்குச் சென்ற துளசி, தான் வைத்து வளர்த்துத் தனக்குப் பயன்படாமல் இருக்கும் அம்முல்லைக் கொடியில், அண்ணனும் அண்ணியும் எதிரெதிராக நின்று கொண்டு, சிரித்துப் பேசிக் கொண்டு பூப்பறிக்கும் காட்சியைக் கண்டாள். “அவர் இருந்தால் நாமும் இப்படி”என அவள் வாய் முணுமுணுத்தது. உடனே தன் நிலை அவள் மனத்தில் தோன்றி அவளை வருத்தத் தொடங்கியது. கொஞ்ச நேரம் அப்படியே செதுக்கிய சிலை போல அக்காட்சியைப் பார்த்த வண்ணம் நின்றாள். அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை. அவள் கண்கள் முத்து முத்தாகக் கண்ணீரை உதிர்த்தன. வீட்டுக்குட் சென்று, கரை யில்லாத துன்பக் கடலின் இடையில் கிடந்தாள்.

தேமொழி அம்முல்லைப் பூவைப் பறித்துக் கொண்டு போய், அழகிய மாலை தொடுத்து, நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று தன் கருங் குழலில் சூடி, “நல்லா இருக்குதா?”என்றாள்.

“கேட்கவா வேண்டும்? அம்முல்லைக்கொடி இப்போது உன்னைப் பார்த்தால், உன்னைப் போல் தானில்லையே யென்று வருந்தி, ‘என் அழகைக் கெடுத்தவளே! என் பூக்களன்றோ உன்னை என்னிலும் அழகுடைய வளாக்கி, என்னை நாணும்படிச் செய்தன? இனி என்ன செய்வாயோ பார்க்கலாம்’ என்று அது தன் பூக்களை உதிர்த்துப் பூவா முல்லையாகிவிடும். இதனால் தான் புலவர்கள் மகளிரைப்”பூங்கொடி“என்றார்கள் போலும்! பொருத்தமான பேர்!”

“ஆமாம், வாங்க, நீங்களும் ஒரு புலவரே ஆகி விட்டீர்கள்”என்று அப்புறம் சென்றாள் தேமொழி.

“தேமொழி! துளசி எங்கே?”

“அந்தப் பக்கம் இருப்பாள். ஏனோ இன்னும் காப்பிகூடக் குடிக்கவில்லையே!”

“காப்பி கூடக் குடிக்காமல் இந்நேரத்தில் எங்கு போய் இருப்பாள்? தேமொழி, போய்ப்பாரு!”

தேமொழி போய், ஓர் அறைக்குள் வெறுந் தரையில் அழுது கொண்டு படுத்திருக்கும் துளசியைக் கண்டாள். “துளசி! காப்பி கூடக் குடிக்காமல் இந்நேரத்தில் ஏன் இங்கு வந்து படுத்துக் கொண்டாய்! எழு, காப்பி சாப்பிடலாம். உடம்புக்கென்ன? - துளசி! ஏன் பேசவில்லை? எழம்மா! தலையா வலிக்கிறது? சுடச்சுடக் காப்பி சாப்பிட்டால் நல்லாப் போய் விடும். எழு”என்று கையைப் பிடித்துத் தூக்கினாள். அழுதழுது கண்கள் வீங்கியிருப்பதைக் கண்டாள்.

“துளசி! யார் என்ன சொன்னாங்க? இந்த வீட்டில் உன்னை ஏதாவது சொல்லறவுங்க யாரு? ஏம்மாஅழுகிறாய்? உனக்கென்ன குறை, நானிருக்கும் போது? ஏன் அழுகிறாய்? உள்ளதைச் சொல்”என்று எடுத்து உட்கார வைத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, கண் கலங்கிய வண்ணம், “யார் என்ன சொன்னார்கள்? மாமனும் அத்தையும் தான் ஊரிலில்லையே? உங்க அண்ணாரும் நான் பூப்பறிக்கிற பக்கம் இருந்தார். என்னம்மா உள்ளதைச் சொல். என்ன துளசி! இப்படி ஒன்றும் பேசாமல் நீ அழுதா, அப்புற நானும் உன்னோடு சேர்ந்து கொண்டு அழ வேண்டியது தான். சும்மா இரம்மா! என்ன உள்ளதைச் சொல்!”

“ஒன்றுமில்லை”

“ஒன்று மில்லாமாலா இப்படி அழுது கண்ணெல்லாம் வீங்கிக் கெடக்கிறது? எங்கிட்டச் சொல்லறதுக் கென்ன? என்னம்மா?”

“ஒன்றுமில்லை. நீங்களும் அண்ணனும் பூப்பறித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் நினைவு வந்தது, அதனால் அழுதேன்.”

அது தேமொழி மனத்தில் ஊசி போல் தைத்தது. அவளும் கொஞ்சநேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாள். பின், “என்னமோ வாழும் பருவத்தில் உனக்கு இந்த நிலை! அழுது என்ன செய்வது? நாம் ஒரு புல்லாய்ப் பூண்டாய்ப் பிறக்காமல் பெண்ணாகப் பிறந்தோம் - அதுவும் இந்தக் குலத்தில். எத்தனை யோ வகுப்பார்கள் மறுமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். வகுப்புக் கொரு சட்டம்! பெண்களை உயிரோடு வதைப்பது உயர்ந்த குலம்! அவர்களும் மக்கள் தானே? வேறு எந்த நாட்டில் இந்தக் கொடுமை!”

“அண்ணி அந்த இராசாராம் மோகன்ராய் செய்த கொடுமை இது. இல்லையேல், அன்றே அவரோடு என்னையும் பொசுக்கி யிருப்பார்களல்லவா? என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு அவரைப் போல் ஆவதுதானே இந்தக் கட்டை?”

“அப்படியெல்லாம் எண்ணாதே அம்மா! என்னமோ பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று மேடையிலேறித் தொண்டை கிழியப் பேசுகிறார்கள் ஆண்கள். இதைவிட வேறு உரிமை என்ன உரிமை! சீர்திருத்தம் சீர்திருத்தம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்றுப் பேச்சு. நம்மையல்லாத மற்ற இன மக்களெல்லோரும் கடைப் பிடித்து நடந்து வருவது; நம்மிலேயே ஒரு சில வகுப்பார் மேற் கொண்டுள்ளது. இதைச் செய்யத் துணிவில்லாதவர்சம உரிமை என்பதெல்லாம் வீண் பேச்சுத் தானே? துளசி! அழுவதால் பயனொன்றும் இல்லை. ஆண் மக்களை நம்பி நாம் இந்நிலையில் காலத்தைக் கழிக்கக் கூடாது. நாம் ஒன்று பட்டுப் போராடி நம் உரிமையைப் பெற வேண்டும். தானாக வழக்காடி,”கள்வன் மனைவி“என்னும் மாசைத் துடைத்துக் கற்பரசியாக விளங்கும் கண்ணகி வழி வந்தவரல்லவா நாம்? நாம் எடுத்ததற் கெல்லாம் அழுதழுதே இந்நிலையை அடைந்து விட்டோம். வீரம் என்பது ஆண்களுக்கு மட்டும் சொந்தமுடையதா?”

“இல்லை”

இவர்கள் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில் தீந்தமிழன் அங்கு வந்தது, “தேமொழி! ஏன்? துளசி! உடம்புக் கென்னம்மா?”

“அவள் உடம்புக் கொன்று மில்லை.”

“பின்னென்ன? ஏனோ அழுதிருப்பாள் போல் தெரிகிறதே? துளசி! நானிருக்க உனக்கென்ன குறையம்மா? உனக்கு என்ன இல்லை? நம்ம சொத்தில் பாதியை உனக்கு எழுதி வைக்கிறேன். அழாதேயம்மா!”

“அவள் சொத்துக்காக அழவில்லை. உரிமைக்காக அழுகிறாள். நாம் இருவரும் பூப்பறித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து , தன் நிலையை எண்ணி அழுதாளாம். அழாமலா இருக்க முடியும்?”

தீந்தமிழன் தங்கையின் நிலையை எண்ணி, ஒன்றும் பேசாமல் கற்சிலை போல அப்படியே நின்றான். துளசி கண்ணீர் முத்து முத்தாக உதிர்த்தபடி எழுந்து "அண்ணா! தங்கள்மேல் எனக்குச் சிறிதும் வருத்தம் இல்லை. நீங்கள் எனக்காக வருந்த வேண்டாம். எனக்காக நீங்கள் வருந்துவதனாலோ, நான் தங்கள் மேல் வருத்தப் படுவதனாலோ, ஆவதொன்றுமில்லை. என்னை இந்நிலையில் வைத்துக் கொண்டு வாழ்வது நம் உயர்குலம்; அக்குலக் கட்டுப் பாடு; அக்குல மக்களின் அறியாத்தனம்; அக்குல ஆண் மக்களின் கன்னெஞ்சம்; பொது நோக்கமில்லாப் புற்குணம்; தன்னலத்தின் தனிப் பெருமை; பெண் மக்களின் ஏமாளித்தனம்.

"அண்ணா! ஆனால், அதன் பேர் தலையெழுத்து, கடவுளின் கட்டளை, நல்ல தலையெழுத்து! சரி பங்காளிகளான ஆண்களுக் கேன் எழுதவில்லை? தமிழ்ப் பெண்களை, அதுவும் உயர் குலமென்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் ஒருசில வகுப்புப் பெண்களைத் தேடிப் பிடித்து அவர்கள் தலையில் மட்டுமேன் எழுத வேண்டும்? பெண் மக்களாகிய எங்களை இவ்வாறு துன்பக் கடலில் அழுந்தித் துடித்துச் சாகுங்களென்று கட்டளையிட்ட கடவுள், ஆண்களை ஏன் மறந்தது? பொய் யென்றாலும் பொருந்தப் புளுக வேண்டாமா?

"அண்ணா! நம் அப்பாவும் அம்மாவுந்தான் பழமையில் ஊறியவர்கள். அவர்களைக் குறை கூறுவதில் பயனில்லை. அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்! அவர்கள் பழக்க வழக்கம், பண்பாடு அது. அவர்கள் என்னைப் பற்றி, என் நிலையைப் பற்றிக் கலலையில்லாமல் இருப்பதில் தவறொன்று மில்லை.

"ஆனால், அண்ணா! என் உடன் பிறப்பே! தாங்கள் என்னைப் பற்றி, என் நிலையைப் பற்றிச் சிறிதும் கவலை யில்லாமல் இருப்பதுதான் என் நெஞ்சைப் பிளக்கிறது. என்னை வாட்டி வதைக்கிறது. ஏன்? சீர்த்திருத்தம் செல்வாக்குப் பெற்றுள்ள உலகில் பிறந்து வாழும் தாங்கள், சீர்திருத்தம் என்று பேசும் தாங்கள் என் நிலையைப் பற்றி எண்ணாதது, என் நிலையைச் சீர்திருத்த எண்ணாதது குற்றந்தானே?

“என் உடன் பிறப்பே!”பையன் தண்டுவனாட்டத் தனியா இருந்தா நல்லாவா இருக்கும்?“என்று அம்மா….. அப்பாவிடம் சொன்னபோது, நீங்கள் கேட்டுக் கொண்டு தானே இருந்தீர்கள். அப்போது தாங்கள்,”ஏம்மா! தங்கை தனியா இருந்தா நல்லாவா இருக்கும்?"என்றிருக்கலா மல்லவா? இல்லை, தங்களுக்கு இரண்டாவது திருமணம் உறுதியாகி நாளுங் குறித்தபோது, உங்களுக்கு முன்னமே மணந்து இந்நிலையில் இருந்த என்னைப் பற்றி நினைத்தீர்களா? இதுவா உடன் பிறப்பு!

“அண்ணா! முன் பிறந்த தங்கள் மணத்தைப் பற்றிக் கொஞ்சமும் நினையாது, பின் பிறந்த எனது திருமணத்துக்காக ஓடியாடி அப்படித் திரிந்த தாங்கள், நான் பின் பிறந்து முன் கட்டிப் பின்னறுத்து அறுதாலியான பின் என்னை மறந்தே விட்டுத் தாங்கள் மணந்து கொண்ட தன் பொருள் எனக்கு விளங்க வில்லை. அண்ணா! உண்மையான உடன் பிறப்பின் இலக்கணம் இதுவா? உடன் பிறந்த தங்களைவிட என் வாழ்வில் அக்கறை யுடையவர் வேறு யார்? அண்ணா! நம் உடல் உறுப்புக்களில் ஒன்றுக்கு ஏதாவது துன்பம் வந்தால் மற்ற உறுப்புக்களும் உடன் துன்புறுகின்றன அல்லவா? அவையன்றோ உடன் பிறப்பு! அண்ணா! பகுத்தறிவுடைய மக்கள் என்று பறை சாற்றிக் கொண்டு எதற்கு இந்த ஓரவஞ்சனை? ஆணுக்கொரு நீதி; பெண்ணுக்கொரு நீதி - இதுவா பகுத்தறிவின் பயன்? பாதிப் பங்காளிகளான பெண்ணினத்தை, தாய்க் குலத்தைக் கொல்லாமல் கொல்வதா பகுத்தறிவு? ஆண்மக்கள்! இதுவா ஆண்மை?”

“அண்ணாநீர் வந்தபடி அடியவளும் வந்தேன்
அருந்திய நம் தாய்மகப்பால் அடியவளும் உண்டேன்
அண்ணாநீர் மணந்தபடி அடியவளும் மணந்தேன்
அன்றிழந்து விதவை யென அவமானம் அடைந்தேன்
உண்ணாமல் உறங்காமல் உடலமது மெலிந்தேன்
உன்பெருமை காணவுளம் உயிர்போகா துழந்தேன்
எண்ணாமல் ஒருபிறப்புக் கிருநீதி யெதற்கோ?
என்துயரம் கண்டிரங்கா திருப்பதுடன் பிறப்போ!”

இந்திர விழா


“விழவுமேம் பட்ட பழவிறல் மூதூர்”(பெரும் -411) விழாக்களாலே ஏனை நகர்களின் மேலான வெற்றியினை யுடைய ஊர்-என, விழாக்கொண்டாடுதல் ஓர் ஊரின் சிறப்புக்குக் காரணமெனக் கூறுகிறார் பெரும்பாணாற்றுப் படை ஆசிரியர்.

விழா என்பது மக்களின் மகிழ்ச்சிப் பொருள்களில் ஒன்றாகும். விழாவென்றால் சிறுவர் கட்கேயின்றிப் பெரியவர் கட்கும் ஒரே கொண்டாட்டந்தான்! வாழ்க்கைச் சுழலிற் பட்டு வருந்தும் மக்கள், தங்கள் துன்பத்தை மறந்து இன்பத்தில் திளைத்துக் களிக்கும் காலம் விழாக்காலமேயாகும். ஏழை பணக்காரர் என்ற எண்ணத்தை மறப்பித்து, எல்லோரையும் ஒரே படித்தாய் இன்புறச் செய்து, பொதுவுடைமை வாழ்வுக்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்வது திருவிழாவேயாகும். முன்னரே எதிர்ப்பட்டுக் காதலரும்பிய காளையர்க்கும் கன்னியர்க்கும் காதலன்பு மலரப் பேருதவி புரியும் பெருமை திருவிழாவுக்கே உண்டு என்றால் மிகையாகாது.

ஆண்டில் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருவிழா என்பது உலக மக்களின் பொதுவுடைமைப் பொருளாகும். நாகரிக மடைந்துள்ள மக்களேயன்றி, நாகரிக மடையாத மக்களும் ஏதாவது திருவிழாக்கள் கொண்டாடியே வருகின்றனர்.

தைப் பொங்கற் றிருநாளைத் ‘தமிழ்த் திருநாள்’ எனச் சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர் இன்றையத் தமிழ் மக்கள். பொங்கற் றிருநாள் போன்ற எத்தனையோ தமிழ்த் திருநாட்கள் பழந்தமிழ் மக்களால் கொண்டாப் பட்டு வந்தன. “விழவறா வியலாவணம்”(பட்டினப் -158) - திருவிழா நீங்காத பெரிய கடைத் தெரு என்பதால், பல்வகைப் புதிய கடைகள் பொருந்த நிகழும் தேர்த்திருநாள் போலவே, அன்று திருவிழாக்கள் நடந்து வந்தன என்பது தெரிகிறது. அத்தகைய தமிழ்த் திருநாட்கள் நிகழ்ந்த இடங்களில் இன்று ‘தீபாவளி’ போன்ற புராணப் பண்டி கைகள் குடிபுகுந்து கொண்டன. பழந்தமிழர் கொண்டாடி வந்த திருநாட்களில் இந்திர விழா என்பது ஒன்று.

இது காவிரிப்பூம் பட்டினத்து மக்களால் கொண்டாடப் பட்டு வந்த திரு விழாவாகும். இவ்விழா இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வந்ததாக மணி மேகலை கூறுகிறது. இதுதான் இந்நகரில் கொண்டாடிய திருவிழாக்களில் பெருந் திருவிழாவாகும். புகார் நகர மக்கள் இவ்விழாக் கொண்டாடிய சிறப்பினை சிலப்பதிகார - இந்திரவிழவூ ரெடுத்த காதையில் காண்க.

காதற்கயிற்றால் கட்டுண்டு, ‘இருதலைப் புள்ளின் ஓருயிரும்’ என வாழ்ந்து வந்த கோவலனையும் மாதவியையும் மறுமுறை காணா வண்ணம் வெவ்வேறாகப் பிரித்து வைத்ததும், கண்ணகி என்னும் செந்தமிழ்ச் செல்வியைத் தன் கணவனுடன் கூட்டி வைத்ததும். ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டினை - சிலப்பதி காரம், மணி மேகலையை - தோற்றுவித்ததும், மணிமேகலை என்னும் வாழப் பிறந்த வண்டமிழ்ப் பாவையைத் துறவு வாழ்க்கை வாழும்படி செய்ததும் இவ்விந்திர விழாவே யாகும்.

இவ்விந்திரவிழா வின்றேல், ஆரியப் படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் செங்கோற் கஞ்சும் செம்மை யினையும், சேரன் செங்குட்டுவனது வீரதீரத்தினையும், இளங்கோவடி களின் நாவன்மை யினையும் நாம் எங்ஙனம் அறிந்தின்புற முடியும்? நம் முன்னை யோராகிய சங்ககாலத் தமிழர் நாகரிக நல்வாழ்வினை நாம் ஒருவாறு அறிந்து பெருமைப்படுதற்கு இவ்விந்திர விழாவே காரணமாகும் என்பது மிகைபடக் கூறலாகாதன்றோ?

இனி, இத்தகைய வரலாற்றுச் சிறப்பினை யுடைய இவ்விந்திர விழாவினைப் பற்றி மணிமேகலை கூறும் கதையினைக் காண்பாம்;

‘சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்தை வளமுறச் செய்வித்தற்கு நினைத்த அகத்திய முனிவருடைய கட்டளைப்படி, தூங்கெயி லெறிந்த தொடித் தோட் செம்பியன் என்னும் சோழ மன்னன் இந்திரனை வணங்கிக் குறையிரந்து, அவன் உடன்பாடு பெற்று இருபத் தெட்டுநாள் அப் புகார் நகரில் இந்திரவிழாக் கொண்டாடினான். அவனைப் போலவே அவன் வழி வந்தோரும் கொண்டாடி வந்தனர்’(மணி-1)

‘நெடுமுடிக் கிள்ளி என்னும் சோழமன்னன் கொண்டாட வேண்டிய காலத்தே இவ்விந்திரவிழாக் கொண்டாடாது மறந்த தால், மணிமேகலா தெய்வத்தின் சாபப்படி காவிரிப்பூம் பட்டினத் தைக் கடல் கொண்டது.’’ (மணி-25)

இதுவே மணிமேகலையில் கூறப்படும் இந்திர விழாப் பற்றிய கதையாகும். எனவே, காவிரிப்பூம் பட்டினத்தை வளமுறச் செய்வதற்குக் காரணமாக இருந்து வந்த அதே இந்திர விழா, அந்நகரம் அழிந்தொழிவதற்கும் காரணமாக அமைந்தது என்பது தெரிகிறது. வாழ்விக்கப் பெற்ற பிள்ளையே தாயின் சாவிற்குக் காரணமாவது போல இஃதொரு புதுமைத் திருவிழாப் போலும்!

பல்லாண்டு காலம் காவிரிப்பூம் பட்டின மக்களால் சீருஞ் சிறப்புடன் கொண்டாடப் பெற்று வந்த இவ் விந்திர விழாவினுக் குரிய இந்திரன் என்பவன் யாவன்? அவனுக்கு விழாக் கொண்டாடும் படி சோழனுக்கு அகத்தியர் கட்டளை யிடுமுன் காவிரிப்பூம் பட்டினம் என்ன வளமின்றி வறுமையின் உறைவிட மாகவா இருந்து வந்தது? அதுதான் காவிரிப்பூம் பட்டின மாயிற்றே! காவிரியின் வளத்துக்கு மேலும் அந்நகர்க்கு, அல்லது அந்நாட்டுக்கு வளம் எதற்காக வேண்டும்?

பாண்டி நாட்டுப் பொதிய மலையின்கண் இருந்த வராகக் கூறப்படும் அகத்திய முனிவர், வளங் குறைந்துள்ள பாண்டி நாட்டின் தலைநகரான மதுரை வளமுறும் பொருட்டு இந்திரனுக்கு விழாக் கொண்டாடும்படி பாண்டியனுக்குக் கட்டளையிடாமல், வளமிக்க காவிரிப்பூம் பட்டினம் மேலும் வளமுறும்படி இந்திர விழாக் கொண்டாடும்படி தொடித்தோட் செம்பியனுக்குக் கட்டளையிட்டதன் காரண மென்ன? இந்திரவிழாவுக்கும் மணிமேகலா தெய்வத்திற்கும் என்ன தொடர்பு? அகத்தியர் அல்லது இந்திரனல்லவா சாபமிட்டிருத்தல் வேண்டும்?

மேலும்,நகர் வளமுறும் பொருட்டுக் கொண்டாடிய விழாவைக் கொண்டாடாமல் மறந்ததற்கு அந்நகர் வளமற்றுப் போகும்படி சபிப்பதுதானே நேர்மையும் முறையுமாகும்? மேலும், நகரே அழியும்படி சபிப்பானேன்? நகரழிந்தொழியும் படி சபிப்பதைவிட, விழாக் கொண்டாட மறந்த சோழனைச் சபிப்ப தன்றோ முறையாகும்? இன்னபிற ஐயப்பாடுகட்குக் காரணமாக வன்றோ அமைந்துள்ளது இக்கதை?

“விண்ணவர் தலைவனை வணங்கி…. அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது”(மணி-1), “ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென”(மணி-1), “விண்ணவர் கோமான் விழவுநாளகத்து”(சிலப்-5:240) என, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் இரு பெருங் காப்பியத்துள்ளும், இவ் விழாவுக்குக் காரணமான இந்திரன், புராணங்களில் கூறப்படும் விண்ணூலகத்தில் வாழும் தேவர்களுக்குத் தலைவனான இந்திரனாகவே கூறப்பட்டுள்ளான்.

பழந்தமிழ் மன்னர்களான முடியுடை மூவேந்தருள் சேரரும் பாண்டியரும் தத்தம் நகர் வளமுற இந்திரவிழாக் கொண்டாடா திருக்க,சோழர் மட்டும் அவ்விழாக் கொண்டா டியதன் காரணம் விளங்க வில்லை. சேரரும் பாண்டியரும் தங்கள் நகர் வளமுற்று மக்கள் இன்புற்று இனிது வாழ வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களா என்ன? மேலும், நீர்வள மிக்குள்ள, “பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார் நகர்”(சிலப்-1;15-16) வளமுறச் சோழர் இந்திரனுக்கு ஆண்டுதோறும் 28 நாள் விழாக் கொண்டாடி வரும் போது, இத்தகு நீர்வள மில்லாத மதுரைப் பாண்டியர் இவ் விழாக் கொண்டாடாமல் சும்மா இருந்திருப்பாரா என்ன? சோழர் கொண்டாடி வருவதைக் கேட்ட பின்னர் ஆவது கொண்டாடி யிருப்பரன் றோ? சோழர் கொண்டாடிய இந்திர விழாவைப்பற்றிப் பாண்டியர் கேள்விப் படாமலா இருந்திருப்பர்? எனவே, இது ஆராய்ச்சிக்குரிய தொன்றாகும்.

இந்திரவிழாவினைப் பற்றிக் கூறும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ‘இந்திரவிகாரம்’ என்பது பற்றியும் கூறுகின்றன. இந்திரவிகாரம்-இந்திரனால் நிருமிக்கப்பட்ட விகாரம். விகாரம்-அரங்கு, விரிவுரை மண்டபம், அதாவது, பௌத்த முனிவர் களிருந்து புத்தருடைய ஆகமங்களை-அறவுரைகளைப் பொது மக்கட்கு விரித்துக் கூறும் அரங்கு, இடம். “இந்திரவிகாரம் ஏழும் ஏத்துதலின்”(மணி-26:55), “இந்திர விகாரம் ஏழுடன் போகி”(சிப்-10:14) என்பன வற்றால், காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரனால் கட்டப்பட்ட அவ்வரங்கு ஏழிருந்தனவென்று தெரிகிறது.

இங்ஙனமே புத்தர் இருந்து அருளறம் உரைக்க-தமது கொள்கையைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூற-மணி பல்லவத் தீவில் இந்திரனால் பீடிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்து. அது கண்டோர் பழம் பிறப்பினை உணர்த்த வல்லது. அப்பீடத்தின் மீது புத்தர் இருக்கும் போது இந்திரன் வணங்கி வந்தான் என்பது, “தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை; பிறப்பு விளங்கவிரொளி அறத்தகை ஆசனம்; பெருந்தவ முனிவனிருந்தற முரைக்கும் தரும் பீடிகை”(மணி-8), “முற்றவுணர்ந்த முதல்வனையல்லது மற்றப் பீடிகை தன்மிசைப் பொறாஅது, பீடிகை பொறுத்த பின்னர் அல்லது வானவன் வணங்கான்”(மணி-25:58-9) என்பனவற்றால் விளங்குகிறது.

இந்திரனைப் பற்றிப் புராணங்கள் கூறுவதாவது: இந்திரன் என்பவன் வானுலகில் வாழ்பவன்; தேவர்கள் தலைவன். மக்கள் தன்னை நோக்கிச் செய்யும் வேள்வியை ஏற்று, அவ்வேள்விப் பயனை அவர்கள் நுகரும்படி செய்பவன். அவ்வேள்விக்கு அதிகாரி இந்திரனே யாவான். வேள்விக்கு வேந்தன், மகவான் என்னும் இந்திரன் பெயர்களே இதற்குச் சான்று பகரும். மகம்-வேள்வி. மகவான்-வேள்விக்கு அதிகாரி. முனிவர்கள் என்போர் இந்திரனை நோக்கியே வேள்வி செய்து வந்தனர். ஆடு மாடு முதலிய உயிர்களைக் கொன்று செய்யப்படும் கொலைவேள்விகள் அனைத்திற்கும் இந்திரனே தலைவனாவான். வேள்வி செய்தலே இந்திரனை மகிழ்விப்ப தாகும்.

பண்டு இந்நாட்டிற் குடியேறிய ஆரியர் என்போர், தம்மை எதிர்த்த இந்நாட்டுப் பழங்குடி மக்களை அழித் தொழிக்கும் படி இந்திரனை வேண்டி வேள்விகள் செய்து வெற்றி பெற்றதாக ஆரிய வேதங்கள் கூறுகின்றன.

வேள்வியிற் கொல்லப்படும் உயிர்களும், வேள்வித்தீயிற் சொரியப்படும் பொருள்களும் தேவர்களின் உணவாகும். இது அவியுணவு எனப்படும். இந்த அவியுணவைத் தேவர்கள் விரும்பி ஏற்றுண்டு மகிழ்வர். வேள்வியாகிய நற்காரியஞ் செய்வோர் இம்மையின்ப மெய்தி வாழ்வதோடு, மறுமையில் தேவராகப் பிறப்பர். இப்பேற்றினை நல்குவோன் இந்திரனே யாவான், இந்திரன் பெருமைக்கும் விருப்பத்திற்கும் உரியது வேள்வியேயாகும்.

புத்தரோ மக்கள் தலைவர்: கொலை வேள்வியை மறுத்து அருளறத்தை நிலைபெறச் செய்ய அரும்பாடுபட்டவர்; வேள்வி மறுத்தலே புத்தரின் தலையாய கொள்கை; “அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று”என்னும் அருளறத்தை நாட்டு மக்களிடைப் பறைசாற்றி வந்து, அதில் ஒருவாறு வெற்றியுங் கண்டவர்.

இந்திரனே வேள்வியை விரும்புவன்; புத்தர் வேள்வியை வெறுப்பவர், மறுப்பவர். இந்திரன் வேள்வித் தலைவன்; புத்தர் வேள்விப் பகைவர். இத்தகைய நேர்மாறான கொள்கை யுடையவர் இந்திரனும் புத்தரும் மேலும், இந்திரன் மக்களினும் உயர்வுடைய ரெனக் கருதப்படும் தேவர் தலைவன். புத்தர் தேவரினும் தாழ்வுடையராகக் கருதப்படும் மக்கள் தலைவர்.

இங்ஙனம் மிருக்க, மக்களால் வணங்கப்படும், உயர்வாகக் கருதப்படும், மக்கட்கு வரங்கொடுக்கும் நிலையில் உள்ள தேவர் கோனாகிய இந்திரன், மக்களிலொருவராகிய புத்தர் கொள்கை யைப்பரப்ப ஏழு மண்டபங்கள் எடுப்பித்தான் என்பதும், புத்தர் இருந்து தமது கொள்கையை எடுத்துரைக்கப் பீடிகை அமைத்து, புத்தர் அதில் அமர்ந்திருக்கும் போது அவரை வணங்கி வந்தான் என்பதும் எங்ஙனம் பொருந்தும்?

புத்தர் கொள்கை என்ன? கொலை வேள்வியை மறுத்தல் தானே புத்தரின் முதன்மையான கொள்கை? அருளறம் அல்லது பௌத்தாகமம் என்பது, ’தன்னுயிர் போல் பிற உயிர்களையும் எண்ண வேண்டும்; உயிர்களைக் கொன்று செய்யும் கொலை வேள்வியாற் பெறும் பயனொன்று மில்லை; கொல்லாமையே பேரறமாகும்; கொலைவேள்வியால் நற்பேறு கிடைக்கு மென்பது பொய்க் கூற்றேயாகும். வேள்வி தேவர்க்கு விருப்பமானது; அவர்கள் வேள்விக் கொலையை விரும்பியேற்று, வேள்வி செய்வோர்க்கு நன்மை செய்வரெனில், அத்தேவரினும் கொடியோர் யாவர்? கொல்லா மையாகிய அருளறத்தைக் கடைப் பிடியுங்கள் என்பது தானே புத்தர் கொள்கை?

இக்கொள்கையைப் பரப்பவா இந்திரன் ஓரூரில் ஒன்றிரண்டல்ல, ஏழ் அரங்குகள் கட்டி வைப்பான்? தமது பெருமையை, தாம் அடையும் புகழைக் குறை கூற ஒருவர் ஓரூரில் ஒரு சொற்பொழிவு மண்டபங் கட்டி வைப்பாரா? அங்ஙனம் செய்பவரைப் பித்தர் என்பதன்றி வேறு என்னென்பது? தனக்குப் புகழும் பெருமையும் தரும் வேள்வியை மறுத்துக் கூறுவதற்கு மண்டபங் கட்டி வைத்தான், தன் பகைவனே இருந்து தன்னைப் பழித்துக் கூறப் பீடிகை கட்டி வைத்தான், தான் மதிப்புப் பெறா வண்ணம் மறுத்துப் பேசிவரும் தன் பகைவனை வணங்கினான் என்பது பொருந்தாப் பொய்க் கூற்றாகுமன்றோ? எதிரிக்குத் தன்னை எளிதில் வெல்லுதற் கேற்ற களமமைத்துக் கொடுக்கும் ஒருவனிலும் இவ்விந்திரன் அறிவிலி யாகவன்றோ உள்ளனன்?

வேள்விக்கு வேந்தனாகிய இந்திரன், இங்ஙனம் பீடிகையும் அரங்குகளும் அமைத்துப் புத்த சமயத்தை வளர்த்து வந்தா னெனில், புத்தரை வணங்கி வந்தானெனில், கொலை வேள்வியை ஒப்புக் கொள்ளும் வைதிக சமயத்தினரான சம்பந்தர், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லிகள்”எனப் பௌத் தரை மட்டுமல்ல, பௌத்த சமயக் கொள்கையையும் எதிர்த்து இழித்துக் கூறியிருக்க வேண்டிய தில்லையல்லவா? வேள்வித் தலைவனான இந்திரனே வேள்வியை மறுத்துக் கூற, வேள்வியின் கொடுமையை மக்கள் மன்றத்திலே பறைசாற்ற அரங்கமைத்து வைத்திருக்க, வேள்வியை மறுப்போர் அறிவிலிகள் என்று சம்பந்தர் கூறுவது பொருந்தாக் கூற்றாகு மன்றோ?

சோழ வேந்தர் கொண்டாடி வந்த இந்திர விழாவுக்குரிய வனும், புகார் நகரில் இந்திர விகாரம் ஏழு அமைத்தவனும், மணிபல்லவத் தீவில் புத்த பீடிகையமைத்து வழிபட்டு வந்தவனும் தேவர் கோனாகிய இந்திரன் அல்லன்; இவ்விந்திரர் மக்கள் தலைவரே யாவர். மக்கள் தலைவராகிய அவ்விரந்திரர் வரலாறு அருகிய பிற்காலத்தே, வரலாற்றுடன் புராண சமயக் கருத்துக் களைக் கலந்து நூல் செய்த சாத்தனாரும் இளங்கோவடிகளும் அங்ஙனம் மயங்கிக் கூறலாயினார்.

பாண்டி நாட்டைத் தென்புலம் என்பதும், சேரநாட்டைக் குடபுலம் என்பதும், சோழநாட்டைக் குணபுலம் என்பதும் பண்டைய வழக்கு. குணக்கு அல்லது கிழக்கு இந்திரம் எனவும் வழங்கும் “மந்திரம்”என்பது போல, இந்திரம் என்பதும் பழந் தமிழ்ச் சொல்லே. வடவர். தென்னவர், குடவர் என்பதுபோல, குணபுலத்தார் இந்திரர் எனப்பட்டனர்.

இறுதிக் கடல்கோளிலிருந்து இரண்டாவது கடல் கோளுக்கு முன்னர், வங்கக் கடல் நிலப்பரப்பாக இருந்தது. பர்மா, மலேயா எல்லாம் ஒரே நிலப்பரப்பாக இருந்தன. அந்நிலப் பரப்பிற்கு ’நாகநாடு, என்பது பழம் பெயர். “பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டுடன் நானூறு யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்”(மணி9:20-2), “கீழ்நில மருங்கின் நாகநாடு”(மணி-9:54).

இந் நாக நாடெ பழஞ் சோழ நாடாகும். அந்நாகநாடு ஒரு கால் சாவகம் வரைப் பரவியிருந்தது. அந்நாடு மிக்க வளம் பொருந்தியதாகும். நாகர்கள் மிக்க புகழும் போகமும் உடைய ராய் வாழ்ந்து வத்தனர். “நாக நீள் நகரொடு நாக நாடத னொடு போக நீள் புகழ் மன்னும் புகார் நகர்”(சிலப் - 1: 12-3) என, இளங்கோவடிகள் புகாரின் சிறப்புக்கு அந்நாக நாட்டின் சிறப்பினையே எடுத்துக் காட்டியுள்ளார்.

அர்ச்சுனன் மனைவியரில் ஒருத்தியான நாககன்னி என்பவள் சோழன் மகளாகையால், சோழர்க்கு நாகர் என்னும் பெயருண் மையும், நாகநாட்டரசனான வளைவணன் மகள் பீலிவளை என்பாளைச் சோழன் நெடுமுடிக்கிள்ளி என்பான் மணந்திருப்ப தால் (மணி-24), கடைச் சங்க காலம்வரை அந் நாகருடன் சோழர்க்குத் தொடர்பிருந்தமையும் பெறப்படும்.

நாகநாட்டரசனான புண்ணிய ராசன் என்பவனை ‘இந்திரன் மருமான்’ (மணி-24:61) என மணிமேகலை கூறுதலன், பழைய நாகநாட்டரசர்க்கு இந்திரன் என்னும் பெயருண்மை பெறப்படும். மருமான்-வழிவந்தோன்.

“இந்திரன் என்று பழைய நூல் கூறுவது பலவிடத்தில் கடாரத்தரசனையே. கடாரம்-பர்மா. இந்திரன் யானைக்கு வெள்ளை நிறமும், ஐராவதம் என்னும் பெயரும் கூறப் படுவதையும், கடாரத்திலுள்ள ஐராவதி என்னும் ஆற்றுப் பாங்கரில் வெண்புகார் யானை யிருப்பதாகக் கூறப்படுவதையும், இலங்கையிலிருந்த அரக்கரும் அசுரரும் அடிக்கடி இந்திரனை வென்றதாகக் கூறு வதையும், கடாரம் கிழக்கிலிருப்பதையும், இந்திரன் பாண்டி நாட்டின் மேல் கடலை வரவிட்ட கதையையும், மேகம் கீழ் கடலில் தோன்றிக் கொண்டால் என்றுபெயர் பெறுவதையும், கடாரமும் மலேயாவும் இன்றும் ஆடல் பாடல்களில் சிறந்திருப்ப தையும், நோக்குக”(ஒப்பியல் மொழி நூல்-பக்-262).

எண்டிசைக் காவலரில் இந்திரன் கீழ்த்திசைக் காவலன் எனப்படுதலும், கிழக்குத் திசைக்கு இந்திரதிசை என்னும் பெயருண் மையும், இந்திரன் மேகவாகனன் எனப்படுதலும் இதற்குத் துணை செய்யும்.

மணிபல்லவத் தீவில் உள்ள புத்த பீடிகைக்காக இருநாக நாட்டரசர் போரிட்டதாக மணிமேகலை கூறுதலான் (மணி. 8:54-9), நாகநாட்டரசர்கள் புத்தமதச் சார்புடைய ராகவே இருந்தனர் என்பது பெறப்படும். இன்றும் கடாரம், சாவகம் முதலிய கிழக்கு நாடுகளில் புத்தமதம் மிக்கிருத்தலை யறிக. மணிபல்லவம் என்பது இலங்கையின் வடகீழ்த் திசையை அடுத்துள்ளதொரு தீவு.

எனவே, நாகநாட் டரசனான புத்த சமயச் சார்புடைய அரசனான இந்திரனே மணிபல்லவத் தீவில் புத்த பீடிகை அமைத்தவனாவான். அப் பீடிகையில் புத்தர் இருந்தபோது இவன் புத்தரை வணங்கி வந்தனன் என்பதால் (மணி-25:60-1), இவ்விந்திரன் புத்தர் கால மாகிய கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் இருந்தவனாவான். மணிபல்லவ முதலிய கிழக்கு நாடுகள் முழுவதும் இவன் ஆட்சிக்குட் பட்டதாம். இவன் வழிவந்த இந்திரன் ஒருவனே காவிரிப்பூம் பட்டினத்தில் ஏழு விகாரங்கள் அமைத்திருக்க வேண்டும்.

கடைச் சங்க காலத்தே சோழர்களிலிருந்து பிரிந்து தொண்டை மான், திரையர் எனத் தொண்டை நாட்டையாண்டவர் போல, பழங்காலத்தே சோழரினின்று பிரிந்தவரே கடார முதலிய கிழக்கு நாடுகளை யாண்டு வந்த நாகர், இந்திரர் என்போர். எனவே, இந்திரர் என்னும் பெயர் பழங்காலச் சோழர்களுக்குரிய பெயரே யாகும்.

அரசரின் பிறந்த நாளை ஆண்டு தோறும் கொண்டாடுதல் மரபு. தொல்காப்பியர் இப் பிறந்த நாள் விழாவினைப் ‘பெரு மங்கலம்’ என்கின்றார். (புறத்-36). இராசராசன், இராசேந்திரன் முதலிய பிற்காலச் சோழர்களின் பிறந்த நாள் விழாக் கொண் டாடப்பட்டு வந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அரசர்கள் தம் பிறந்த நாளையே யன்றி, தம் தந்தை, பாட்டன் முதலிய தம் முன்னோர் பிறந்த நாளைக் கொண்டாடுதலும் உண்டு.

புகார்ச் சோழர் கொண்டாடி வந்த இந்திர விழா, அவர்தம் முன்னோன் ஒருவனின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டமான பெருமங்கலமேயாகும். இவன் இந்திரன் என்னும் பட்டப் பெயரினையுடையவன்; புகார்ச் சோழரின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமாகச் சீருஞ் சிறப்புடன் விளங்கிய செம்பி யனாவான். இவன் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியனின் தந்தையாகவும் இருக்கலாம்.

இதுவே உண்மையான இந்திர விழா. ஆனால், மணி மேகலை கூறும் இந்திர விழாக் கதையோ, விக்கிரமாதித்தன் கதையில் வேதாளஞ் சொல்லும் முறை தெரியாக் கதைபோல் இருக்கிறது.

கலப்புக் கலை


இன்றும் நாம் அறிவியல் உலகில் வாழ்ந்து வருகிறோம். அறிவியல் இன்று உலகை ஆட்டிப் படைக்கிறது. ‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே’ என்பது அறிவியலுக்கே பொருந்தும், அறிவியல் அறிஞர்கள் ஒருபொருளோ டொரு பொருளைக் கலந்து, அக்கலப்பால் ஒரு புதுப் பொருளை உண்டாக்கி உலகை வாழ்வித்து வருகிறார்கள். இன்னும் நாம் வான வெளியில் பறப்பதும், நெடுந்தொலைவில் பேசுவதை, பாடுவதை வீட்டில் இருந்தபடியே கேட்டின்புறுவதும், மின்சாரத்தினால் இரவைப் பகலாக்குவதும், இன்ன பிறவும் அறிவியலின் விளைவுகள் தானே? கலப்புக் கலையால் அறிவியலார் படைத்த செயற்கைத் திங்கள் இன்று 560 கல்லுக் கப்பால், வான வெளியில் 96 நிமிடங்களுக்கு ஒரு முறை உலகத்தைச் சுற்றிக்கொண்டு வருகின்ற தன்றோ!

இன்று அறிவியலார் கண்டுள்ள கலப்புக் கலை தமிழருக்குப் பழமையானது. தொல்காப்பியர் கூறும் அறிவர் (சித்தர்) என்போர் அறிவியல் அறிஞர்களேயாவர். இன்று அறிவியல் அறிஞர்கள் செய்துவரும் செயற்கரும் செயல்கள் போன்றே அன்று அத் தமிழறிஞர்களும் செய்து வந்தனர். கலப்புக் கலையால் அவர்கள் அரிய மருந்துகளைச் செய்து இன்று அறிவியல் அறிஞர்கள் தீர்க்க முடியாதென எண்ணும் பல கொடிய நோய்களை எளிதில் தீர்த்து மக்களை வாழ்வித்து வந்தனர். அவ்வறிஞர்கள் கண்ட சித்த மருத்துவத்தின் வழி வந்தனவே உலக மருத்துவங்களெல்லாம் எனில், ஆம் என்போர் எத்தனை பேர்!

நோய் வந்த பின் தீர்ப்பது மருத்துவம்; நோய் வராமல் தடுப்பது வாகடம் எனப்படும். அவ்வறிஞர்கள் கண்டறிந்த வாகடம் உலகிற்குப் புதுமையானது. இன்னும் அவ்வறிஞர்கள், கலப்புக் கலையால் இரும்பைப் பொன்னாக்கி மக்களை வாழ் வித்தனர் எனவும் கூறுவர்.

பாலில் மோரைக் கலந்து தயிராக்குவதும், தயிரில் நெய்யும் மோரும் எடுப்பதும், அரிசியும் நீரும் கலந்து சோறாக்குவதும், காயும் பருப்பும் கலந்து குழம்பு செய்வதும், உப்பு புளி காரம் இவற்றைக் கலந்து பல சுவையுள்ள உணவுப் பொருள்களை உண்டாக்குவதும் கலப்புக்கலையேயாகும். சிற்றுண்டிச் சாலைகளில் காணும் வகை வகையான, வெவ்வேறு சுவை உடைய பலகாரங்கள் அவ்வளவும் கலப்புக் கலையால் உண்டாக்கப்பட்டவையல்ல வோ? கலப்புக் கலை பயிலாத எந்த ஓர் உணவும் சுவையுடைய தாவதில்லை.

அழகான சேலை, அழகான மாலை, அழகான ஓவியம், அழகான காவியம் எல்லாம் கலப்புக் கலையினால் ஆயினவே. அழகு, சுவை எல்லாம் கலப்புக் கலையின் காரியங்களே. மக்களே நில நீர் முதலிய ஐம் பெரும் பூதத்தின் கலப்புத் தோற்றம் என்கிறார் தொல்காப்பியர்.

உலகத் தோற்றத்திற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் காரண மாய் இருப்பது கலப்புக் கலையேயாகும். இக் கலப்புக் கலையே உலக நன்மையின் பொருட்டு, மக்களின் நல்வாழ்வின் பொருட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட தொன்றாகும். இன்பூட்டி நன்பூட்டி மக்களை வாழ்விப்பது கலப்புக் கலையேயாகும் எனல் மிகைபடக் கூறலாகாது.

பாலில் நீரைக் கலத்தல், நெய்யில் கடலை எண்ணெயைக் கலத்தல், நெல்லில் கல்லையும் பதரையும் கலத்தல், வெள்ளைச் சர்க்கரையில் வெண் மணலைக் கலத்தல் முதலியவையும் கலப்புக் கலையேதான். ஆனால், இங்கு கலப்பினால் பொருள்களின் தன்மை கெடுகிறது; பொருள்களின் மதிப்பும் கெடுகிறது; இவ்வாறு கலப்போருடைய மதிப்பும் கெடுகிறது. பாலில் சர்க்கரையைக் கலப்போரையும் பாலில் நீரைக் கலப் போரையும் மக்கள் ஒன்றாகவா மதிப்பர்?

கலப்புக் கலையை இவ்வாறு பொருள்களைக் கெடுப்ப தற்குப் பயன் படுத்துவதேயன்றி, மக்கள் நலத்தைக் கெடுக்கப் பயன்படுத்துவதும் உண்டு. நல்ல துவரம் பருப்புடன் ‘கேசரி’ என்னும் ஒரு வகை நச்சுப் பருப்பைக் கலந்து விற்கப்படுகிறது. அது உண்போர்க்குக் கெடுதல் செய்கிறது. அதனால் ஒரு வகைக் கொடிய நோய் உண்டாகிறது. இது தெரிந்தே அது பயிர் செய்யப்படுகிறது-என்னும் செய்தியை நாளிதழ்களில் படித்தோம். இதுவுமொரு கலப்புக் கலைதானே!

கலப்புக்கலை என்று கண்டறியப்பட்டதோ அன்றிலிருந்து, அது மக்களின் நன்மைக்கே யன்றித் தீமைக்கும் பயன்படுத்தப் பட்டே வருகிறது. மக்களைக் கொல்லும் நச்சு மருந்து, வெடி மருந்து போன்றவை, மக்களை நோய் தீர்த்து வாழ்விக்கும் மருந்துகள் செய்யும் கலப்புக் கலையினாற்றானே செய்யப் படுகின்றன? எந்த ஒரு கலையும் அதைப் பயன்படுத்தும் முறையைப் பொறுத்தே, பயன்படுத்துவோரின் நோக்கத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் பயக்கிறது.

மக்களை வாழ்விக்கக் கண்டறிந்த அறிவியற் கலை மக்களை வீழ்விக்கவும், மாள்விக்கவும் பயன்பட்டுத்தானே வருகிறது? அணுகுண்டு என்பது அறிவியற் கலையின் குட்டி தானே? மின்சாரத்தை, வானூர்தியை, வானொலியை, வானொளியை, (டெலிவிஷன்) நோய் தீர்க்கும் பலவகை ஊசி மருந்துகளைக் கண்டறியப் பயன்பட்ட கலப்புக் கலைதானே அணுகுண்டைக் கண்டுபிடிக்கவும் பயன்பட்டது?

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து மக்களின் நலத்தைக் கெடுக்காதீர் என்று எவ்வளவு சொன்னாலும், எவ்வளவு சட்ட திட்டஞ் செய்தாலும், அக்கலப்புக் கலையினர் தம் கலைத் திறனை விட்டொழிப்பதில்லை. இவ்வாறுதானே அணுக்குண்டு போன்ற அழிப்புப் பொருள்களைக் கண்டுபிடியாதீர்கள் என்று உலகமே, உலக அறிஞர்களே ஒரு சேரக் கேட்கினும் அவ்வழிவுப் பொருள்களைக் கண்டு பிடிக்கும் அறிவியற் கலைஞர்களும் தங்கள் கலைத்திறனை விட்டொழிக்க, அழிப்பு வேலைக்குப் பயன்படுத்துவதை நிறுத்த இசைவதில்லை.

இயல்பாகவே நல்ல தன்மையுடைய பால்போன்ற பொருள் களுடன் அத்தகு தன்மையில்லாத பொருள்களைக் கலந்து, பால் முதலியவற்றின் தன்மையைக் கெடுப்பது போலவே, இயல் பாகவே நற்பண்பு வாய்ந்த தமிழர் வாழ்வில் அத்தகு பண்பில்லாத அயலார் தங்கள் வாழ்வியல்களைக் கலந்து தமிழரின் தனிப் பண்பைக் கெடுத்துவிட்டனர். தண்ணீர் கலந்த பாலைத் தீயில் வைத்துச் சுண்டக் காய்ச்சினால் நீர் நீங்கி நல்ல பால் ஆவது போல, தமிழரின் தனிப் பண்பை அடைய அத்தகு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

தமிழர் தனிப் பண்பாடு என்ன? பழந்தமிழரிடைச் சாதி வேற்றுமை கிடையாது. அவர் பிறப்பிலேயே தாழ்ந்தவர்; இவர் பிறப்பிலேயே உயர்ந்தவர் என்னும் பிறவி வேற்றுமை தமிழர்க்குள் இல்லை. ‘ஒன்றே குலம்’ என்பது தமிழர் இனப் பண்பு. அயலா ராகிய ஆரியர் கொள்கைக் கலப்பால் ஏற்பட்டதே இன்று தமிழரிடை உள்ள சாதி வேற்றுமைப் பாகுபாடுகள். இவ்வயற் கொள்கைக் கலப்பால் உண்டான வேறுபாட்டைக் களைய எழுந்ததே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்”என்னும் குறள்.

வடநாடராகிய ஆரியர் கொள்கை போல, மேலை நாட ராகிய கிறித்தவர், முஃச்லீம்கள் கொள்கைகளும் தமிழரிடைப் பரவின. ஆனால், அவை ஆரியக் கலப்பால் தமிழினத்திடை வேறுபாடு தோன்றியதுபோல, ஆரியக் கலப்பு தமிழினத்தை வேறுப்படுத்தியது போல் வேறு படுத்த வில்லை. மாறாக, ஆரியத்தால் வேறுபட்ட தமிழினத்தை ஒன்று சேர்க்கப் பயன் பட்டன அவை. ஆரியத்தால் ஏற்பட்ட தீண்டாமை முதலிய சாதி வேற்றுமைக் கொடுமையைப் போக்க ஒருவாறு பயன்பட்டமைக் காகத் தமிழர்கள் அன்னாரைப் பாராட்டுங் கடப்பாடுடையவ ராவர். அவர்களுள் முஃச்லீம்களுக்கே தமிழர் பெரிதுங் கடப் பாடுடையவராவர்.

இனி, வெள்ளையர் கலப்பால் தமிழரிடையே உண்டாகிய இனக் கலப்பு, இரு இனப் பண்பாடும் இல்லாத ஒரு தனி இனத்தை உண்டாக்கித் தமிழினத்தின் வளர்ச்சியைக் குறைத்து விட்டது. சட்டைக்காரர் (ஆங்கிலோ இந்தியர்) என்னும் அக் கலப்புக் கருவினம் இன்று தமிழர் வெள்ளையர் என்னும் ஈரினத்திலும் சேராத ஒரு தனி அயலினமாக இயங்கி வருகிறது. இது அயல் கலப்பால் வந்த கேடாகும்.

‘ஒருவனே தேவன்’ என்பது தமிழர் கடவுட் கொள்கை என்கின்றனர். அவ்வொரு தெய்வக் கொள்கை எது என்பதை அறிய முடியாமல் செய்துவிட்டது ஆரியம். பெரும்பாலான தமிழர்கள் சிவனே முதற்கடவுளென்கின்றனர். ஒரு சிலர் முருகன் தமிழ்க் கடவுள் என்கின்றனர். இதில் காலஞ் சென்ற தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முதல்வராவர். ‘ஒருவனே தேவன்’ என்னும் கொள்கைக்குத் தொல்காப்பியத்தில், திருக்குறளில் சான்றில்லை.

இனி, வடநாட்டுச் சமயங்களான புத்த சமணக் கலப்பு, வேத வேள்வி போன்ற ஆரியக் கொள்கையை வெறுத்தொதுக்க ஒரு வகையில் உதவிற்றேனும், தமிழர்க்கே யுரிய தனிப்பண்பான வீரத்தைக் கெடுத்துத் தமிழர்களைப் பேடிகளாக்கி, தமிழகத்தில் அயலாராட்சி ஏற்படச் செய்துவிட்டது. தமிழகத்தில் புத்த சமண சமயங்கள் பரவாதிருந்தால், தமிழர்கள் புத்த சமணக் கொள்கை களைப் பின்பற்றாதிருந்திருந்தால், தமிழ்நாட்டை முஃச்லீம்களும், வெள்ளையரும் வடவரும் அடக்கி ஆண்ட, ஆளும் நிலை ஒருக்காலும் ஏற்பட்டிருக்காது. தமிழரைப் பொறுத்தவரை, கலப்புக் கலை செய்த கேடு ஒன்றிரண்டல்ல; அளவிலடங் காதவை. தமிழர் வாழ்வியல், அரசியல், பொருளியல் எல்லா வற்றையும் கெடுத்ததோடு நில்லாமல், கலப்புக் கலை தமிழ் மொழியையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டது. ஆரியக் கலப்புக் கலை, தமிழ் இலக்கிய இலக்கணத்தோடு கலந்து தமிழன் தனிப் பண்பைக் கெடுத்ததுபோலவே, ஆரியச் சொற் கலப்பால் தமிழ் மொழியின் தனிப் பண்பு கெட்டொழிந்தது.

சங்க கால முதற்கொண்டே தமிழறிந்த ஆரியப் புலவர்கள், தமிழ் இலக்கிய இலக்கணத்தில் தங்கள் கொள்கைகளைப் புகுத்தி வந்தனர். ஆரியச் சமய வுணர்ச்சி தமிழரை அதை எதிர்க்க முடியாமற் செய்துவிட்டது. இன்று ஆளுங் கட்சி யார் தமிழுக்கு வடவர் செய்யும் கொடுமைகளை, தமிழரிடை வடவர் தம் மொழியைத் திணிப்பதைக் கட்சி காரணமாக எதிர்க்க முடியாமல் இருப்பது போலவே, அன்று சமயங் காரணமாக எதிர்க்க முடியாமல் இருந்தனரென்க.

பாலில் நீரைக் கலந்து பாலின் தன்மையைக் கெடுப்பது போல, பாலில் நஞ்சைக் கலந்து, பாலைக் கொல்லும் கொடிய பொருள் ஆக்குவதும் உண்டல்லவா? இங்ஙனமே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் தங்கள் மொழியை, கொள்கையைக் கலந்து தமிழில் தனித் தன்மையைக் கெடுத்ததோடு நிற்கவில்லை அவ்வாரியக் கலப்புக் கலையார். பழந்தமிழ் நூல்களின் உரையில் தங்கள் கொள்கையான நஞ்சைக் கலந்து, அத்தமிழ் நூல்களின் பொருளையே பிற்காலத் தமிழர் அறிந்து கொள்ள முடியாமல் செய்துவிட்டனர். தொல் காப்பிய உரையும், திருக்குறள் உரையும் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். இங்கு திருக்குறள் உரையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

திருக்குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலகழகர், பருதி, திருமலையார், மல்லர், கவிப் பெருமாள், காளிங்கர் எனப் பதின்மர் உரை எழுதியிருப்ப தாகத் தெரிகிறது. இவற்றுள் பரிமேலழகர் உரையே மிகவும் சிறந்ததெனத் தமிழர் களால் போற்றப்பட்டு வருகிறது.

“பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ-நூலில்
பரித்தஉரை யெல்லாம் பரிமே லழகன்
தெரித்தவுரை யாமோ தெளி”

எனப் பரிமேலழகர் உரை சிறப்பிக்கப்படுகிறது. பரி மேலழகர் உரையைப்பற்றிப் பல கதைகள் வழங்கி வருகின்றன. இவர் உரையேடு வைத்த வெண்கலப் பரிபுலவரவையைச் சுற்றி வந்ததாம். அத்தகு பெருமை உடையது பரிமேலழகர் உரை என்பது தமிழ்ப் பெரியார்கள் நம்பிக்கை.

திருக்குறள் உரைப் பேராசிரியர்கள் பதின்மரில் ஒருவரான பரிமேலழகரின் உரையே, திருக்குறளின் உண்மையான பொருளை, திருவள்ளுவரின் கருத்தினை, நம்முன்னோர் வாழ்க்கை முறையை நாம் உள்ளபடி உணர முடியாது செய்து விட்டது. இது தமிழர் வாழ்க்கை முறை கூறும் ஒரு தமிழ் நூலா, திருக்குறள் கூறுவது தமிழர் பண்பாடுதானா என்று ஐயுறும்படி செய்து விட்டது. ஆரியர் பண்பாட்டினின்று, பழக்க வழக்கங்களினின்று தோன்றி யவையே தமிழர்பண்பாடு; ஆரியர் பழக்க வழக்கங்களினின்று தோன்றியவையே தமிழர் பழக்க வழக்கங்கள் என்று நம்பும்படி செய்துவிட்டது.

திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல். திருக்குறள் அயற் கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி, எந்த ஒரு அயற்கொள் கையையும் உடன் பட்டுக் கூறும் நூலன்று. திருக்குறளே தமிழர் வாழ்வு என்னும் உண்மையைத் தமிழர் உணர முடியாது செய்து விட்டது பரிமேலழகர் உரையேயாகும். ‘திருக்குறள் தமிழர் வாழ்வை உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மை நூல். தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு. பழந்தமிழர் நாகரிக நல்வாழ்வை அப்படியே நமக்குக் காட்டும் களங்க மற்ற காலக் கண்ணாடி. தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம், தமிழ் மக்களுக்கு வள்ளுவனார் வகுத்தமைத்து வைத்த பாதுகாப்புப் படை’ என்பதைத் தமிழ் மக்கள் அறிய முடியாமல் மருட்டி விட்டது அவ்வுரை.

இப்போதுதான் பரிமேலழகரின் கலப்புக் கலையின் நச்சுத் தன்மையைத் தமிழ் அறிஞர்கள் ஒருவறு உணரத் தலைப்
பட்டுள்ளனர். திருக்குறள் என்னும் முப்பாலில் ஆரியக் கொள்கை என்னும் நஞ்சைக் கலந்து, முப்பாலின் தனித் தன்மையைப் பரிமேலழகர் எங்ஙனம் கெடுத்துள்ளார் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு:

“அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்”

(குறள் - 501)

இக் குறளின் பொருளாவது: அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் திறம் தெரிந்து-அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறிந்து, தேறப்படும்-பின்பு ஒருவனைத் தெளிய வேண்டும்; அதாவது தேர்ந் தெடுக்க வேண்டும்.

இது, ‘தெரிந்து தெளிதல்’ என்னும் அதிகாரத்தின் முதற்குறள். தெரிந்து தெளிதல்-அரசன் அரசியல் அலுவலர்களையும் அதிகாரி களையும் தேர்ந்தெடுக்கும் போது, அவர் தம் அறிவு குணம் செயல் என்பவற்றை ஆராய்ந்து தெளிதல். தெளிதல்- அறிதல். தெரிந்து தெளிதல்-ஆராய்ந்து அறிந்து தேர்ந்தெடுத்தல். இது இன்று அரசியல் அலுவலரைத் தேர்ந் தெடுக்கும் பொதுப்பணி ஆணையர் (சர்வீஸ் கமிஷன்) தேர்வு போன்றதாகும்.

அதாவது, அறத்திற் பிறழாமலும், பொருளுக்காகக் கடமை யிற்றவறாமலும், இன்பத்தின் பொருட்டு ஒழுக்கந் தவறாமலும், உயிர்க்கு உண்டாகும் துன்பத்திற் கஞ்சிக் கடமையிற்றவறாமலும் உள்ளவனையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாம்.

உயிரச்சம்-தன் உயிருக்காக அஞ்சும் அச்சம்; தன் உயிருக்கு அஞ்சிக் கடமையில் தவறுதல். அதாவது, தனது கடமைக்கு மாறாக ஒன்றைச் செய்யா விட்டால் உன்னைக் கொல்வே னென்று அச்சுறுத்தினாலோ, அடித்துதைத்துத் துன்புறுத்தினாலோ அவற்றிற் கஞ்சிக் கடமையில் தவறுதல்.

இந்நான்கு வகையிலும் ஆராய்ந்து பார்த்து, இந் நான்கினும் தவறாதவனையே வேலைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கருத்து, இது பின்னர்ப் பயன்படும். நட்புப்பகை பாராட்டி அறம் பிறழாமலும், கைக்கூலி பெற்றுக் கடமை தவறாமலும், இன்பத்தின் பொருட்டு ஒழுக்கங் கெடாமலும், உயிரச்சத்தினால் காட்டிக் கொடாமலும் இருக்கப் பயன்படும், உயிரச்சம் பெரும்பாலும் ஒற்றர்பால் நிகழும்.

இன்றும் பண்ணையம், கடை, வணிக நிலையம் முதலிய வற்றிற்குப் புதிதாக ஆட்சேர்க்கும் போது ஒருவாறு ஆராயப் பட்டு வருகிறது பழந்தமிழரசர்களின் செங்கோன் மைச் சிறப்புக்கு இஃதோர் எடுத்துக் காட்டாகும்.

இக்குறளுக்குப் பரிமேலழகர் கூறும் உரையாவது, அறம் பொருள் இன்பம் உயிரச்சம் - அரசனாற் றெளியப் படுவா னொருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், நான்கின் திறம் தெரிந்து தேறப்படும்-உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும். உபதை-சோதனை, ஆராய்ச்சி.

1.  அவற்றுள், அறஉபதையாவது புரோகிதரையும் அறவோ ரையும் விட்டு, அவரால், இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி, அறனும் உரிமையும் உடையானொருவனை வைத்தற் கெண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்து என்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இவனைப் போக்கி-இவ்வரசனை நீக்கிவிட்டு. சூளுறவோடு சொல்லுவித்தல்- உண்மையாகச் (சத்தியமாக) சொல்லும்படி சொல்லுதல்.

2.  பொருளுபதையாவது - சேனைத் தலைவனையும் அவனோடியைந்தாரையும் விட்டு, அவரால், இவ்வரசன் இவறன் மாலையனாகலின் இவனைப் போக்கி, கொடையும் உரிமையும் உடையானொருவனை வைத்தற் கெண்ணினம். இதுதான்யா வர்க்கும் இயைந்தது. நின் கருத்தென்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இவறன் மாலையன்-உலுத்தத் தன்மையுடையவன்.

3.  இன்ப உபதையாவது - தொன்றுதொட்டு உரிமை யொடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்த முற்று, கூட்டு விக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள். அவளைக் கூடுவை யாயின் நினக்குப் பேரின்பமே யன்றிப் பெரும் பொருளும் கைகூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல் உரிமை-அரசன் மனைவி. பயிலல்-பழகுதல். தவமுதுமகள்-மிகமுதிர்ந்த கிழவி. வருத்தம்-காதல்.

4.  அச்ச உபதையாவது - ஒரு நிமித்தத்தின் மேலிட்டு, ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீ இயனாரென்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின், அதனை நாம் முற்படச் செய்து, நமக்கு இனிய அரசனொருவனை வைத்தல். ஈண்டை யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்தென்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும் திரிபிலனாயவழி, எதிர்காலத்தும் திரிபிலனெனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். அறைபோதல் - பகைவனை யடைதல். தான் காவல் செய்து. தான் என்றது- அரசனை. கொல்வான்-கொல்ல. சூழ்கின்றமையின்-முடிவு செய்திருக்கின்றதனால். அதனை-அக்கொலையை.

அதாவது, அங்குள்ளவர்களெல்லாம் பகையரசன் ஒருவனிடம் செல்வதற்காகக் கூடியுள்ளார் என்று அரசன் எண்ணி, அவர்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் காவல் செய்து, ஒருவனைக் கொண்டு எல்லோரையும் கொல்ல முடிவு செய்துள்ளான். நம்மைக் கொல்வதற்கு முன் நாம் அரசனைக் கொன்று நல்ல அரசன் ஒருவனை ஏற்படுத்த வேண்டும் என்பதாம்.

இந்நான்கு ஆய்விலும் அவர்கள் சொல்வதை மறுத்து அப்படிச் செய்யக் கூடாது என்பவனையே வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.

இவ்வாறா ஓர் அரசன் அலுவலாளர்களையும் அதிகாரி களையும் தேர்ந்தெடுப்பான்? இவ்வாறு ஆராயின், வேலைக்குச் சேர வந்த அவன், அவ்வரசனையும் ஆராய்ந்தவர்களையும் பற்றி என்ன நினைப்பான்? ஒன்று இரண்டு ஆராய்ச்சிகளில் இவ்வரசனை நீக்கி விட்டு வேறொருவனை அரசனாக்க எண்ணினம் என்பது. நாலாவது ஆராய்ச்சி இவ்வரசனைக் கொன்று வேறொருவனை அரசனாக்க எண்ணினம் என்பது. இவ்வாறா ஆராய்ச்சி செய்வது? இவ்வாறு சோதனை செய்வதைக் கேட்கும் ஒருவன் எங்ஙனம் அரசியல் அலுவல் பார்க்கத் தகுதியுடையவன் ஆவான்?

இனி, மூன்றாவது சோதனை நன்கு கவனிக்கத் தக்கதாகும். அரசன் மனைவிமார்களுடன் நன்கு பழகிய ஒரு கிழவியை விட்டு, வேலைக்கு விண்ணப்பம் போட்டவனைத் தனி அறைக்குள் அழைப்பித்து, ‘அரசன் மனைவியரில் இன்னாள் உன்னைக் கண்டு, உன் அழகில் ஈடுபட்டு உன்னை அடையப் பெறாமல் வருந்துகிறாள். உன்னை அழைத்து வரும்படியே என்னை அனுப்பினாள். நீ இசைந்தால் அவளுடன் பேரின்பம் நுகர்வ தோடு, அவள் கொடுக்கும் பெரும் பொருளையும் அடைவாய்’ என்று அவனிடம் கேட்பதாம். அவன் ‘சரி’ என்றால், அவனை வேலைக்கு எடுத்துக் கொள்வதில்லையாம். அது தகாது என்று மறுத்துரைத்தால் வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாம்.

எவனாவது ஒரு தமிழரசன் இவ்வாறு சோதனை செய்து அலுவலாளரையும் அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்திருப்பானா? நன்கு எண்ணிப் பாருங்கள். என்னே இழிதகவான ஆராய்ச்சி!

மேலும், பரிமேலழகர், ‘இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் (வள்ளுவர்) ஓதியத்தை அறியாது பிறரெல்லாம் உயிரெச்சமெனப் பாடந் திரித்துத் தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்’ எனத் தாம் கூறுவது வட நூற் கருத்து என்பதையும் ஒளியாமல் கூறிவிட்டார்.

வள்ளுவர் திருக்குறளில் வடவர் ஒழுக்கமா கூறுகின்றார்? தமிழர் ஒழுக்கங் கூறும் ஒரு தனித் தமிழ் நூலில் வடநூற் கருத்தை இவரேன் இவ்வாறு வலிந்து புகுத்த வேண்டும்? பார்த்தீர்களா பரிமேலழகரின் கலப்புக் கலையின் பயனை? இவர் திருக்குறளில் வேண்டுமென்றே வலிந்து புகுத்தியுள்ள கலப்புக் கலையை, என்னால் எழுதப்பட்ட, திருக்குறளும் பரிமேலழகரும் என்னும் நூலில் அறிக. குறள் முழுவதும் இவர்தம் கலப்புக் கலை கலவாத இடமே இல்லை. என்று தமிழறிஞர்கள் உண்மையுணரத் தலைப் படுவார்களோ? அது காறும் கலப்புக்கலையின் பயனை நுகர்ந்து கொண்டிருப்பது தமிழர் கடமையாகும்.

தமிழ்க் கொலை


ஒரு நாட்டின்கண் புதிதாகக் குடிபுகுவோர், அந்நாட்டு மக்களிடைத் தங்கள் தாய்மொழியையும் தங்கள் பழக்க வழக்கங் களையும் புகுத்துவதையே முதல் வேலையாகக் கொள்வர்; முதற் கடமையாகக் கொள்வர் எனலாம். இது வரலாற்றுண்மை. காரணம், அவற்றாலே தான் அந்நாட்டு மக்கள் தாய்மொழியும் தனிப்பட்ட கொள்கையும் கெட்டு, அன்னார் மொழிப் பற்றும் இனப்பற்றும் அற்று அவ்வந்தேறிகட்கு அடிமைப்பட ஏதுவாகும்.

இவ்வேலையை அன்று தமிழ்நாடு போந்த ஆரியரும், அவர் பின் வந்த ஆங்கிலேயரும் செய்துதான் தமிழ் மொழி யையும் தமிழன் பண்பாட்டையும் கெடுத்துத் தமிழர்க்குத் தாய்மொழிப் பற்றும் தமிழினப் பற்றும் இல்லாமற் செய்து, தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரலாயினர். அங்ஙன மன்றித் தமிழர் வீரத்தின்முன் எதிர்நின்று வென்று தமிழரை அடிமை யாக்கிக் கொள்ளவில்லை. அவ் விருபாலாரும் பிரித்தாளும் கொள்கையையும் கொண்டு வெற்றிபெற்றனர்.

அதனால் ஆரியர், இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய தமிழரைத் தாழ்மக்களாகவும், தாம் தனிப்பட்ட உயர் மக்களாகவும் ஆக்கிக்கொண்டு வாழலாயினர். ஆங்கிலேயர் இந்நாட்டு மக்களில் ஒருசிலரைச் சமய அடிமைகளாக்கிக் கொண்டனர். ஆனால், ஆங்கிலேயர் தம் தாய் மொழியை ஆட்சி மொழி யாகவும் பாட மொழியாகவும் ஆக்கித் தமிழ் மொழியைத் தலையெடுக்க முடியாமல்செய்தனரே யன்றி, ஆரியர் போல் தங்கள் மொழியையும் கொள்கைகளையும் தமிழ்மொழியில் கலக்கவில்லை.

அன்னார் செய்த அவ்வேலையைத் தான் இன்று இந்தியரும் (வடவர்) செய்துவருகின்றனர்; ‘பொது மொழி’ என்னும் பெயரால் தங்கள் தாய்மொழியான இந்தி மொழியை வலுக்கட்டயாமாகத் தமிழரிடைப் புகுத்தி வருகின்றனர். இந்தியைப் புகுத்தித் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் கெடுத்துத் தமிழ் மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்தவேண்டும், தமிழரை அடிமை கொள்ள வேண்டும், தமிழினத்தை ஒழிக்கவேண்டும் என்பது தானே வடவர் குறிக்கோள்? இவ்வுண்மையறியாத் தமிழ் மக்கள் தான், ’இந்தி வேண்டும்; இந்தி படிக்க வேண்டும்; இந்தி படித்தால்தான் எதிர்காலத்தில் நல்வாழ்வு வாழலாம்’என்று கூறிவருகின்றனர்.

தம் பகைவரை எதிர்நின்று எதிர்த்துக் கொல்லுதல், நட்புற்றுக் கொல்லுதல், வஞ்சித்துக் கொல்லுதல், கூட்டிப் போய்க் கொல்லுதல், ஆள்வைத்துக் கொல்லுதல், உள்ளாளைக் கொண்டு கொல்லுதல், மருந்திட்டுக் கொல்லுதல் எனப் பலவகையில் உயிர்க் கொலை செய்வது போலவே, தமிழ்ப் பகைவர்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்க் கொலை புரிந்து வருகின்றனர்.

அன்று அகத்தியர் முதலிய ஆரிய மரபினர் தமிழை ஒருவாறு கற்றுத் தமிழ் நூல் செய்வதன் மூலம் ஆரியக் கொள்கை களையும் ஆரியச் சொற்களையும் தமிழிடைப் புகுத்தித் தமிழ்க் கொலை புரிந்து வந்தனர். மாறாகத் ‘தமிழை வளர்த்தார், தமிழ் முனிவர்’ எனத் தமிழராலேயே பாராட்டுஞ் சிறப்பினைப் பெற்றார் அகத்தியர்.

“ஆதி சிவன்பெற்று விட்டான்- என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நின்ற
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

எனப் பாரதியாரும் பாராட்டுதலை அறிக. இரண்டாவது தமிழ் மன்னர்களையும் தமிழ்ச் செல்வர்களையும் ஏமாற்றி, வட நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதன் வாயிலாய் வட மொழிக் கருத்துகளையும் வட சொற்களையும் புகுத்தித் தமிழ்க் கொலை புரிந்து வந்தனர்.

இன்று தமிழ்க் கலைச் சொற்களை வடசொற்களில் ஆக்கிக் கொண்டு தமிழ்க்கொலை புரிவது போலவே, அன்று சமயச் சொற்களை வட சொற்களில் ஆக்கிக் கொண்டு தமிழ்க் கொலை புரிந்து வந்தனர். தமிழருக்குத் தனிச் சமயம் உண்டு; அதுதான் சைவசமயம், பழஞ்சைவம் வேறு, இன்றையச் சைவம் வேறு என்று கூறும் சைவ மெய்யன்பர்கள், சைவ அறிஞர்கள் பழந்தமிழ்ச் சைவச் சொற்கள் இன்றில்லாமைக்கு, அல்லது மறைந் தொழிந்தமைக்கு என்ன காரணம் கூறப் போகின்றனர்?

மேலும், ‘தமிழ் வடமொழியின் குட்டி’ எனத் தமிழர்களை நம்பும்படி செய்து, பிள்ளைகளைக் கொண்டே பெற்றோரைக் கொலை செய்வதுபோல, தமிழர்களைக் கொண்டே தமிழ்க் கொலை செய்துவந்தனர். தமிழில் வடசொற்களை மிகுதி யாகக் கலப்பதற்குத் தனி மதிப்பிருந்த காலமும் ஒன்றுண்டு. இதற்கு, வில்லி பாரதம், அருண கிரிநாதர் திருப்புகழ் முதலியன எடுத்துக் காட்டுகளாகும். தமிழையும் வடமொழியையும் சமனாகக் கலந்தெழுதி அதற்கு, மணிப்பிரவாளநடை எனத் தனிப் பெயர் சூட்டித் தமிழ்க் கொலை புரிந்ததையும் நோக்குக. இத்தகைய வடமொழிக் கலப்பினால் தமிழ்திரிந் துண்டானவை தாமே கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் என்னும் திராவிட மொழிகள்?

பிற்காலத் தமிழ்ப் புலவர்களின் தனிப்பாடல்கள் இன்று பயன் படாமற் போனதற்கு - படிக்கத் தகுதியற்றவையாய்ப் போனதற்கு- அப்பாடல்களெல்லாம் தமிழ்ப் பெயரில் வட மொழிக் கருத்துக்களை மிகுதியாகவுடையனவாய் இருத்தலன்றோ காரணம்? ‘கவிராயர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற பிற்காலப் புலவர்கள்-காளமேகப் புலவர், இரட்டைப் புலவர் முதலியோர்-உண்மையில் தனித்தமிழில் தனித்தமிழ்க் கருத்துக்களைக் கொண்டு தம்கவிகளைச் செய்திருப்பாரேல், இன்று தமிழ் இலக்கியம் எவ்வளவு வளமுள்ளதாகத் திகழும்!

இனி, தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள், வேண்டுமென்றே வடமொழிக் கருத்துக்களை வலிந்து புகுத்திக் தமிழ்க் கொலை செய்துள்ளனர் என்பது உலகறிந்த உண்மை. ‘கலப்புக்கலை, முன்னுக்குப்பின்’ என்ற கட்டுரை களைப் பார்க்க.

மேலும், தூய தமிழ்ச்சொற்களை யெல்லாம் வட சொற்கள் என்றும், தனித் தமிழ்ச் சொற்களை வடசொல் லாக்கியும் தமிழ்க் கொலை புரிந்து வந்தனர். எடுத்துக் காட்டாக: தொல்காப்பியச் சொல்லதிகாரம் 398-ஆம் சூத்திர வுரையில், ‘நீர் என்பது ஆரியச் சிதைவு’ என்கின்றார் சேனாவரையர். குடிக்குந் தண்ணீர்க்குக் கூடப் பெயரிட அறியாத நிலையிலா இருந்தனர் அன்று தமிழ் மக்கள்? இது வேண்டுமென்றே கூறும் பச்சைப் பொய்யல்லவா? நீரைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்தான் எதுவோ?

அரங்கம்- ரங்கம், திருவரங்கம்- ஸ்ரீரங்கம், அரத்தம்-ரத்தம், அராகம்- ராகம், சலம்-ஜலம், தானம்-ஸ்தானம், தேயம்-தேசம், மாதம்-மாசம் என்பன வெல்லாம் வட சொற்களாக்கப் பட்ட தமிழ்ச் சொற்களே.

இடத்திலுள்ள பொருளின் பெயர் இடத்தை உணர்த்துவது - தானியாகு பெயர். இடத்தின் பெயர் இடத்திலுள்ள பொருளை உணர்த்துவது இடவாகுபெயர். தானியாகு பெயர் இருக்க, தானவாகு பெயர் ஏன் இல்லை? தானம் வடசொல் ஆனால், தானி எப்படித் தமிழ்ச் சொல் ஆகும்? இடவாகு பெயர்க்கேற்ப, தானியாகு பெயர்-இடியாகு பெயர் என்றல்ல வோ இருக்க வேண்டும்?

பழமலை என்பது, பழையமலை எனக்கொண்டு, விருத் தாசலம் என வடவர் வடமொழியாக்க, பிற்காலத் தமிழர் அதை வடசொல் எனக்கொண்டு, முதுகுன்றம் எனத் தமிழாக்கியுள்ள மையே, வடவர் தமிழ்ச் சொற்களை வடசொல் லாக்கினமைக்குப் போதிய சான்றாகும். விருத்தம் - கிழப் பருவம். அசலம்- மலை. பழமலை-பழங்களையுடைய மலை.

ஆங்கிலேயர் உச்சரிக்க இயலாமல், திருவையாறு-டர்வாடி, தஞ்சாவூர் - டேஞ்சூர், மதுரை - மெஜுரா, கொள்ளிடம் - கொலரின், கோயமுத்தூர்-கோயம்பட்டூர், தூத்துக்குடி -டூட்டுக்குரின், கள்ளிக்கோட்டை- கோழிக்கோட், யாழ்ப்பாணம் - ஜாப்னா எனத் தமிழ்ச் சொற்களைத் திரித்து வழங்கினார்கள் அல்லவா?

தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களெல்லாம் தமிழ்மொழி நன்னிலையில், ஆட்சிமொழியாக இருந்தபோது வெட்டப் பட்டவையாகும். ஆனால், அவை வடமொழியை வேண்டு மென்றே கலந்து, தமிழ் மக்களால் புரிந்து கொள்ள முடியாத படி எழுதப்பட்டிருப்பதன் காரண மென்ன? பலரும் பார்க்கு மிடத்தில் வெட்டப்பட்டவை தானே அக்கல்வெட்டுக்கள்? அவ்வாறு தமிழ் மக்கள் படிக்க முடியாதபடி ஏன் எழுத வேண்டும்?

காட்டு:

மாத விக்கிரம வித்தன் சாஸனம்: “ஸ்வஸ்திஸ்ரீ ஸகல ஜகத்திரயாபி வந்தித ஸுரா ஸராதீசபுர பரமேஸ்வர பிரதி ஹாரீக்ருதமஹாபலி குலொத்பவ மஹாபலி வாணராஜர்”

“பராக்ரம பாண்டிய தேவர் சாஸனம்:”சுபமஸ்து, ஸ்வஸ்தி ஸ்ரீ புவநேக வீர சந்த்ர குலப் பிரதீப கோஜடிலவர்மத் திரிபுவநச் சக்ரவர்த்தி கோநேரின்மை கொண்டான் பெருமாள் அதிராம பராக்ரம பாண்டியதேவர் நந்த நரான ஸ்ரீபெருமாள் குலசேகர தேவரான பராக்ரம பாண்டிய தேவற்கு"

புரிகின்றதா? இன்னும் எத்தனையோ வகை!

திரு.மு.ராகவையங்கார் என்பவர், ‘தமிழர்க்கு ஒழுக்க மில்லை. தமிழ்நாடு போந்த ஆரியமேலோர் தமிழர்க்கு மணச் சடங்குகளை வகுத்துக்கொடுத்து வாழ்வித்தனர்’ எனத் தமிழ் மரபையே பழித்துத் தமிழ்க் கொலை புரிந்தனர். திரு.பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் என்பவர், ‘வடமொழி இலக்கண நூலின் மொழி பெயர்ப்பே தொல்காப்பியம்’ என மனங்கூசாமல் எழுதித் தள்ளித் தமிழ்க்கொலை புரிந்தனர். இன்னும் எத்தனை யோ வகையில் தமிழ்க்கொலை நடந்து வருகிறது.

இவ்வாறு சங்க முற்காலத்திலிருந்து, இலக்கிய இலக்கண மூலமாகவும், சமய நூற்களின் மூலமாகவும், மொழி வளர்ப்பின் மூலமாகவும், தேசீயத்தின் மூலமாகவும், பிற வகையிலும் தமிழின் தனித் தன்மை கெடுக்கப்பட்டு வருகிறது; தமிழர் தனிப் பண்பாடு அழிக்கப்பட்டு வருகிறது, இன்று கலை, கவிதை, கதை, கட்டுரை மூலம், தமிழ் கெடுக்கப்படுவது போல.

இவற்றையெல்லாம் விட, மதுரையிலுள்ள மதுரைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ரா.கிருஷ்ண மூர்த்தி பி.ஏ.; பி ஓ.எல்.; எல்.டி. என்பவர் ஒரு புதிய முறையில் தமிழ்க் கொலை செய்ய - தமிழைக் கெடுக்க-தமிழ் இலக்கண மரபை அழிக்க-முற்பட்டிருக்கிறார். 1951ல் வெளியிடப் பட்ட மதுரைக் கல்லூரி மலர் 17- ஆம் பக்கத்தில், தமிழில் பெண்பால் விகுதி என்றதலைப்பில், கீழ் வருமாறு எழுதி யுள்ளனர்.

தமிழில் பெண்பால் விகுதி: " ‘இ’ என்பது, தமிழில் பெண்பால் விகுதி என்று கூறப்படுகிறது. உண்மையில் பெண்பால் விகுதி ‘இ’ அல்ல. அது பெண்பால் விகுதியாயின் ‘வில்லி’, ‘நாற்காலி’ முதலியவற்றில் அப்பொருளில் வாராதிருப்ப தேன்? உண்மை என்ன வென்றால், ‘இ’ என்பதை ‘ஸ்திரி’ என்பதன் சிதைவு, பெரும்பாலும் ‘த்தி’, ‘ச்சி’, ‘ட்டி’ என்பவையே பெண் பால் விகுதிகளாக வருகின்றன. இவை ‘ஸ்திரி’ என்பதன் மாறு பட்ட உருவங்கள் என்பது தெளிவு, முதலில் ‘ஸ்திரி’ என்பதே பெண்பால் விகுதியாக இருந்து, பிறகு அது சிதைந்து, ‘த்தி’, ‘ச்சி’, ‘ட்டி’ என்று மாறியிருக்க வேண்டும். உதாரணம்: குற+ஸ்திரி-குறத்தி: வலை+ஸ்திரி-வலைச்சி: வெள்ளான்+ஸ்திரி-வெள்ளாட்டி; புலை+ஸ்திரி-புலைச்சி; வண்ணான்+ஸ்திரி-வண்ணாத்தி; ஆய்+ஸ்திரி-ஆய்ச்சி; பார்ப்பான்+ஸ்திரி-பார்ப்பாத்தி; பிராமணன்+ஸ்திரி- பிராமணத்தி; ராஜா + ஸ்திரி - ராஜாத்தி; பறை + ஸ்திரி பறைச்சி; பெண்ட+ஆம்+ஸ்திரி-பெண்டாட்டி; கண்+ஆம்+ஸ்திரி-கண்ணாட்டி; பொம் மனாட்டி, கம்மி னாட்டி என்பவையும் இவ்வாறே வந்திருக்க வேண்டும்.

இதுதான் அவர்தம் ஆராய்ச்சியுரை. உண்மையில் ‘இ’ என்பது ‘ஸ்திரி’ என்பதன் சிதைவன்று. ‘இ’ என்பது ‘இ’ய்யே தான். ’ஸ்’திரி என்னும் சொல் தமிழ் நாட்டுக்கு வருவதற்குப் பன்னெடுங் காலத்திற்கு-பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு-முன்னி ருந்தே ’இ’ என்பது தமிழில் பெண்பால் விகுதியாக இருந்து வருகிறது. தமிழில் உள்ள மிகப்பழைய நூல் தொல்காப்பியம். அது ஓர் இலக்கண நூல். தொல்காப்பியம், தொன்றுதொட்டு வந்த பழந்தமிழர் பழக்க வழக்கங்களை- ’வாழ்க்கை முறையினை– இலக்கண வகையால் கூறும் நூலாகையால், தொல்காப்பியத்தில் வரும் இலக்கண வழக்கம், தொல்காப்பியத்திற்குப் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்ட தமிழர் வழக்கென்பதில் சிறிதும் ஐயம் இல்லை."

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் ’இ’என்பது பெண்பால் விகுதி என்று கூறப்பட்டிருக்கிறது.

“பெண்மை அடுத்த இகர விகுதி”(சொல் -163)
காட்டு: பெண்டாட்டி.

“இ உஐஒ என்னும் இறுதி”(சொல் - 120)
காட்டு: சாத்தி-சாத்தீஇ.

“அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்”(சொல் -125)
காட்டு: தோழி-தோழீ இ.

“பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்”(சொல் -180)
காட்டு: சாத்தி,முடத்தி, முடக்கொற்றி.

“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்,
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்”

(சொல் -4)

காட்டு: பேடி, தேவி.

இவ்வெடுத்துக்காட்டுக்கள் சேனாவரையர் முதலிய பழைய உரையாசிரியர்களால் காட்டப்பட்டவையே.

‘இ’என்பது, ’ஸ்திரி’ என்பதன் சிதைவாயின்,

“வடசொற் கிளவி வடெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.”

(சொல்-401)

“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.” (சொல்-402)

என, வடசொல் தமிழில் எவ்வாறு வந்து வழங்கும் என இலக்கணஞ் செய்த ஆசிரியர் தொல்காப்பியர், "ஸ்திரி என்பதுதான் தமிழில் ‘இ’ எனத் திரிந்து வழங்கும்’ எனச் சொல்லாது விடுவரா?

ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தே இடப்பெயர், மக்கட் பெயர் போன்ற சில வடமொழிப் பெயர்ச் சொற்களை அவ் வடமொழியாளர் செய்யும் செய்யுட்களில் வழங்கிவர, அவற்றை எவ்வாறு வழக்கவேண்டும் என்று ஆசிரியர் விதி செய்தனரே யன்றி, சொல்லின் உறுப்பாகும் நிலையில் அன்று வடசொல் தமிழ் நாட்டில் மதிப்புப் பெறவில்லை. இன்னும் அயல் மொழி யிடத்து உறுப்புக்கள் கடன் வாங்கும் அத்தகைய இழிநிலையைத் தமிழ்மொழி அடையவில்லை.

இனித் தொல்காப்பியத்தின் வழிநூலெனப் படுவதும், (வழிநூலன்று. ‘முன்னுக்குப்பின்’ என்னும் கட்டுரை பார்க்க.) வடமொழிக்கு ஆக்கந் தந்ததுமான நன்னூலிலும்,

“கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவும்
தோழி செவிலி…………. பெண்பாற் பெயரே”(நன்-227)

என, இகரமே பெண்பால் விகுதி என்று கூறப்பட்டிருக்கிறது. ‘ஸ்திரி’ என்பதுதான் ‘இ’ என்றானது என்றால், வடமொழி யாக்கங் கூறிய நன்னூலார் இதைக் கூறாமலா இருப்பர்? இகர வீற்றுக்கு எடுத்துக்காட்டாக நன்னூல் உரையாசிரியரும்.

ஒருத்தி, அவையத்தி, பொன்னி, குறத்தி, எயிற்றி, ஆய்ச்சி, உழத்தி, மலையாட்டி, சோழிச்சி, கருவூரி வானத்தி , அகத்தி புறத்தி, திணிதோளி, சுரிகுழலி, குறுந்தாளி, கூனி, பார்ப்பினி, படைத்தலைவி, தச்சச்சி, பாங்கி, பெண்டாட்டி - என்னும் பெயர் களையே காட்டியுள்ளனர்.

இனி, ‘த்தி, ச்சி, ட்டி’ என்பவையும் ‘ஸ்திரி’ என்பதன் மாறுபட்ட உருவங்கள் அல்ல. அவை மாறு படாத இயற்கை உருவங்களேயாம். ‘த்தி, ச்சி, ட்டி’ என்பவை பெண்பால் விகுதிகள் அல்ல. அவற்றின் ஈற்றிலுள்ள ‘இ’ என்பதே பெண்பால் விகுதியாகும்.

குற+த்+த்+இ- குறத்தி. முதல் ‘த்’-சந்தி. இரண்டoவது ‘த்’-பெயரிடைநிலை. - ‘இ’ விகுதி. வலை+ச்+ச்+இ- வலைச்சி, பெண்டு+ ஆட்டி-பெண்டாட்டி, ஆள்+த்+இ- ஆட்டி, பெண்டாட்டி - பெண்மையை ஆள்பவள், உடையவள். மேலும், த்,ச்,ட் என்னும் வல் லொற்றுக்கள் தமிழில் மொழிக்கு, முதலில் வாரா மையும், ‘த்தி,ச்சி, ட்டி’ என்பவை விகுதிகள் அல்ல, அவை ‘ஸ்திரி’ என்பது திரிந்தானவையும் அல்ல என்பதற்குச் சான்றாகும். நன்னூல் 141-ஆம் சூத்திர உரை பார்க்க. இடைநிலையையும் சந்தியையும் சேர்த்து விகுதி எனவும், அது ‘ஸ்திரி’ என்னும் வடசொல்லின் திரிபு எனவும் கூறும் ஆராய்ச்சித் திறன் வெகு அழகிது!

வடமொழியிலும் ‘ஸ்திரி’ என்னும் சொல் பெண்பாலைக் குறிக்குமே யன்றிப் பெண்பால் விகுதியன்று. பரஸ்திரி-அயற் பெண் அல்லது அயலான் பெண், மனைவி; பிராமணஸ்திரி-பிராமணப் பெண் எனக் காண்க. ‘ஸ்திரி’ என்பதற்கு நேரான ‘புருஷன்’ என்னும் வடசொல் ஆண் பாலையே உணர்த்துகிறது; தொடர் வண்டிப் பேட்டை யிலுள்ள ஒதுங்கிடச் (கக்கூஸ்) சுவரில் காணலாம்.

இனி, ‘ஸ்திரி’ என்பது ‘இ’என்னும் பெண்பால் விகுதி யானால், ’புருஷன்’ என்பது ‘அன், ஆன்’ என்னும் ஆண்பால் விகுதிகள் ஆகவேண்டும். அதாவது, குற+ஸ்திரி-குறத்தி என்றாவது போல, குற+புருஷன்- குறவன் என்றாக வேண்டும். ஆண் பாலைக் குறிக்கும் ‘புருஷன்’ என்னும் வடசொல் தமிழில் ஆண்பால் விகுதியாகத் திரியாமல், பெண்பாலைக் குறிக்கும் ‘ஸ்திரி’ என்னும் வடசொல்மட்டும் எப்படித் தமிழில் பெண்பால் விகுதியாகத் திரியும்? குற, புலை, வலை, ஆய், பாறை எனச் சிலவற்றைப் பகுதியாகவும், வெள்ளான், வண்ணான் பார்ப்பான் எனச் சிலவற்றை ஆண்பாற் பெயராகவும் கொள்ளுதல் பொருத்த மற்றதாகும். வெள்ளான்+ஸ்திரி-வெள்ளாட்டியன்று. வெள்ளை+ ஆட்டி, அல்லது வெண்மை+ ஆட்டி-வெள்+ஆட்டி-வெள்ளாட்டி என்பதே.

வண்ணான் + ஸ்திரி-வண்ணாத்தி என்பதற்கேற்ப, குறவன்+ ஸ்திரி-குறத்தி,வலையன்+ஸ்திரி-வலைச்சி, பறையன்+ஸ்திரி-பறைச்சி என்றே காட்ட வேண்டும். ஆண்பாற் சொல்லுடன் பெண்பால் விகுதி சேர்ந்து. பெண்பாற் சொல் ஆகிறது என்பது, ‘ஆதாம் என்னும் ஆதி மகனின் விலா எலும்பை ஒடித்தெடுத்து, ஏவாள் என்னும் ஆதிமகளைக் கர்த்தன் உண்டாக்கினார்’ என்னும் விவிலிய நூற் கூற்றுப் போன்றதேயாகும்.

பார்ப்பு+ஆன்-பார்ப்பான். பார்ப்பு+அன்+அன்-பார்ப்பனன். பார்ப்பு-பகுதி. அன்-சாரியை. அன்-ஆண்பால் விகுதி. பார்ப்பு+ ஆ+த்+த்+இ-பார்ப்பாத்தி. பார்ப்பு-பகுதி. ஆ-சாரியை. த் சந்தி. த்-பெயரிடை நிலை இ- பெண்பால் விகுதி பார்ப்பு + இன் +இ-பார்ப்பினி. இன்-சாரியை. பார்ப்பு+அன்+இ

பார்ப்பனி. அன்-சாரியை.

பெண்டு+ஆம்+ஸ்திரி-பெண்டாட்டி அன்று. பெண்டு+ ஆட்டி-பெண்டாட்டி.பெண்டு-பெண்மை; அதாவது பெண் தன்மை. பெண்டாட்டி-பெண்தன்மையை ஆள்பவள். ‘ஆட்டி’ என்பதும் பெண்ணைக் குறிக்கும் சொல்லே. மனையாட்டி. பெருமாட்டி, திருவாட்டி, வெள்ளாட்டி, மூதாட்டி, அயிலில் லாட்டி எனக்காண்க. ‘பொம்மனாட்டி, கம்மினாட்டி’ என்பன இழிவழக்குகள். கை+பெண்டு + ஆட்டி-கைம்பெண்டாட்டி என்பதன் இழிவழக்கே கம்மினாட்டி (கம்மனாட்டி) என்பது.

இனி, ‘இ’ பெண்பால் விகுதியாயின், ‘வில்லி, நாற்காலி’ முதலியவற்றில் அப்பொருளில் வராததேன்?"என்பதும் ஆராய்ச்சி யின்மையால் எழுந்த வினாவேயாம். இகரம் (இ) பெண்பால் விகுதி என்றால் மற்ற இடங்களில் வரக் கூடா தென்னும் வரையறை யில்லை. அவ்வாறு இலக்கண ஆசிரியர்கள் கூறவு மில்லை. நம்பி, தம்பி, சென்னி, கிள்ளி, வில்லி, பாரி, காரி, ஓரி, நள்ளி, புல்லி, அத்தி என இகர விகுதி ஆண்பாலிலும்; முள்ளி, முக்காலி, நாற்காலி, வெள்ளிஎன அஃறிணையிலும் வரும். உண்டி, தின்றி, உரைத்தி (சொல்-223) என முன்னிலை வினையிலும், உண்ணுதி, போதி-என ஏவல் வினையிலும் இகர விகுதி வந்துளது.

ஒரு விகுதி ஒரே பால் அல்லது இடத்தில் வரவேண்டு மென்பதில்லை. இகர விகுதி-ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால், முன்னிலை வினை, ஏவல் வினை ஆகிய இடங்களில் வந்திருப்பது போலவே, ‘அன்’ என்னும் விகுதி, நடந்தனன் (அவன்), நடந்தனன் (யான்) எனப் படர்க்கையிலும், தன்மை யிலும் வந்துளது. உண்பல் (யான்), உண்ணல் (உண்ணுதல், உண்ணற்க) என ‘அல்’ விகுதி தன்மையிலும், தொழிற் பெயரினும், விளங்கோளினும் வந்துளது.

“முதலில் ‘ஸ்திரி’ என்பதே பெண்பால் விகுதியாக இருந்து”என்பது, ‘வடமொழியிலிருந்து தமிழ் மொழி உண்டானது’ என்னும் பொருந்தாப் பொய்க் கூற்றை உட் கொண்ட பொருந் தாக் கூற்றாகும். தமிழ் வடமொழியிலிருந்து பிறந்த தென்பதை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். தமிழ் வடமொழியி லிருந்து பிறந்தபோது, ‘குறஸ்திரி’ என்று வழங்கின தென்றால், அது எப்படித் தமிழாகும்? மணிப் பிரவாள மன்றோ ஆகும்? யார்? எப்போது? எதற்காக? ‘குறஸ்திரி’ என்பதைக் ‘குறத்தி’ எனத் திரித்தனர்? ஆரியர் இந்நாட்டுக்கு வருமுன்,அவர் தம் மொழிக்கு எழுத்தின்றி, அப்போது பாடப்பட்ட பாடல்களையும் மொழி யையும் ‘எழுதாக்கிளவி’ என்று கூறிக்கொண்டிருந்த காலத்தி லேயே தமிழ் மொழி சீருஞ்சிறப்புடன், திணைபால் எண்ணிடப் பாகுபாட்டுடன் திகழ்ந்து வந்ததென்பதை அறியாத இவர்; அறிந்திருந்தாலும் ஒப்புக் கொள்ள ‘மனமில்லாத இவர், "முதலில் ஸ்திரி என்பதே பெண்பால் விகுதியாக இருந்தது’ என்பது எவ்வளவு பொருந்தப் புளுகுதல்! அதற்கு என்ன சான்று? தமிழில் தனித்தனிப் பாலுணர்த்தும் ஈறு இருப்பது போல வடமொழியில் இல்லாதிருக்க, வடமொழி ‘ஸ்திரி’ என்பது பெண்பால் விகுதி யாக இருந்து, பிறகு அது சிதைந்து இகர விகுதியாயிற்று என்பதும் பொருந்தாக் கூற்றே யாகும்.

இவர் தமது நுண்மாண் நுழைபுலத்தால் நுணுகி ஆராய்ந்து கண்ட புதிய கண்டு பிடிப்பாக இருந்தாலேனும், ஏதோ ஆராய்ச்சிக் கெட்டினவாறு ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார். தவறு இருக்கினும் குற்றமில்லை. புதிய ஆராய்ச்சிதானே எனக் கொள்ளலாம். அங்ஙன, ‘மாறியிருக்க’ வேண்டும், இவ்வாறே வந்திருக்க வேண்டும்’ என ஐயுறவுபட 14 வரிகளில், அதுவும் மாணவர் படிக்கும் கல்லூரி மலரில் எதற்காக இதை எழுதினாரோ நமக்கு விளங்கவில்லை. ஒரு கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர், தமிழை வளர்க்கும் பணிபுரிந்து வருபவர், தமிழுக்கு ஆக்கந்தரும் செயலை விட்டு, அழிவு தரும் செயலை எதற்கு மேற்கொண்டாரோ அறியோம். வேலியே பயிரை மேயும் நிலையில் உள்ளது தமிழ் நாடு; நாம் என்ன செய்வது!

யார் குற்றவாளி


‘ஏன் செட்டியாரே! அதிமதுரம் இருக்கிறதா? தோலா என்ன விலை? இருக்கிறதா இல்லையா-மிக விரைவாய் வேண்டி யிருக்கிறது. ஏன் பேசவில்லை? உண்டா இல்லையா-சொல்லுங்கள்; உங்களைத்தான்! நான் கேட்பது காதில் விழவில்லை? ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? வாயிலென்ன?’ என்று வற்புறுத்திக் கேட்டார் ஒருவர்.

அவருக்கு அதிமதுரம் மிகமிகச் சுருக்காக, கட்டாயம் வேண்டியிருந்தது. அதனாற்றான் அவர் அங்ஙனம் வற்புறுத்திக் கேட்டார். ஆனால் செட்டியாரோ பதில் ஒன்றுங் கூறாமல் அப்படியே அடித்து வைத்த கல்லுப் பிள்ளையார் போல் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

பண்டங்கள் விற்றுப் பணந்திரட்டுவதற்காகக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் இதைவிட எவ்வாறு கேட்பது? ‘எங்கள் கடையில் இன்ன சரக்கு இருக்கிறது விலைமலிவு; நல்ல சரக்கு; மிகவும் திடம்; போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்; ஒருமுறை எங்கள் கடைக்கு வாருங்கள், வந்து பாருங்கள்; அதே போதும்’ என்று கடைக்காரர் விளம்பரம் செய்வதை விட்டு, அடுத்த கடைக்குப் போவாரை, ’என்ன வேண்டும்? வாருங்கள் என்று வலிய அழைப்பதை விட்டு, வலிய வந்து ஒருவர் இன்னது வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கும் போது, பேசாமல் உட்கார்ந்திருக்கும் கடைக்காரரை என்னென்பது!

அவர் ஏன் அவ்விதமாக ஒன்றும் பேசாமல் இருந்தார்? விற்பதற்குத் தானே கடை வைத்திருக்கிறார்? விளையாட்டுக்கா வைத்திருக்கிறார்? அல்லது தனக்காகவா கடை வைத்திருக்கிறார்? உண்டு அல்லதுஇல்லை என்ற சொல்லவேண்டும்; அது தானே வினாவுக் கேற்ற விடை? ஏன் பேசாமடந்தை தம்பிபோல் உட்கார்ந்து கொண்டிருந்தார்? இது ஒரு புதிராகவன்றோ இருக்கிறது? இத்தகைய கடைக்காரரை நாம் இதுவரை கண்டது மில்லை; கேட்டதுமில்லை!

கடை விற்பதற்குத்தான் வைத்திருக்கிறார், வேடிக்கைக்காக அன்று. ஆனால், வாங்க வந்தவர் கேட்டதை அவர் அறிந்து கொள்ளவில்லை. அவர் எப்போதும் கடை விற்கும் செட்டி யாரல்லர். அவர் அக்கடைக்குப் புதியவர். கடைக்காரர் இவரைக் கடைக்குக் காவலாக உட்கார வைத்து விட்டுச் சாப்பாட்டுக்குப் போய் விட்டார். இவர் ஊமை என்பது வாங்க வந்தவருக்குத் தெரியாது. அவருக்குச் சுருக்காக அதிமதுரம் வேண்டும். அதுவும் கட்டாயம் வேண்டும். அதனால், அவர் அவ்வளவு பாடுபட்டுக் கேட்டார்.

அவர் கேட்டதும் கடைக்காரருக்கு ஒன்றும் விளங்காத தால் - கடையில் உட்கார்ந்திரந்த அந்த ஊமைக்கு ஒன்றும் விளங்காததால் அவர் ஒன்றும் பேசாமல் அப்படி உட்கார்ந்து கொண்டிருந்தார். ‘நாம் இத்தனை பாடுபட்டுக் கேட்டும் விற்பதற்காகவே கடை வைத்திருக்கும் செட்டியார் ஒன்றும் பேசாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே’ என்ற வருத்தத்துடன் சென்றார் வாங்கவந்தவர். கடையில் உட்கார்ந் திருந்த ஊமை முன் போலவே உட்கார்ந்திருந்தார்.

வேறொருவன் அவர் ஊமை என்று சொன்ன பிறகுதான், ‘அடடா! எனக்குத் தெரியாதே! கேட்கக் கேட்க ஒன்றும் பேசாமல் இருக்கிறாரே என்றல்லவோ வருத்தப்பட்டேன்? முன்னரே அறிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டேனே; அக்கடைக்கே போயிருக்க மாட்டேனே.’ என்று தன் அறியாமைக்கு வருந்திச் சென்றார்.

இவ்விருவரில் யார் குற்றவாளி? இருவரும் குற்றவாளி களல்லர். வாங்கவந்தவருக்குக் கடையில் இருந்தவர் ஊமை யென்பது தெரியாது; அவருக்கு இவர் கேட்டது இன்ன தென்று விளங்கவில்லை. அதனால், இது இருவரையும் சாராத ஒரு தனிப்பட்ட குற்றமாக முடிந்தது.

உலகில் இத்தகைய நிகழ்ச்சிகள், குற்றங்கள் பல ஏற்படுவ துண்டு. ஆனால், அறியாமையை அறிந்த பின், அறியாமைக்கு வருந்தி அறிவுடன் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும். அறியாமையை அறிந்தும் அறிவுடன் நடந்து கொள்ளாமையே அறியாமை எனப்படும். அவ்வாறு அறிவுடன் நடந்து கொள்வதே மக்கள் பண்பாடுமாகும்.

கடைக்காரன் தன்னை மதிக்க வில்லை; தன்பேச்சைப் பொருடபடுத்தவில்லை; தன்னை இழிவுபடுத்தினான் என்றெண்ணி, வாங்க வந்தவர் கடையில் புகுந்து வலிதில் அதிமதுரத்தை எடுத்துச் செல்லல் அறமாகுமா? ஒரு போதும் ஆகாது. அத்தகைய இழி செயலை ஆன்றோர் ஒருக்காலும் ஒருப்படார். அதனை இழி செயல் என்று, ஒழுக்கமன்றென்று கடிவர். அதுதானே ஆன்றோர் கடமை!

ஒருநாள் மாலை நாலரை அல்லது ஐந்து மணி இருக்கும். ஒரு தோட்டத்தை அடுத்த குறுங்காடு. கொழுக்கட்டைப் புல் பச்சைப் பசேலென்று முழங்கால் வரை வளர்ந்திருந்தது. அக்காட்டில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவை முதல் மாணாக்கர்கள் போல் அவ்வளவு ஆர்வத்துடன் மேய்ந்து கொண்டிருந்தன. வெள்ளைக் கொக்குகள் தம் கழுத்தை நீட்டி நீட்டி மாடுகளின் உயரத்தை அளந்து கொண்டிருந்தன, காக்கைகள் மாடுகளின் முதுகின்மேல் உட்கார்ந்து கொண்டு, ‘நேரமாயிற்று; விரைவில் மேயுங்கள்’-என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தன. கதிரவன் செந்நிறப் போர்வை போர்த்ததுபோல் காட்சியளித்தான். வானம் அப்பழுக்கில்லாமல் இருந்தது. ஓங்கி வளர்ந்த வேலா மரங்களும் பனைமரங்களும் அக்குறங் காட்டை அழகு செய்தன. அம் மரங்களுக்கிடையே பாயும் கதிரவனொளி கண்கவர் காட்சியாக இருந்தது.

பக்கத்துத் தோட்டத்து வேலியோரம் ஒரு பெரிய வரப்பு. ஓர் இளமங்கை அவ்வரப்பில் ஒரு மாட்டைப் பிடித்து மேய்த்துக் கொண்டிருந்தாள். மாடு புல் மேய்வதைப் பார்த்துப் புன் முறுவல் பூத்தவண்ணம் அவள் நின்றுகொண் டிருந்தாள். கதிரவனொளி யால் அவள் பொன்னுடல் பெற்றவள் போல் விளங்கினாள். உண்மையிலேயே அவள் பொன்னுங் கண்டு வெட்கும்படியான ஒளியுட லுடையவள் தான். அவளுக்கு மாடு, மாட்டுக்கு அவளுந்தான் துணை. வேறு யாரும் அங்கில்லை.

மேய்ச்சற் காட்டில் மேயும் மாடுகளை ஓட்டிக் கொண்டு போகக் காளை ஒருவன் அங்குவந்தான். அவன் அழகும் ஆண்மையும் ஒருங்கமைந்த கட்டழகன்; ஆடவர் அவாவத் தக்க ஆழகன். ஆடவரின் நடைக்கு ஆணேற்றின் நடையையும் களிற்றின் நடையையும் உவமை கூறுவர் புலவர் பெருமக்கள். ஆனால், இவன் நடைக்கு அவைகளின் நடை உவமையாகாது; அத்தகு இயற்கை வடிவமைந்தவன்.

எப்போதும் ஆறு மணிக்கு மேல் வருபவன் அன்று ஏனோ அந்நேரத்தில் அங்கு வந்தான். அடுத்த தோட்டத்து வேலி யோரம் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் கட்டழகி அவன் கண்ணில் பட்டாள். ஓர் ஆண்மகன் கண்ணில் ஒரு பெண்மகள் படுவது இயற்கை தானே! அவ் வியற்கையேதான் அவன் கண்ணில் அவளைப் படவைத்தது.

மாடு முடுக்கச் செல்பவன் போல் அவன் அவள் நிற்கும் இடத்திற்குச் சென்றான். இருவருக்கும் இடையே ஒரு வேலிதான் குறுக்கே! இவன் நிற்பது அவளுக்கும் அவள் நிற்பது இவனுக்கும் அப்படியே தெரியும். தன்னை ஒத்த ஓர் ஆணழகன் வந்து எதிரில் நிற்பதைக் கவனியாமல் அவள் போக்கில் மாடு மேய்ப்பதில் கருத்துடன் இருந்தாள் அவள்.

அது கண்ட அக் காளை, "என்ன இது புதுமையாக இருக்கிறது! ஓர் இளம் பருவமங்கை; ஒத்த பருவமுடைய ஒருவன் வந்து தன்னெதிரியில் நிற்பதைப் பாராமல், கொஞ்சங் கூடப் பொருட் படுத்தாமல், பண்ணி வைத்த பாவைபோல நிற்கிறாளே!

’இவள் என்ன இன்னும் பருவ முறாதவளா? இல்லை; இல்லை. அதோ பச்சை மூங்கில் போல அவள் தோள்கள் அடிபெருத்து அழகுடன் பொலிகின்றன. மார்பு பெருத்து அவள் அழகுக்கு அழகு செய்கின்றன. பருவ மங்கைதான். அதிலொன்றும் ஐயமில்லை. பின்னேன் திரும்பிப் பாராமல் குனிந்தபடியே நிற்கின்றாள்? நாம் இங்கு வத்தது தெரியாதோ? ஏன் தெரியாது? நம்மைப் பார்த்துவிட்டுத்தானே குனிந்தாள்?"எனத் தனக்குத் தானே இன்னும் என்னென்னவோ பேசிக் கொண்டான்.

‘என்ன இந்த மாட்டுக்கு அறிவே இல்லை போலும்! இங்கு புல் நிறைய இருக்கிறது. இதைப் பாராமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய அழகான பச்சைப் புல் இருப்பது, அதுவும் தன் முன்னரே இருப்பது தெரியவில்லை? என்ன மாடு இது; அறிவில்லாத மாடு!’ என்று முன்னிலைப் புறமொழி மொழிந்தான். மாட்டைப் பார்த்துச் சொல்பவன்போல் அவளுக்குச் சாடை பேசினான். அப்போதும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவனை ஓர் ஆண்மகனாவே அவள் மதிக்க வில்லை.

பின்னர் இருமினான்; தும்மினான்; சீட்டியடித்தான்; குறும்பாட்டுப் பாடினான். ஒன்றையும் அவள் காதில் போட்டுக் கொள்ளாமல் மாட்டை மேய்த்துக் கொண்டே அங்கு நில்லாமல் சென்று விட்டாள்.

அவள் கண் மறையும் மட்டம் அங்கு நின்று கொண்டு பார்த்துக் கொண்டே நின்றான். அவள் கண் மறையவும் தவிர்க்க முடியாத வருத்தத்தோடு மாடுகளை ஓட்டிக் கொண்டு சென்றான் அவ்விளைஞன். அவனால் வேறு என்ன செய்ய முடியும்? அவனால் முடிந்ததையே அவன் செய்தான்.

உள்ளமும் உணர்வும் அவள்பாற் செல்ல, ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கிச் சென்ற அவன் அன்று இரவு உண்ணவில்லை; தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தான். அவ்விரவு அவனுக்கு ஓராண்டு போல் கழிந்தது. கொஞ்சம் கண் மூடினால் அவள் உருவத் தோற்றம்! இந் நிலைமையில் அன்றிரவைக் கழித்தான். அவன் பகல் பன்னிரண்டு மணிவரை அவன் பருவத்தில் பாதியைக் கழித்தது போல் கழித்தான்.

பொழுது மேற்கே சாயத் தொடங்கியதும் பொழுதைப் பார்ப்பதுதான் அவன் வேலையாக இருந்தது. ‘கூத்தாடிக்குக் கிழக்கே கண், கூலிக்காரனுக்கு மேற்கே கண்’ என்பது பழமொழி, அப்பழ மொழியின் பிற்பகுதியைப் பழமொழி யாக்கிவிட்டான் அவன். ’பொழுதுக்கு என்ன போங்காலம், போகவே மாட்டேன் என்கின்றது; இன்னும் அதே இடத்தில் இருக்கிறதே உயிரற்ற பொருள்போல? நம்மோடு போட்டி போடுகிறதா என்ன? இன்றைக்குப் பொழுது போவதாவது ஒன்றாவது? அது ஓய்வெடுத்துக் கொண்டது போல் இருக்கிறது அடேயப்பா! நேற்று ஒரு நொடிக்குள் விழுந்து விட்டது; இன்னும் கொஞ்ச நேரம் அவளைப் பார்க்க முடியாமல் செய்து விட்டது. இது இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தால் அவள் பேசியிருந் தாலும் இருப்பாள். நமக்குக் குடிப்பகையாகவன்றே வந்து தோன்றி யிருக்கிறது இப்பொழுது! நேற்றென்ன? இன்று நம்மைக் கொஞ்சமா ஆட்டிப் படைத்தது இப்பாழும் பொழுது! அது என்ன இரவா? ஓராண்டு! அவ்வளவு நேரம் எங்கு போயிருந்த தோ இது? இதைப் பார்ப்பதற்கு நாம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமா?

‘எங்கு வந்துவிட்டுப் போய் விடுகிறாளோ! இன்னும் அங்கேயா இருந்துகொண்டிருப்பாள்? அட சனியனே! அப்படியே இருக்கிறதே அசையாக் கடைபோல! பிறர்க்கு நன்மை செய்யா விட்டாலும் தீமை செய்யாதிருப்பதன்றோ அறம்? மக்கள் விரும்புவதும் அதுதானே? ஒவ்வொரு நாளும் உலகைச் சுற்றி வருகிற இப் பகலோனுக்கு இது தெரியாதா என்ன? தெரிந்தால் நம்மை இங்ஙனம் வருத்துவானா? இல்லை; உணர்வுடை யோர்க் கன்றே அது சாலும்!’

அவன் இவ்வாறு தனக்குத்தானே பேசிக் கொண்டு பித்துப் பிடித்தவன் போல் அடிக்கடி பொழுதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி நாலாயிற்றோ இல்லையோ-மாடோட்டி வரப் புறப்பட்டு விட்டான்.

அவள் வருகிறபோதுதானே வருவாள்? இவனுக்காக அந் நேரத்தில் வருவாளா என்ன? வருவதாகச் சொல்லி விட்டா போனாள்? முன்னை நாள் இவனைப் போலவே அவளும் இவனை விரும்பி, இருவரும் காதல் கொண்டு பிரிந்து சென்றிருந் தால், இவனுக்கு முன்னே அவள் வந்திருப்பாள். அவ்வாறு முதல் நாள் எதிர்ப்பட்டுக்காதல் கொள்வதை இயற்கைப் புணர்ச்சி எனவும், இரண்டாம் நாள் இருவரும் அதே இடத்தில் எதிர்ப்படு வதை இடந்தலைப்பாடு எனவும் கூறுவர் அகப்பொருள் நூலார்.

ஆனால், முதல்நாள் அவள் இவனைக் காதலிக்க வில்லை. அவள் இவனைக் காதலிக்காமல், இவன் மட்டும் அவள்மேல் காதல் கொண்டது ஒரு தலைக்காமம் ஆகும்.

மணி ஐந்துக்கெல்லாம் வழக்கம்போல் மாட்டைப் பிடித்துக் கொண்டு அங்கு வந்தாள் அவள். இவன் முதல்நாட் போலவே அவள் அருகில் சென்றான். முதல் நாள் செய்த குறிப்புக்களை யெல்லாம் செய்தான். அவள் முதல் நாட் போலவே இவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

முன் அசையாது இருந்த இடத்திலேயே இருந்த பொழுது இப்போது இவன் மனத்திலும் விரைவாகச் செல்லுகிறது. போதைப் பார்ப்பதும் போதன்ன அப்பூவையைப் பார்ப்பது மாக இவன்,

“ஏ! அழகிய பூங்கொம்பே! நறு மணத்தாலும் அழகிய நிறத்தாலும் என் மனத்தை ஈர்த்து என்னை வருத்து கின்றனையே! உனக்கிது தகுமா? அன்றி அறமாகுமா? நீயே சொல்!”என்று முன்னிலைப் புறமொழி கூறினான். அப்போதும் அவள் இவனைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அவன் மறுபடியும் என்னென்ன வோ கூறினான். மணி ஆறானது. அவள் மாட்டைப் பிடித்துக் கொண்டு புறப்பட்டாள். உடனே இவன்,

“நீண்டு சுருண்ட கரிய கூந்தலையும், வளைந்த மணிக் கட்டையும், பச்சை மூங்கில்போல நீண்ட மெல்லிய கை களையும், அழகிய குவளை மலர் போன்ற மையெழுதிய காதளவோடிய கண்களையும், பெண்மான் போன்ற பார்வையையும், மாந்தளிர் போன்ற இயற்கை மணமுள்ள மேனியையும், அழகிய ஒளி பொருந்திய பிறைபோன்ற நெற்றியையும் கூரிய மயிலினிற கையும் முல்லை முகையையும் முத்தினையும் போன்ற வெண்பற் களையும், கொடி போன்ற இடையையும் உடையாய்! சிலம்பு கலீர் கலீர் என்றொலிக்க, வளைக் கைகளை வீசிக் கொண்டு எனது உயிரைப் பறித்துக் கொண்டு செல்லும் பெண்ணழகி! சொல் வதைக் கொஞ்சம் கேட்டு விட்டுப்போ”என்றான்.

அவள் இவன் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாது மாட்டைப் பிடித்துக் கொண்டு முதல் நாட்போலவே போய் விட்டாள். இவனுக்கோ ஒன்றும் தோன்றவில்லை. மறுபடியும் பித்தன்போல் என்னென்னவோ பிதற்றினான். பொழுதும் இவன் துன்ப நிலையைக் காணப் பொறாமல் சென்று விட்டது. என செய்வான் பாவம்! அவனும் மாட்டை ஓட்டிக் கொண்டு வாட்டத்துடன் சென்றான்.

“ஏன் ஒருவகையாக வாட்டத்துடன் இருக்கிறாய்?”

“ஒன்றுமில்லை. ஏனோ உடம்பு ஒரு வகையாக இருக்கிறது!”

“என்னிடமா மறைக்கிறாய்? தெரியும் எனக்கு உன் உடல் நோய். அது உடல் நோயன்று; உளநோய்!”

“உனக்கு எப்போதும் விளையாட்டுத்தான்!”

“விளையாட்டில்லை, உண்மையாகத்தான் சொல்லு கிறேன். அவள் ,இன்னும் பருவமாகவில்லை!”

“அப்படியா? பருவமானவள் போல் இருக்கிறாளே?”

"இல்லை, இன்னும் பருவமாக வில்லை. எனக்கு நன்றாகத் தெரியும். சில பெண்கள் பருவ மாகாமலே பருவ மானவர்கள் போல் தோன்றுவார்கள். தோற்றத்தைக் கண்டு ஏமாறக் கூடாது. ‘தோற்றம் பொய்’ என்பது கற்றறிந்த வனாகிய உனக்குத் தெரியாதா என்ன? சிலர் பருவாமாகியும் காமக் குறிப்பு அரும்பாமல் இருப்பார்கள். இவ்விரு வகையினரும் காமஞ்சாலா இளையவர் ஆவர்.

"இவர் காமக் குறிப்பு அரும்பாதவராகையால், ஆடவர் கூறும் காதற் குறிப்புரையை உணர்ந்து எதிர் மொழி கூறப் பெறார். அதையறிந்து அவர் மேல் கொண்ட காதலை விட்டு விடுவது தான் ஆண்மகனுக்கு அறிவுடைமையாகும்.

“அவள் காமக் குறிப்பு அரும்பினளாய் இருந்தால் அப்படி ஒன்றுமே பேசாமல் சும்மா சென்றிருக்கமாட்டாள். அவள் ஓர் பெண்ணல்லவா? ஆகையால், அவள்மேற் கொண்ட காதலை விட்டுவிடு!”

“அப்படியா! அதுதான் நான் வாய்விட்டுக் கேட்டும் பதில் பேசாது போய் விட்டாளா?”

"ஆமாம்; இவ் வொருதலைக்காமமாகிய கைக்கிளையை,

“காமஞ் சாலா இளமை யோன் வயிள்
ஏமஞ் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே”

என்பர் தொல்காப்பியர்."

"இதன் பொருள் என்ன?

“காமக் குறிப்பு அரும்பாத இளையாள் ஒருத்தியைக் கண்டு, அவள்மேல் காதல் கொண்டு, அடக்க முடியாத வருத்தம் அடைந்து, தான் ஒன்றும் செய்யவில்லை; அவள் தான் சும்மா இருந்த தன்னை, தனது வடிவழகால் வருத்தினாள் என்று, தான் நன்மை செய்ததாகவும், அவள் தீமை செய்த தாகவும் கூறி, அவளது எதிர் மொழியைப் பெறாது, தான் மட்டும் சொல்லி இன்புறுதலைப் பொருந்தும் ஒருதலைக் காமம் என்பது!”

“ஓகோ! இது தொல்காப்பியர் காலத்திலேயே இருந்து வந்ததா? அன்றும் என்போல் இடுக்கணுக்காளானார் பலர் உண்டு போலும்!”

"ஆம்; உண்மை என்னவென்றறியாத ஒரு சிலர் உன் போல் நடந்து வந்தனர். அது தகாது என விலக்க எழுந்ததே தொல் காப்பியச் சூத்திரம். இஃதொன்றே தமிழரின் ஒழுக்கச் சிறப்புக்குச் சான்றாகும்.

இஃதறியார், பழந் தமிழரிடைச் சிறுமியரை மணக்கும் வழக்கம் இருந்து வந்தது என மனமாரப் பொய் கூறுவர். ஒன்றை வேறொன்றாகக் கொள்வது-வேறொன்றாக மயங்குவது-மயக்க அணி எனப் படுவது போல, ஒரு சிலர் அறியாது பருவ முறாதாரைப் பருவ முற்றாராகக் கொண்ட மயக்கத்தால் நேரும் இவ்வொழுக் கத்தினைத் தகாத ஒழுக்கமாக் கொண்டு விலக்கி வந்தனர் நம் முன்னையோர். பிற்காலத் தமிழ் மக்கள் இன்னதென அறிய - அறிந்து விலக்கி யொழுக-சூத்திரம் செய்து வைத்தனர் ஆசிரியர் தொல்காப்பியர். உன் காதற் கருத்தை மாற்றிக் கொள்!"

“அவ்வாறே மாற்றிக் கொண்டேன்; நான் என்ன செய்யட்டும்? தன் வடிவழகால் வருத்தினது யார் குற்றம்? அவள் குற்றந்தானே? நானா, குற்றவாளி?”

“இல்லை, ஒருவரும் குற்றவாளியில்லை. அது இயற்கையின் குற்றம். இயற்கைதான் குற்றவாளி! ‘ஆட்டு வித்தால் யாரேதான் ஆடாதாரே’ என்னும் சமயவாதிகளின் கூற்றுக்கு இலக்காயினை நீ! இயற்கையால் தூண்டப்பட்ட நீயும் குற்றவாளியில்லை; இயற்கையாய் வடிவழகமைந்த அவளும் குற்றவாளி அல்லள். இதற்குக் காரணமான இயற்கையே குற்றவாளி”என்று ஆறுதல் கூறினான் நண்பன்.

அது கேட்ட நம் கதைத் தலைவன் தன் அறியாமைக்கு வெட்கினான். தனக்கு உண்மையை அறிவுறுத்திய நண்பனைப் பலபடப் பாராட்டினான்!

ஊமும் செவிடும்


ஒரு நாட் காலை பத்தரை மணியிருக்கும். சோழர் தலை நகரின் அறங்கூறவையக் கூட்டம். ஓர் இளைஞன் அவ் வவைத் தலைவனாக வீற்றிருந்தான். அன்று விசாரித்தற் கிருந்த வழக்கிற் குரியோர் இருவரும்-வழக்காளியும் எதிர் வழக்காளியும் - கயல்முள் ளன்ன நரைமுது மக்கள். அம் முதியோர் இருவரும் ஒருவர்க்கொருவர் காதுக்குள் என்னவோ பேசிக்கொண்டனர். வழக்கு விசாரணைத் தொடக்கமணி யடித்தது. ஒருவன் அவ் வழக்காளிகள் இருவர் பெயரையுஞ் சொல்லிக் கூப்பிட்டான். அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக, “பருவ முதிர்ச்சியும் பயிற்சியும் இல்லாத இவ் விளவலால் எங்கள் வழக்கைக் கேட்டு எங்ஙனம் தீர்ப்புக் கூற முடியும்?”என்றனர்.

அதுகேட்ட அவைத் தலைவன் திடுக்கிட்டான். தன் இளமை நாணி இடருற்றான். “முதியீர்! இன்று போய் நாளை வாருங்கள்; தக்கார் ஒருவரைத் தலைமை தாங்கும் படி செய்கிறேன்”என்றான். அம்முதியோர் இருவரும் அதற்கிசைந்து சென்றனர். அத்துடன் அவை கலைந்தது.

மறுநாள் அவை கூடிற்று நரைத்துத் திரைத்த முதியோன் ஒருவன் தலைமை தாங்கி யிருந்தான். வழக்காளிகளான அம்முது மக்கள் இருவரும் தத்தம் வழக்கை எடுத்துரைத்தனர். அவ் வறங்கூறவை முதுபெருந்தலைவன், இருவர் உரையையும் தெளிவுறக் கேட்டுத் தீர்ப்புக் கூறினான். அம்முதியோர் இருவரும் தங்கள் வழக்கை ஒப்புக் கொண்டதோடு, நடுநிலை தவறாது நன்கு ஆராய்ந்து நல்ல தீர்ப்புக் கூறிய அவ் வவைத் தலைவனின் மதிநுட்பத்தை மனமாரப் பாராட்டினர்.

அக்கிழத்தலைவன் தான் முடித்திருந்த நரை மயிரையும் தாடியையும் களைந்தான். முதல்நாள் அவைத் தலைமை தாங்கி யிருந்த அவ்விளைஞனே தான் நரை முடித்து வழக்குத் தீர்த்தான் என்பது கண்ட அம்முதியோர் இருவரும் உவந்து, தங்கள் அரசனது அறிவுத் திறனை வியந்தனர்.

இவ்விளையோன் யார்? அவன்தான் சோழன் கரிகாலன்; சோழ மன்னர்களிற் சிறப்புடையோன்; காவிரிக்குக் கரை கட்டிச் ‘சோழவளநாடு சோறுடைத்து’ என்னும்படி செய்த தூயோன்.

“உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமற் பாகம் படும்”

என்று கரிகாலன் அதிமதிநுட்பத்தைப் பாராட்டினான் பழமொழி நானூற் றாசிரியர்.

இத்தகு நன்னிலையில் இருந்தது அன்றையத் தமிழ்நாடு. அரசனே யெனினும் தகுதியில்லானைத் தகுதி யில்லானெனக் கூறி, நேர்மையை-நெறிமுறையை-நிலை நிறுத்தி வந்தனர் பழந் தமிழ் மக்கள். இன்றுபோல் அக்காலக் குடிமக்களுக்கு அரசியலைப் பற்றி, அரசனைப் பற்றி, ஆள்வோரைப் பற்றி உள்ளது கூற வாய்ப் பூட்டில்லை. அரசனுடைய அத்தாணி மண்டபத்தில், அவன் முன்னிருந்து, ‘இளையன், உரைமுடிவு காணான்’ என அஞ்சாது கூறும் நிலையைப் பெற்றிருந்தது அன்றையத் தமிழ் நாடு. அத்தகு கடப்பாட்டின் நின்று தமிழ் மரபைக் காத்து வந்தனர் தமிழ் மக்கள்.

கூடலிறைவன் பாட்டைக் குற்ற முடைத் தென்ன, அன்னான் நெற்றிக் கண்ணைக் காட்ட, ‘கோடி கண்ணுறினும் குற்றம் குற்றமே’ என அஞ்சாது கூறி நேர்மையை நிலை நாட்டித் தமிழ் வளர்த்தனர் சங்கப் புலவர் என்கின்றது திருவிளையாடற் புராணம். ஆம் அவ்வாறில்லை யெனில் தமிழ் மரபு இன்றும் உயிருடன் இருக்குமா என்ன?

அதே காலம். அதாவது கடைச் சங்க காலம். பாண்டி நாட்டில் கொடிய பஞ்சம் வந்தது. மக்கள் பசியால் வாடினர். பாண்டியன் தமிழ்ப் புலவர் பெருமக்களை யெல்லாம் வேறு நாடுகளில் சென்று தங்கியிருந்து, மழை பெய்து நாடு செழித்த பின் வரும்படி வேண்டிக்கொண்டான். புலவர்கள் எல்லோரும்-ஒருவர் கூடப் பாக்கியில்லாமல்-வேறு நாட்டுக்குச் சென்றனர். பன்னீ ராண்டு பஞ்சம் இருந்தது. பின்னர் மழை பெய்து நாடு செழித்தது.

அரசன் புலவர்களை அழைத்து வரும்படி பல நாடு கட்கும் ஆட்களை அனுப்பினான். அவர்கள் அவ்வாறே சென்று. எல்லா நாடுகளிலும் தேடி அழைத்து வந்து அரசனிடம், ‘எழுத்ததி காரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைக் கண்டு அழைத்து வந்தோம். பொருளதிகாரம் வல்லாரை எங்கு தேடியும் கண்டிலேம்’ என்றனர்.

அரசன் அது கேட்டு, ‘எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின பொருட்டன்றோ? பொருளதி காரம் பெறேம் எனில் இவை பெற்றும் பெற்றிலேம்’ என்று வருந்தினான்.

அரசனது கவலையைக் கண்ட ஆலவாய் அண்ணல் அறுபது சூத்திரங்கள் செய்து மூன்று செப்பேடுகளில் எழுதிப் பீடத்தின் கீழ் இட்டான். கோயில் வழிபாடு - பூசை-செய்வோன் கண்டெடுத்து, அவை பொருளதிகாரமாய் இருத்தல் கண்டு, அரசனிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். அரசன் மிகவும் மகிழ்ந்து, சங்கப்புலவர்களிடம் கொடுத்து உரை காணும்படி வேண்டினான்.

நக்கீரர் முதலிய சங்கப் புலவர் நாற்பத் தொன்பதின்மரும் அவ்வறுபது சூத்திரங்கட்கும் உரை யெழுதினர். அவற்றுள் யார் உரை உண்மையான உரை என்று அவர்கட்கு ஐயப்பாடு உண்டானது. புலவர்கள் அரசனிடம் சென்று, ‘எங்கள் உரைகளில் யாருரை மெய்யுரை என்று கண்டு கூற ஒரு நடுவனைத் தர வேண்டும்’ என்றனர். அரசன், ‘சங்கப்புலவர் களாகிய தங்கட்கு யான் எங்ஙனம் ஒரு நடுவனைத் தர முடியும்?’ என்றனன்.’ புலவர்கள் ஆலவாய் அண்ணலை அண்மி வேண்டினர்.

“இவ்வூர் உப்பூரிகுடிகிழார் மகனான உருத்திரசன்மன் என்னும் மூங்கைப் பிள்ளை ஒருவன் உளான். அவன் பைங் கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப் பருவத்தான். அவனை அத்தகையன் என்றிகழாது அழைத்துக்கொண்டு போய், சங்கப் பலகையின் மேலிருத்தி, நீங்கள் கீழிருந்து, உங்கள் உரைகளை உரைத்தால், மெய்யான உரையாயின் கண்ணீர் வார்த்து மெய்ம் மயிர் சிலிர்ப்பான்; மெய்யல்லா உரையாயின் சும்மா இருப்பான்”என்றது ஒரு குரல்.

புலவர்கள் திருவருளை வியந்து, அச்சிறுவனைக் கொடு போந்து. சங்கப் பலகை மேலிருத்தித் தத்தம் உரையினைப் படித்தனர். அச்சிறுவன் எல்லோருடைய உரைகளையும் படிக்கும் போது சும்மா இருந்து. நக்கீரர் உரையைப் படிக்கும் போது சொற்றொறும் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்த்தான் என்பது இறையனாரகப்பொருளுரை. அவ்வறுபது சூத்திரங்களும் அவ்வுரையுமே இன்று ‘இறையனார் அகப் பொருளுரை’ என்ற பெயருடன் உள்ளன. இது ‘இறையனார் களவியல்’ எனவும் வழங்கும்.

ஐயாட்டைப் பருவத்தான்-ஐந்தாண்டுப் பருவமுள்ள சிறுவன். மூங்கை-ஊமை. ஊமர்கள் செவிடராய் இருத்தல் இயல்பு. எனவே உருத்திரசன்மன் செவிட்டூமை என்பது பெறப் படும். பைங்கண்ணன், புன்மயிரன், என்பதால், அப்பிள்ளை நன்மக்கட் பிறப்பன்று; அருவருக்கத் தக்க புன்பிறப்பு என்பது விளங்கும்.

செவிட்டுப் பிள்ளைக்குப் புலவர்கள் உரைத்த உரை எங்ஙனம் கேட்கும்? கேளாமல் எப்படி இது பொய்யுரை, இது மெய்யுரை என்பதை அறிந்துகொள்ள முடியும்? அதுவும் என்ன வெறும் பாட்டுரையா? இலக்கண உரை. அஃதும் களவியலுரை. மேலும், பரந்துபட்ட அகப்பொருளைச் சுருக்கித் தொகுத்துச் செய்த சூத்திரங்களின் உரை! கேளாக் காதையுடைய அவ்வூமைப் பிள்ளைக்கு எங்ஙனம் புரிந் திருக்கும்? அதுவும், பள்ளிப் பருவத்தைக் கூட அடையாத இளம்பிள்ளையல்லவா அவன்?

மேலும், ‘அன்பின் ஐந்திணை’ என்ற மூன்றடியுள்ள முதற் சூத்திரத்திற்கு முப்பத்து நாலுபக்க உரை. இரண்டடியுள்ள இரண்டாவது சூத்திரத்திற்கு இருபத்திரண்டு பக்க உரை. இத்தகைய அகல உரையை அப்புன்பிள்ளை எங்ஙனம் புரிந்து சொற்றொரும் கண்ணீர் வார்த்து மயிர்க்கூச் செறிந் திருக்கக் கூடும்?

இங்ஙனம் ஐயுறா திருக்கவே, ‘அவன்குமார தெய்வம். ஆங்கோர் சாபத்தினால் தோன்றினான்’ என்னும் தடையுரையும், அக்குமரன் தந்தை என்னும் இறைவனாலேயே கூறப்பட்டுள்ளது. தகப்பன் சாமிக்கு யாரிட்டார் சாபம்? படைத்துக் காத்தழிக்கும் எல்லாம் வல்ல கடவுளுக்கே சாபம் என்பதன் உட்கருத்தென்ன?

சிவபெருமான் உமையவளுக்குச் சிவஞான போதத்தை ஓதினானாம். அவ்வம்மையார் அதைச் சரியாகக் கவனிக்க வில்லையாம். அதனால் சினங்கொண்ட சிவன் அவ் வம்மையை வலைச்சியாகப் பிறக்கக் கடவை எனச் சபித்தானாம். அது கண்ட முருகன், தாயின் சாபத்துக்குக் காரணமான அவ் வேட்டை எடுத்துக் கிழித் தெறிந்தானாம். அதனால், சிவபெருமான் இவ்வாறு மூங்கைப் பிள்ளையாய்ப் பிறக்கவெனச் சபித்தனன் என்கின்றது ஒரு புராணம். அருளுருவான சிவபெருமானின் சினத்தின் பெருமையைப் பார்த்தீர்களா? நிற்க,

தமிழ் இலக்கணத்திற்கு மெய்யுரை காண்பதற்கு ஊமும் செவிடுந்தானா கிடைத்தது? வாய்பேசும் தமிழ்ச் சிறுவன் ஒருவன் கிடைக்கவில்லையோ? தருமி என்னும் பார்ப்பன இளைஞனின் வறுமையைப் போக்கப் பொற்கிழி வாங்கித் தரத் தான் எழுதிய ‘கொங்குதேர்வாழ்க்கை’ என்னும் ஒரு பாட்டிற்குக் குற்றங் கூறிய நக்கீரர்பால், அப்பாட்டின் மெய்யுரையை-குற்றமின்மையை-விளக்கத் தமிழ்ப் புலவன் போல் வரிந்து கட்டிக்கொண்டு வந்த ஆலவாய் இறைவன், தான் எழுதிய மிகமிக இன்றியமையாத, தமிழ் மொழியின் குறைபாட்டையே தீர்க்க எழுந்த, அறுபது சூத்திரங் கொண்ட பொருளிலக்கணத்தின் மெய்யுரையை விளக்கத் தானே முன்வரலாமே? தன் பிள்ளையான மூங்கைப் பிள்ளையைக் காட்டி வாளா இருந்ததேன்? தருமியின் இன்மையைவிடத் தமிழின் குறையைத் தீர்த்தல் அவ்வளவு புறம்பானதா, இன்னார் உரை மெய்யுரை என்று இறைமொழி மூலமே கூறியிருக்கலா மல்லவா?

இனி, மெய்யுரை காண நடுவரை வேண்டிச் சங்கப் புலவர்கள் ஆலவாய் அண்ணலை நோக்கித் தவங்கிடக்கா விட்டால் வேறு தமிழ்ப் புலவர்களா தமிழ் நாட்டில் இல்லை. அதே இறையனாரகப்பொருளுரை கூறும் கடைச்சங்க நூல் களான-நெடுந்தொகை நானூறும் (அகநானூறு), குறுந் தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் பாடிய நானூறு புலவர் பெருமக்களில் ஒருவர் கூட மெய்யுரை காணத் தகுதியுடைய ரல்லரா? அல்லதூஉம், சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின் மரில் ஒருவர் கூட அதற்குத் தகுதியுடையரல்லரா? அவர்கள் எல்லோருமே படித்துப் பார்த்து இதுதான் மெய்யுரை யென்று தேர்ந்தெடுத் திருக்கலா மல்லவா? ஒவ்வொருவரும் தத்தம் உரைதான் சிறந்தது என்றனர் எனில், அப்புலவர்கள் புலவர் என்னும் பெயருக்குத் தகுதியுடையர் அல்லர் என்பதன்றோ பெறப்படும்?

மேலும், இந்நாற்பத் தொன்மதின்மரில் பொருளதிகாரம் வல்ல புலவர் ஒருவர் கூட இல்லையல்லவா? பொருளதிகாரப் புலவர் கிடைக்கப் பெறாமையினாற்றானே இறைவனால் இவ் வறுபது சூத்திரங்களும் செய்து தரப்பட்டன? பொருளதிகார அறிவில்லாத இவர்கள், பொருளிலக்கணந் தெரியாத இவர்கள், எங்ஙனம் தொகுத்தெழுதப்பட்ட அப்பொருளிலக்கணச் சூத்திரங் கட்கு உரை எழுத முடியும்? பொருளிலக்கண மறியார் எழுதிய பொருளிலக்கண உரை எங்ஙனம் மெய்யுரையாகும்?

எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம், பொருளிலக்கணம். யாப்பிலக்கணம் அணியிலக்கணம் என்னும் ஐந்திலக் கணமும் ஐயந்திரிபறக் கற்றவரே புலவர் எனப்படுவர். இவ் வைந்திலக் கணப் புலமையும் உடையவரே புலவராவர். எழுத்திலக்கணப் புலவரும் சொல்லிலக்கணப் புலவரும் யாப்பிலக்கணப் புலவரும் கிடைத்தனர்; பொருளிலக்கணப் புலவர் கிடைத்திலர் என்பது பொருளற்ற வுரையாகவன்றோ உள்ளது? எழுத்ததிகாரம் மட்டும் அறிந்தவர் எங்ஙனம் புலவராவர்? எழுத்தறியாமல் சொல்லிலக் கணம் அறிவதெப்படி? எழுத்திலக்கணம் மட்டும் அறிந்த புலவரின் தமிழ்த் தொண்டுயாது? இது பாட்டிகள் சிறுபிள்ளை களுக்குச் சொல்லும் பூச்சாண்டிக் கதை போலல்லவோ இருக்கிறது?

இக் கட்டுக்கதை, தமிழரை, தமிழ் மொழியைப் பழிப் பதற் கென்றே, வேண்டுமென்றே எழுதப்பட்ட தென்பதில் சிறிதும் ஐயமில்லை. தெய்வத் தன்மை கற்பித்துத் தமிழர் புலமையைத் தாழ்த்திக் கூற எழுதப்பட்ட பொய்க்கதை யேயாகும் இது. இதை உண்மை யென்று நம்பி, மாணவர் பாடநூல்களிற் சேர்க்கும் தமிழ் நூலாசிரியர் நிலைக்குத்தான் இரங்க வேண்டியிருக்கிறது!

இவ் வூமைப் பிள்ளை கதை இத்துடன் நிற்கவில்லை. தமிழர் பெருமைக்குச் சான்றாக வுள்ள, தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறளுக்கு மெய்யுரை கண்டதும்-திருக்குறளை நல்ல நூலென்று தேர்ந்தெடுத்ததும்-இம்மூங் கைப் பிள்iய யாம் என்பதைக் கேட்டால் நீங்கள் வியப்புறுவீர்க ளல்லவா? ஆம், வியத்தகு செய்திதான்!

வள்ளுவர் தம் குறளை அரங்கேற்ற மதுரைக்குச் சென்றார். அக்குறள் அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கத் தகுதியுடையார் யார் என்னும் ஐயம் எழுந்தது. உடனே,

“திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க இருக்க
உருத்திர சன்மன் எனவுரைத்து வானில்
ஒருக்கவோ வென்றதோர் சொல்”

என ஒரு குரல் எழுந்தது என்பது திருவள்ளுவ மாலை. இது அசரீரி பாட்டென்றே குறிக்கப்பெற்றுள்ளது. என்னே பொருள் பொதிந்த பொய்க் கூற்று? கடைச் சங்கப் புலவர் தலைவராகிய நக்கீரர் இருக்க, தலைமை தாங்கத் தகுதியுடையார் யாரென ஏன் ஐயந் தோன்ற வேண்டும்? தலைமை தாங்குவதைவிடத் தலைவருக்கு வேறு என்ன வேலை? சங்கத்தலைவர் என்ன பாவை மன்றத் தலைவரா? பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய சங்க மருவிய நூல்களெல்லாம் சங்கத் தலைவர் தலைமையில் தானே அரங்கேற்றப் பட்டன? சங்கத் தலைவர் தலைமையில், சங்கப்புலவர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட செய்யுட்கள் தானே சங்கச் செய்யுட்கள்? இது திருக்குறளின் பெருமையைக் குறைக்க எழுந்த பொய்க் கதையே யாகும். வள்ளுவரின் நுண்மாண் நுழை புலத்திற்கு உண்டாக்கிய மாசேயாகும், தெய்வத்தன்மை கற்பித்துத் தமிழர் திறனை, அறிவாற்றலைக் குறைத்துக் காட்ட இட்டுக் கட்டிய பொய்க் கதையேயாகும். இன்னும் அப் பாடலைத் திருக்குறளுடன் ஒன்றாகப் பதிப்பித்தல் தமிழர்க்கு மானக்கேடேயாகும்.

இறையனாரகப்பொருளின் மெய்யுரையைத்தான் கண்ணீர் வார்த்தும் மயிர்க்கூச் செறிந்தும் காட்டியது அம் மூங்கைப் பிள்ளை. நாற்பத்தெட்டுரைக்கும் சும்மா இருந்து நக்கீரர் உரைக்கு மட்டும் அழுதது அம் மூங்கை திருக்குறள் ஒவ்வொன்றுந் தான் மாசிலா மணியாயிற்றே? 1330 குறளுந் தானே அரங்கேறி யுள்ளன? வள்ளுவர் ஒவ்வொரு குறளைப் படிக்கும் போதும், படித்துப் பொருள் கூறும் போதும் அம் மூங்கை அழுது கொண்டே யன்றோ இருந்திருக்கும்? இப்படியுமா கதை கட்டித் தமிழர் பெருமையைத் தாழ்த்த வேண்டும் பாவம்!

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில், திருவள்ளுவர் திருக்குறளை அரங் கேற்றியதும், அரங்கேற்றம் முடிந்ததும், நாமகளும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும், இடைக்காடரும், ஒளவை யாரும், சங்கப்புலவர் 49 பேரும் திருக்குறளையும், திருவள்ளு வரையும் சிறப்பித்து, பலபடப் பாராட்டி, வெண் பாக்களால் மதிப்புரை வழங்கியதாகவும். அப்பாடல்கள் 53-ம் திருவள்ளுவ மாலை என்னும் பெயருடன் வழங்கிவருகின்றன. ஆனால், தலைமை தாங்கிய உருத்திர சன்மன் திருக் குறளைப்பற்றி, திருக்குறளின் சிறப்பினைப்பற்றி ஒன்றும் குறிப்பிட்டதாகக் காணவில்லை. கண்ணீர் வார்த்து மெய்ம் மயிர் சிலிர்த்ததாகவும் கதையில்லை. தலைவர் முடிவுரை தானே அரங்கேற்றத்தின் முடிவாகும்? தலைவர் முடிவுரை யில்லாத அரங்கேற்றம் எங்ஙனம் அரங்கேற்றமாகும்? ஊமைத் தலைவரானதால் பேசமுடியா தெனில், கைகளால் குறிப்புக் காட்டியிருக்கலா மல்லவா? அதைச் சங்கப் புலவரிலொருவர் பாட்டாகப் பாடியிருப்பரன்றோ?

இவ் வுருத்திர சன்மன் கதை இத்துடன் நிற்கவில்லை. தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் தமிழினத்தையும் எவ்வளவு இழிவுபடுத்த வேண்டுமோ அவ்வளவு இழிவு படுத்துகிறது. தமிழினத்தைத் தாழ்த்துவதற்காகவே தோற்று விக்கப் பட்டதாகும் இவ்வூமன் கதை.

சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும் செய்யுட்கள் செய்து, அவரவர் செய்த செய்யுட்களே சிறந்தவையெனத் தருக்குற்று ஒருவருக்கொருவர் மாறுபட்டனர். முடிவில், ஆலவாயின் அழல் நிறக் கடவுளை அடைந்து, நல்ல செய்யுட்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் படி வேண்டினர். அப்போதும் இறைவன் இம் மூங்கைப் பிள்ளையினையே நடுவனாகத் தந்தான். அச் செவிட்டூமை நக்கீரர், கபிலர், பரணர் ஆகிய மூவர் செய்யுட் களையே தேர்ந்தெடுத்தது என்கின்றது பரஞ்சோதியார் திருவிளை யாடற் புராணம்.

சில புலவர்கள் சொல்லையும் பொருளையும் இகழ்ந்த தாம் அவ்வூமு. இஃதுண்மையானால், அம்மூவரு மல்லாத மற்ற 46 சங்கப் புலவர்களால் செய்யப்பட்டன எனப்படும் புறநானூறு, அகநானூறு முதலிய சங்க நூல்களிலுள்ள செய்யுட்கள் படிக்கத் தகுதியற்றவை என்றல்லவோ படும்? தமிழையும் தமிழ்ப் புலவர் களையும் இவ்வாறா இகழ்வது?

சங்கப் புலவர்கள் எழுதிய அகப்பொருளுரையைத் தேர்ந் தெடுக்க, சங்கப் புலவர்கள் செய்த செய்யுட்களைத் தேர்ந்தெடுக்க, திருக்குறள் அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்க இவ்வூமுஞ் செவிடுந்தானா கிடைத்தது. இதை விடத் தமிழர்க்கு என்ன இழிவு வேண்டும்?

உருத்திரசன்மன் கதைபோன்ற பொய்க்கதைகள் தமிழ் இலக்கியங்களில் பலப்பல உள்ளன. அவை தமிழின் பெருமையை, தமிழர் பெருமையை உள்ளது உள்ளபடி உணர முடியாது மறைத்துக்கொண்டிருக்கின்றன. அம் மாசுகளை யகற்றித் தமிழர் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுதல், தமிழுக்குத் தலைமை பூண்டிருக்கும் தமிழ்த் தலைவர்கள். தமிழ்த்துறைத் தலைவர்கள் தலையாய கடமையாகும். ஆனால், தமிழர் தலைவர்கள், தமிழ்த்துறைத் தலைவர்கள் தம் கடமையை உணர்ந்து செய லாற்றுவதாகத் தெரியவில்லை. தமிழின் பெருமையை உலகுக்கு, தமிழர்க்கு எடுத்துக் காட்டும்பணியை அவர்கள் மேற்கொள்ள வில்லை; அப்பொய்க்கதைகட்கு மேலும் மெருகிடும் வேலையில் முனைந்து நிற்கின்றனர்; பாவம்! காரணம், அச்சமேயாகும். அச்சத்திற்குக் காரணம் உண்மையை எடுத்துரைக்கும் நெஞ்சுரம் இன்மையே. நெஞ்சுரம் இன்மைக்குக் காரணம் உண்மையான தமிழுணர்ச்சி தமிழினவுணர்ச்சியின்மையேயாகும்.

தமிழ்த் தலைவர்களுக்கு என்று உண்மையான தமிழு ணர்ச்சியுண்டாகுமோ அது காறும் தமிழ்மொழி ஊமும் செவிடும் உண்மையுரை காணும் இழிநிலையிலேயே இருந்துவர வேண்டியதுதான்! அதுகாறும் தமிழ் இளைஞர்கள் மூங்கைப் பிள்ளை கதை போன்ற கதைகளை நம்பி, தமிழின் பெருமை, தங்கள் முன்னோர் பெருமையை உள்ளபடி உணராது இருக்க வேண்டியதுதான்! என்று தமிழர்க்கு நல்ல காலம் வருமோ! (1961-லும்) உண்மையை எடுத்துக் கூற அஞ்சும் நிலையில் தமிழர் இருக்கையில், ஊமும் செவிடும் வாழ்க!

ஒருநாள் இரவு


ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும். ஒரு மருத நிலத்தூர். அவ்வூரைச் சுற்றிலும் உள்ள வயல்களில் நெல்லும் கரும்பும் வாழையும் மஞ்சளும் செழித்துப் பொலிந்து அவ்வூரின் அழகுக் கழகு செய்தன. அவ்வூரில் ஒரு செல்வமனை. அஃதொரு மதிதவழும் மாடிவீடு.

அம் மனையாட்டி ஓர் இளம்பருவ மங்கை; மயில் போன்ற சாயல்! மதிபோன்ற முகம்! மலர் போன்ற இதழ்! உயிரோவியம் போன்ற எழிலுருவம்! அவள் ஏனோ ஒருவகை யாக, மனக்கவலையுடன், தனியாகப் பஞ்சணையில் படுத்துக் கொண்டிருந் தாள்.

கதவு திறந்தபடியே இருந்தது. மின்விளக்கு எரிந்து கொண் டிருந்தது. அவள் ஏனோ படுக்கை கொள்ளாமல் அங்கு மிங்கும் புரண்டு படுத்த வண்ணம் இருந்தாள். அவள் கண்ணும் காதும் கதவண்டை சென்று யாரோ ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. அவள் ஏனோ இருந்தாற்போல் சடக்கென்று முகந் தெரியாமல் போர்த்துப்படுத்தாள், அவ்வளவுதான்! அவள் கணவன் அங்கு வந்தான். அவள் அசைவற்றுத் தூங்குபவள் போலப்படுத்திருந்தாள்.

கணவன் கட்டிலினருகே சென்றான்; சற்றுத் தயங்கினாற் போல் நின்றான். பின் அவன், ‘ஏன் பேசவில்லை? இதற்குள்ளா கவா தூக்கம்? எழுந்திரு. மணியென்ன, பத்துத்தானே ஆகிறது?’ என்று முகமூடியை எடுத்தான். ‘இஃக்’ என்று அவள் மறுபடியும் முன்போல இழுத்துப் போர்த்துக் கொண்டாள்.

‘ஒந்திப்படு’ என்று, அவன் கட்டிலின்கண் உட்கார்ந்தான். ஆனால் அவள் அவ்வாறாறு செய்யாமல், பொசும் பொசென்று பெருமூச்சு விட்டாள். அவனுக் கொன்றுமே புரியவில்லை. ‘ஏன்? உடம்புக்கென்ன?’ என்று தலையைத் தொட்டான். ‘போதும்’ என்று அவள் மறுபக்கம் திரும்பிப்படுத்தாள்.

‘யாரென்ன சொன்னார்? உண்மையைச் சொல்’ என்று நெற்றியை நீவினான். ‘ஒன்றுமில்லை, என்னைத் தொடாதீர்’ என்று சடக்கென்று எழுந்து கட்டிலின் ஒரு பக்கமாக உட்கார்ந்தாள். ‘ஏன்? தொட்டால் என்ன தீட்டா ஒட்டிக்கொள்ளும்? காரணம்?’ என்றான் காதலன்.

‘காரணம்! எதற்காக அவ்வளவு ஆடம்பரமாகத் தெருவில் செல்ல வேண்டும்? நான் மாடிமேல் நின்று பார்த்தேன். அம்மாடி! எல்லாப் பெண்களும் கண்கொட்டாமல் தங்களை யே பார்த்தனர். இதற்குத்தான் திருவிழா நடத்துகிறார் களாக்கும்! சீத்திருத்தக் காரர்கள் சொல்வதில் தப்பென்ன இருக்கிறது? திருவிழாவாம் திருவிழா! நல்ல திருவிழா! அப்பருவ மங்கையர் பார்த்துக் கழித்த மிச்சிலாகிய (எச்சில்) உம்மை நான் தொடமாட்டேன்’ என்று ஓர் ஓரமாகத் தள்ளி உட்கார்ந்தாள்.

‘அட பாவமே! நான் தெருவில் என்போக்கில் சென்றேன். அவர்கள் என்னைப் பார்த்திருக்கலாம். அதற்கு நானென்ன செய்யட்டும்? அது என் குற்றமல்லவே நான் வருகிறேன். என்னை ஒருவரும் பார்க்காதீர்கள்’ என்று முன்னாடியே சொல்லிவிட்டா சென்றிருக்கட்டும்? நான் என்ன? நீ சென்றாலும் பார்க்கிறவர் பார்க்காமலா இருப்பர்? பார்ப்பதுங் குற்றமா’ என்றான்.

அவள் ஒன்றும் பேசாமல் அப்படியே உயிரோவியம் போல் உட்கார்ந்திருந்தாள். வாய் பேசாப் போட்டியின் வெற்றிப் பரிசாக அவள் கண்கள் அவளுக்கு ஒளிமுத்து மாலையணிந்தன.

காலமோ முன்பனிக் காலம். இரவு பத்து மணி வரையிலும் பனியில் நனைந்ததால் அவன் தும்மினான். ஊடல் நீங்கி, ‘நீடுவாழ்க’ எனத் தன்னை வாழ்த்தவேண்டும் என்று எண்ணித் தும்மினான் எனக் கொண்டு அவள் மேலும் புலந்தாள். (புலவி-ஊடல்-மனவேறுபாடு).அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். அவள் பேசவே இல்லை. அப்புலவிப் போரில் புறங்காட்டிய தலைவன், செய்வதறியாது செயலற்றிருந்தான்.

அவன் திருவிழாக் காட்சி கண்டு களித்து வந்தவனல்லவா? விழாவுக்குச் சென்றோர் வெறுமனேயா வீடு திரும்பி வருவர்? ஏதாவது வாங்கி வருவது இயல்பல்லவா? அதற்காகத்தானே திருவிழாக் காலத்தில் அத்தனை கடைகள் வைத்திருக்கிறார்கள்? திருவிழாக்காட்சி கண்டு களிக்கச் சென்ற நமது தலைவனும் சும்மா வரவில்லை. அவன் மார்பில் விளங்கிய வேங்கை மலர் மாலை அவள் கண்ணிற் பட்டது.

உடனே அவள் கண்கள் சிவந்தன. முகமும் உடன் சிவந்தது. செந்தாமரை மலர் போன்ற அவள் முகம் அம்மலரை வென்றது. கெண்டைமீன் போன்ற அவள் கண்கள் கோவைப் பழம் போலாயின. வெடுக்காக. ‘எதற்காக இன்று புதிதாக இக்கோட்டுப் பூவைச் சூடினீர்? தாமரை, குவளை முதலிய நம் மருத நிலப் பூக்கள் இல்லையா? நும் காதலி ஒருத்திக்கு இப் புதுப்பூ வணியைக் காட்டுவதற்காகச் சூடினீர் என்பது எனக்குத் தெரியும்!’ என்று வெறுப்புணர்ச்சி மேலிட வெகுண்டு கூறினாள்.

‘இல்லை கண்ணே! பூக்கடைக்காரன் அழகான பூ என்று அன்பாகக் கொடுத்தான். அவ்வழகை உனக்குக் காட்டுவதற் காகத்தான் வாங்கிச் சூடினேன். நீ பார்த்து மகிழுவதுதானே எனக்கு இன்பம்; உன்னைவிடக் காதலுடையார் யார் எனக்கு?’ என்று தேற்றுவான். மனைவியின் ஊடலைத் தணிப்பான். காதலு டையார் யாரினும் நாம் மிக்க காதலை யுடையோம் என்பான் - நாம் யாரினும் காதலம்’ - என்றான்.

அவ்வளவு தான்! ‘என் காதலியர் பலரினும் நான் உன்னிடத்து மிக்க காதலுடையேன் என்று அவன் சொன்னதாகக் கொண்டு. ’யாரினும் யாரினும்’ என்று சீறி விழுந்தாள்.

‘என் காதற்களஞ்சியமே! கற்பின் பெருந்துணையே! நீ தப்பாக எண்ணி விட்டாய். நான் அவ்வாறு சொல்லவில்லை. உலகத்திலுள்ள காதலர் எல்லாரிலும் நாம் மிக்க காதலுடை யோம் என்றேன். உனக்கது அப்படிப் பொருள் பட்டது. தப்பாக எண்ணாதே. அவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்’ என்று அவன் அவள் நெடுங்கருஞ் சுரிகுழலை நீவினான்.

அது அவள் சினத்தீக்கு மண்ணெண்ணெய் போலானது. மதிமுகம் என்பதை விட்டு. இனி எரிமுகம்! என்று உவமை கூறும்படி அவள் முகம் விளங்கிற்று. கண்ணும் எரியை உவமை யாக்கிக்கொண்டது. அவ்வெரிவிழி கண்ட அவன்,

‘என் அன்பே! ஆரமிழ்தே! அருந்தமிழ் மொழியே! என்னிடம் கொண்ட ஐயத்தை விடு, எதற்காக உனக்கு இத்தகைய ஐயம்? உறுதியாகச் சொல்லுகிறேன். இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரியோம்’ என்றான்.

‘அப்புறம்! மறுமையில் பிரிந்து விடுவீர். நாம் உயிரோ டிருக்கும் மட்டுந்தான் நாம் காதலர்? நான் இறந்தபின் என்னை நும் காதலி என்று சொல்லுதலை நீர்விரும்ப வில்லை போலும்! இது தானா ஆடவர் கொள்ளும் உண்மைக் காதலென்பது? நான் இதுநாள்வரை அறியாது போனேனே. நல்ல காதல், வெல்லம் போட்ட காதல்’ என்று கண்கலங்கிக் கண்ணீர் உதிர்த்தாள்.

அவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, ‘என் இன்ப வாழ்வே! என்ன? நான் எது சொன்னாலும் தப்பாகப் பொருள் கொள்கிறோயே? இப்பிறப்பில் நாம் பிரியோம் என்றால் மறுமையில் பிரிவோம் என்பது பொருளா? மறுமை என்பது என்ன? நாம் இறந்த பின்னர் இங்குள்ளோர் நம்மைப் பற்றிப் பேசுவது தானே? நம்மை இணைபிரியாக் காதலர் என்னாமல்’ தனித்தா பேசுவர்? இனி எப்போதும் பிரியோம் என்னும் கருத்துடன் அவ்வாறு கூறினேன். இது உண்மை. பொய்யன்று எனப் பலகூறி ஊடல் தீர்ப்பான், தன் கூற்றுக்குத் துணையாக,

‘சென்ற மாதம் நான் உன்னைப் பிரிந்து சட்ட மன்றக் கூட்டத்திற்காகச் சென்னை சென்றே னல்லவா? சட்டமன்றக் கூட்டத்தில், ’கல்லூரிகளிலும் தமிழிலேயே எல்லாப் பாடங் களையும் கற்பிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் தழைத்து வளரும்’ என்னும் தீர்மானம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போதுகூட உன்னை அடிக்கடி நினைத்தேன்’ என்றான்.

‘அப்படியா! அப்போ அன்று பிரிந்து செல்லும்போது, ’உன்னை மறவேன்’ என்ற தெல்லாம் என்னை ஏமாற்றுவதற்காகக் கூறியது தானோ? மறந்திருந்தால் தானே நினைக்க வேண்டும்? மறவாமல் இருந்தால் நினைக்க வேண்டிய வேலையில்லையே!’ என்று ஊடலானாள்.

ஒருமணி நேரம் அமைதியாகக் கழிந்தது. இன்னசெய்வ தென்று தோன்றாத நிலையில் இருந்த தலைவன் தும்மினான். ஊடலை மறந்து, ‘நீடு வாழ்க’ எனத் தலைவி வாழ்த்தினாள். அவ்வாறு வாழ்த்தினவள் அதே வாயால், ‘நும்மை நினைத்து வருந்துகின்ற நும் காதலியரில் எவள் நினைத்ததால் தும்மினீர்?’ என்று தேம்பித்தேம்பி அழுதாள்.

‘என் ஆருயிரே! உன்னைவிட எனக்கு வேறு காதலியர் யார்? என் உள்ளங்குடி கொண்ட உயிரோவியமே! ஏன் இப்படித் தப்பாக எண்ணுகிறாய்? இக் கெட்ட எண்ணம் உனக்கு உண்டா கலாமா? இது நம் ஒருமை வாழ்வுக்கு ஊறு செய்யு மல்லவா? பனியில் நெடுநேரம் இருந்ததால் தும்மல் வருகிறது. நீ வேறு வகையாக எண்ணாதே’ என்று பல சொல்லி ஊடல் தணிக்கும் போது மறுபடியும் தும்மல் வந்தது.

தும்மினால், நும் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர் என்று மறுபடியும் ஊடுவாளென்று அஞ்சிய தலைவன் அத் தும்மலை அடக்கிக் கொண்டான். அது கண்ட தலைவி, ‘நும் காதலியர் நும்மை நினைப்பதை என்னிடம் மறைக்கின்றீர். ஒருவர் நினைக் காமல் சும்மா தும்மல் வருமா?’ என்று மறுபடியும் அவ்வாறே தேம்பித் தேம்பி அழுதாள்.

‘ஒருவர் நினைத்தால்தான் தும்மல் வருமா? இது பெண்டி ராகிய உங்கள் வழக்கம். பனியில் நனைந்ததால் சளிப் பிடிக்கும் போல் இருக்கிறது. அதனால், அடிக்கடி தும்மல் வருகிறது. போன வாரம் சளிப்பிடித்து நீ அடிக்கடி தும்மிக் கொண்டே இருந்தாயே பிறர் நினைத்தா தும்மினாய்? உன்னை நினைத்தவர் யார்? உனக்குள்ளதுதானே பிறர்க்கும் இருக்கும்? ’தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு’ என்னும் பழமொழியை நீ அறியாதவளா? மணி ஒன்றரைக்குமேல் ஆகிறது. இல்லாத ஒன்றை உண்டு என்று எண்ணும் இந்த எண்ணத்தை விட்டுவிடு’ என்று அவள் கூந்தலை நீவினான்; நெற்றியைத் துடைத்தான்; கன்னத்தைத் தடவினான்; கண்களை உறுத்தினான்; தோள்களைப் பிடித்தான்; முதுகை மெல்லச் சொறிந்தான்; கால் களைப் பிடித்தான். அவ்வளவிலும் அவள் ஊடல் தணியவில்லை. முடிவில் அவள் அடிமலரைப் பணிந்தான். நடந்ததென்ன?

‘நான் சொன்னது சரியாகப் போயிற்றா? எனக்குத் தெரியுமே நுமது நடவடிக்கை, நும் காதலியர் ஊடிய போது நீர் இப்படித் தானே பணிந்து அவர்கள் ஊடலைத் தணித்திருப்பீர்? பணிந்து பணிந்து பழக்கம். இது ஒரு நாளில் இயல்வதா?’ என்று கடுஞ்சினங் கொண்டாள்.

என்செய்வான் பாவம்! தன்குற்றத்தை ஒப்புக் கொண்டு பணிந்தான். அப்பணிவு அவள் புலத்தற்குக் காரணமாயிற்று. இனிச் செய்வ தென்ன இருக்கிறது? அவன் சொல்லும் செயலும் அவளிடம் பயன்படாமையால் பேசாமல் அவளைப் பார்த்த படியே இருந்தான். வேறு என்ன செய்வான் பாவம்! பணிந்தும் பார்த்தாகிவிட்டது. ஆனால், அப்படிச் சும்மா இருந்ததும் அவள் புலவியைத் தூண்டிவிடுதற் கேதுவாயிற்று.

‘என் உறுப்புக்களை யெல்லாம் எதற்காக இப்படி உற்று நோக்குகிறீர்? என் உறுப்புக்கள் எவள் உறுப்புக்கள் போல் இருக்கின்றன என்று ஒப்பிட்டுப் பார்க்கிறீரா? என் கண் எவள் கண்போல் இருக்கிறது? என் இதழ் எவள் இதழ்போல் இருக்கிறது? நன்றாகப் பாரும்’ என்று வெகுண்டாள்.

அதற்குள்மேல் அவன் செய்வதற்கு என்ன இருக்கிறது? சும்மா இருப்பதுங் குற்றமானால் ஒருவன் குற்றமற்றவனாய் நடந்து கொள்வ தெப்படி? எவ்வாறு அவள் ஊடலைத் தீர்ப்ப தென்பது அவனுக் கொன்றும் புலப்படவில்லை. அதன்பின் அவன் என்ன செய்திருப்பான் சொல்லுங்கள் பார்க்கலாம்…?

பெண்ணின் பெருமையைப் பார்த்தீர்களா? நம் காதலர்க்கு அவ்வாறு கழிந்தது அவ்விரவு, இவர்களுக்கு மட்டுமா? உலகில் இன்னும் எத்தனை காதலர்களுக்கு அவ்விரவு அவ்வாறு கழிந்த தோ யார் கண்டார்? இதைப் படித்ததும், திருக்குறள் 132-வது ‘புலவி நுணுக்கம்’ என்னும் அதிகாரத்தைப் படியுங்கள். அப்புறம் வேண்டுமானால் இக்கட்டுரையை மறுபடியும் ஒருமுறை படித்துப் பாருங்கள். மறுபடி ஒரு முறை புலவி நுணுக்கம் என்னும் அவ்வதிகாரப் பத்துக் குறளையும் படித்தே தீருவீர்கள். அதன்பின் திருக்குறளின் பெருமையையும், பழங்காலத் தமிழ் மக்களின் காதல் வாழ்வையும் எண்ணிப்பாருங்கள். வேண்டுமானால் இக்காலத் தமிழர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வாழ்க நம் காதலர்!

வள்ளுவன் வாயது


‘தமிழுக்குக் கதியாவார் இருவர். அவர்தாம் கம்பரும் திருவள்ளுவரும். ’கதி’ என்னும் சொல்லிலுள்ள க-கம்பரை யும், தி-திருவள்ளுவரையும் குறிக்கும்’ என்பது, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் காலஞ் சென்ற திரு. செல்வக்கேசவராய முதலியார் அவர்களின் ஆய்வுரை.

அன்று திருக்குறள் தமிழ்மக்களிடையே அந்நிலையினில் இருந்துவந்தது. வள்ளுவரை, கம்பருடன் இணைத்துத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் காலம் அது. எங்கு ஒரு சொற் பொழிவு நடக்கிறதென்றாலும் அது கம்பராமாயணச் சொற் பொழிவாகத்தான் இருக்கும். அன்று தமிழாசியர் பலர் இதை ஒரு துணைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். கம்பர் கவிநயங்கூறத் தெரியாதவர் தமிழ்ப் புலவராக மதிக்கப் படார். பேச்சாளர் பேச்சுக்கிடையே இரண்டோரு திருக்குறளை எடுத்துக் காட்டுவர். அவ்வளவுதான் அன்று திருக்குறளின் நிலை! தனித் திருக்குறட் சொற்பொழிவு அன்றில்லை.

திருக்குறளுக்கு இரங்கத்தக்க இவ்விழி நிலை அன்று மட்டுந்தான் நேர்ந்ததென்று சொல்வதற்கில்லை. திருக்குறளுக்கு வரும் இவ்விழி நிலை, மக்களுக்கு அடிக்கடி வரும் தொத்து நோய் போன்றது. இத் தொத்து நோயினால் திருக்குறள் பன்முறை தாக்குண்டு பாடிழந்திருக்கிறது. நோயின் கொடுமை பொறுக்க முடியாமல் அது கட்டிலுக்கிரையாய்க் கண்ணீர்க் கிடையே கலங்கிக் கிடந்த காலமும் உண்டு. அக்கொடு நோயின் தாக்குத லால் நம் அருமைத் திருக்குறள், உடல் நலிந்து உளமெலிந்து உருவும் ஒளியும் இழந்து உயிருக்கு ஊசலாடியதும் உண்டு.

தமிழர் பண்பாட்டுக்கு நேர்மாறான ஆரியர் பண்பா டென்னும் கொடிய நச்சு மருந்தை, தமிழ்க் கவியென்னும் கூட்டு மருந்துடன் குழைத்துக் கொடுத்துத் தமிழ் மக்களின் தனிப் பண்பைக் கெடுத்த, தமிழ் மக்கள் தம் முன்னோரான பழந் தமிழ்த் தலைவர்களைத் தமக்கு யாதொரு தொடர்பு மில்லாதவர், அரக்கர், கொடியர் எனநம்பி இகழும்படியும். தம் முன்னோர் குலப் பகைவரான ஆரியத் தலைவர்களை மிகவும் நல்லவர், மேலானவர், தெய்வத் தன்மையுடைவர் என நம்பி வணங்கும் படியும் செய்த கம்பருடன், தமிழர் பண்பாட்டுச் சரக்கறை யாகிய, தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறள் செய்த வள்ளுவரை ஒப்பிட்டுக் கூறித் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தும் நிலையை விடத் தமிழர்க்கு ஒரு தாழ் நிலை உண்டோ?

அஃதும், ‘கதி’ என்னும் வட சொல்லைத் தமிழுக்குக் கதியெனக் கொண்டு, ‘கம்பராமாயணம் தமிழுக்கு, தமிழர்க்குச் செய்துள்ள நன்மை போன்றது, திருக்குறள் தமிழுக்கு தமிழர்க்குச் செய்துள்ள நன்மை எனக் கூறும் இழி நிலையைத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்வரோ?’

இன்று தமிழ் மக்களிடைத் திருக்குறள் பெற்றுள்ள மதிப்பினை-செல்வாக்கை-நோக்கின் அது வியப்பாகத் தான் தோன்றும். இவ்வாறே குறள் முன்னரும் செல்வாக்குப் பெற் றிருந்த காலமுமுண்டு. செல்வம் ஒருவரிடம் நிலைத்து நில்லாது சகடக்கால் போலுதல் போலவே திருக்குறளின் செல்வாக்கும் போக்கு வரத்துடைய தாகவே இருந்து வந்துள்ளது. திருக் குறளுக்கு இந்நிலை ஏற்படுவதற்கு அதன் தனிப் பெருமையே காரணமாகும்.

உலக மொழிகளில் குறள் போன்ற ஒரு நூல் இது வரை தோன்றியது இல்லை. இனிமேல் தோன்று மென்பதும் ஐயமே என்பதில் ஐயமில்லை! திருக்குறள், தமிழர் பண்பாட்டின் தனிப் பெருமையைக் கலங்கரை விளக்கம் போல் காட்டிக் கொண் டிருப்பதால், பொறாமை கொண்ட மாற்றி னத்தார், அக்கலங் கரை விளக்கத்தை களங்கமுடையதாக்கி, தமிழ்ப் பாண்பாட்டுச் சரக்குக் கப்பலைத் திசை கெட்டுப் போகும்படி செய்ய முயலும் முயற்சியே குறளுக்கு இத்தகு நிலை ஏற்பட ஏதுவாயிற்று.

திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்ட நூலாகை யால், மக்கள் செய்வன தவிர்வன-இவை இவை யெனத் தெள்ளத் தெளிய வரையறுத்துக் கூறும் வாய்மை நூலாகையால், பழந்தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் குறள் முழுவதையும் மனப்பாடம் செய்து, குறள் வழி நின்று வாழ்ந்து வந்தனர். அதனாற்றான் இன்று நாம், “திருக்குறள் உலகப் பொது நூல். தமிழர் பெருமைக்குச் சான்றாக உள்ளது திருக்குறள், திருக்குறள் போல ஒரு நூலை யாங்கணும் கண்டிலேம், ’வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி”என்றெல்லாம் பெருமை பாராட்டி வருகிறோம். இல்லையேல், ஏனைப் பழந்தமிழ் நூல்களை ஒழித்துக்கட்டியது போலவே என்றோ தமிழ்ப் பகைவர்கள் திருக்குறளையும் ஒழித்துக் கட்டியிருப்பார்கள்.

திருக்குறளின் தனித் தமிழ்ப் பண்பாடே, நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அதற்குப் பதின்மர் உரை யெழுதக் காரணமாயிற்று. வள்ளுவர் கருத்தை உள்ள படி விளக்கித் தமிழ் மக்களை வாழ்விக்கவா அவர்கள் உரை யெழுதினார்கள்? இல்லை; தங்கள் சமயக் கருத்துக்களை, தம் இனக்கருத்துக்களைப் புகுத்திக் குறளின் தூய்மையைப் போக்கி, தமிழினத்தைத் தாழ்த்தவே அன்னார் உரையெழுதினர். ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேற வில்லை; முயற்சி முற்றுப் பெறவில்லை. அவர்கள் படுதோல்வி யடைந்தனர், எங்ஙனம்?

அவ்வுரைகள் தமிழ்ச் சரக்கல்ல; அவை அயற் சரக்கு மூட்டைகள், அம்மூட்டைகளைப் போட்டுக் குறள் என்னும் மரக்கலத்திலுள்ள தமிழ்ச் சரக்கு மூட்டைகளை மூடி வைத்துள்ளனர் என்னும் உண்மையை எப்படியோ தமிழ் மக்கள் தெரிந்து கொண்டனர்; அவ்வயற்சரக்கு மூட்டைகளைப் புரட்டி எடுத்து, அப்புறப் படுத்தித் தமிழ்ச் சரக்குகள் வெளிப்படையாகத் தெரியும் படி செய்து விட்டனர். இதுவே அவர்கள் தோல்விக்குக் காரணம். இனித் தமிழர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது.

அயலார் முயற்சி இத்துடன் நிற்கவில்லை; அவர்கள் மேலும் சூழ்ச்சி செய்யத் தலைப்பட்டனர், குறளின் பெருமை கூறுவார் போன்று அதற்குச் சிறுமையுண்டாக்கத் தலைப் பட்டனர். அதில் ஒருவாறு வெற்றியும் கண்டனர் எனலாம். எங்ஙனம்?

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி’ என்னும் பழமொழியாலும், ‘பழகு தமிழ் நாலிரண்டிற் பார்’ என்னும் செய்யுளடியாலும், திருவள்ளுவ மாலையாலும் திருக்குறளின் பெருமை விளங்கும் எனத் திருக்குறளின் பெருமைக்குக் கூறப்படும் காரணங்களுன் திருவள்ளுவ மாலை என்பதும் ஒன்றாகும்.

’வள்ளுவர் திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினர். குறளின் பெருமை யுணர்ந்த சங்கப் புலவர்கள் நாற்பத் தொன்பதின்மரும் ஆளுக்கொரு வெண்பா வினால் குறளையும் வள்ளுவரையும் புகழ்ந்து பாடினர். அப் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை என்கின்றனர். திருவள்ளுவ மாலையில் அந்நாற்பத் தொன்பதோடு, அசரீரி, நாமகள், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, இடைக்காடர், ஒளவையார் ஆகியோர் பாடல்களும் சேர்ந்து 53 பாடல்கள் உள்ளன. அத்திருவள்ளுவ மாலைக்குச் சென்ற நூற்றாண்டினரான திருத் தணிகைச் சரவணப் பெருமாளையர் என்பவர் உரை எழுதி யுள்ளனர்.

திருக்குறளுக்கு-தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பருதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப் பெருமாள், காளிங்கர் என்ற பத்துப் பேர் உரை எழுதியுள்ளனர். இவர்கள் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர் இருந்தவராவர். இவர்களில் யாரும் திருவள்ளுவ மாலையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சங்கப்புலவர்கள் பாடியதாக இருந்தால் பதின்மரில் எவரேனும் ஒருவர் அதற்கு உரை யெழுதியிருப் பரன்றோ? அன்னார் புகுத்தியுள்ள அயற் கருத்துக்குத் துணை செய்யும் அப்பாடல்களை எடுத்துக் காட்டாமல் இருப்பாரோ? எவரும் எடுத்துக் காட்டாத தன் காரணம், அது திருக்குறள் உரையாசிரியர்கள் காலத்திற்குப் பின்னர்ப் பாடப் பெற்ற தென்பதேயாகும்.

திருக்குறளின் பெருமையைக் கெடுக்க, தமிழர் தனிப் பண்பாட்டை மறைக்க, பிற்காலத்திலே யாரோ ஒரு தமிழ்ப் பகைவர் எழுதி, கடைச் சங்கப் புலவர்கள் பெயர்களை அப்பாடல் களின் கீழ் எழுதி வைத்து விட்டனர். வள்ளுவர் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் பார்ப்பனனுக்கும் பிறந்தவர் என்று எழுதி வைத்ததுபோல், வடமொழி மயக்க மருந்துண்டு மயங்கிய பிற்காலத் தமிழர்கள் அப்பொய்க் கூற்றை மெய்க் கூற்றெனவே கொள்ளலாயினர்.

வள்ளுவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றுகின்றார்; குறட் கருத்துக்களை விரித்துரைக் கின்றார். அச்சங்கத்தில் வீற்றிருந்த மங்கையர்க்கரசியாகிய திருவாட்டி நாமகள் அம்மையார் முதன் முதல் குறளின் சிறப்பினை ஒரு வெண்பாவினால் விரித்துரைக்கின்றார். வள்ளுவர் எதிர்பார்த்தி ராத அத்தகு சிறப்புரை வள்ளுவர் உவகைப் பெருக்கால் உண்மையி லேயே உளம் உப்பியிருப்பர் என்பதில் ஐயமில்லை. இதோ அவ்வெண்பா :

" நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன்-கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு"

நாடா-உலகத்தார் விதி விலக்குகளை அறிந்து உய்யும் வழியை ஆராய்ந்து; முதல் நான்முகன் நாவில் நான்மறை பாடா-முதலில் பிரமனது நாவிலிருந்து நான்கு வேதங்களையும் பாடி; இடை பாரதம் பகர்ந்தேன் - இடைக்காலத்தே பாரதமாகிய வேதத்தைக் கூறினேன்; பின் என் வாக்கு வள்ளுவன் வாயது-பின்னர்த் திருக்குறளாகிய வேதத்தைச் சொல்லி என் வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணது. இதனால், நான்மறை முதல் வேதம் பாரதம் இடைவேதம், திருக்குறள் கடைவேதம் என்பதாயிற்று என்பது உரை. ‘கூடாரை… மாற’ என்பது பாண்டியனைக் குறித்தது.

வடமொழி வேதங்களும் பாரதமும் திருக்குறளும் உலக மக்கள் உய்யும் வழியைக் கூறும் நூல்கள் என்பது கருத்து.

ஆரிய வேதங்களில் மக்கள் உய்யும் வழிகள் என்ன இருக் கின்றன? ஆரியர்கள், தம்மை எதிர்த்த இந்நாட்டுப் பழங்குடி மக்களை அழித்தொழிக்கும் படி இந்திரன் முதலிய தம் தெய்வங் களை வேண்டும் பாடல்களும், கொலை வேள்விச் சடங்கு பற்றிய பாடல்களும், வருண வேற்றுமை கூறும் பாடல்களும், சில துதிப் பாடல்களும் கொண்டவையே வேதங்கள். இவற்றைக்கற்று மக்கள் உய்வ தெங்ஙனம்? இவற்றைக் கற்போர்க்குப் பகை யுணர்ச்சியும் கொலையுணர்ச்சியு மன்றோ உண்டாகும்? அதனாலன்றோ வேதங்களை ஆரியரல்லார் படிக்கக் கூடாதென்று எழுதி வைத்தது? சிவானந்த சரச்ஃவதியார் எழுதிய ஞான சூரியன் என்னும் நூலைப் பார்த்தால் வேதங்களின் சிறுமை விளங்கும்.

இனிப் பாரதத்தில்தான் மக்கள் அறிந்து கடைப் பிடித் துய்யும் வழிகள் என்ன இருக்கின்றன? நாகரிக மக்கள் காதால் கேட்கவும் நாணும் கதைகள் கூறுவது பாரதம்; புராணப் பொய்க் கதைகள் நிரம்பியது. பாரதத் தலைவர்களின் குல முறையே அருவருக்கத்தக்கது. ஒருவரை யொருவர் அழித் தொழிக்கச் செய்யும் சூழ்ச்சியின் முடிவே பாரதத்தின் சாரம். மக்கட் பண்பாட்டுக்குரிய செய்தி யொன்றும் பாரதத்தில் இல்லை. வேத பாரத நூலுக்குரியார் இந்நாட்டுக்கு வரு முன்னரே தமிழர் தனி நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தனர். வேதபாரதந்தோன்று முன்னரே தமிழர் ஒழுக்க நூல் செய்து உயர்வுடன் வாழ்ந்து வந்தனர். அங்ஙனமிருக்க.

தமிழர் பண்பாட்டுச் சரக்கரையான திருக்குறளை, தமிழர் பண்பாட்டுக்கு மாறான ஆரியர் பண்பு கூறும் வேத பாரதங் கட்குக் கடைப்பட்டதென, அவற்றுடன் ஒரு புடை ஒப்புமை கூறுதல் எங்ஙனம் பொருந்தும்? திருக்குறள் ஒழுக்க நூல்; வேத பாரதம் இழுக்கு நூல்கள். இவை எங்ஙனம் ஒரு புடை ஒத்த
தாகும்? ‘தமிழர் நாகரிகத்தினும் ஆரியர் நாகரிகம் சிறந்தது. ஆரிய நாகரிகத்தினின்று தோன்றியதே தமிழர் நாகரிகம்’ எனக்கொண்டு பிற்காலத் தமிழர் தம் வழி முறையறியாது போகும்படி செய்து வைத்த சூழ்ச்சியே இது.

“நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூல்முறை”

“செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே”

‘வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழா னுரைசெய்தார்’

அருமறைகள்

“ஐந்தும் சமயநூலாறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்”

எனப் பின்வரும் பொய்க் கூற்றுகட்குத் துணையாக முன் கூறி வைத்ததே இது. செய்யா மொழி - ஆரிய வேதம். அரு மறைகள் ஐந்து - இருக்கு முதலிய வேதங்கள் நான்கும் பாரதமும். பாரதத்தை ஐந்தாம் வேதமென்பதே வேதங்களின் சிறுமைக்குச் சான்றாகும். ‘ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும்’ ‘ஒன்றே, திருக்குறள் கூறுவது ஆரிய நாகரிகமே’ என நம்பி, தமிழரை ஆரியத்துக் கடிமையாக்கச் செய்த தந்திரமே இது என்பதில் ஐய மென்ன?

மேலும், “முப்பாற்கு - பாரதம், சீராம கதை, மனு, பண்டைமறை நேர்வன”என, வேத பாரதங்களே யன்றி இராமா யணம், மனுதர்மங்களின் கருத்துடையதே திருக்குறள் எனவும் நம்பும்படி செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் காலத் தமிழர் வெறுத்தொதுக்கிய இராமாயணம் எங்ஙனம் திருக்குறளுக் கொப்பாகும்? சூழ்சசியும் பொறாமையும் பித்தலாட்டமும் பொருந்திய இராமன் வாழ்வியல் எங்ஙனம் திருக்குறளறத்துக் கொப்பாகும்? அரசுக்குரியவன் ஊரிலில்லாத போது அவனரசைக் கொள்ள முயலுதல். இருவர் பொரும் போது ஒருவனை மறைந் திருந்து கொல்லுதல், சூத்திரன் தவஞ் செய்யக் கூடாதென்றல் போன்ற இராமாயண அரசியல் முறை எங்ஙனம் திருக் குறளரசியல் முறைக் கொப்பாகும்? ஆரிய மணம் எட்டனு ளொன்றான வில்வளைத்து மணக்கும் அசுரமண முறை எங்ஙனம் திருக்குறள் இன்பமுறைக் கொப்பாகும்? தமிழர் பண்பாட்டுக்கு நேர்மாறான தன்றோ இராமாயணப் பண்பாடு?

இனி, ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி’ என, மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை வெறுத் தொதுக்கும் ஒரு குலத்துக் கொரு நீதி கூறும் மனு நூல் ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ எனச் சமநீதி கூறும் திருக்குறளுக்கு எங்ஙனம் ஒப்பாகும்?

நிலத்தை நிலமகள் என்பதும், நீரை நீர்மகள் (கங்கா தேவி) என்பதும், மொழியை நாமகள் என்பதும், கல்வியைக் கலைமகள் என்பதும் நூன் மரபு. எனவே, நாமகள் கூறியதாக ஒருவர் கூறியதேயாகும் இப்பாடல். வேதம் பிரமனால் செய்யப்பட்டது; நாமகள் பிரமன் மனைவி என்பதெல்லாம் புராணக்கதை. சங்கத்தார் முன் நாமகள் எவ்வடிவில் வந்து கூறினாள்? தெய்வ வடிவில் அல்லது மக்கள் வடிவில் என்றால், இன்றேன் அவ்வாறு வெளிப்படுவதில்லை? ஒன்றுக் கொன்று முரண்பட்ட கருத்து களையுடைய நூல்களை ஒன்றெனக் கொண்டு, ‘என் வாக்கு வள்ளுவன் வாயது’ என்னும் நாமகள் கூற்றுப் பொருளிலாப் பொய்க் கூற்றாக வன்றே உளது? பொய் கூறி மக்களை மருள வைப்பதா தெய்வத்தின் தன்மை?

கல்வியின் கடவுளெனவும், அறிவுத் தெய்வமெனவும் போற்றப்படும் நாமகளே, வேதபாரங்களோ டொத்தது திருக் குறள், அத்தகு சிறப்புடையது என மதிப்புரை வழங்கிய பின், எதற்காகக் காலமும் பொருளும் வீண்படச் சங்கப் புலவர்கள் முன்னிலையில் பலநாள் அரங்கேற்ற வேண்டும்? நாமகளுக்குத் தெரியாததா சங்கப் புலவர்களுக்குத் தெரியும்? நாமகள் கூறிய கருத்துக்களையே இவர்களும் கூறுவதால் பயனென்ன? குறளரங் கேற்றத்திற்குத் தலைமை தாங்கத் தகுதியுடையார் யார் என ஐய முண்டான போது, ‘அதை அரங்கேற்ற வேண்டியதில்லை; அது குற்றமற்ற சிறந்த நூல்; பிரமன் நாவில் இருந்து வேதங்களையும், வியாசர் நாவிலிருந்து பாரதத்தையும் சொன்னது போலவே, நானே வள்ளுவன் வாயிலிருந்து குறளைச் சொன்னேன்; ஆகை யால், நீங்கள் அதனை அப்படியே ஒப்புக்கொண்டு விடுங்கள்’ என்று நாமகள் சொல்லியிருக்கலா மல்லவா? ஊமைப் பிள்ளை யான உருத்திரசன்மன் தலைமையில் எதற்காக அரங்கேற்ற வேண்டும்?… ‘யார் தலைவர்’ என்னும் ஐய முண்டான போதே, தலைமை தாங்கத் தகுதியுடையார் யார் என்று சங்கப் புலவர்கள் பேசிக்கொண்ட போதே, ‘நாடா முதல் நான் மறை’ என்னும் பாடலை நாமகள் பாடியிருந்தால் புலவர்கள் அரங்கேற்றத்தையே நிறுத்தியிருப்பர் அல்லவா?

எனவே, திருவள்ளுவ மாலை என்பது, பிற்காலத்தே யாரோ ஒருவர் பாடி, சங்கப் புலவர்கள் பாடியதென எழுதி வைத்ததேயாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இனியேனும், தமிழறிஞர்கள் உண்மையுணர்ந்து, திருவள்ளுவ மாலை திருக்குறளின் பெருமை கூறுவதன்று; அது திருக்குறளின் பெருமையைக் கெடுக்க எழுந்தது என்பதைத் தமிழ் மக்கள் உணரும்படி செய்து, குறளின் பெருமையை நிலை நாட்டு வாராக.

முத்தார முத்தம்


ஒரு நாள் மாலை; இளவேனிற் காலம். குளிர் தென்கால் தமிழ்மணங் கமழ வீசிற்று. வானவெளியில் அங்கு மிங்கும் வெண்ணீல முகிற்கூட்டம், நிலவுலகின் இயற்கையின் எழிலுருவங் களைக் காட்டிக் காண்போர் கண்ணையுங் கருத்தையும் ஒருங்கு கவர்ந்தது. வானையும் நிலத்தையும் தம் வாழ்விடமாகப் பெற்ற வன்னப்புள்ளினங்கள், தமிழ் மக்களிடம் பெற்ற இனிமைப் பண்பைத் திருப்பித்தந்து செய்ந்நன்றி மறவாச் செம்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன. கடற்கரைக் கானல் மலரும் மணமும் தூவி மகிழ்வித்தது.

தமிழ்க் கடற்கரை மணல்வெளி. அது வெண்ணில வொளி போல் விளங்கிற்று. அத்தமிழ்க் கடல், “நான் அன்று தமிழுண்டது தவறன்று; நீயே தவறுடையை. எங்ஙன மெனில், கண்டோர் விரும்புதற்குக் காரணமான இனியதொரு பொருளை மறைத்து வைப்பதுதானே அதற்குடையோர் கடன்? அங்ஙனமின்றி யாருந் தடையின்றிக் காணுமாறு வைத்தல் தவறன்றோ? இனிமையின் இருப்பிடமான தமிழை ஒளிமறை வின்றி வெள்ளிடை மலை போல் வெளியில் வைத்தது நின் தவறன்றோ?”

"இனிமை யென்றால் என்ன, பொதுப்பட்ட இனிமையா? இவ்வுலகின்கண் உள்ள இனிமைகள் அத்தனையும் ஒருங்கு கூடினால் எவ்வளவு இனிமையாகுமோ அதைவிடப் பன்மடங்கு இனிமையுடைய தமிழை, ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியே சொன்னாலின்பம், தொடைபடத் தொடர்ந்தா லொரு தனி யின்பம், மேலாகப் பார்த்தாலே ஒருவகையின்பம், நுணுகிப் பார்த்தால் நனிமிகு இன்பம், நினைக்குந் தோறும் நெஞ்சுக் கின்பம் - இங்ஙனம் அனைத்தும் இன்பமயமான தமிழைத் தனியே விட்டு வைத்தது நின் தவறுதானே?

“இல்லை, நான் செய்ததே தவறெனில், அத்தவற்றைப் பொறுத்தருள்க”எனத் தமிழ்நில மடந்தையைத் தன் திரைக் கைகளால் தொட்டுத் தொட்டு வணங்கிற்று. அவ்வணக்கமும் கூற்றும் உண்மையானவையல்ல; உள்ளொன்று வைத்துப் புற மொன்று கூறுதலாகும் என்பதை, கரையைக் கரைக்கும் அதன் அலையின் செயல் காட்டிற்று.

அது போழ்து, கடலினின்று கரையை நோக்கி ஒரு படகு வந்தது. அப்படகிலிருந்து சிலர் இறங்கினர். அவர்கள் கடலி லிருந்து பைகளில் கொண்டு வந்த முத்துச் சிப்பிகளைக் கரையில் குவித்தனர். சிப்பிகளிலிருந்து ஒளிவெண் முத்துக் களைக் கண்டு களித்தனர்; உழைப்பின் பயனைக் கைம்மேற் பெற்றால் களிக்கா மலா இருப்பர்?

இவர்கள் களிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். அம்முத்துக் களுக்கு உரிமையுடையதான கருங்கடல் உள்ளும் புறமும் களித்தது. அக்களிப்பு அதற்குக் கரை புரண்டது. களிப்பு மிகுதி யால் அக்கடல்,

“செந்தமிழ் நிலச் செல்வியே! நான் அன்று தமிழுண்டது தவறென்றே வைத்துக்கொள். இதோ, விலை மதிப்பில்லா ஒளிவெண் முத்துக்கள். அதற்கீடாக இவற்றை எடுத்துக் கொள். நின் தமிழ் என்னிடமுள்ள எத்தனையோ தீவுகளில் உண்டு. ஆனால், உன்னிடம் இத்தகைய முத்தங்கள் இன்றல்ல வா? இனி, என்மேற் குறை கூறுதல் கூடாது. நான் உண்ட உன் தமிழுக்கு இதை விலையாக வைத்துக் கொள் என்று இறுமாப்புடன் சொன்னது.”

அதுகேட்ட தென்றழிழ் நிலச் செல்வி, கடலின் அறியா மையைக் கண்டு கலகலவெனச் சிரித்து, “புறவுலக அறிவிலாப் பொருதிரைக் கடலே! இவ்வளவுதான் நீ அறிந்தது போலும்! உன் பெயருக் கேற்ற மடமையை உடையையாய் இருக்கின்றனை. அது உன் நீர்மை. நீ மட்டும் என்ன? உன் போன்றார் எத்தனையோ பேர் என்னிடம் அறிவியற் சொற்களில்லை. அன்ன குறை யுடையள் என, எனது பெருமையை அறியாது தங்கள் மனம் போனவாறு, வாய்க்கு வந்தவாறு கூறி வருகின்றனர். அவரைக் குறை கூறுவதில் பயனென்ன? அவர் வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்”என்ற நாலடியார் கூற்று அவர்கட் கென்றே எழுந்தது போலும்! அழகிய கடலே! ‘நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று’ என, வள்ளுவர் நின் அறிவின்மையை நோக்கித்தான் கூறினாரென எண்ணுகிறேன்.

“அறிவின் கரையறியா ஆழ்கடலே! நின்னிடம் சிப்பி ஒன்றில் மட்டும் உள்ள முத்தைக் கொண்டு இவ்வளவு பெருமை கொள்கிறாய்? அதையும் எளிதில் பிறர்க்குக் கொடாத இவறன்மை யுடையையாய்ய இருக்கின்றனை. மேலும், பிறர் பொருளைக் கொள்ளையிடுவோர் இருவகைப் பண்புடையராய் இருக் கின்றனர். தாம் கொள்ளை கொண்ட பொருளை நுகர்ந்து இன்புறுவோர் ஒருவகையினர். தாம் கொண்டதை அப்படியே வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்து இன்புறுவோர் மற்றொரு வகையினர். நீ இரண்டாவது வகையைச் சேர்ந்தவனாக இருக் கின்றனை. இல்லையேல், நீ என்னைப் பார்த்து இவ்வாறு கேட்டிருக்க மாட்டாய்.”

“நேர்மையில்லா நீர்மைக் கடலே! நீ கொள்ளை கொண்ட தமிழ்ப் பாடல்களை ஒரு முறை மேலாகப் படித்துப் பார்த்திருப் பையானாற்கூட என் மனம் புண்படும்படி இவ்வாறு கேட்டிருக்க மாட்டாய். என்னிடம் உள்ள முத்துக்களைப் பேசாத தமிழ் நூலே இல்லை. நீ ஏதாவது ஒரு நூலை ஒரு முறை அப்படித் திருப்பிப் பார்த்திருந்தால் போதும் என் பெருமையை அறிந்திருப்பாய். உனக்குத் தான் அந்நீர்மையில்லையே!”

“பெருக்கத்து வேண்டும் பணிதல் என்னும் வள்ளுவர் வாய்மொழியை அறியா வண் கடலே! நீ சிப்பி ஒன்றில் மட்டும் முத்தினை உடையவனாய் இருக்கின்றாய். என்னிடம் பலவகைப் பொருள்களில் முத்துக்கள் இருக்கின்றன. இது உலகறிந்த உண்மை. அங்ஙனம் இருந்தும் நீ அறியாதது நின் அறியாமைப் பெருக்கை யன்றோ காட்டுகிறது! இதோ, தமிழ் நூல்களிலிருந்தே சில சான்றுகள் தருகிறேன். கருத்துடன் கேள்!”

“சரி, கேட்கிறேன்; கண்ணுங் கருத்துடன் கேட்கிறேன். கேட்டுத் தெரிந்து கொள்ள என் உள்ளம் துடிக்கிறது உணர்வு பொங்குகிறது. நான் அறியாது கூறிய அதனைப் பொருட் படுத்தாது, ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ என்ற வள்ளுவர் வாக்கின்படி பொறுத்தருளி விளக்கமாகக் கூறுக”என்றது கடல்.

“தன் பெருமையை உணராரிடத்துத் தானே தன்னைப் புகழுதல் தற்புகழ்ச்சி என்னும் குற்றம் ஆகாது என்பது இலக்கணம். என் பெருமை யறியாத நின்னிடம் கூறித்தானேயாகவேண்டி யிருக்கிறது? உன் விருப்பப்படியே கூறுகிறேன். வெறும் புகழ்ச்சி யல்ல; தமிழ்ச் சான்றோர்கள் கூறியதையே கூறுகிறேன். இலக்கியச் சான்றுடன் எடுத்துரைக்கின்றேன். அமைதியுடன் கேள்”என்று நிலமென்னும் நல்லாள் கூறலானாள்.

"என்பால் உள்ள முத்துப் பிறக்கும் இடங்களைக் கேட்டால் நீ வியப்புறுவாய். நீ என்ன இவ்வுலகமே வியப்புறும் வியக்கத்தக்க இடங்களிலெல்லாம் முத்துப் பிறக்கிறது என்பதைக் கண்டறிந்து பயன்படுத்தி யுள்ளார்கள் என் அருமைப் பழந்தமிழ் மக்கள். அக் கண்டு பிடிப்புகள், இன்று என்னென்னவோ பொருள்களிலிருந்து என்னென்னவோ பொருள்களைக் கண்டறியும் அறிவியல் வல்லு நரும், ’ஆ! என்று ஆர்வத்துடன் கேட்க அவாவும் அத்தகைய கண்டு பிடிப்புகளாகும்.

"வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற புகழேந்திப் புலவர் கூறுவதைக் கேள். அந்த இரத்தினச் சுருக்கத் தைச் சுருக்கமாகக் கூறுகிறேன் கேள். இருபது இடங்களில் - பொருள்களில் - முத்துப் பிறக்கிறது என்கின்றார் புகழேந்தியார். அவ்விடங்கள் யாவை? என்னென்ன பொருள்களில் பிறக்கின்றன இலங்கொளி முத்தங்கள்?

யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, மாட்டுப்பல், கொக்குத் தலை, பாம்பு, உடும்பு, இப்பி, சங்கு, சலஞ்சலம், மீன் தலை, முதலை, கமுகு, வாழை, மூங்கில், கரும்பு, நெல், தாமரை, கற்பூரம், முகில், பெண்கள் கழுத்து என்னும் இருபது இடங்களில் பிறக்கின்றன இலங்கொளி முத்தங்கள். எதை விட்டது? விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, மரவகை, மக்கள் என்னும் இவ்வுலகின் கண் உள்ள அறுவகை உயிர்ப் பொருளினிடத்தும் பிறக்கின்ற தல்லவா பிறங்கொளி முத்தம்!

"உனக்கு மறதி அதிகமல்லவா? வேண்டுமானால், புகழேந்தி யார் கூறும் இரத்தினச் சுருக்கப் பாட்டையே எழுதிக்கொள்.

“தந்தி வராக மருப்பிப்பி பூகம் தழைகதலி
நந்து சலதஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்
கந்தரம் சாலி கழைகன்னல் ஆவின்பல் கட்செவிகார்
இந்து வுடும்பு கராமுத்த மீனும் இருபதுமே.”

என்பதே அபாட்டு. தந்தி-யானை, வராகம்-பன்றி, மருப்பு-கொம்பு, தந்திமருப்பு, வராகமருப்பு, இப்பி-முத்துச்சிப்பி, பூகம்-கமுகு, கதலி-வாழை; தழைகதலி-தழைத்த கதலி, நந்து-சங்கு, மீன்தலை, கொக்குத்தலை, நனிளம்-தாமரை, மின்னார் கந்தரம்-பெண்கள் கழுத்து. சாலி-நெல். கழை-மூங்கில், கன்னல்-கரும்பு, கட்செவி-பாம்பு, இந்து-கற்பூரம், கராம்-முதலை.

இவற்றுள் இப்பியும், சலஞ்சலமுந்தான் நின்னிடத்தில் உள்ளவை; உனக்குச் சொந்தம். ஏனைப் பதினெட்டும் என்பாலுள் ளவை; எனக்குச் சொந்தம். இப்பியுங்கூட ஆறு குளங்களில் உண்டு. கார் என் மலைகளில் வாழ்வது. என்னைச் சார்ந்து இன்புறவே அது பிறந்தது.

“பார்வளர் முத்தம்”(முல்லைக் - 5:4)
என, நிலத்தில் வளர்ந்த முத்தம் எனச்சிறப்பித்துக் கூறுகின்றார் முல்லைக்கலி யாசிரியர். ‘வளர்முத்தம்’ என்பது, மிகுதியாகக் கிடைக்கும் முத்தம் எனப்பொருள்படும்.

“முத்துவிளை கழனி”(மணி-8:4)
என்கின்றார் மணிமேகலை ஆசிரியர். ஏ! அமைதியில்லா அலைகடலே! இத்தகு சிறப்பு உனக்கேது?

“குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை
வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம்”

(சிலப். 27:243-4)

ஆழமான நீரையுடைய கரையின்கண் உள்ள புன்னை மரத்தின்கண் வலம்புரிச்சங்கு ஈன்ற அழகிய முத்தம் என்கின்றார் இளங்கோவடிகள்.

யானை மருப்பில் முத்துப் பிறக்கிறது என்பதை.

“முத்தார் மருப்பு”(கலி. 40:4)
“பெங்களிற்று முத்துடை வான்கோடு”(முருகு. 304)
“யானை முத்தார் மருப்பு”(குறிஞ். 36)

“யானை முத்துடை மருப்பு”(பதிற். 518)
“முத்துடை மருப்பின் மழகளிறு”(பதிற். 32)
“வைந்நுதி வான்மருப் பொடிய உக்க
தெண்ணீர் ஆலி கடுக்கும் முத்தம்”(அகநா. 282)

எனச் சங்கநூற் சான்றோர்கள் பலர் துணிந்து கூறியுள்ளனர்.

“ஒடியடி மருப்பிணைகள்
சொரிகுருதி முத்தம் நினையோம்”

(குலோத் - பிள்ளைத் - 8)

என, யானையின் கொம்புகள் ஒடிந்தால், அவற்றிலிருந்து ஒழுகும் குருதியோடு முத்துக்களும் சிந்தும் என்பதால், யானைக் கொம்பு களுக்குள் நிறை முத்துக்கள் இருத்தல் பெறப்படும்.

‘எருமைக்கூட்டம் வயலிலுள்ள கரும்பைக் கடித்து மென்று முத்துக்களை உமிழும்’ (நளவெ - 24) என்கின்றார் புகழேந்தியார். இவர் சோழநாட்டி னராதலால், நேரில் கண்டதைக் கவியிலமைத் துள்ளாரெனில் மிகையாகாது அதி வீரராம பாண்டியர், ‘கண்ணுடைக் கரும்பு ஈன்ற வெண் முத்தம் (நைடத 8) என்கின்றார். கரும்பின் கணுக்களில் முத்து விளைகிறது; சர்க்கரை ஒன்று கரும்பு இரட்டைப் பயன் உடையதாகும். கரும்பின் முத்துச் செல்வம் பற்றி ஒரு பழங்கதை.’

மதுரைப்பாண்டியன் அவையில், பொருளீட்டுதற்குச் சிறந்தவழி யாதென்று ஒரு கேள்வி பிறந்தபோது, ஒரு வணிகன் வாணிகம் செய்தல் சிறந்த வழி எனவும், ஒரு வேளாளன் பயிர்த் தொழில் செய்தல் சிறந்த வழி எனவும் பகர்ந்தனர். வழுதி அவ்விருவர்க்கும் சிறிது பொருள் கொடுத்து, இதனைக் கொண்டு நீங்கள் கூறிய வழியில் பெரும்பொருள் ஈட்டுங்கள் என்று கூறி விடுத்தான்.

ஓராண்டு கழிந்தது. பாண்டியன் அவ்விருவர் நிலையை யும் அறிந்து வரும்படி தூதரை அனுப்பினான். தூதுவர் சென்று பார்த்து வந்து, வணிகன் வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி யுள்ளான் என்றும், வேளாளன் செழிப்பான கரும்புத்தோட்டம் செய்திருக்கிறான் என்றும் கூறினர்.

பாண்டியன் நேரில் அறியக் கருதி, முதலில் வணிகனை யழைப்பித்துக் கேட்க, அவன் தனக்குக் கொடுத்த பொருளைப் பதின்மடங்கு பெருக்கியிருப்பதாகச் சொன்னான். பின்னர் வேளாளனை அழைப்பித்துக் கேட்க, அவன் தன் கரும்புத் தோட்டத்தைக் குறித்துக்காட்டி, ‘இது என் பொருளீட்டம்’ என்றான்.

அரசன் ‘இது செழித்த கரும்பாக இருப்பினும், வணிகன் ஈட்டிய பொருளுக்கு இணையாகுமோ?’ என்றான். ‘அவன் பொருள் இதன் விலையில் பத்திலோரு பங்கிற்கும் இணை யாகாது’ என்றான் வேளாளன். இது கேட்ட அரசன் நகைக்க, வேளாளன் தன் தோட்டத்திற்குச் சென்று ஒரு கரும்பை வெட்டி வந்து, அரசன் முன்னிலையில் தரையில் அடித்து முறித்தான். அதன் கணுக்களிலிருந்து முத்துக்கள் தெறித்தன.

அது கண்ட அரசன் வியந்து, ஒவ்வொன்றும் மிக்கவிலை பெறுமென்பதை அறிந்து மகிழ்ந்து, அவ்வேளாளனைப் பாராட்டி, அவனுக்கு, முத்து’ என்றும், அக்கரும்பை யடித்த இடத்திற்கு ‘முத்தடித்த களம்’ என்றும், அந்நாட்டுக்கு ‘முத்து நாடு’ என்றும் பெயர் வைத்து அவ்வேளாளனைச் சிறப்பித்தான் என்பதே அப்பழங்கதை.

“வயல்களில் தவழ்கின்ற சங்குகள் ஈன்ற வெண் முத்தங் களும், கரும்பு உதிர்த்த வெண் முத்தங்களும், தாமரை சொரிந்த வெண் முத்தங்களும் நிலாவினது ஒளிபோல ஒளி வீசுதலினால், அவ்வொளியைத் திங்களின் ஒளியென்று கொண்டு குமுத மலர்கள் மலரும்”(நைட - 8) என்கின்றார் நைடதமுடையார். இதனால் இரவில் மலரும் குமுதம், முத்துக்களின் ஒளியை நிலவொளியென மயங்கிப் பகலில் மலர்வதால், அம் முத்துக்கள் மிக்க ஒளியுடையவை என்பது பெறப்படும்.

“உழவர்கள் அதிகாலையில் எழுந்து வயலுழச் சென் றார்கள். வயலில் சங்குகள் ஈன்ற வெண்முத்தம் குவியல் குவிய லாகக் கிடந்தன. உழவர்கள் அவற்றை எடுத்துக் கரையில் போட்டுவிட்டு உழவோட்டினார்கள். அம்முத்துக் குவியல் களைத் தங்கள் முட்டையென எண்ணி அன்னங்கள் அம்முத்துக் குவியலின்மேற்படுத்து அடைகாத்தன”வென்கின்றார் சேக்கிழார் பிள்ளைத் தமிழாசிரியர். அன்னம் தன் முட்டையென மயங்கும் அவ்வளவு பெரிய முத்துக்கள்!

“இத்தகைய வெண் முத்தங்கள் என்னிடமிருக்க, ஏதோ கொஞ்சம் முத்துடைய நீ முத்துடையே மெனத்தற் பெருமை கொள்ளும் நின் அறியாமையை என்னென்பது! இத்தகைய முத்துக்கள் நின்பால் இருப்பின் நின்னைக் கையால் பிடிக்கவா முடியும்?”கரை கடந்த மகிழ்ச்சியால் பொங்கி யெழுந்து குப்புற வீழ்ந்து மண்ணைக் கவ்வுவா யல்லவா?

"யானை மருப்பு, பன்றி மருப்பு முதலிய இடங்களில் முத்துப் பிறக்கிறது என்பதைக் கண்டறிய என் பழந்தமிழ் மக்கள் மேற்கொண்ட முயற்சியை நினைக்கின் எனக்கே மலைப்பாக இருக்கிறது. அரிய பொருள்கள் எங்கு கிடைத்தாலும் அவை அரசனுக்குச் சேர வேண்டியவை என்னும் கெடு பிடிச்சட்டம் அன்றில்லை. அத்தகைய சட்டம் போட்டுத் திருட்டுத் தனத்தை வளர்க்க விரும்பவில்லைப் பழந்தமிழ் அரசர்கள். அன்று நாட்டின் செல்வம் அனைத்தும் நாட்டு மக்களின் செல்வமாக இருந்து வந்தன. அரசன் குடிமக்களின் மூத்தமுதற் குடியாகவே இருந்து வந்தான். எனவே, ஏதாவது ஓர் அரும்பொருள் கிடைத்தால் குடிமக்கள் அதை அரசனுக் கறிவிப்பர். அரசன் அதுபற்றி ஆராய்ச்சி நடத்தி அப்பொருளைப் பெருக்கி நாட்டு மக்களின் நலனுக்குப் பயன்படுத்துவான். இவ்வாறு கண்டுபிடிக்கப் பட்ட வையே முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், புட்பராகம், நீலம், வைரம், வைடூரியம் என்னும் ஒன்பான் மணிகளும்.

"உனக்குத் தெரியாதது போலவே, பெரும்பான்மை யான மக்களுக்கு என்பால் முத்துப் பிறக்கிறது என்பது தெரியாது. எல்லோரும் முத்துக்களஞ்சியம் நீதான் என்று எண்ணிக் கொண்டி ருக்கின்றனர் இன்னும். எனது முன்மக்கள் போல் என்பால் பிறக்கும் அரும் பொருள்களை ஆராய்ந்து காணுதல் இன்றையத் தமிழ் மக்களின் கடமையாகும்.

இனி, ஒரு பொருள் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தா விட்டால் அப்பொருள் மதிப்புப் பெறுவ தில்லை. அங்ஙனமே நமது அரும்பேறான முத்தைப் பலவகையிலும் பயன்படுத்தி அதற்குப் பெருமை தேடித் தந்தவள் நானே. முத்துப் பயிலாமல் எந்த ஓர் அணிகலனும் அன்று செய்வதில்லை. முத்தில்லையேல் எந்த அணியும் முற்றுப்பெறுவ தில்லை எனலாம்.

இனி, அணிகலன்களில் சிறந்தது முத்தாரமேயாகும். ஆரம் என்பதே முத்தின் பெயர்களிலொன்று. ஆரம் மாலை, முன்பு முத்துக்கள் பெரிதும் மாலையாகவே பயன்படுத்தப் பட்டு வந்தன. அதனாலேயே முத்துக்கு மாலை எனப் பொருள்படும் ‘ஆரம்’ என்பது பெயராய் அமைந்தது. அல்லது ஆரம் என்பது முத்து, முத்தை மாலையாகவே பயன்படுத்தி வந்ததால், அப்பெயர் பிற மாலைக்கும் வழங்கலாயது எனினு மாம். தானம்-ஸ்தானம்; தலம் - ஸ்தலம்; சலம் - ஜலம் எனத் தமிழ்ச் சொற்கள் பலவற்றை வடமொழிச் சொற்களாக்கி, தமிழ் மக்கள் அவற்றைத் தமிழ்ச் சொல் எனக் கண்டு கொள்ள முடியாமல் செய்ததுபோலவே, வடசொற்களெனவே நம்பியது போலவே, ‘ஆரம்’ என்னும் தமிழ்ச் சொல்லையும் ‘ஹாரம்’ என வடசொல்லாக்கி விட்டனர். வடசொற்களைத் தமிழில் தற்பவம் ஆக்குவதுபோல் - தமிழ் ஒலிக்கேற்ப, லக்ஷ்மணன் - இலக்குமணன் எனத்திரிந்து வழங்குவது போல் - தமிழ்ச் சொற்களை வடமொழியில் தற்பவம் ஆக்கலாம் என்பதை அறியாத தமிழ் மக்கள் அதை வடசொல் எனக் கொள்ள லாயினர்.

“ஆரம் அல்லது மாலையில் பல சரம் அல்லது கோவை இருக்கும். அது வடம் என வழங்கும். வடம் என்றாலே முத்துவடம் என்பதே பொருள். அவ்வடத்திற்குக் காழ் என்னும் பெயரும் உண்டு. காழ் என்றாலும் முத்துவடம், முத்துச்சரம் என்பதே பொருள். சரம் என்றால் முத்துச்சரம், வடம் என்றால் முத்துவடம், கோவை என்றால் முத்துக் கோவை, ஆரம் என்றால் முத்தாரம் என பதைவிட, ‘முத்து’ என்னும் பொருளுண்மை அதன் பயிற்சி யைக் குறிக்கும்.”

"முத்தாரத்தை அன்று ஆண் பெண் இருபாலாரும் அணிந்து வந்தனர். முத்து, பெண்மக்களின் போர்வையாகவே பயன்பட்டு வந்தது. பெண்களின் தலையில் முத்தாரம், முடியில் முத்தாரம், காதில் முத்தாரம், கழுத்தில் முத்தாரம், மார்பில் முத்தாரம், மருங்கில் முத்தாரம், இடையில் முத்தாரம், உடையில் முத்தாரம் என எங்கும் முத்தாரமாகவே இருந்தன.

ஆடையின் கரைகளை முத்தாரம் அணி செய்யும். மார்க்கச்சை முத்தாரம் மறைத்துவிடும். இன்று ஆண்கள் இடையில் கச்சு அணிவதுபோல அன்று பெண்கள் கச்சு அணிந்து வந்தனர். அதன் அறிகுறியே ஒட்டியாணம் என்பது. அது அரையில் அணிவதால் அரைக்கச்சு என வழங்காது, அதன்மேல் வைத்துத்தைத்த முத்தாரத்தின் எண்ணிக்கையின் பெயர் பெற்றே வழங்கிவந்தது.

எண் கோவை அல்லது எட்டு முத்தாரம் வைத்துத்தைத்த அக்கச்சு, ‘எண் கோவை’ எனவே பெயர்பெறும். எண் கோவை - மேகலை எனவும், எழுகோவை - காஞ்சி எனவும், பதினாறு கோவை - கலாபம் எனவும், பதினெட்டுக் கோவை - பருமம் எனவும், முப்பத்திரண்டு கோவை - விரிசிகை எனவும் வழங்கின. உதயணன் மனைவியரில் ஒருத்தி பெயர் விரிசிகை. மணிமேகலை அறிமுகமானவள். காஞ்சி - இருகோவை என்பதும் உண்டு.

“எண்கோவை மேகலை காஞ்சி மெழுகோவை
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு
விரிசிகை யென்றுணரற் பாற்று”

ஒருவர் வந்து ஏதாவது நற்செய்தி சொன்னால், அம் மகிழ்ச்சிக்கு, நன்றிக்கு அறிகுறியாகக் கொடுப்பது முத்தாரமே யெனின், முத்தாரத்தின் பெருமையை மொழியவும் வேண்டு மோ!

"இனி, அரியணை, கொற்றக்குடை, முடி முதலியன அரசமரபுக்குரிய சொந்தாகும். இவற்றை எந்த அரசனும் அழிக்கக்கூடாது. இவ்வாறே அரசன் மார்பிலணியும் முத்தாரமும் வழி வழியாக அரசமரபுக்குரிய சொத்தாகப் பயின்று வந்திருக்கிறது. தம் நாட்டையே கேட்கினும் கொடுத்து விடுவர் அரசர்; ஆனால், முத்தாரத்தை மட்டும் கொடுக்க இயையார்.

அரிச்சந்திரனைப் பொய்யனாக்குதற்காக, கோசிக முனிவன் பல சூழ்ச்சிகள் செய்கிறான். காட்டு விலங்குகளை ஏவிவிட்டு நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுக்கிறான். அரிச்சந்திரன் வேட்டைக்குச் செல்கிறான். அங்கு முனிவன் இருபெண்களை அனுப்பி அவன் முன் நடனமாடச் செய்கிறான். அரசன் மகிழ்ந்து வேண்டியதைக் கேட்கச் சொல்கிறான். அப்பெண்கள் தங்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்கின்றனர் அரிச்சந்திரன் மறுத்து விடுகிறான். இவ்வாறே கொற்றக்குடை முதலியவற்றைக் கேட்டு, முடிவில் முத்தாரத்தைக் கேட்கின்றனர். அரசன், ‘அஃதெனக் குரியதன்று; அது எனது அரசமரபுக் குரியது என மறுத்து விடுகின்றான்’ என அரிசந்திரன் நாடகம் கூறுகிறது.

பல்லுக்கு முத்து உவமை யாவதோடு, பல்லை ‘முத்து’ என உருவகமாகவே கூறுவது வழக்கம். தாய், குழந்தையை வாரி எடுத்து, பற்கள் தோன்ற உவகையைக் காட்டி முத்தம் கொடுக் கின்றாள். சேயும் அவ்வாறே சிரித்து முத்தம் கொடுக்கிறது. முத்தம் என்னும் பல்லின் உருவகப் பெயரே, வாய் முத்தத்திற்கு முத்தம் என்ற பெயர் ஏற்படக் காரணமாயிற்றென்க.

இனி, முத்து என்பது, முத்தையன், முத்தப்பன், முத்தண்ணன், முத்தாய், முத்தம்மாள், முத்தக்காள் என, ஐயன், அப்பன், அண்ணன், ஆய், அம்மாள், அக்காள் என்னும் ஆண் பெண் பெயர்களுடன் முன் மொழியாக வந்து, அப்பெயர்களைச் சிறப்பித்து நிற்கிறது. இப்பெயருடைய ஆண் பெண் இரு பாலாரையும் ‘முத்து’ என்று அழைப்பதே பெருவழக்கு.

வெள்ளைமுத்து, வள்ளிமுத்து, நல்லமுத்து, செல்லமுத்து, பச்சைமுத்து, கெட்டிமுத்து, மருதமுத்து என முத்தின் பெயரே மக்கட் பெயராகப் பயின்று வழங்கிவருதலை அறிக. செல்லமுத்து - செல்வமுத்து. பச்சை - ஈரம், நீர், மருதமுத்து - மருதநிலத்து முத்து.

முத்துப்பிள்ளை, முத்துக்கவுண்டன், முத்து முதலி, முத்துச் செட்டி, முத்துரெட்டி, முத்து நாய்க்கன், முத்து நாயுடு என மக்களின் இயற்பெயராகவே வந்துள்ளது முத்து. இவையெல்லாம் முத்தின் பெருமையையும் சிறப்பையும், பயிலும் பயன் பாட்டையும் குறிக்குமல்லவா?

இத்தகு பெருமையுடைய முத்தாரமுத்தம் பண்டு தமிழ் நாட்டினின்று எகிப்து, உரோம், சாலடியம், கிரேக்கம், அரேபியா முதலிய வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. முத்துவணிகர் என்போர் பெருவணிகர் வகையினராய்த் திகழ்ந்து வந்தனர். தமிழ் நாட்டு முத்துப் புழங்காத நாடே இல்லை யெனலாம். அப்படி ஏராளமாகக் கிடைத்து வந்தது அன்று முத்து; அவ்வாறு ஈட்டப்பட்டு வந்தது. உலகமளிர் எல்லாம் நந்தமிழ் முத்தை விரும்பி வாங்கி யணிந்து அழகுக் கழகு செய்து எழிலுடன் விளங்கினர். எகிப்தின் எழிலரசி எனப்படும் கிளியோ பாத்ரா என்பாள் அழகு மிளிரத் தமிழகத்து விலையுயர்ந்த கட்டாணி முத்துக்களை மதுவில் கரைத்துக் குடித்ததாகவும் கதையுண்டு.

“ஆனால், பிற்காலத்தே தமிழ்நாடு அம்முத்துச் செல் வந்திரட்டும் முயற்சியைக் கைவிட்டது. கொஞ்ச காலமாகச் செயற்கை முத்தார மணிந்து திகழ்வதில் முனைந்துள்ளனர் தமிழ் மக்கள். எனது வளமிக்க முத்துச்செல்வத்தை இழந்தனன் எனினும், இப்பொது நின்பால் இருந்து முத்தெடுத்து வருவதைக் கண்டு ஒருவாறு ஆறுதலடைகிறேன். இனியேனும் என்மக்கள் அச்செல் வந்திரட்டும் முயற்சியில் முனைவார்களாக வாழ்ந்து கெட்டவர் களின் பழைய நிலையை யார் மதிக்கிறார்கள், நீ மதிக்க?”என்று சலிப்புடன் கூறி முடித்தாள் தமிழ் நிலமகள்.

“அன்னாய்! நின்பெருமையை அறியாது அவ்வாறு கூறி விட்டேன். பொறுத்தருள்க. பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் உண்டன்றோ? இது நம் பொய்யா மொழியின் பொருளுரையாகுமன்றோ? மலர் மலர்ந்திருக்கிறது; அதைப் பறித்துச் சூடிப் பயன் பெறாவிடின் அம்மலர்ச்செடி என் செய்யும்? அது அதன் குற்றமன்றே! நம்மிடம் இன்னும் எத்தனையோ அரிய பொருள்கள் உள்ளன. அவை நம்மிடம் இருப்பதனால் நமக்கு யாதொரு பயனும் இல்லை. அதற்காக நாம் வருத்தப் பட்டென் செய்வது? அவற்றைப் பயன்படுத் தினாற்றானே நமக்கும் புகழ், அவர்க்கும் பயன்”என்று கருங்கடலும் வருத்தத் துடன் கூறிற்று.

முத்துச்சிப்பியைக் கொண்டு வந்து கரையில் போட்டு விட்டு இவ்வுரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அப் பாட்டாளிகள், ‘கவலைப்படாதீர்கள். இனி உங்கள் பெருமை யைப் பழையபடி உலகம் அறியும்படி செய்வோம். எமது முன்னோர்கள்போல் அச்செல்வத்தை ஈட்டி இனிது வாழ்வோம்; வாழ்க நம் பெருமை’ என்று முழக்கினர். நிலமும் கடலும் ஒன்றை யொன்று நோக்கியபடி இருந்தன!

ஊழ்


ஒரு பெரிய இடத்துப்பெண். அப்பெண்ணுக்கு ஏற்ற அத்தகு இடத்து மாப்பிள்ளை ஒருவர் இருவர் அல்லர், நாலைந்து பேரிடம் நன்கு பொருத்தம் பார்த்தனர் பஞ்சாங்கப் பொருத்தம் பத்தில் ஐந்து பொருத்தம் இருந்ததால் போது மாம். ஆனால், இம் மணமக்களுக்கோ பத்துக்குப் பத்தும் பழுதில்லாமல் பொருந்தி யிருந்தன. கணவனின் வாழ்நாளை இறுகக்கட்டி வைத்திருக்கும் கயிற்றுப் பொருத்தம் மிகமிக நன்கு பொருந்தியிருந்தது. கேட்ட சாமிகளெல்லாம் நல்ல பூவே கொடுத்தன. பல்லிகளெல்லாம் கேட்டது கேட்டபடி கலகல வென்று சொல்லின. தடம் வழியும் நன்றாகவே இருந்தன.

திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. சடங்குகளெல்லாம் ஒன்றுகூடப் பாக்கி யில்லாமல் குறைவின்றி நடந்தன. பச்சைப் புரோகிதத் திருமணம் சுயமரியாதைத் திருமணமோ, தமிழ்த் திருமணமோ அங்கு தலைகாட்ட வில்லை. மணமகன் எழுந்து மிக்க மகிழ்ச்சியோடு மணமகள் கழுத்தில் தாலி கட்டினான். யாவரும் ‘நீடூழி வாழ்க’ என மனமார வாயார வாழ்த்தினர். வாழ்த்தொலி கேட்டு மணமக்கள் புன் முறுவல் பூத்தனர். அவ்வளவு தான்! மணமகனுக்கு என்னவோ ஒருவித மயக்கம் வந்தது.

ஐந்து நொடிகூட ஆகவில்லை. மணமகன் பிணமகன் ஆனான். அம் மணவீடு இழவு வீடானது. மணப்பறை பிணப் பறையானது. ஆடை யணிகளால் அணி செய்யப்பட்டுச் செம் பொற் பாவைபோல் சிறப்புடன் வீற்றிருந்த மணமகள் கைம்மை யாக்கப் பட்டாள். மஞ்சளும் கலவையும் மணிப் பொற் கலன்களும் மணமலர் மாலையும் வண்ணச்சேலையும் அவளுக்குத் தீண்டப் படாதவையாயின. என்னே பெண் பிறப்பு!

மணமகனின் திடீர்ச் சாவுக்குக் காரணம், மாரடைப் பென்றனர் மருத்துவர். அத்திருமணப் பந்தரில் குழீஇயிருந் தோருள் ஒரு சிலர் ஊழ்வினை யென்றனர்; ஒரு சிலர் ஆண்டவன் கட்டளை என்றனர்; ஒரு சிலர் அவன் செய்த தீவினை யென்றனர்; ஒரு சிலர் இவள் செய்த கருமம் என்றனர்; அக்கைம்மைப் பெண்ணின் பெற்றோர் எங்கள் தலைவிதி என்றனர்; அப்பெண் என் தலையெழுத்து என்றனள். அவர்கள் எல்லோரும் கூறியன ஒன்றே.

‘சாமி, சகுனம், பொருத்தம், சடங்கு, புரோகிதம் எல்லாம் வினைவலியின் முன்னிற்க முடியாமல் புறங்காட்டி யோடின. வினையின் வலியே வலி! இக்கொலைகாரக் கொடுவினையை வெல்லும் வழியும் இல்லையா? இல்லை’ என்பது தான் மக்கள் நம்பிக்கை.

“ஓர் உயிர் முற்பிறப்பிற் செய்த வினையின் பயனை இப்பிறப்பில் நுகர்கிறது. நுகர்ந்தேதான் தீரவேண்டும். அதை மீறும் ஆற்றல் உயிர்க்கு இல்லை. வினையினாலேயே உயிர் பிறப்பெடுக்கிறது. வினையற்றால் உயிர் பிறப்பற்று விடும்; பிறப்பற்று வீடுபெறும். கடவுள் உயிர்களைப் படைக்கும் போதே இவ்விவ்வாறு வாழவேண்டும் என்றே படைத்து விடுகிறார். அவ்வாறே தான் வாழ வேண்டும். செல்வம், வறுமை, நன்மை, தீமை, இன்பம், துன்பம் எல்லாம் வினையின்படியே நிகழ்கின்றன. வினைப்பயனை நுகர்ந்தேதான் ஆகவேண்டும். ஊழ் வினைப் படியே நம் வாழ்வியல் நடைபெறுகிறது. நம்மால் ஆவதொன்று மில்லை”என்பது சமயக்கொள்கை.

சமச் சார்பின்றித் தனித்துவாழ முடியாதென்ற நம்பிக்கை யுடைய மக்கள், அச்சமயக் கொள்கையை அப்படியே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அந்நம்பிக்கையே மக்களிடையுள்ள ஏற்றத்தாழ்வை, வேற்றுமை மனப்பான்மையை, மூடப்பழக்க வழக்கங்களைப் போக்க முடியாமல் தடுத்து வருகிறது.

இந்நம்பிக்கை மக்களுக்குச் செய்யும் கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. ‘ஆணுக்குப் பெண் அடிமை உள்ளோர்க்கு இல்லோர் அடிமை. பிறப்பால் உயர்வு தாழ்வு, எல்லாம் வினைப்படி அமைந்தவை. இவற்றை மாற்ற நினைப்பது தப்பு. கடவுள் கட்டளையை மீறியதாகும்’ என்னும் இந் நம்பிக்கை ஒழியாமல், ‘எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம்’ என்பன வெறும் வாய்ப்பேச்சேயாகும்.

பழந்தமிழ் மக்களிடை இந்நம்பிக்கை யில்லை. இது பிற்காலத்தே உண்டாக்கப் பட்டதே யாகும். வள்ளுவர் கூறும் ‘ஊழ்’ என்பதற்கும். சமயச்சார்பான இவ்வூழ் வினைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை; ஊழ் என்பதனோடு வினை என்பதைச் சேர்த்து, ஊழ் என்னும் சொல்லின் பொருளைக் கெடுத்து விட்டனர் பிற்காலத்தவர்.

ஊழ் என்பது முறைமை, ’உலகியல் நிகழும் முறையை. உலகியலின் இயற்கை நிகழ்ச்சி. அதாவது, மக்களின் எண்ணத் திற்கும் செயலுக்கும் அடங்காமல், அவற்றிற்கு அப்பாற்பட்டு இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி ஊழ் எனப்படும். அவ்வியற்கை நிக;சசி எண்ணத்திற்கும் செயலுக்கும் ஒத்துவருதல் - ஆகூழ் எனப்படும். ஒவ்வாது வருதல் - போகூழ் எனப்படும். அவ்வியற்கை நிகழ்ச்சியின் போக்கில், நாம் எண்ணுவன, செய்வன ஆகும்; அதற் கெதிரிடையாக எண்ணுவனவும் செய்வனவும் ஆகா. இவையே ஊழ் எனப்படும்.

இவ்வியற்கை நிகழ்ச்சியை யறிந்து, அவ்வியற்கை நிகழ்ச்சி யொத்து நம் எண்ணமும் செயலும் ஆனதற்கு மகிழ்வது போலவே, அவ்வியற்கை நிகழ்ச்சி ஒவ்வாது நம் எண்ணமும் செயலும் ஆகாததற்கு வருந்தாமல், இயற்கை நிகழ்ச்சி ஒத்துக் கொள்ள வில்லை என்று அமைதியுற வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து.

ஒருவன் அதிகாலையில் எழுந்து பனம் பழத்திற்காகப் பனந்தோப்பிற்குச் செல்கிறான். பழம் விழுந்து கிடந்தால் எடுத்து வருவான்; பழம் விழாமல் இருந்தாலோ, அல்லது விழுந்திருந்து முன்னமே ஒருவன் வந்து எடுத்துச் சென்றிருந் தாலோ வெறுங்கை யோடு வீடு திரும்புவான். அவன் திரும்பி வரும் போது தொப் பென்று ஒரு பழம் விழுந்தால் ஆவலோடு ஓடி எடுத்துச் செல்வான், பழத்தை எடுத்துக்கொண்டு வரும்போது பனைக்குடையவன் கண்டு பழத்தைப் பிடுங்கிக் கொண்டாலும் கொள்வான் வெறுங்கையோடு செல்வதைக் கண்டு இரங்கி, தானெடுத்து வந்த பழங்களில் ஒன்று கொடுத்தாலும் கொடுப்பான். பனம்பழங் கிடைக் காமல் வரும் வழியில் மாம்பழங் கிடைத்தாலும் கிடைக்கும். மாம்பழம் எடுத்து வரும் போது திருடனென்று பிடிபட்டாலும் பிடிபடுவான். அடியுதை தின்றாலும் தின்பான். நாயோ, பாம்போ கடித்தாலும் கடிக்கும். வழியிலே இறந்தாலும் இறப்பான்.

முன்னாடியே சென்றால் ஊரியில் (மோட்டார்) இடங் கிடைக்கும். காலந்தாழ்த்துச் சென்றால் சீட்டுக் கொடுப்போன் இடம் இல்லை யென்பான். ஒருவன் ஒரு நாள் காலந்தாழ்த்துச் சென்றான். வண்டி போயிருக்குமென்றே சென்றான். ஆனால், தொடர் வண்டியும் அன்று காலந்தாழ்த்து வந்தது, ஏறிக் கொண்டான். மற்றொரு நாள் அவ்வாறே காலந் தாழ்த்துச் சென்றான். வண்டி புறப்பட்டு விட்டது.

ஒரு நாள் சுற்றத்தார் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தனர். பலகாரத்தோடு சமையல் செய்து வைத்துக் கொண்டு எதிர் பார்த்திருந்தனர். ஆனால், சுற்றத்தார் வரவில்லை. காரணம், அவ்வூரில் ஒருவர் திடீரென்று இறந்து விட்டார். இவர்களும் அங்குபோக நேர்ந்தது. மற்றொருநாள் எதிர்பாராமல் சுற்றத்தார் வந்தனர். வீட்டுக்காரர் வேறூர்க்குப் போய் விட்டனர்.

இருவர் ஒரே நாளில் ஒரு வேலைக்கு விண்ணப்பம் போட்டனர். முதலில் எடுத்துப்பார்த்த விண்ணப்பக் காரனுக்கு வேலை கிடைத்து விட்டது. இரண்டாவது எடுத்துப்பார்த்த விண்ணப்பக்காரனுக்கு வேலை கிடைக்க வில்லை.

உலகியல் இங்ஙனம் நிகழும். உலகியலின் இயற்கை நிகழ்ச்சியாகிய இவ்வுண்மையை - ஊழை - அறியாது. எண்ணியது முடிந்தால் மகிழ்வதும் முடியாவிட்டால் வருந்துவதும் அறிவுடைமை ஆகாதென அவ்வூழின் தன்மை கூறுவதே திருக்குறள் 38வது அதிகாரம் இஃதறியார் அதை ஊழ்வினை எனக்கொண்டு தம் மனம் போனவாறு சமயக் கருத்தைப் புகுத்தி அவ்வதிகாரத்தையே இழிவு படுத்தி விட்டனர், அதிகாரப் பொருளையே மாற்றி விட்டனர்.

23-11-55 இரவு சென்னையிற் புறப்பட்ட தூத்துக்குடித் தொடர் வண்டிக்கு வந்து, வண்டி புறப்பட்டதால் வருத்தத் தோடு திரும்பிச் சென்றவரை ஆகூழ் காப்பாற்றியது. அதே வண்டியில் 8-வது பெட்டியில் சென்றவர்களையும் ஆகூழ் காப்பாற்றியது 1-7 பெட்டிகளில் சென்றவர்களில் பெரும் பாலோரைப் போகூழ் கொன்றது. பெண்கள் பெட்டிப் பக்கங் கூட ஆகூழ் - போக வில்லை.

இறந்தவர் அத்தனைபேர் தலையிலுமா அரியலூர்த் தொடர்வண்டி வீழ்ச்சியில் சாக வேண்டும் என்று ஆண்டவன் எழுதியிருந்தான்? இதில் ஆண்டவனுக்கு என்ன நன்மை? திருமால் கோயில்களை வழிபட்டு, மேலும் வழி படச் செல்லும்போது ஆற்றில் விழுந்து சாகவேண்டும் என்றா கோத்தகிரியார் ஐம்பது பேர் தலையிலும் எழுத வேண்டும்? இதுவா கடவுளின் அருட்டன்மை? புகை வண்டித்துரை அதிகாரிகளின், அத்துறை அமைச்சரின் கருத்தின்மையே அக்கேட்டுக்கு - அரியலூர்த் தொடர்வண்டி வீழ்ச்சிக்கு - காரணமாகும். அவ்வண்டியில் ஏறிச்சென்று செத்தவர்க்குப் போகூழ், சாகாதவர்க்கும் ஏறாத வர்க்கும் ஆகூழ்.

பொட்டி ராமுலு உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டு வெற்றி பெற்றார். ஆனால், நம் சங்கரலிங்கனாரோ வெற்றி பெறவில்லை; உயிர் போனதுதான் மிச்சம். காரணம், ஆகூழும் போகூழுமே. ஆந்திரரின் இனப்பற்று ஆகூழ். தமிழரின் இனப் பற்றின்மை போகூழ்.

தமிழ் நாட்டில் பொன்னாடை போர்த்துவதென்பது ஒரு சடங்காகிவிட்டது. ஒரு சிலர் ஒன்றின்மேலொன்றாகப் பல பொன்னாடைகளைப் போர்த்துப் பொலிகின்றனர். இது அன்னாரின் நல்வினையன்று; அதற்கு ஏற்பாடு செய்தோரின் ஆகூழேயாகும்.

நாம் யாருக்காகப் பாடுபடுகின்றோமோ அவர்களே நாம் இறந்த பிறகு நம்மை இழிவுபடுத்துவர் என்பது தெரிந் திருந்தால் ஃச்டாலின் கம்யூனிசத்தைப் பரப்புவதில் அவ்வளவு முயற்சி யெடுத்திருக்க மாட்டார். இது ஃச்டாலின் கொள்கையைக் கடைப்பிடித்த பிறநாட்டுக் கம்யூனிஃச்டுக்களின் போகூழாகும். ஃச்டாலின் உயிரோடிருக்கும் வரை புகழோடு வாழ்ந்ததால் அவர்க்கு அது ஆகூழாகும்.

வழிபாட்டுக் கூட்டத்தின் போது கோட்சே தம்மைச் சுட்டுக் கொன்று விடுவான் என்பது தெரிந்திருந்தால் காந்தி யடிகள் அன்று வழிபாட்டுக் கூட்டத்திற்குப் போயிருக்க மாட்டார். போனது அடிகளின் போகூழ்; கோட்சேயின் ஆகூழ். அவன் எண்ணிச்சென்றது முடிந்த தல்லவா?

அன்று வானூர்தியில் ஏறாதிருந்திருந்தால் இன்று பன்னீர்ச் செல்வம் தமிழர் தலைவராய்த் திகழ்வாரன்றோ? அன்று அவ்வூர்தியில் ஏறியது போகூழ்; அவரது இடத்தைப் பிடித்தவரது ஆகூழே.

இந்தியச் சிற்றரசர்களெல்லாரும் அரசிழந்து வேறொருவர் அதிகாரத்தின் கீழ் இருக்க, மைசூர் மன்னர் மட்டும் அரசிழந்தும் மன்னர்போலவே இருத்தல் அவரது ஆகூழே.

மலையாள நாட்டு அரசியல் கூட்டணியின் ஒரு கட்சி யினரான பட்டம். தாணுப்பிள்ளை முதலமைச்ச ரானது ஆகூழ். அக்கூட்டணியின் மற்றொரு கட்சியான முஃச்லீம் லீக்கர்க்கு ஓர் அமைச்சர் பதவிகூடக் கிடைக்காதது போகூழே.

அரசியல் வட்டாரத்தில் இவ்வாகூழும் போகூழும் அடிக்கடி மோதிக்கொள்ளும். நேற்று அமைச்சராக இருந்தவர் இன்று சட்டமன்ற உறுப்பினராகவும் முடியாமற்போவதும் உண்டு. நேற்று முகவரி தெரியாத ஒருவர் இன்று உயர்ந்த நிலையை அடைதலும் உண்டு. இவையெல்லாம் அந்தந்த நேரத்தில் நிகழும் ஆகூழும் போகூழுமே யாகும்.

இவ்விருவகை ஊழினையும் நன்கு அறிந்து அவற்றிற் கேற்ப நடந்து கொள்பவர்க்கே எண்ணிய எண்ணியாங் கெய்தும். அங்ஙனம் இயற்கை நிகழ்ச்சிக்கேற்ப நடந்து கொள்வோரே அறிவுடையோராவர்.

கட்டுப்பாட்டுக் காலத்தில், கட்டுப்பாட்டதிகாரி களைக் கட்டுப்படுத்தத் தெரிந்த, அன்னாரின் போக்கறிந்து நடந்து கொண்ட வணிகர்கள் பெருஞ்செல்வங் குவித்தனர். அங்ஙனம் நடந்துகொள்ளத் தெரியாதவர்கள் முன்னிருந்த இடத்திலேயே அசையாமல் இருந்தனர் அல்லவா? இவர்களில் யார் அறிவுடை யவர்கள்? ஊழின்படி அறிந்து கொள்ளத் தெரியாமல் அவ்வாறு நடந்து கொள்வோரைக் குறைகூறிப் பயனென்ன? ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகவுள்ள இவ்வறிவு ஒவ்வொரு வருக்கும் கட்டாயம் தேவை. இஃதே உலகத்தோ டொட்ட ஒழுகலென்பது.

இவ்வுண்மை யுணர்ந்து, நமது வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவ்வறிவே காரணமென்பதை அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்ளாமல், ‘நாம் என் செய்வது? நம்மால் ஆவது என்ன? எல்லாம் தலைவிதிப்படியே நடக்கும். நாம் வீண் முயற்சி செய்வதில் பயன் என்ன?’ ‘ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பது பொய்யுரை’ என்று வீண்பேச்சுப் பேசிக்கொண் டிருப்பது பகுத்தறிவுக் கேற்புடைத்தாகாது. இயற்கை நிகழ்ச்சிக்கேற்ப ஒழுகி, எண்ணிய எண்ணியாங் கெய்தி, எடுத்தகாரியம் யாவினும் வெற்றி பெற்று இனிது வாழ்வதே அறிவுடைமை யாகும், இயற்கை நிகழ்ச்சிக் கெதிராகச் சென்று, எடுத்ததிலெல்லாம் தோல்வியுற்று, திருக்குறள் ‘ஊழ்’ என்னும் அதிகாரத்திலுள்ள பத்துக்குறளையும் நன்கு பயின்று, ஊழின் இயல்பை யறிந்து,

“தெய்வத்தா லாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.”

“ஊழையும் உப்பாக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.”

என்னும் வள்ளுவர் வாய்மொழியைத் துணைக் கொண்டு, ஊழை வென்று இனிது வாழ்வதே பகுத்தறிவின் பயனாகும்.

பாட்டியற் பரிசு


‘பரிசில் வாழ்நர்’ என்பது, பழந்தமிழ்ப் புலவர் பெரு மக்களின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இது அன்னாரின் இயற்பெயரின் இடத்தில் பயின்று வந்ததெனல் மிகையாகாது. அவர்தம் வாழ்க்கை முறை அத்தகு நிலையில் அமைந்திருந்தது. ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ எனப் பழமரம் நாடிச் செல்லும் பறவைகள் போலச் செல்வர்கள் உள்ள இடத்தை நாடிச் சென்று பாடிப் பரிசு பெற்று வாழ்ந்து வந்தனர் அப்புலவர் பெருமக்கள். இது புறநானூறு முதலிய சங்க நூல்களிலிருந்து தெரிகிறது.

அப்பழந்தமிழ்ச் சான்றோர்கள் தனக்கென வாழாப் பிறர்க் குரியாளராக, ‘தாம் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்’ என்னும் குறிக்கோளுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தாம் பெற்ற பரிசிலைப்போல் பிறரும் பெற்று வாழ வேண்டும் என்னும் ஒப்புரவுடைய உயர் குணக்குன்றுகளாய் வாழ்ந்து வந்தனர். தாபம் பரிசு பெற்ற செல்வரிடம் மற்ற புலவரையும் அனுப்பிப் பரிசு பெறும் படிச்செய்து வந்தனர். ‘பெற்ற பெரு வளம் பெறாஅர்க் கறிவுறீஇ’ என்பது தொல்காப்பியம். இங்ஙனம் செய்தல் ஆற்றுப்படை எனப்படும்.

ஆற்றுப்படை - ஆற்றுப் படுத்தல், வழிப்படுத்தல். ஆறு - வழி. படை - படுத்தல். அதாவது தாம் பரிசு பெற்ற வள்ளலிடம் புலவரை அனுப்புதல். அது புலவராற்றுப்படை, கூத்தராற்றுப் படை, பொருநராற்றுப் படை, பாணராற்றுப் படை விறலி யாற்றுப்படை என ஐவகைப்படும்.

இவ் வாற்றுப்படைச் செயலொன்றே பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களின் ஒப்புயர்வற்ற உயரிய பண்பாட்டுக்குச் சான்று பகரும். இவ்வாற்றுப் படையின் வகையால் சங்ககாலப் புலவர் பெருமக்களின் வகையும் பெருக்கமும் இனிது விளங்கும். அவர்தம் பரிசில் தொகை. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் சங்க நூல்களிற் பெரும்பான்மைய. அப்பரிசில் வாழ்க்கைக் கொள்கை தந்தவையே சங்கத் தமிழ் நூற் செல்வம் எனல் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலாகும்.

தனக்கென வாழாத் தகவுடையோரான அப்பழந் தமிழ்ச் சான்றோர்கள் தமிழர் வாழ்வே தம் வாழ்வெனும் குறிக் கோளுடன், தமிழ் மொழியை வளர்த்தலே தம் கடமை யெனக் கொண்டு. பாடிப் பரிசு பெற்று வாழ்ந்து வந்தனர். மக்கள் வாழ்க்கையை - வாழ்க்கை முறையை - அகம் புறம் எனப்பகுத்து, இயற்கைப் பொருளின் எழிற்சுவை யூட்டி இனிது பாடித் தமிழ் மக்களை வாழ்வித்துத் தமிழ் வளர்த்து வந்தனர்.

அன்னார் பாடும் பெரும்பாலான பாட்டுக்களில் பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் இராது. அவ்வாறு தம் பெயரை யமைத்துப் பாடும்படி பாட்டுடைத் தலைவர்களும், விரும்பாப் பாட்டுடைத் தலைவர்களாகிய அப்பழந்தமிழ்ச் செல்வர்களும் தம் செல்வத் தைத் தமிழர் வாழ்வுக்கு, தமிழ் வளர்ச்சிக்குச் செலவிடுதலே தமக்குத் தகவென எண்ணுந் தகவுடையோராய் இருந்தமையால், தம் பெயர் வரவேண்டும் என விரும்பவில்லை.

பாடுவோரும் பாடப்படுவோருமாகிய அவ்விருவர் தம் கொள்கைக்கேற்பவே, பாட்டுடைத் தலைவன் இயற் பெயரைப் பாட்டில் அமைத்துப் பாடுதல் மரபன்றெனக் கொண்டிருந்தனர் அக்காலத் தமிழச் சான்றோர். அதிலும், அகப் பொருட் பாட்டுக் களில் பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் சுட்டுதல் அறவே விலக்கப்பட்டது. ‘சுட்டி யொருவர் பெயர் கொளப்பெறாஅர்’ என்பது தொல்காப்பியம் இவ்வுயரிய கொள்கையாற்றான் இறவாத உயிர் நூல்கள் தோன்றின.

கடைச் சங்க காலத்திற்குப் பின்னர் இவ்வுயரிய முறை கைவிடப்பட்டது. பாட்டுடைத் தலைவரின் இயற்பெயர் சுட்டாத பாட்டுக்களே இல்லாமையாயின. தமிழ்ச் செல்வரும் அத்தகு நிலையை அடைந்தனர். பாட்டுடைத் தலைவனைப் பலபட வெளிப்படையாகப் புகழ்ந்து பாடத் தலைப்பட்டனர். இது பற்றித் தோன்றியதே ‘உயர்வு நவிற்சி அணி’ எனலாம். தலைவரும் பாட்டின் பொருளுக் கேற்றவாறு பரிசு கொடுக்கும் வழக்கத்தை விட்டு, புகழ்ச்சிக்குத் தக்க பரிசு கொடுக்கலாயினர். பாட்டின் தரம் அங்ஙனம் மதிக்கப்படலாயிற்று. இதனால், ‘சுட்டி யொருவர் பெயர் கொளப் பெறாஅர்’ என்னும் மரபு கைவிடப்பட்டு பாட்டுடைத் தலைவனது இயற்பெயர் சுட்டி, வெளிப்படை யான சாதற் கவிதைகள் புனையத் தலைப்பட்டனர் பிற்காலப் புலவர்கள். இம்முறையினால் தோன்றியனவே தமிழில் உள்ள தொண்ணூற் றாறு வகைப் பனுவல்கள். பிள்ளைத் தமிழ், கலம்பகம், உலா, மடல், அந்தாதி முதலிய பனுவல்களைப் ‘புகழ் நூல்’ எனல் பொருத்தமான பெயராகும்.

பழந்தமிழ்ச் செய்யுள் மரபினின்றும் மாறுபட்ட இப்புகழ் நூல்களைப் பாடுதற்கு, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக்கணங்களே யன்றி ஒரு புத்திலக்கணமும் படைக்கப் பட்டது. அதுதான் பாட்டியல் என்பது. பாட்டு இயல் - பாட்டுப் பாடும் இலக்கணம். புதிய முறையில் எழுந்து புகழ் நூல்களை இவ்வாறு பாடவேண்டும் எனக் கூறுவதே பாட்டியலாகும்.

தமிழில், வெண்பாப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்கள் உள்ளன. இவை மங்கல முதலிய பத்துப் பொருத்தமும் 96 பனுவல்களின் இலக்கணமும் கூறுகின்றன.

மக்களின் வாழ்க்கை முறையை அகம் புறம் எனப் பகுத்து, இயற்கையின் எழிலோவியமாகச் செய்யுள் செய்து மக்களை வாழ்வித்ததோடு, தமிழ் வளர்த்து வந்த புலவர் மரபு, அம்முறை யைக் கைவிட்டு, கொடுப்போரைப் புகழ்வதையே குறிக் கோளாகக் கொண்டு, நம் முன்னையோர் ஒருவன் ஒருத்தியின் வாழ்க்கைத் துணைக்குக் கொண்ட குடிப்பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, ஆண்டு, உருவம், அன்பு முதலிய பத்துப் பொருத்தங் களையும் விட்டு, அவ்வாழ்க்கைத் துணைவர்களுக்கு யாதொரு தொடர்பும் இல்லாத பத்துப் பொருத்தம் பார்ப்பது போலவே, ஒருவன்மேல் ஒரு நூல் செய்ய அவன் இயற்பெயரைக் கொண்டு, அவன்மேற் பாடும் நூலுக்கும் அவனுக்கும், அன்னார்க்கும் அந்நூற்கும் தொடர்பில்லாத மங்கலம் முதலிய பத்துப் பொருத்தம் பார்த்து நூல் செய்யத் தலைப்பட்டது. பாட்டின் பொருட்குப் பரிசு பெறும் முறை மாறிப் பாட்டியற்குப் பரிசு பெறும் முறை உண்டானது. பாட்டின் கருத்தைக் கூறிப் பாட்டுடைத் தலைவனை மகிழ்வித்துப் பரிசு பெறும் மரபை விட்டு, பாட்டுக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் உள்ள போலிப் பொருத்தத் தைக் கூறிப் பாட்டுடைத் தலைவனை மகிழ்வித்துப் பரிசு பெறும் மரபு தொடங்கியது.

பத்துப் பொருத்தங்களாவன : மங்கலப் பொருத்தம், சொற் பொருத்தம், எழுத்துப் பொருத்தம், தானப் பொருத்தம், பாற் பொருத்தம், உண்டிப் பொருத்தம், வருணப் பொருத்தம், நாட் பொருத்தம், கதிப் பொருத்தம், கணப் பொருத்தம் என்பன. இப்பத்துப் பொருத்தமும் பாட்டுடைத் தலைவனின் இயற் பெயரின் முதலெழுத்திற்கும், பாட்டின் முதற் சீரின் முதலெழுத் திற்கும் பார்க்கப்படும். இப்பத்துப் பொருத்தமும் பொருந்தி
யிருக்கு மாறு நூல் செய்தலே மரபென்கின்றது பாட்டியல். மணமக்களுக்கு இன்று பார்க்கும் பொருந்தாத போலிப் பொருத்தங்கள் போலவே, இவையும் பொருந்தாத போலி எனினும், அம்மணப் பொருத்தத் தை நற் பொருத்த மெனப் பார்ப்பது போலவே, இப்பொருத்தமும் நற்பொருத்த மெனக் கூறுகிறது பாட்டியல் நூல்.

மணப்பொருத்தத்தில் இது நல்லது இது தீயது என்பது போலவே, இப் பொருத்தத்திலும் இது நல்லது இது தீயது என்பது உண்டு. பாட்டுடைத் தலைவன் இயற்பெயரின் முத லெழுத்திற்கும் பாட்டின் முதற்சீரின் முதலெழுத்திற்கும் பார்க்கும் பொருத்தம் நல்லதாக அமையச் செய்யுள் செய்ய வேண்டும்.

சீர் எழுத்து பொன் பூ திரு முதலிய மங்கலச் சொற்களில் ஒன்று முதற் பாட்டின் முதற் சீராக வரப்பாடுவது மங்கலப் பொருத்தமாககும். வகையுளி முதலியன இல்லாத சொல் முதலில் வரப்பாடுவது சொற் பொருத்தமாகும்.

முதற் பாட்டின் முதற்சீர் 3,5,7,9 ஆகிய ஒற்றைப் பட்ட எழுத்துக்காளாக வருதல் எழுத்துப் பொருத்தம் ஆகும். 4,6 என இரட்டைப்பட்ட எழுத்துக்களால் வருவது தீது.

பாலன், குமரன், இராசன், மூப்பு, மரணம் என்பன தானப் பொருத்தம் ஆகும். ‘அ,ஆ’ வும் அவற்றின் உயிர் மெய்யும் பாலன். இவ்வாறே இ,ஈ முதலிய உயிர்களும் அவற்றின் உயிர் மெய்களும் முறையே குமரன், இராசன், மூப்பு, மரணம் முதலிய தானங்களாகும். இவற்றுள் மூப்பும் மரணமும் பாட்டின் முதற்சீரின் முதலெழுத்தாய் வருதல் தீது.

குற்றெழுத் தெல்லாம் ஆண்பால், நெட்டெழுத் தெல்லாம் பெண்பால், ஒற்றும் ஆய்தமும் அலி. அலி யெழுத்து முதலில் நிற்றல் தீது.

உணவு - அமுது, நஞ்சு என இருவகைப்படும். க் ச் த் ந் ப் ம் வ், அ இ உ எ - இவை அமுத எழுத்துக்கள். மற்றவை நஞ் செழுத்துக்கள். நஞ்செழுத்து முதற்சீரின் முதலெழுத்தாக வருதல் தீது.

உயிர் பன்னிரண்டும், க் ங் ச் ஞ் ட் ண் என்னும் மெய்யாறும் - மறையோர் சாதி. த் ந் ப் ம் ய் ர் - இவை அரசர் சாதி. ல் வ் ற் ன் - இவை வணிகர் சாதி. ழ் ள் - இவை சூத்திரர் சாதி. இவை வருணப் பொருத்தம் என வட சொல்லில் அமைந்திருப்பது நோக்கற் பாலது.

பெ, பொ, ரா, ரி - சித்திரை என மக்கட் பெயரின் முதலெழுத் துக்கு நாள் கொள்வது போலவே, அ ஆ இ ஈ நான்கும் கார்த்திகை என இந்நாட் பொருத்தத் திற்கும் நாள் கொள்ளப் படுகிறது. நாள் - நட்சத்திரம்.

கதி - தெய்வகதி, மக்கள் கதி, விலங்குகதி, நரகர் கதி என்பன. கணம் - நீர், தீ, வானம் முதலியன. இப்பத்துப் பொருத்தங் களும் முற்பாட்டின் முதற்சீரில் நன்கு அமையப் பாடின், பாட்டு டைத் தலைவன் செல்வம் பெருகி நீண்ட வாழ்வு பெற்று இனிது இன்புற்று வாழ்வானென்பது நம்பிக்கை.

இங்ஙனமே பத்துப் பொருத்தமும் பழுதற அமையும் மண மக்களும் இவ்வாறேதான் வாழ்வரென்று நம்பப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அது நிகழ்வதில்லை. மணப் பந்தலி லேயே மடிவோர் பலர் உண்டு. பல்லாயிரக் கணக்கான கைம் பெண்கள் இதற்குச் சான்றாவார்கள். கஞ்சிக்கு வழியின்றி வாழும் வாழ்க்கைத் துணைவர்கள் பொருத்தம் பார்க்காமலா மணந்து கொண்டனர்?

பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இவ்விலக்கணம் கூறப்படவில்லை. ஒரு சில தமிழ் எழுத்துக்களை நஞ்செழுத்தென்றும், ஒரு சில எழுத்துக்கள் மரணத்தைத் தரும் எழுத்துக்கள் என்றும் கொண்டதற்குப் பழையதமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை. ‘தெட்டு தற்கோ பணக்காரகத் துரைகளுண்டு’ என்ற பணக்காரத்துரைகளை ஏமாற்றிப் பொருள் பறித்து வாழ்வதற்காகப் பிற்காலப் புலவர்கள் தாமாகப் படைத்துக் கொண்ட படைப்பேயாகும் இப்பாட்டியல். பொருளற்ற இப்போலி முறை தமிழப்புலவர் பட்டப் படிப்பிற்குப் பாடமாக உள்ளது. இப்போலியைப் புலவர் தேர்வுக்குப் பயில்வோர் அடையும் பயன் என்ன? வீணாகப் படித்துத் தெரிந்து ஆவதென்ன? காலக்கேடும் மூளைக் கேடும்தான் பயன்!

இனி, பயனற்ற இப்போலிப் பொருத்தங் கூறுவதோடு அப்பாட்டியல் நின்றுவிடவில்லை. குல வேற்றுமையினையும் தெய்வத் தன்மையினையும் மறை முகமாகப் புகுத்துகிறது.

‘வருணப் பொருத்தம்’ என்பதில் மனுநூலிற் கூறும் நாற்பாற் சாதிக்கும் தமிழ் எழுத்துக்களின் உரிமை கூறும் முகத்தான் சாதி வேற்றுமையைத் தமிழரிடைப் புகுத்துகின்றது. அதாவது, உயிர் பன்னிரண்டும், க் ங் ச் ஞ் ட் ண் என்னும் ஆறு மெய்யும் மறையோர் சாதி. த் ந் ப் ம் ய் ர் இவை அரசர் சாதி. ல் வ் ற் ன் - இவை வணிகர் சாதி. ழ் ள் - இவை சூத்திரர் சாதி.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ ‘ஒன்றே குலம்’ - என்ற தமிழினத்தின் தாய்மொழியாகிய தமிழ் வாயிலாய், ஆரியச் சாதி வேற்றுமை தமிழர்பால் புகுத்தப் படுகிறது. மனு முறைக்கு இங்கு ஆதிக்கம் ஏற்படுத்துகிறது. எழுத்தென்பது ஒலி; மக்களின் உயிர்ப்பொலி. அவ்வொலியுமா சாதி வேற்றுமைச் சுழலிற் பட்டுத் தடுமாற வேண்டும்? நாற் பாலுக்கும் எழுத்துக்களைப் பங்கிடும் பங்கில் எவ்வளவு ஏற்றத்தாழ்வு?

தமிழரிடைப் புகுத்தப்பட்ட சாதி வேற்றுமையை ஒழிக்க எத்தனையோ தமிழ்ச் சான்றோர்கள் அரும்பாடு பட்டுள்ளனர், பட்டென் பயன்? தமிழர் வாழ்க்கையில் மட்டுமா புகுந்துள்ளது சாதி வேற்றுமை? இல்லை. அன்னார் தாய் மொழியில், தாய் மொழி இலக்கணத்தில், செய்யுளியற்று முறையில் புகுந்து நீக்க முடியாத நிலையைப் பெற்றுள்ளது. ‘நால்வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்’ என்னும் கபிலர் மொழி, எத்தகைய பொருள் பொதிந்த பொன்மொழி! உண்மையான உறுதி மொழி!

வட மெழியில் பிராமணர், சத்திரியர், வைசியர் என்பதே இங்கு மறையோர், அரசர், வணிகர் என மெழி பெயர்த்துக் கூறப்படுகிறது. ஆனால், தமிழினத்தின் தலைமை யிடமான, அந்தணர் அரசர் வணிகர் என்னும் வகுப்புகள் தோன்றும் முதலிடமான வேளாண் குடி மக்களை ‘மண்பாவும் சூத்திரர் தாம் மற்றையவை’ எனச் ‘சூத்திரர்’ என அவ் வடமொழிச் சொல்லால், தமிழர் வெறுக்கும் தகாத இழி சொல்லால் சுட்டப்படுகிறது. சூத்திரன் என்னும் சொல் இழி பொருளுடையது. அதனால் தமிழரில் யாரையும் சுட்டக் கூடாது. அவ்வாறு யாராவது ‘சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டெழு’ என்று தமிழ் மக்கள் வெறுத்து வருகின்றனர். ஆனால், அச்சொல் ஈங்கு உரிமையுடன் கூறப்படுகிறது.

வெண்பா மறையோர் சாதி, நிறம் வெண்மை; ஆசிரியப்பா அரசர் சாதி, நிறம் செம்மை; கலிப்பா வணிகர் சாதி, நிறம் பொன்மை; வஞ்சிப்பா சூத்திரர் சாதி, நிறம் கருமை - என நாற்பாச் சாதியுரிமை கூறப்படுவதால், வேண்டு மென்றே ஆரிய வருண வேற்றுமை தமிழரிடைப் புகுத்தப் படுகிறது. எவ்வாறு? பாவுரிமை கூறுமுகத்தான் புகுத்தப் படுகிறது.

மேலும், ‘முதற் குலத்தோர் மூவருக்கும் தொண்டு செய்தல் சூத்திரர் தொழில்’ என மனு நூல் கூறுகிற படியே, ‘பார்திகழ மூவர் பணித்த பணியொழுகல்… காட்டினார் சூத்திரர் தங்கண்’ எனக் கூறுதலால், வேளாளராகிய உயர்குடி மக்களையே ‘சூத்திரர்’ என இழி சொல்லால் கூறப்படுகிறது என்பது வெளிப்படை.

கலம்பகம் தேவர்க்கு 100 பாட்டும், ஐயர்க்கு 95 பாட்டும், அரசர்க்கு 90 பாட்டும், வணிகர்க்கு 50 பாட்டும், சூத்திரர்க்கு 30 பாட்டும் பாடப்படும் என்பதால், ஏற்றத்தாழ் வான ஆரிய வருண வேற்றுமையே பாட்டியலில் கூறப்படும் நாற்பாற் குலவேற்றுமை என்பதில் சிறிதும் ஐயப் பாடில்லை.

‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்’ என வாயாரப் பாடும் தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் நாட்டு ஆள்வோர்கள் இதனை உணரவேண்டும். தமிழ் நூல் வகையின் இலக்கணங் கூறும் ஒரு நூலில் இத்தகைய குல வேற்றுமை நாற்றம் வீசலாமா? இது உடனடியாகக் களையத் தகுந்த தல்லவா? இதைவிட விரைவில் விலக்கத்தக்கதாய் முன்னிற்பவை வேறுயாவுள? இளந்தமிழ் மக்களே எண்ணிப் பார்மின்!

இதோடு நின்றுவிடவில்லை அப்பாட்டியல். தமிழ் எழுத்துக் களெல்லாம் மக்களின் இயல்பான பேச்சொலியாக அமைந்தவை யாகும். அதனாற்றான் தமிழ் மொழி எளிய இனிய மொழியாகத் திகழ்கின்றது. உலக மொழிகளின் முதன் மொழியாய் மிளிர் கின்றது. இங்ஙனமிருக்க,

அரன், அரி, செவ்வாய், புதன், ஞாயிறு, திங்கள், இயமன், வருணன், வியாழன் என்னும் ஒன்பது தேவரும் முறையே இரண்டிரண்டாகப் பதினெட்டு மெய்களையும் படைத்தனர் எனவும், பன்னிரண்டு உயிர்களையும் பிரமன் படைத்தனன் எனவும் கூறுவது வியப்பினும் வியப்பாக வன்றோ உளது?

ஒரு மொழியின் எழுத்துக்கள் அம்மொழி பேசுவோரின் பேச்சு வழக்கிலுள்ள சொற்களின் ஒலிக் கூறுகளின் வடிவங்களே யாகையால், அவை அம்மொழி தோன்றிய போது உடன் தோன்றியவையேயாகும். ஒரு மொழியின் எழுத்துக்கள் ஒருவரால் உண்டாக்கப்படும் இயல்பினவல்ல, தமிழ் எழுத்துகள் முப்பதினையும் அப்பத்துத் தேவரும் ஒன்று கூடிப் பேசி, இன்னார் இன்ன எழுத்துக்களைப் படைப்ப தென முடிவு செய்து ஒருமனப்பட்டுப் பங்கு போட்டுக் கொண்டு படைத்தனர் என்பது வேண்டுமென்றே பொருத்தப் புளுகலாகவன்றோ உளது? பன்னிரண்டு உயிர்களையும் படைத்த, படைத்தற் றொழிலைத் தனது குலத் தொழிலாக உடைய பிரமன், ஏனைப் பதினெட்டு மெய்களையும் படைக் காமல் பிறர் படைக்க விட்டு விட்டதன் காரணம் விளங்கவில்லை. அல்லது பன்னிரண்டு உயிர்களையும் படைத்ததும் களைப்படைந்து விட்டான் போலும்!

இனி, தமிழ் மொழிக்கே சிறப்பாக உடைய, தமிழ் எழுத்துக் களின் பயன்பாட்டுக் கருவியாக உள்ள ஆய்த எழுத்தை எத்தேவரும் படைத்ததாகத் தெரியவில்லை. இது எல்லாம் வல்ல தேவர்கட்கு இழுக்காகுமன்றோ? தமிழ் எழுத்துக்களைப் பத்துத் தேவர்கள் கூடிப் படைத்தனர் என்பது, தமிழ் மொழியின் பெருமையைக் குறைக்கக் கட்டின கட்டுக்கதையே யாகும்.

தமிழை, ‘ஆதிசிவன் பெற்று விட்டான்’ என்பர். தமிழ் எழுத்துக்களைப் பிரான் முதலிய பதினொரு தேவர்கள் படைத்தா ரெனில், ஆதிசிவன் படைத்த தமிழ் என்பது என்ன? எவ்வளவு முரணான கூற்று?

பார்த்தீர்களா பாட்டியலின் பரிசினை? இத்தன்மையுடைய நூல்கள் தமிழ் மொழியில் இருக்கும்வரைத் தமிழினம் எவ்வாறு ஒன்றுபட்டு வாழும்? தமிழர் எங்ஙனம் மானத்தோடு மதிப்போடு வாழ முடியும்? தமிழ்ப் பண் பாட்டுக்கு மாறான இலக்கணம் படிக்கும் தமிழன் எங்ஙனம் தமிழுணர்ச்சி, தமிழினவுணர்ச்சி பெற முடியும்? அவனுக்குத் தனித் தமிழ்ப்பற்று எப்படியுண் டாகும்? தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள் தமிழ் ஆட்சி யாளர்கள் தமிழர்க்கு இழுக்காக உள்ள இதனைப் போக்கித் தமிழினத்தை நல்வாழ்வு வாழச் செய்வார்களாக!

நனி நாகரிகம்


வானவெளியில் விட்டு விட்டொளிறும் உடுக்குலங்களுக் கிடையே இரட்டைவால் முழுமதி ஊர்ந்து செல்வது போல, நகரத்துத் தெருவிடைச் சில கன்னியர், செந்தாமரை மலர் போன்ற முகத்தின்கட் பொற் சுண்ணம்பூசி, மதியிடைத் தோன்றும் மறுவென்னப் பிள்ளைமதி, நுதலில் சாந்துப் பொட்டிட்டு, முகத்தையணுகும் சிற்றுயிர்களை அடித்து விரட்டும் சாட்டைகள் போல இரட்டைச் சடையிட்டு, அவற்றில் தோரணம் போல ஒளிமிக்க நறுமலர்ப் பன்மையைச் சூடி, மின்னலை மறைக்கும் மேகம் புரைய வண்ணப் பட்டாடை யுடுத்துப் பொற்பாவை உயிர்பெற்றுச் செல்வது போல் ஆடி யசைந்து செல்லக் கண்ட நாட்டுப்புற நங்கையர் சிலர்,

“எவ்வளவு நாகரிகம்! என்ன இருந்தாலும் நகரம் நகரந் தான், நாட்டுப்புறம் நாட்டுப் புறந்தான்! உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?”எனத் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பதை அறியாது, அந்நகரத்துப் பெண்மணி களைப் புகழ்ந்து சென்றனர்.

அந்நகரத்து நாகரிக மணிகளோ, “என்ன நாகரிக மற்ற பட்டிக்காடு! உடையையும் நடையையும் பாரு!”என அந் நாட்டுப்புற நல்லியலார்களை இகழ்ந்தவண்ணம் கேலிச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு சென்றனர்.

நாகரிகம் என்பது, காலப்போக்குக் கேற்றவாறு ஆடை யணிகள் அணிவதும், உண்பதும் உறைவதுமேயாம் என்பது ஒரு சாரார் கருத்து, காலத்துக்கேற்ற கருத்து மாற்றமே நாகரிகம் எனப்படும் என்பது மற்றொரு சாரார் கருத்து.

ஒரு காலத்தே நாகரிகம் எனப் போற்றப்பட்டது பின்னொரு காலத்தே நாகரிக மற்றதாகி விடுதல் இயல்பு எனவே, இது தான் சிறந்த நாகரிகம் என நாகரிக நல்வாழ்வை வரையறுத்துக் கூறுதல் இயலாது. காலப்போக்கே நாகரிகத்தின் இயல்பைக் கணித்தறியும் கட்டளைக் கல்லாகும்.

காலில் வீரக்கழலும், கையில் மணிப்பொன் காப்பும், தோளில் வளையும், மார்பில் பதக்கமும் மணிப்பொன் மாலையும் மலர் மாலையும், காதிற் கடுக்கும் முறுகும் ஒரு காலத்தே ஆடவரின் நாகரிகமாக மதிக்கப்பட்டு வந்தன. பின்னொரு காலத்தே முடியும் மீசையும் தாடியும், மற்றொரு காலத்தே குடுமியும் முறுக்கு மீசையும், இன்னொரு காலத்தே குஞ்சியும் மீசையும் நாகரிகச் சின்னங்களாகக் காட்சி யளித்தன. ‘குஞ்சி யழகும்’ என்பது நாலடியார் காலத்து நாகரிகம். இன்றோ குறுங்குஞ்சியும் மழிப்பு முகமும் அல்லா தவை நாகரிக மற்றவை யாகி விட்டன. இன்று குடுமி இகழ்ச்சிக்குரிய ஒன்றாகி விட்டது. ‘மீசை முருக்கழகன்’ என்பது புகழேந்தியார் காலத்து நாகரிகம்.

வேட்டியைக் கோவணம் போட்டுக்கட்டி, தலையில் துண்டால் உருமாலை கட்டிக்கொள்வது ஒரு காலத்து நாகரிகம். அதற்கெனவே நெய்யப்பட்ட மெல்லிய நீண்ட துணியில் உருமாலை கட்டித். தோளில் ஒரு துண்டைப் போட்டுக் கொள்வது முதியோரின் உடை நாகரிகமாகும். இன்று உருமாலை ஊரை விட்டே ஓடிவிட்டது. சட்டையின்றி யிருப்பது இன்று தாழ்வு என்னும் நிலை ஏற்பட்டு விட்ட தல்லவா? இன்னும் உடையில் எத்தனையோ மாற்றம்.

காலை ஒன்பது மணி பழைய சோற்று நேரம் எனப்படும். அக்காலமே இன்று அறியாத பொருளாகி விட்டது. முன்பு ஆடவர் பெண்டிர் ஒவ்வொருவருக்கும் உண்பதற்கு ஒவ்வொரு வெண்கல வட்டில் இருக்கும். ‘போட்டு வைத்தால் உண்பாய் ஒரு வட்டில்’ என்பது பழமொழி. ‘வாலுப்போய்க் கத்தி வந்தது’ என்பது போல, வட்டில்போய் இலை வந்தது; இலைபோய்த் தட்டம் (பிளேட்) வந்தது; இன்று எவர்சில்வர் வட்டில் இறுமாப் புடன் உலவுகிறது.

தமிழ் நூல்கள் மகளிர் காதுக்கு வள்ளை இலையை உவமை கூறுகின்றன. அவ்விலை நீண்ட வளையம் போல் இருக்கும். அக்காலப் பெண்மணிகள் காது குத்தி, பஞ்சு போட்டுக் குதம்பை போட்டுத் துளையைப் பெருக்கி, ஈயக்குணுக்குகள் போட்டுத் தோளைத் தொடும்படி காதுகளை நீளச்செய்து, முடிச்சு, நாக படம், பூச்சிக்கூடு என்னும் நகைகள் அணிந்து வந்தனர். நகைகள் அணிந்த காதுகள் முன்னும் பின்னும் ஆடுவதற்குப் பொன்னூ சலாடுதலை உவமை கூறியுள்ளனர். இலண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ள கண்ணகியின் சிலை ஒன்று அத்தகைய நீண்ட காதுகளையுடையதாக இருப்பதும், இன்றும் மதுரைப்பக்கம் அத்தகைய காதுகளையுடைய மகளிர் இருந்து வருவதும் இதற்குச் சான்றாகும்.

ஆனால், இன்று அது நாகரிக மற்றதாகக் கருதப்படு கிறது. இத்தகைய காதுகைள யுடைய பெண்கள் அக்காது களை வெட்டி ஒட்டவைத்துக் கம்மல் என்னும் காதணியணிந்து, காலத்துக் கேற்றவாறு நாகரிகப் பாதையில் நடந்து வருகின்றனர்.

‘பணங்காசு கூடவா வருகிறது? செத்தா நம்ம கூட வருவது இதுதானே’ என்று பெண்கள் உடம்பில் பச்சை குத்திக்கொள் வதை நாகரிகமாகக் கருதி வந்தனர் முன்பு. செக்கச் செவேலென்ற மேனியை, கை கால்களைப் பச்சைப் பசேலென்று செய்து கொள்வது அழகுக் கழகு செய்யும் நாகரிகமாக மதிக்கப் பட்டது. சரம், வங்கி, குளம், கிளி, மீன், யாளி, சிங்கம், கங்கணம், மோதிரம் என அந்தந்த இடங்களுக் கேற்ற பச்சை குத்தி வந்தனர். எல்லாப் பெண்களும் கட்டாயம் நெற்றிப் பச்சை குத்திக் கொள்வர். இது ஒரு பருவமாகும்.

அன்று தெருக்கூத்து அல்லது நாடகங்களில் பச்சைக் காரி வருதல் ஒரு பாகம். ‘பச்சை குத்தலையா ஆயாலோ பச்சை குத்தலையா’ என்று பாடிக்கொண்டு வருவாள் பச்சைக்காரி. இன்று பச்சை குத்துதல் நாகரிகமற்ற தாகிவிட்டது. பச்சைக்காரர் என்னும் ஓர் இனமக்களே இன்று வேலை யில்லாத் திண்டாட்டத் திற்குள்ளாகி விட்டனர். திருச்சி மாவட்டத்தில் சில இடங்களில் இன்றும் ஆண்கள் நெற்றிப் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.

அன்று மஞ்சள் பூசுதல் மகளிர்க்கு மங்களமாகக் கருதப் பட்டு வந்தது. கைம்மைகள் மங்கல மிழந்ததற்கு அறிகுறியாக மஞ்சட் பூசுவதில்லை. ஆனால், இன்றோ மஞ்சட் பூசுதல் நாகரிகமற்ற தாகி விட்டது. ‘மஞ்சட் அழகும் அழகல்ல’ என்ற நாலடியார் வாக்கை இன்று மகளிர் உண்மையாக்கி விட்டனர். ‘மஞ்சள் பூசும் முகத்தை மறைத்ததே சோப்புக் கற்றை’ என்ற பபூன் சண்முகம் பாடலும் இன்று பழம்பாட லாகி விட்டது.

உண்பதினும் உடுப்பதினும் பூண்பதினும் பூசுவதினும் இன்னும் எத்தனையோ காலத்துக்கேற்ற மாறுபாடுகள்! நாகரிகம் என்பது சகடக்கால்! எப்போதும் ஒரு நிலையாக இராது. சுற்றிக்கொண்டே போவதும் வருவதுமாகவே இருக்கும். இவ்வுண் மையை யறியார், இன்று தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள மேனாட்டு நாகரிகந்தான் நனி நாகரிகம்; இத்தகைய நாகரிக வாழ்வு தமிழ் மக்கள் ஒரு காலத்தும் வாழ்ந்ததில்லை - என வாயும் மனமும் கூசாது கூறுகின்றனர். பழந்தமிழர் வாழ்க்கை முறையை, நாகரிக நல்வாழ்வை, நனி நாகரிகத்தை அறியாது கூறும் அவர்தம் பொய்க்கூற்றை என்னென்பது! பழங்காலத் தமிழ் மகளிர் நாகரிக நல்வாழ்வைப் பாருங்கள். எது போலி நாகரிகம் என்பது வெளிப் படும்.

உடலின் இயற்கை யழகை மிகுதிப் படுத்திக்கொள்வது மகளிரின் தனிப் பண்பாகும். உடலின் இயற்கையழகை, பள பளப்பைக் கெடுப்பது உடலில் விழும் திரைகளே (சுருக்கம்) யாகும். உடலில் திரை விழாமல் உடற்றோல் சுருங்காமல் இருக்கும்படி செய்யத் தெரிந்து கொள்வது நாகரிக நல்வாழ் வாகும். பழந்தமிழ் மகளிர் இதனை நன்கு உணர்ந்திருந்தனர். தோல் முறுக்கமாக இருந்தால் சுருக்கம் விழாது. தோலை முறுக்கியிழுத்துப் பிடிக்கும் ஆற்றல் துவர்ப்புக்கு உண்டு என்பதை, வெற்றிலைபாக்குப் போடும்போது பாக்கின் துவர்ப்பால் அறிந்த அவர்கள், அதை அழகைக் காக்கும் மருந்தாகப் பயன்படுத்த எண்ணி, அவ்வாறே பயன்படுத்தி வந்தனர்.

அவர்கள் குளிக்கும் நீரில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், நாவல், அத்தி, இத்தி, அரசம்பட்டை, முத்தக்காசு, மாந்தளிர் என்னும் பத்துத் துவரை ஊறவைத்து, ஊறிய அந்நன்னீரில் முழுகிக் கொஞ்சநேரம் இருந்து பின்னர் நீராடுவர். ஆனால், அன்னார்தோல் முறுக்கேறி மேனி மினுமினுப்பாகத் திகழும்.

இப்பத்துத் துவரையும் ஒரு தொட்டியில் இரவிலேயே ஊறவைத்து, ஊறிய அந்நீரில் காலையில் முழுகிச் சற்றிருந்து பின் நன்னீரில் குளிப்பர்.

அவர்கள் அஃதோடு அமைய வில்லை. மேனி மினுமினுப் பாக இருந்தால் மட்டும் போதுமா? கெட்ட நாற்றமின்றி உடல் நறுமணங் கமழ வேண்டாமா? அதற்காக அத்துவர் நீரில், அதாவது அப்பத்துத் துவருடன் ஐந்து விரையும், முப்பத்திரண்டு ஓமாலிகையும் கலந்து ஊறவைப்பர். அந்நாற்பத் தேழு பொருள் களும் ஊறிய நீரில் முழுகிப் பின் நன்னீரில் குளித்து வந்தனர்.

“பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை ஓமா லிகையினும்
ஊறிய நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி”

(சிலப். 6:76-9)

என்பது இளங்கோவடிகள் வாக்கு. விரை-மணம் ஓமாலிகை நறுமணம். வாசநெய்-நறுநெய்-வாசனைத் தைலம். இவ்வாறு முழுகி நீராடும் போது, கூந்தலுக்கு வாசனைத் தைலம் தேய்த்துக் குளிப்பர்.

ஐந்து விரை-இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பன.

கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்பன ஐந்து விரை எனவுங் கூறப்படும்.

முப்பத்திரண்டு ஓமாலிகையாவன : இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கொட்டம், நாகம், அதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வேரி, இலாமிச்சம், காண்டில் வெண் ணெய், கடு, நெல்லி. தான்றி, துத்தம், வண்ணக் கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சமலேகம், புனுகு, புன்னைத்தாது, புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி என்பன,

அடேயப்பா! எத்தகைய மேனிமினுக்கு! இவ்வாறு ஊறிய நீரில் முழுகிப் பின் நீராடும்போது, நறுமணக் கலவையைத் தேய்த்து நீராடுவர் என்பது.

“விதியாற்றான் ஆக்கிய மெய்க்கலவை போல” (பரி. 7-20)

என்னும் பரிபாடலால் தெரிகிறது. இதனாற்றான் அக்கால மகளிர் மேனி மினுமினுப்பாக இருந்ததோடு, நறுமணம் உடையதாகவும் இருந்து வந்தது போலும்.

“யோசனை கமழும் வாச மேனியர்”(பரி. 12:25)
“முறிமேனி முத்தமுனுவல் வெறிநாற்ம்”(குறள்)

வெறிநாற்றம் - நறுமணம், இதனாற்றன் ‘மகளிர் கூந்தல் மணம் இயற்கையன்று, செயற்கையே’ எனக் ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகைச் செய்யுட்கு நக்கீரர் குற்றங் கூறியதாகும்.

மேனாட்டு மகளிர்தாம் அழகுக் கலையில் தேர்ச்சி பெற்றவர், அவர்களைக் கண்டு நடக்கும் போலி நாகரிகந் தான் தமிழர் நாகரிகம் என்பதெல்லாம் அறியாக் கூற்றென்பது மேல் எடுத்துக் காட்டிய வற்றால் விளங்குகிற தல்லவா? தங்கள் முன்னோரின் அத்தகைய நனி நாகரிக நிலையை அறியும் நிலையில்-அறிந்து இன்புறும் நிலையில்-இன்றையத் தமிழ் மகளிரிற் பெரும்பாலோர் இல்லை என்பது தான் வருந்தத்தக்கதாகும்.

இத்துடன் நின்றனரா அன்னார்? தைலந்தேய்த்துக் குளித்த கூந்தல் மென்மையடைந்து விடுமல்லவா? கூந்தல் பருத்து மொறுமொறென்றிருக்க வேண்டுமல்லவா? அதற்காகக் கூந்தலுக்கு அகிற்புகை யூட்டுவர். அகிற்புகையால் கூந்தல் மொறுமொறுப் பாவதோடு, நறுமணமும் கமழும்.

மகளிர் மாடியிலிருந்து கூந்தலுக்கு ஊட்டும் அகிற் புகை வானை நோக்கிச் சென்று முகிலோடு கலப்பதால் மழை பெய்யும் போதெல்லாம் அகில் மணக்கும் என்கின்றார் புகழேந்தியார். இது கற்பனை யெனினும், உண்மைச் செய்தியே யாகும். குழலுக்கு அகிற்புகை யூட்டுதலை மகளிர் அவ்வளவு சிறப்பாகக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுதற்கே புகழேந்தியார் இங்ஙனம் கூறினார். இதோ அந்தப் பாட்டு.

“நின்று புயல்வான் பொழிந்த நெடுந்தாரை
என்று மகிழ்கமழு மென்பரால் - தென்றல்
அலர்த்துங் கொடிமாடத் தாயிழையா ரைம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து” (நளவெண்பா)

அவர்கள் இத்துடன் அமையவில்லை. மேலும் நறு மணத்தை விரும்பினர். அதற்காக அகிற்புற்புகை யூட்டியபின் கத்தூரிக் குழப்பினைத் தடவுவர்.

“புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி”

(மலர் - 6:80-1)

மான்மதச்சேறு - கத்தூரிக் குழம்பு. இது சவ்வாதும் கலந்ததாகும். இப்போது விளங்குகிறது அல்லவா நக்கீரர் சாட்டிய குற்றம் குற்றமே என்பது?

இன்று பெண்கள் இரட்டைக் சடை போடுதல் மேனாட்டு நாகரிகம் எனப்படுகிறது. ஆனால், பழந்தமிழ் மகளிர் தம் தலைமயிரை ஐந்து வகையாக முடித்து அழகுற விளங்கி வந்தனர் என்பது, ஐம்பால் என்னும் மகளிர் கூந்தலின் பெயரால் விளங்கும். அவை கொண்டை, குழல், முடி, சுருள், பனிச்சை என்பன. கொண்டை - மயிரை முடிந்து ஒரு பக்கமாக செருகிக் கொள்ளுதல். குழல்-நுனியில் முடிந்து தொங்க விடுதல். முடி-பிடரிக்குப்பக்கம் முடிதல். சுருள்-இரண்டாக அள்ளச் செருகுதல். பனிச்சை-சடை.

இனி, இன்று இதழுக்குக் செஞ்சாயம் பூசுவது மேனாட்டு நாகரிகப் போலியாகக் கருதப்படுகிறது. இல்லை, அதுதான் போலி; அதுவும் தமிழர் நாகரிகத்தின் போலி. பழந்தமிழ் மகளிர், இதழுக்கும் கைகால் நகங்கட்கும் உள்ளங் கைக்கும் செஞ்சாயம் பூசித் திகழ்ந்தனர். இது பஞ்சில் தோய்த்துத் தடவி வந்ததால் செம்பஞ்சு, செம்பஞ்சுக் குழம்பு என வழங்கியது. இச்செம்பஞ்சுக் குழம்பு மருதோன்றியிலையுடன் நறுமணப் பொருள்கள் கலந்து செய்யப்பட்டது. இதனால் நோயணுகா தென்பதும் அறியத் தக்கது.

“உகிரும் கொடிறும் உண்டசெம் பஞ்சியும்”(பரிபா. 6:17)

உகிர்நகம். கொடிறு-கன்னம். இதழ் நகங்கட்கேயன்றிக் கன்னத்திற்கும் செம்பஞ்சுக் குழம்பு பூசி அழகுடன் விளங் கினர் அக்காலத் தமிழ் மகளிர். செம்பஞ்சு பூசிய இதழுக்குப் பவழத்தை யும் கோவைப் பழத்தையும், நகத்திற்குக் கிளி மூக்கையும் பவழத்துண்டையும், உள்ளங்கைக்குச் செங் காந்தட் பூவையும் உவமை கூறிச் சிறப்பித்தனர் புலவர் பெருமக்கள்.

“அலத்தகம் ஊட்டிய அஞ்செஞ் சீறடி”(சிலப்-6:83)

என்பதால், அடிக்கும் செம்பஞ்சு பூசித் திகழ்ந்தமை விளங்கும். அலத்தகம்-செம்பஞ்சு.

இன்று மகளிர் பூசும் முகப்பூச்சுத் தமிழர் நாகரிகமே யன்றி மேனாட்டினர் போலியன்று. அது சுண்ணம் அல்லது பூசுசுண்ணம் எனப்படும். பொற்சுண்ணம் என்பதும் உண்டு. அது “வண்ணமும் சுண்ணமும்”(சில. 5:13) என்னும் சிலப்பதிகாரத்தால் விளங்கும். சுண்ணம் பூசிய முகத்திற்கு முழுமதி உவமை கூறப்பட்டது. முகத்தின் வட்ட வடிவத்திற்கு வட்டமதியும், சுண்ணத்திற்கு மதியின் நிலவும் உவமை. மணிவாசகர், திருவாசகத்தில், பொற் சுண்ணம் என்னும் உறுப்பொன்றே அமைத்துள்ளார். அது மகளிர் பொற் சுண்ணம் இடித்துக் கொண்டு பாடுவது போல் பாடப் பட்டதாகும்.

இனி, மேனாட்டினர் அறியாத தொன்றைப் பழந்தமிழர் அறிந்திருந்தது அறிந்தின்புறற் பாலதாகும். அதுதான் தொய்யில் என்னும் தோட்கோலமாகும். அதாவது, மகளிர் தம் தோளிலும் மார்பிலும் குங்கும சந்தனக் குழம்பினால் மலர்க்கொடிகள், கரும்பு முதலிய பலவகைக் கோலங்கள் எழுதிக் கொள்வர். பெரும் பாலும் கொடிகளாக எழுதுவதால் இது தொய்யிற்கொடி எனப்படும். இது ‘வள்ளி’ எனவும் வழங்கும். வள்ளி-கொடி.

“கரும்பின் அணை மென் றாள்”(பரி. 7:55)

தொய்யிற் கரும்பினை யுடைய அணைபோலும் மென் றோன்.

“வண்டே இழையே வள்ளி என்றா”(தொல்-களவு 4)

வள்ளி-தோளி லெழுதுந் தொய்யிற் கொடி (நச்சி).

இனி, இத்தொய்யில் எழுதுவதில் மகளிரேயன்றி ஆடவரும் பயிற்சி யுடையவராக இருந்து வந்தனர் என்பது வியப்பிற் குரிய செய்தியாகும். தலைவன் தலைவிக்குத் தொய்யி லெழுதியின் பூட்டும் வழக்கம் தொல்காப்பியர் காலத்தே உண்டென்பது ‘அணிநிலையுரைத்தல்’ (கற் 27) என்பதனால் தெரிகிறது. அணி நிலை உரைத்தல் என்பது, தலைவிக்குத் தொய்யி லெழுதும் வகையினைக் கூத்தர் தலைவற்குக் கூறுதல். இது எத்தகு நனி நாகரிகம்!

அழகுக் கலைகளே நாகரிகத்தின் உறுப்புக்களாகும். அழகுக்கலைகளில் பழந்தமிழ் மக்கள் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கினர்.

நாகரிகம் என்பது சகடக்கால் போன்றது. ஒரு பத்தாண்டு களில் பெண்கள் அணியும் மார்க்கச்சின் வரலாற்றை நோக்கின் இது இனிது விளங்கும். அது மங்கையர் தோளைப் படுத்தியபாடு - படுத்துகிறபாடு கொஞ்ச நஞ்ச மல்ல. ஆயிர முறை மேலேறியும் கீழிறங்கியும் தோளையே தேய்த்து விட்டதல்லவா? அது பாவையர் தோளைப் பனைமரம் என்று நினைத்து விட்டது போலும்! இப்போது முழங்கையை மூடியிருக்கிறது; இனி என் செய்யுமோ!

தமிழர் நாகரிகத்தை உலகம் அறியும்படி செய்வதே தமிழர் முன்னேற்றத் தொண்டாகும். அத்தொண்டை மேற்கொள்வது தமிழறிஞர்கள் கடப்பாடாகும். வாழ்க தமிழர் நாகரிகம்!

முன்னுக்குப் பின்


“காய மேயிது பொய்யடா
காற்ற டைத்த பையடா
மாய னான குயவன் செய்த
மண்ணுப் பாண்டம் ஓடடா”

"தாயே! இரண்டு நாளாச்சுக் கஞ்சி குடிச்சு, பசி பொறுக்க முடியவில்லை தாயே! கஞ்சிக் களைப்புக் காதை அடைக்குது அம்மா! கொஞ்சம் பழசு கிழசு இருந்தாப் போடுங்க தாயே!

"ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும் சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே!

"அம்மா தாயே! இந்தப் பச்சக் குழந்தை பசி பொறுக்க மாட்டாமே பறவாப் பறக்குது தாயே! கொஞ்சம் கஞ்சி கிஞ்சி இருந்தா ஊத்துங்க அம்மா தாயே! அட பகவானே! இந்தத் தெருவிலே ஒருத்தருக்குக் கூட மனமிரக்க மில்லையா!

“மூணுகாசு தாங் குடுங்களே! அம்மா! அணாவுக்குச் சில்லறை வேணு மின்னாலும் நான் தாரேன் தாயே.”இது இரப்போன் இரப்புரை. உடம்பு பொய்யென்கிறான், உடனே உடம்பை மெய்யென்று அதைக் காப்பாற்றச் சோறு கேட்கிறான். பிள்ளை சதமல்ல என்கிறான். பின் பிள்ளைக்குக் கஞ்சி கேட்கிறான். செல்வம் சதமல்ல என்கிறான். பின் காசு கேட்கிறான்; தன்னிடம் காசு இருப்பதாகவும் கூறுகிறான்.

இவன் பேச்சு முன்னுக்குப் பின் முரணாகவன்றோ இருக்கிறது? எதற்காக, ஏன் அவன் இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறான்? வயிறு வளர்ப்பதற்காக, உண்டு உயிர் வாழ்வதற்காக அவன் அவ்வாறு பேசுகிறான். எப்படியாவது பேசி வாங்கியுண்டு வாழ்வதுதான் அவன் தொழில்.

அவன் பாடிய பாட்டின் பொருள் அவனுக்குத் தெரியாது. அவன் கல்வியறிவில்லாதவன். யாரோ பாடக்கேட்டு மனப் பாடம் பண்ணிக் கொண்டு அவன் பாடுகிறான். பாடிய பாட்டின் பொருளை அறிந்து அவன் பேசவில்லை. அறியாது அவன் அப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறான். எப்படியாவது தன் பாட்டைக் கேட்டு மகிழ்ந்து ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதுதான் அவன் குறிக்கோள். அதற் காகத்தான் அவன் பொருள் தெரியாது தெரிந்தவன்போல் பாடுகிறான்.

இவ்விரவலன் வாங்கியுண்டு வாழ்வதற்காக முன் பாடிய பாட்டின் பொருளை யறியாது முன்னுக்குப் பின் முரணாகவே பேசுகிறான். ஆனால், அறிந்தே வாழ்வின் பொருட்டு இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவோரும் பலருண்டு.

ஒருவர் தான் வாழ முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது பற்றி யாரும் அவ்வளவாக அக்கறை எடுத்துக்கொள்வ தில்லை. ஆனால், பிறர் வாழ்வைக் கெடுக்க அவ்வாறு பேசுவது பற்றித் தான் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இனி, இவ்வாறு பேசுவதோடு மட்டும் நில்லாமல், முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதும், எழுதிப் பிறர் வாழ்வைக் கெடுப்ப தையுமே தம் கடமையாகக் கொண்டுடாடும் மக்களும் பலருண்டு. இத்தகையோர் ‘பரீஇ உயிர் செகுக்கும் பாம்பினும்’ கொடிய ராவர். பாம்பொடு இயல்பாகவே மக்கள் பகை பாராட்டு வதற்குக் காரணம் அதன் நச்சுத்தன்மை தானே! “நல்லோரின் அவை புக்க நாகமும் சாகா”என்பது, நல்லோரின் சிறப்பினை மிகுவிக்க எழுந்ததே யாகும். பாம்பைக் கண்டால், ‘பாவம் பிழைத்துப் போகட்டும். அதுவும் நம்மைப்போல் ஓருயிர் தானே!’ என்று இரக்கத்தோடு கூறும் நல்லோர் உலகில் எத்தனை பேர்? பாம்பனைய ஒரு சிலரால் மக்களிடை இனப்பகை ஏற்பட லாயிற்று.

உலக மக்களின் நாகரிகங்களுக்கெல்லாம் முதலாக வுள்ளது தமிழர் நாகரிகம். உலகில் உள்ள பல நாட்டு மக்களும், பல இன மக்களும் நாகரிகம் இன்னவென்றே கனவு கூடக் கண்டிராத அக்காலத்தே நாகரிக நல்வாழ்வு வாழ்ந்து வந்தவர் தமிழ் மக்கள். அத்தகு நனி நாகரிக நல்வாழ்வைக்கண்டு பொறாமை கொண்ட அயலார், தங்களைவிடத் தமிழ் மக்கள் அத்தகு மேம்பட்ட நிலையில் வாழ்வதா என்று மனம்பொறாத தமிழினப் பகைவர்கள், எப்படியாவது தமிழினத்தைத் தாழ்வுறச் செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தால், நல்ல பாலில் நச்சு நீரைக் கலந்து பாலின் அந்நல்லியல்பைப் போக்குவது போல, தமிழர் நாகரிகத்திடை தாழ்ந்த நச்சுத் தன்மையைக் கலந்து, அதன் தூய்மையைக் கெடுக்க, பிற்காலத்தமிழர் தங்கள் முன்னோர் நாகரிக நல்வாழ்வுச் சிறப்பினை அறிந்து கொள்ள முடியாமல் செய்யப்பண்டு தொட்டு இன்றளவும் இடைவிடாது முயன்று வருகின்றனர். அம்முயற்சியில் ஒருவாறு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஓரின மக்களின் நாகரிக நல்வாழ்வின் அடிப்படை யாக உள்ளது அம்மக்கள் பேசும் மொழியே. ஒரு மொழியின் உயர்வு தாழ்வுக்குத் தக்கபடியே அம்மொழி பேசும் மக்களின் உயர்வு தாழ்வும் அமைந்திருக்கும். தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச் செல்வங்களே தமிழ் மக்களின் உயர்வுக்குக் காரணங்களாக உள்ளன. பழந்தமிழ் நூல்கள் தாமே தமிழ் மக்களின் பழம் பெருநாகரிக நல்வாழ்வினைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. தொல்காப்பியத்தை, திருக்குறளை, புறநானூற்றைக் காட்டித் தானே தமிழ் மக்கள், ‘தமிழினம் தனியினம்’ என்று அயலாரிடம் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து கூறிக்கொள்கின்றனர். எனவே, தமிழ் இலக்கிய இலக்கண வாயிலாய்த் தங்கள் அழிவு வேலை யைக் கையாண்டு வருகின்றனர், தமிழினப் பகைவர்கள்.

தொன்று தொட்டே அயலார் செய்யும் இவ்வழிவு வேலையை, ‘உடன் பிறந்தே கொல்லும் நோய் போலத்’ தமிழ் மொழித் தொண்டு செய்வது போலத் தமிழர் நாகரிக நல்வாழ்வை, தமிழினத்தின் தனிச் சிறப்பைக் கெடுத்து வரும் அவ்விழி செயலைத் தமிழ் மக்கள் தடுத்துத்தான் வந்துள்ளார்கள். ஆனால், களையை வேரோடு பிடுங்கி எறியாமல் மேலாகக் கிள்ளி யெறிவதுபோன்ற எதிர்ப்பால் அவ்வயற்களை அடியோடொழிய வில்லை. காலக் கடப்பில் அவையும் தமிழர் நாகரிகம் என்னும் நிலையை அடைந்துவிட்டன. தமிழர் நாகரிகத்தோடு மாறு பட்ட, முன்னுக்குப் பின் முரணான ஒரு சிலவற்றைக் காண்பாம்.

தமிழ் மக்களின் வாழ்க்கை முறையினைத் தொகுத்தும் வகுத்தும் சுவைபடக் கூறுவது தொல்காப்பியம். தொல் காப்பியந் தான் தமிழினத்தின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாக உள்ளது. அது எழுத்துச் சொற்பொருள் யாப்பணி என்னும் தமிழ் இலக்கணத்தைத் தகவுறக் கூறுகின்றது. இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையை யுடையது தொல்காப்பியம் இத்தகு பழங்காலத்தே இத்தகைய இலக்கணப் பெருநூலைக் கொண்டிருந்த மொழி உலகில் வேறொன்றும் இல்லையாகும்.

தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்கள் எனப்படும் பேராசிரியர், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க் கினியர் முதலியோர் கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருந்தவ ராவர். இவர்கள் வேண்டுமென்றே ஆசிரியர் கருத்துக்கு மாறான கருத்துக்களை வலிந்து புகுத்தித் தொல்காப்பியத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டனர். முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் பலவற்றைப் புகுத்தித் தமிழினத்தின் தனிப்பெருமையைத் தாழ்த்தி விட்டனர். மாசிலாமணியாகிய தொல்காப்பியம் அன்னார் உரையால் மாசு படிந்து கிடக்கிறது. பரிமேலழகர் திருக் குறளைக் கெடுத்தது போல், வள்ளுவர் கருத்தை உள்ளபடி அறிய முடியாமல் செய்ததுபோல், இவர்கள் தொல் காப்பியத்தைக் கெடுத்து விட்டனர். அம்மாசினைத் துடைத்துத் தொல்காப்பியத்தைத் தூய்மையுடையதாக்குவது தமிழ் அறிஞர்களின் நீங்காக் கடமை யாகும். ஓரெடுத்துக் காட்டு :

தொல்காப்பியச் சொல்லதிகார எச்சவியலின் முதற் சூத்திரம், தமிழ்ச் செய்யுள் செய்வதற்குரிய சொற்கள் இவை என்கின்றது. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்குமே செய்யுள் செய்வதற்குரிய சொல் என்கின்றது.

இயற்சொல்லாவது, பொருள்-இயல்பாக-எளிதாக-விளங்கும் சொல். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச் சொல், உரிச்சொல், என்னும் தமிழ்ச் சொற்கள் நான்கினும் எளிதிற் பொருள் விளங்கும் சொல் - இயற்சொல் எனப்படும். திரிசொல்-பொருள் திரிந்த சொல். எளிதிற் பொருள் விளங்காத பெயர்ச் சொல் முதலிய சொற்கள் திரிசொல் எனப்படும். வடசொல்-ஆரியச் சொல். ஆரியமொழி அன்று, தமிழகத்தின் வடக்கில் வழங்கியதால் வடமொழி எனப் பட்டது. வடமொழியாளர்கள் அன்று தமிழகத்தில் வாழ்ந்து வந்ததால் அவ்வடவரின் மக்கட் பெயர், ஊர்ப்பெயர் ஆகிய வடசொற்கள் தமிழ்ச் செய்யுட்களில் இடம் பெறலாயின.

இனித் திசைச்சொல் என்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு திசையிலும் வழங்கும் சொல். ஓரிடத்தில் வழங்கும் சொல் மற்றோரிடத்தில் திசைச் சொல் எனப்படும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு சில சொற்கள் வழங்கும். வேறிடங்களில் அவை வழங்கா. வழங்குமிடத்தில் அவை இயற்சொற்களாக இருக்கும். மற்ற இடங்களில் அவை புதிய சொற்களாக - கடுஞ்சொற்களாக இருக்கும். ஒரு திசையில் வாழும் புலவர் செய்யும் செய்யுட்களில் அப்பகுதியின் வழக்கச் சொற்கள் மிகுதியாக இருக்கும். அச்செய்யுட் களைப் படிக்கும் மற்றப் பகுதிகளில் உள்ளவர்க்கு அச்சொற்கள் கடும் சொற்களாக இருக்குமாகையால், இக்காரணம் பற்றியே அவ்வாறு ஒரு பகுதியில் வழங்கும் வழக்கச் சொற்களைத் திசைச்சொல் என்றனர் இலக்கணப்புலவர்கள். எனவே, திசைச் சொல் என்பது தமிழகத்தின் ஒவ்வொரு திசையிலும் வழங்கும் தமிழ்ச் சொற்களேயாகும். அச்சொற்கள் அவை வழங்கும் இடத்தில் எளிதில் பொருள் விளங்கும் இயற்சொல் ஆகவும், மற்ற இடங்களில் எளிதில் பொருள் விளங்கா அருஞ் சொற்களாகவும் இருக்கும்.

சுனையைப் பாழி என்பதும், வழியை வெட்டி என்பதும், மாடு எருமையைப் பெற்றம் என்பதும், குழம்பை வெஞ்சனம் என்பதும் ஒவ்வொரு திசையில் வழங்கும் சொற்கள். கொங்கு நாட்டு வேளாளர்கள் மகளிரை ஆத்தா என்று அழைப்பர். பாட்டியை ஆயா என்பதும், ஆய்ச்சி என்பதும் திசைச் சொற்களே. இச்சொற்கள் அவை வழங்கும் இடத்தினருக்கு எளிய சொற் களாகவும், மற்ற இடங்களில் உள்ளவர்க்கு அரிய சொற்களாகவும் உள்ளமையால், அவை வழங்கா இடத்தில் உள்ளவர்க்குத் திசைச் சொற்களாயின.

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.”

என்பது தொல்காப்பியம் (100)

செந்தமிழ் வழங்கும் பன்னிரண்டு நிலத்தும் தாம் வழங்கும் நிலத்தில் தம் பொருளை எளிதில் விளக்கும் சொல் திi சொல் எனப்படும். எனவே, மற்ற இடங்களில் எளிதில் பொருள் விளக்கா என்பது பெற்றாம். தம் குறிப்பின் தாம் வழங்கும் நிலததில் தம் பொருளை எளிதில் விளக்குவன.

செந்தமிழ் சேர்ந்த - தமிழ் வழங்குகின்ற. ‘செந்தமிழ்’ என்பதில் உள்ள ‘செம்மை’ என்பது. செஞ்ஞாயிறு என்பதிற் போல இனம் விலக்காத அடைமொழியாகும். செந்தமிழ் - நல்ல தமிழ்; செம்மையில்லாத தமிழ் இன்மையால். செந்தமிழ் என்பது தமிழ் என்ற பொருளுடையதேயாகும். செந்தாமரை என்பது வெண்டா மரையை விலக்குவதால், செந்தாமரையில் உள்ள செம்மை இனம் விலக்கிய அடைமொழியாகும். செந்தமிழ் சேர்ந்த - தமிழ் வழங்குகின்ற.

பாயிரத்தில், “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு”என்றதும், ‘இயற்சொற்றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி’ (398) என்றதும், ‘தமிழ் வழங்கும் நிலத்து’ என்னும் பொருள் குறிப்பனவேயாகும். பைந்தமிழ், இன்றமிழ், நற்றமிழ் என்பவற்றிலுள்ள பசுமை, இனிமை, நன்மை என்ற அடைமொழி களும் பசுமையில்லாத, இனிமையில்லாத, நன்மையில்லாத தமிழை விலக்க எழுந்த அடைமொழிகள் அல்ல. தமிழை ஒவ்வொரு வகையில் சிறப்பிக்க எழுந்த அடைமொழிகளே யாகும். தமிழ் என்பதே இனிமை என்ற பொருள் குறிக்கும் போது கெட்ட தமிழ் என்பது எங்ஙனம் பொருந்தும்?

சேனாவரையர், செந்தமிழ் என்பதிலுள்ள செம்மை என்னும் அடைமொழி, கொடுந்தமிழை விலக்குவதால் இனம் விலக்கும் அடைமொழி எனக்கொண்டு உரையெழுதி யுள்ளார். மேலும், செந்தமிழ் சேர்ந்த என்பதற்குச் செந்தமிழ் நிலம் எனவும், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் என்பதற்குச் செந்தமிழ் நிலத்தை சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலத்தும் என்றும் உரை யெழுதி யுள்ளார்.

சேனாவரையர், “செந்தமிழ் நிலமாவது - வையை யாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்குமாம்”என்கின்றார்.

இவர் செந்தமிழ் நிலமாகக் கூறிய இடம் சோழ நாட்டின் தென் பகுதியாக உள்ளது. இவ்வாறு கூறுவதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. தமிழ் மொழி தோன்றிய இடமும், சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்த பாண்டியர் ஆண்ட இடமும், இன்று நமக்குக் கிடைத்துள்ள, தொல்காப்பியம் திருக்குறள் முதலிய பைந்தமிழ் நூல்களை அரங்ககேற்றி ஆய்ந்து நமக்குத் தந்துதவிய முச்சங்கம் இருந்த இடமும் ஆகிய பாண்டிய நாட்டை விட்டு வையை யாற்றின் வடக்கைச் செந்தமிழ் நாடென்னும் சேனாவரையர் கூற்று வியப்பிற்கும் சிரிப்பிற்கும் இடமாகவன்றோ உளது? இதை,

“செந்தமிழ் நாடாவது - வையை யாற்றின் வடக்கும்… மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருத யாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரி நிலமாதல் வேண்டு மாத லானும் அது உரையன்று”எனத் தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்களில் ஒருவரான தெய்வச் சிலையார் என்பவர் மறுத்துள்ளார்.

எனவே, சேனாவரையர் கூறுவது சிறிதும் பொருத்த மில்லாத கூற்றேயாகும். வேண்டுமென்றே இவ்வாறு தவறாகக் கூறியுள்ளார் என்று எண்ண வேண்டியிருக்கிறது. சேரசோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் ஆண்டது செந்தமிழ் நாடு என்ற வரலாற்றுண்மையையே பிற்காலத் தமிழ் மக்கள் அறியாது செய்யவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் எழுதப்பட்ட தாகும் அவ்வுரை - என்பதில் தவறொன்றும் இல்லை.

“வேங்கட மலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குட கடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலம் என்றுரைப்ப”என்னும் தெய்வச்சிலையார் கூற்றே ஏற்புடைத்தாகும். இது, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்”என்னும் பழந்தமிழகத்தையே செந்தமிழ் நாடெனக் குறிப்பிடுதல் காண்க. “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”என்பதும், பொதுவாகத் தமிழ்நாடு எனப்பொருள் படுதலையறிக.

தமிழ் வழங்கும் பன்னிரு நிலமாவன : சேரசோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் ஆட்சிக்குட்பட்ட சேரநாடு சோழநாடு பாண்டிநாடு என்னும் தமிழ்ப்பிரிவு ஒவ்வொன்றினும், அமைந்துள்ள முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நானிலமுமேயாம். முந்நான்கு பன்னிரண்டாதல் அறிக. இப்பன்னிரண்டுமே செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் ஆகும். தொல்காப்பியர் காலத்தே மூவரசர் நாடும் முல்லை முதலிய நான்கு பிரிவாகப் பிரித்தே ஆளப்பட்டு வந்ததென்பது,

தொல்காப்பிய அகத்திணையியலில், “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படும்”(5) என அகனைந்திணைக்கு நிலம் வகுத்துள்ளமையும், “முல்லை முதலாச் சொல்லிய முறையால்”(28) என ஆட்சிமுறை வகுத்துள்ள மையும் முல்லை முதலிய நானிலப் பிரிவேயாகையால், சேர சோழ பாண்டிய நாடொவ் வொன்றும் பழங்காலந் தொட்டே, ஆட்சிமுறை ஏற்பட்ட காலத்திருந்தே இந்நானிலப் பகுப்புடைய வையாகவே இருந்து வந்தன என்பது பெறப்படும். 28-வது சூத்திரம், பழந்தமிழர சர்கள் தம் நாட்டை முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என நான்காகப் பிரித்து, தம் நாட்டின்கண் அமைந்துள்ள அவ் வியற்கைப் பிரிவுப்படி அதனதனுக்குத் தனித்தனி அதிகாரி களை ஏற்படுத்தி நல்லாட்சி புரிந்து வந்தனர் என்கின்றது. தமிழகத்தை நானிலம் என்று வழங்குதல் இதற்குத் தக்க சான்று பகரும். எனவே, தமிழகத்தின் நால்வேறுபட்ட முல்லை குறஞ்சி மருதம் நெய்தல் என - மூன்றாகிய - சேர சோழ பாண்டிய நாடு - பன்னிரு நிலத்தும், ஒரு நிலத்து வழங்கும் அந்நிலத்து வழக்குச் சொல், அதாவது பிற நிலத்தில் வழங்காது அந்நிலத்தில் மட்டும் வழங்கும் சொல், மற்ற நிலத்திற்குத் திசைச் சொல் ஆகும் என்பதே, ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்னும் சூத்திரத்தின் கருத்தாகும்.

சேனாவரையர் கூறும் கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன: பொங்கர் நாடு, ஒளி நாடு, தென் பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூமி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு என்பன.

இந்நிலப்பிரிவு தொல்காப்பியர் காலத்தில் இல்லை. இப்பிரிவு கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவையாகும். தொல்காப்பியர் காலத்து இவர் குறிக்கும் தென்பாண்டி நாடு வட பாண்டி நாடாகும். இன்று தென்பாண்டியென்பது திருநெல்வேலி மாவட்டத்தினையேயாகும். தொல்காப்பியர் காலப் பாண்டியர் தலைநகர் கடல் கொண்ட குமரியாற்றங் கரையில் இருந்த மதுரையாகும். பொங்கர் நாட்டைப் பிறர் புனல்நாடு என்பர். புனல் நாடு - சோழநாடு. எனவே, இவர் குறித்த செந்தமிழ் நாட்டில் அது அடங்கும். அருவா நாடிரண்டும் தொண்டை நாடாகும். மலை நாடு-நடுநாடு. இது திருக்கோவலூரைச் சார்ந்தது. மற்றவை மேற்குக் கரை நாடுகள். அவை சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் சேர்ந்தவை.

தமிழகத்தினுட்பட்ட பகுதிகளைக் கொடுந்தமிழ்நாடு எனல் பொருந்தாது. செந்தமிழ் கொடுந்தமிழ் எனத் தமிழைப் பிரித்ததே தவறு. செந்தமிழ் என்பது கொடுந்தமிழை விலக்க எழுந்தது எனக் கொண்டதே தவறான கருத்தாகும். ஆசிரியர் குறியாத ஒன்றை, இவர் வேண்டுமென்ற ‘கொடுந்தமிழ்’ எனக் குறியிட்டு வழங்கித் தமிழர் வரலாற்று முறையைப் பிற்காலத் தமிழ் மக்கள் அறியாது செய்து விட்டனர். ஒளவையாரால் ‘சான்றோர் உடைத்து’ என்ற தொண்டை நாடும், சங்ககால வள்ளல்களில் பலர் வாழ்ந்த, சங்கச் செய்யுட்களில் பல தோன்றிய கொங்கு நாடும், செந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரந் தோன்றிய சேரநாடும் கொடுந்தமிழ் நாடெனில், செந்தமிழ் நாடென்னும் பகுதியின் சிறப்புத்தா னென்னவோ? வேண்டு மென்றே முன்னுக்குப் பின் முரணாகக் கூறித் தமிழை, தமிழினத் தை, தமிழர் நாகரிகத்தைத் தாழ்த்தச்செய்த உள்ளெண்ணமே யாகும்.

செந்தமிழ் சேர்ந்த என்பதற்கு-செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலம்-செந்தமிழ் வழங்குகின்ற பன்னிரு நிலம்-என்பதே நேர் பொருள். தென்பாண்டி நாடு, குட்ட நாடு, பூமி நாடு முதலிய நாட்டுப் பிரிவுகளெல்லாம் மிகப் பிற்காலத்தே ஏற்பட்ட பிரிவுகளாகும். இவையெல்லாம் அன்று நல்ல தமிழ் நாடாகவே இருந்து வந்தன. சேனாவரையர் கொடுந்தமிழ் நாடெனக் குறிக்கும் பகுதிகளிளெல்லாம் அன்று முதல் இன்றும் நல்ல தமிழேதான் வழங்கி வருகிறது. ஒரு சிறு பகுதி நீங்கலாகத் தமிழகத்தின் பெரும் பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகள் எனக் குறிப்பிடுவதால், அக்கொடுந் தமிழ் நாடுகளில் வழங்கும் சொற்களெல்லாம் திசைச் சொற்கள் எனில், இயற்சொற்கள் என்பவைதாம் யாவையோ?

இயற்சொல்லின் இலக்கணங் கூறுமிடத்து, ‘இயற்சொல் லென்று’ சொல்லப்படுவது, செந்தமிழ் நிலத்து வழங்கும் வழக்குச் சொல்லாகக் கொடுந்தமிழ் நிலத்தும் தம் பொருள் வழுவாமல் உணர்த்தும் சொல்லாம்’ என்பதால், செந்தமிழ் நாடெனச் சேனாவரையர் குறிக்கும் ஒரு சிறு பகுதியில் வழங்குவதே இயற்சொல் எனப்பட்டுத் தமிழ் மொழியின் பெருமையினையே குறைப்பதாகவன்றோ உளது சேனாவரையர் கூற்று? இளங் கோவடிகள் செந்தமிழ் நாட்டிலுள்ள இயற் சொற்களைக் கற்றறிந்தா சிலப்பதிகாரம் பாடினர்? தமிழகம் முழுவதும் வழங்கிய சொற்களை இலக்கண ஆசிரியர்கள், எளிமை பற்றி இயற்சொல் எனவும், அருமை பற்றித் திரிசொல் எனவும், ஓரிடத்திற்கே உரிமை பற்றித் திசைச் சொல்லெனவும் பாகு படுத்திக் கூறினரேயன்றி, செந்தமிழ் நாடு கொடுந்தமிழ் நாடெனத் தமிழகத்தை இரு கூறாகப் பிரித்துச் செந்தமிழ் நாட்டில் வழங்குவது இயற் சொல் என்று வேறுபடுத்திக் கூறவில்லை. இது பிற்காலத்திய உரையாசிரியர்கள் செய்த முரண்பாடேயாகும்.

பழந்தமிழ் மரபுப் பாதுகாப்புச் சட்டமான தொல் காப்பியத்தில், பழைய உரையாசிரியர்கள் வேண்டுமென்றே வலிந்து புகுத்தியுள்ள இத்தகைய முன்னுக்குப் பின் முரணான தமிழ் மரபுக் கொவ்வாததாகக் கருத்துக்களை இனியேனும் களைந்து, தொல்காப்பியத்தைத் தூய்மைப் படுத்துவது - பழந்தமிழராகிய தம் முன்னோரின் வாழ்க்கை வரலாற்று முறையினை உள்ளபடி அறிந்தின்புறுவது - தனித் தமிழ் மரபினைப் பாதுகாப்பது தமிழ் மக்களின் நீங்காக் கடமையு ளொன்றாகும். இதனைப் புறம்போக்குப் பொருளெனக் கருதுதல் கூடாது.

தமிழ் வழங்கும் பன்னிரு நிலத்தும், ஒரு நிலத்து வழங்கும் வழக்கச் சொற்கள் - அதாவது அந்நிலத்துக்கே சிறப்பாக உடைய சொற்கள், ஏனைப் பதினொரு நிலத்துக்கும் திசைச் சொல் எனப்படும் என்கின்றார் தொல்காப்பியர் (தொல். 400) ஒரு நிலத்து வழங்கும் வழக்கச் சொற்கள் அந்நிலத்து மக்களுக்கு எளிதில் பொருள் விளங்கும் இயற்சொல்லாகவும், ஏனைப் பதினொரு நிலத்து மக்களுக்கும் எளிதிற் பொருள் விளங்காத அருஞ் சொல்லாகவும் இருக்கும். அத்தகு சொற்களே திசைச் சொல் எனப்படும். அதாவது ஒரு நிலத்து வழங்கும் வழக்கச் சொற்கள் மற்ற நிலம் வாழ்கின்ற மக்களுக்குத் திசைச்சொல் ஆகும் என்பதுதான் தொல்காப்பியர் கூறும் திசைச் சொல்லின் இலக்கணம்.

தமிழ் வழங்கும் பன்னிரு நிலம் பற்றிச் சென்ற கட்டுரையில் முன்பு சுருக்கமாகக் கூறப்பட்டது. அதன் விளக்கம் வருமாறு: பழந்தமிழகம்-சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. அவற்றை முறையே சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் சிறப்புற ஆண்டு வந்தனர். இப்பழந்தமிழ்ப் பேரரச மரபுகளே தமிழகத்தின் முதல் அரச மரபுகளாகும். சேர சோழ பாண்டிய நாடுகள் ஒவ்வொன்றும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நாற்கூறுபட்டிருந்தது (அகத் - 5). இந்நானில மக்களும் முல்லை நில மக்கள், குறிஞ்சி நில மக்கள், மருதநில மக்கள், நெய்தனில மக்கள் என அவ்வந் நிலப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தனர். இவர்கள் நிலமக்கள், தலைமக்கள் என அகத்திணைக்கண் இரு கூறுபடுவர். இந்நானில மக்களே பழந்தமிழ் மக்களாவர்.

முதற் பொருள்,கருப்பொருள், உரிப் பொருள் என்னும் அகத்திணைப் பொருள் மூன்றனுள், முல்லை முதலிய இத்நானிலமும் நில முதற்பொருள் எனப்படும். முல்லை முதலிய ஒவ்வொரு நிலத்துக்கும் தெய்வம், உணா முதலிய தனித்தனிக்கருப் பொருள்கள் உண்டு. இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல் என்னும் அகவொழுக்கத்தின் உரிப் பொருள்கள் நான்கும் முறையே முல்லை முதலிய நானிலத்தின் கண்ணே நிகழும் என்பது அகப்பொருள் இலக்கண வரையறை. பிரி வொழுக்கம் நிகழும் பாலை என்பது, முதுவேனிற் காலத்தே முல்லையும் குறிஞ்சியும் வளம் பிரிந்த வறண்ட தன்மையே யாதலான்பாலை என்பதோர் தனிநிலம் இல்லை. முல்லை முதலிய நானிலத்தின்கண்ணே புணர்ச்சி முதலிய ஐவகை யொழுக்கமும் நிகழ்ந்து வந்தன.

முடியுடை மூவேந்தரும் தத்தம் நாடுகளில் உள்ள அம் முல்லை முதலிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அதிகாரிகளை ஏற்படுத்தி நல்லாட்சி புரிந்து வந்தனர் என்கின்றார் தொல் காப்பியர் (அகத்-28).

காடு, மலை, வயல், கடற்கரை என்னும் முல்லை முதலிய அந்நானிலமும் தனித் தலைவர்களின் ஆட்சிக்கீழ் இருந்து வந்த காலமும் ஒன்று உண்டென்பது.

“மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,
வருணன் மேய பெருமணல் உலகமும்,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”

(அகத்-5)

என்னும் தொல்காப்பியர் கூற்றால் நன்கு விளங்குகிறது. மாயோன் முதலிய நால்வரும் முல்லை முதலிய நானிலங்களையும் முறையே சீருஞ் சிறப்புடன் ஆண்டு வந்த பழந்தமிழ்த் தலைவர் களேயாவர் என்பதை என்னால் எழுதப்பட்ட ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ என்னும் நூலிற் காண்க. உலகம்-நிலம்.

எனவே, இந்நானிலப் பிரிவு, பழந்தமிழ் நாட்டுப் பிரிவின் இன்றியமையாப் பிரிவு என்பது பெறப்படும். இது பற்றியே பழந்தமிழ்ப் புலவர்கள் தமிழ் நாட்டினைக் குறிப்பிடுகின்ற போதெல்லாம் நானிலமென்றே குறிப்பிட்டதும். எனவே, இந்த முந்நான்கு பன்னிரண்டு நிலத்தினையே, தொல்காப்பியர், “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்”(தொல்400) என்றதாகும். பன்னிரு நிலம்-தமிழகம். “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பே”பன்னிரு நிலம்.

இனி, தமிழ் என்னும் சொல்லுக்கே இனிமை என்பது பொருளாயிருக்க, அப்பொருளுக்கு மாறாகச் சேனாவரையர் கொடுந்தமிழ் என்ற ஒன்றை இட்டுக் கட்டிக் கொண்டது தமிழ் மரபினைக் கெடுப்பதற்கேயாம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இன்சுவைத் தேனுக்குக்கைப்புச் சுவையுண்டெனல் பொருந்தாமை போல, இனிமைச் செந்தமிழுக்குக் கொடுமைக் குணம் எங்ஙனம் பொருந்தும்? செந்தமிழ் என்பதில் உள்ள செம்மை என்னும் அடைமொழியை இனம் விலக்கிய அடைமொழி எனக் கொண்டதே தவறு. அத்தவறான இலக்கண அறிவினால் எழுந்ததே கொடுந் தமிழ் என்னும் தகாச் சொல். கருமதி இருந்தாலன்றோ வெண்மதி என்பதில் உள்ள வெண்மை என்னும் அடைமொழி இனம் விலக்கிய அடைமொழியாகும்? வெண்டாமரையும் உள்ளதால், செந்தாமரை என்பதில் உள்ள செம்மை என்னும் அடை மொழி என்பதில் உள்ள செம்மை என்னும் அடைமொழி இனம் விலக்கிய அடைமொழியாகும். தமிழ் என்பதற்குத் ‘தமிழ் நிலம்’ என வலிந்து பொருள் கொண்டதும் தவறே யாகும். எனவே, “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்”என்ற சூத்திரத்திற்குச் சேனாவரையர் உரைத்த உரை, சிறிதும் பொருந்தாப் போலியுரை யேயாகும்.

சேனாவரையரின் பொருந்தா அப்போலியுரையினைப் பொருளுரை என்பதாகக் கொண்டே கொடுந்தமிழ் என்ற பெயரால் ஓர் இலக்கண நூல் எழுந்தது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் இவ்வாறு தவறாகக் கொண்ட கருத்துக்களை, ஆசிரியர் கருத்துக்குமாறாக வலிந்து புகுத்தியுள்ள தகாக் கருத்துக்களை உண்மையான கருத்துக்கள் எனக் கொண்டு, அக்கருத்துக்களைத் தழுவிச் செய்யப் பட்டதே நன்னூல் என்னும் இலக்கண நூலாகும். தமிழ் இலக்கண மரபைச் சிதைக்க எழுந்த பிற்கால நூல்களில் நன்னூல் ஒன்றாகும். நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவர் என்பார் கி.பி. 13-ஆம் நூற்றாண் டினராவர்.

நன்னூலைத் தொல்காப்பியத்தின் வழி நூலென்பர். ஒரு நூலின் கருத்துக்களைக் காலத்துக் கேற்றவாறு தொகுத்தும் விரித்தும் தொகை விரியாகவும் செய்வதே வழிநூலின் இலக்கணம் ஆகும். ஆனால், நன்னூலிலோ முதனூலாகிய தொல்காப்பியக் கருத்துக்கு நேர்மாறான கருத்துக்கள் பல கூறப்படுவதால் அதைத் தொல்காப்பியத்தின் வழி நூல் எனல் சிறிதும் பொருந்தாது. இதைத் தொல்காப்பியத்தின் எதிர் நூல் என்று வேண்டுமானால் சொல்லாம். எடுத்துக்காட்டாக,

தொல்காப்பியர், “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்”என்பதற்குச் சேனாவரையர், “செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிருநிலத்தும்”என்று உரையெழுதினார். அதனை நன்னூலார்,

“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்”

எனச் சூத்திரஞ் செய்தனர். அவர் அம்மட்டோடு நின்றாரா? இல்லை; மேலும் ஒரு படி முன்னேறிச் சென்றுள்ளார். தமிழ் மரபுக்கு மாறான கருத்தினைத் தமிழ் இலக்கண வழக்கில் புகுத்தித் தமிழினத்தின் தமிழ் இலக்கண மரபின் தனித் தன்மையைச் சிதைத்துள்ளார்.

சேனாவரையர், “செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந் தமிழ் நிலத்தும் வழங்கும் சொல் திசைச்சொல்”என்ற மட்டில் நிற்க, நன்னூலாரோ,

“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்”
என்று அதனை அப்படியே சூத்திரஞ் செய்ததோடு,

“ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப”

(நன்னூல் - 273)

எனக் கொடுந்தமிழ் நிலம் பன்னிரண்டின்கண் வழங்கும் சொற் களேயன்றி, தமிழ் அல்லாத வேறு பதினெழு மொழிச் சொற் களும் திசைச் சொல் என்கின்றார். ஒன்பதிற்றிரண்டு - பதினெட்டு.

மேலும், இவ்வாறு நான் சொல்வதாக எண்ணாதீர்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. நமது முன்னையோர் சொன்ன தையேதான் நான் சொல்லுகிறேன் என்பார். ‘என்ப’ என் கின்றார். என்ப-என்று சொல்லுவர் புலவர். என்ப - எண்பார்கள் - என்று சொல்வார்கள் என்பது பொருள்.

கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டினும் வழங்குஞ் சொற்கள் திசைச் சொல் என்று தான் இவர் முன்னோரான சேனாவரையர் சொல்கிறார். தமிழ் ஒழிந்த பதினேழ் மொழிச் சொற்களும் திசைச்சொல் என்று சேனாவரையர் சொல்ல வில்லை. அவ்வாறு சொன்ன முன்னோர் யார்? எந்த முன்னோர் அவ்வாறு சொன்னார்? தானே இட்டுக்கட்டிச் சொல்லிவிட்டு, ‘என்ப’ என்று முன்னோர் மேல் பழியைச் சுமத்திவிட்டுத் தான் தப்பித்துக்கொள்கிறார்.

சேனாவரையர், ‘செந்தமிழ், கொடுந்தமிழ்’ எனத் தமிழை இரண்டாகப் பிரித்துத் தமிழின் இனிமைத் தன்மைக்கு இழிவு கற்பித்தார். நன்னூலாரோ, சூத்திரஞ் செய்து அதை உறுதிப் படுத்தினதோடு, தம் முன்னோர் மொழியைப் பொன்னே போல் போற்றின தோடு, அழகொளிரும் அருந்தமிழில் அயல்மொழிச் சொற்களைக் கலப்பதற்கும் அடிகோலி விட்டார். தமிழில் அயல் மொழிச் சொற்களைக் கலந்து தமிழின் தனித்தன்மையை தூய்மை யைக் கெடுக்கும் இத்தமிழ்க் கொலைக்குத் தான் காரணம் இல்லை என்று தப்பித்துக் கொள்ள, ‘என்ப’ என்ற சொல்லைச் சான்றாக்கிக் கொண்டார். ஒருவன் தான் கொலை செய்து விட்டுப் பொய்ச் சான்றுகளைக் கொண்டு பிறர்மேல் அக்கொலைக் குற்றத்தைச் சுமத்துவது போலன்றோ இருக்கிறது இவர் செயல்? இன்னார் இவ்வாறு சொன்னார் என்ற விளக்க மின்றி, வேண்டுமென்றே ‘என்ப’ என்று பிறர் கூற்றாக்கிச் சொல்லாத தைச் சொன்னதாகப் பொய் பேசுகிறார், தமிழின் தனி மரபைக் கெடுக்க இவர் கூறும் முன்னுக்குபின் முரணான கூற்றுக்களில் இதுவும் ஒன்றாகும். இவர் கொடுந்தமிழ் நாடெனக் கூறும்.

“தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூமி
பன்றி யருவா வதன்வடக்கு-நன்றாய
சீத மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்”

என்னும் பன்னிரண்டில், தென்பாண்டி நாடு-திருநெல்வேலி மாவட்டம், குட்டம், குடம் முதலியவை சேர நாட்டைச் சார்ந்தவை. அருவா நாடும், அருவா வடதலை நாடும் தொண்டை நாட்டைச் சார்ந்தவையாகும். சீதநாடு கொங்கு நாட்டைச் சார்ந்தது. மலாடு-நடு நாடு. புனல் நாடு - சோழ நாடு.

இக்கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டும் பழைய செந்தமிழ் நாடேயாகும். இவை பன்னிரண்டும் சேர சோழ பாண்டிய நாடுகளான தமிழகத்தில் அடங்க, இவற்றைக் கொடுந்தமிழ் நாடு எனில், சேர சோழ பாண்டியரைச் ‘செந்தமிழ் வேந்தர்’ எனல், பொருந்தாப் பொய்க் கூற்றாக வன்றோ முடியும்? தமிழ் பழித்த கனக விசயரின் செருக்கடக்கிய செந்தமிழ் வேந்தனாகிய செங் குட்டுவன் ஒரு கொடுந்தமிழ் வேந்தனாகவன்றோ குறைபாடுறு வான்? அவன்றன் இளவலான இளங் கோவடிகளும் கொடுந் தமிழ்ப் புலவராவரன்றோ? அவரால் செய்யப் பெற்ற செந்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரமும் கொடுந் தமிழ்க் காப்பியமன்றோ ஆகும்? தமிழர் செங்கோன்மைச் சிறப்பை உலகறியச் செய்த பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு கொடுந்தமிழ் வேந்தனாக வன்றோ குறிக்கப்படுவான்? தம் செல்வமுழுவதையும் வரையாது வாரி வழங்கித் தமிழ் வளர்த்த சங்க கால வள்ளல்களான பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி, எவ்வி, பண்ணன், குமணன் முதலியோரெல்லாம் கொடுந்தமிழ்க் குறும்பர் என்றன் றோ குறைபாடுறுவர்? பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பழந்தமிழ் நூல்களெல்லாம், அந்நூற் களின் செய்யுட்களைப் பாடி பழந்தமிழ்ப் புலவர்களெல்லாம் பெறும் பெயர் என்னவோ?

இது வேண்டுமென்றே தமிழின் தனியுயர் தன்மையைக் கெடுக்க, தமிழர் தனிப்பண்பாட்டை மாசுடையதாக்க, தமிழிலக் கண மரபைச் சிதைக்கச் செய்த சூழ்ச்சியேயாகும். இத்தகைய தமிழ் மரபுக்கு மாறான கருத்துக்களைக் கூறும் நன்னூல்தான் தமிழ் மக்களின் பயக்குறையால் இன்று தமிழ் மாணவர்களுக்கு இலக்கணப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தம் மரபுக்குப் புறம்பான அக்கருத்துக்களை, தமக்குரியன போலத் தமிழ் மாணவர்கள் கற்று வருகின்றனர் என்று தமிழ் மக்களுக்குத் தந்நிலை யுணரும் நற்காலம் வருமோ!

அடுத்தபடி, தமிழிற் கலத்தற்குரியவென நன்னூலார் கூறும் பதினேழ் மொழிகளாவன.

“சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக் குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே”

என்பன. சிங்களம்-இலங்கையில் வழங்கும் மொழி. சோனகர்-யவனர், கிரேக்கர், அரேபியர் முதலிய மேற்கு நாட்டினரை யவனர் என்பது தமிழ் மரபு. எனவே, சோனகம் என்பது-கிரேக்கம், அரபி, செர்மன், பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகள் அனைத்தையும் குறிக்கும். கடாரம் - பர்மா, குடகம் - முற்கூறிய கொடுந்தமிழ் நாடாகும்.

இதனால், நன்னூலார், உலகில் வழங்கும் எல்லா மொழிச் சொற்களையும் கலந்து, தமிழின் தனித் தன்மையைக் கெடுக்க இலக்கண விதியே வகுத்து விட்டாரல்லவா? இவ்வாறு ஒரு மொழியில் உலகில் வழங்கும் எல்லா மொழிச் சொற்களையும் கலந்து செய்யுட்செய்யலாமெனின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆரியம், இந்தி, ஆங்கிலம், செர்மனி முதலியனவாக உலகில் வெவ்வேறு மொழிகள் இருக்கவேண்டியதில்லை யல்லவா? எல்லா மொழிகளையும் ஒன்றாகக் கலந்து பேசியும் எழுதியும் ஒரே மொழியாக்கி விட்டால் மொழி வேற்றுமை, மொழி வெறி என்னும் வேறுபாடு ஒழிந்து, உலகம் ஒருவழிப்படுமல்லவா? இதைவிட ஒரு மொழிக்குச் செய்யுங் கேடு வேறு என்ன இருக்கிறது?

நன்னூலார் காலத்திலிருந்து இன்றளவும் இத்தகாத கருத்து, தமிழ் மரபுக்குப் புறம்பான கருத்துத் தமிழிலக்ண விதியாகவே தமிழ் மக்களால் போற்றப்பட்டுத் தானே வருகிறது? இன்னும் தமிழ் எழுத்தாளர் எனப்படுவோரில் ஒரு சிலர் நன்னூலார் கட்டளையை அப்படியே பொன்னே போற்போற்றித்தானே வருகின்றனர்? அயல் மொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது தமிழுக்கு அழகாகும் என்பதோடு, தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அஃது ஏற்றதென்று கூறுவோரும் இன்று உண்டல்லவா?

இக்கலப்பிலக்கண விதியை மேற்கொண்டே பிற்காலத் தினர், கடலைபொரி போல அயற் சொற்களைக் கலந்து தமிழின் தனித் தன்மையைச் சிதைத்துவிட முற்பட்டனர். வேண்டு மென்றே தமிழ்ச் சொற்களிலும் அயற் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதி, அதற்கு மணிப்பிரவாள நடை எனப் பெயரும் சூட்டினர். மணி-முத்து, பிரவாளம் - பவளம், தமிழில் அயற் சொற்களைக் கலந்து இதற்கு மணிப் பிரவாளம் என்பதை விட ‘பானஞ்சு’ எனல் பொருத்தமான பெயராகுமே! சமணர் சீபுராணமும், வைணவர் நாலாயிரப் பிரபந்தத்திற்கு உரையும் மணிப் பிரவாள நடையில் எழுதித் தமிழ் மொழியை அழிக்க முனைந்தனர். இன்பத்தமிழ் பயிலும் வாயால் அத்தகைய இழி நடையைப் பயிலும்படி செய்தது அக்காலச் சமயப் பற்று. இன்று கட்சிப் பற்றுக் கொண்ட தமிழர், அயல் மொழியாகிய இந்தியைத் தமிழ் மக்களிடைப் புகுத்தித் தமிழ் மொழியையே அழித் தொழிக்க முனைகின்றனரல்லவா? அது அயலார் தலைமைக் குட்பட்ட சமயப்பற்று. சமயம், கட்சி என்னும் பெயர் வேறு பாடேயன்றிச் செயற்படு வதில் இரண்டும் ஒன்றே தான்!

தமிழ்நாட்டில் பரவிய அயனாட்டுச் சமயங்கள் தமிழர்க்குச் செய்த தீமைகள் பலப்பல. அவற்றுள் முதன்மை யானவை இரண்டு. ஒன்று, தமிழில் அயல் மொழிச் சொற்களை வேண்டு மென்றே கலந்து தமிழின் தூய தனித்தன்மையைக் கெடுத்தது. மற்றொன்று; தமிழில் அயற் கருத்துக்களை வலிந்து புகுத்தித் தமிழரின் தனிப்பண்பைக் கெடுத்தது. அத்தகைய அயற் சமயக் கொள்கையாலன்றோ தமிழர் வேங்கைபோல் வீரங்குன்றி அயலாருக் கடிமையாயினர்? அயற்றலைமைக் கட்சிக் கொள்கை யாலன்றோ தமிழர் இன்று தம்மரசிழந்து அயலார்க் கடிமையாய் அலைகின்றனர்? இவற்றிற்கு வழி வகுத்துக் கொடுத்த குற்றம் பிற்காலத் தமிழ் இலக்கண ஆசிரியர்களை யல்லவோ சாரும்?

‘தமிழ்க் கடவுள், அகத்தியற்குத் தமிழறிவுறுத்த செந் தமிழ்ப் பரமா சாரியன்’ எனத் தமிழர்களாலேயே போற்றப் படும் முருகக்கடவுளின் அருள் பெற்றவரெனப்படும் அருண கிரிநாதர் என்பார் நன்னூலார் கட்டளையை அப்படியே தலைமேற் கொண்டு செயற்படுத்தியவராவர். அவர் பாடி யுள்ள திருப்புகழ்ப் பாடல்களில் கலக்கவேண்டிய அளவு அயற்சொற்களைக் கலந்துள்ளார். அஃதும் கொடுந்தமிழ் பரமாசாரியன் மேலல்ல; செந்தமிழ்ப் பரமாசாரியன்மேல் பாடிய பாடல்களிலேதான் அத்துணைக் கலப்பு!

“கத்தூரி யமரு ம்ருகமத
வித்தார படிற இமசல
கற்பூர களப மணிவன”

இதில் எத்தனை தமிழ்ச் சொற்கள், எத்தனை அயற் சொற்கள் என்று எண்ணிப் பாருங்கள். இதற்குத் தமிழல்லாத பதினேழு மொழிச் சொற்களும் திசைச் சொல் என்ற நன்னூ லாரன்றோ காரணமாவர்?

தமிழ் நாட்டில், தமிழ்ப் பழங்குடியில் பிறந்து, தமிழைத் தாய் மொழியாகப் பேசிப் பழகி, தமிழ் பயின்று புலமை யடைந்த தமிழ்ப் புலவர்களுக்குத் தனித் தமிழில் பாடவா முடியாது? பின்னேன் அவ்வாறு அயல் மொழிச் சொற்களைக் கலந்து பாடினர் பிற்காலப் புலவர்கள்? அயல் மொழிச் சொற்களைத் தமிழ்ச் செய்யுள் செய்தற்குரிய திசைச் சொல் என்று இலக்கணம் வகுத்தமையன்றோ இத்தமிழ்க் கொலைக்குக் காரணம்?

“சர்வபரி பூரண
அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே”

இது தாயுமானவர் பாடலடி. இதில் ‘ஆன’ என்பதைத் தவிர அத்தனையும் அயற் சொற்கள். தாயுமானவர் என்ன அயல் நாட்டில் பிறந்து வளர்ந்து, அயல் மொழிப் புலமையடைந்து, பின் தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் மொழியை ஒருவாறு கற்றுக் கவிபாடியவரா? பழந்தமிழ்க் குடியிற் பிறந்த அவர்க்குத் தனித் தமிழில் பாடவா முடியாது? நன்னூலார் போன்ற பிற்கால இலக்கணப் புலவரும் அயனாட்டுச் சமயமும் செய்த கொடுமை யன்றோ இது?

“தத்துவ சொரூபத்தை மதசம் மதம்பெறாச்
சாலம்ப ரகித மான
சாசுவத புட்கல நிராலம்ப வாலம்ப
சாந்தபத வ்யோம நிலையை
நித்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை
நிர்விகா ரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்
நிரஞ்சய நிராம யத்தை”
+
இவையும் தாயுமானவர் பாடல் அடிகளே. இவற்றுள் ‘பெறா, ஆன, நிலை, பொருள், ஆய், நின்று ஒளிர்’ என்னும் சொற்களல்லாத அத்தனையும் அயற் சொற்கள். இவை களைப்போன்ற தமிழ்ப் பாடல்களைப் படிக்கும் ஒரு தமிழ் இளைஞன் எங்ஙனம் தமிழுணர்ச்சி பெறுவான்?

“ஓர் ஏழை வேலைக்காரனைப் பார்த்துச் ‘சோறு தின்றாயா?’ என்று கேட்கலாம். ஒரு கனவானைப் பார்த்து அப்படிக் கேட்கக் கூடாது. கேட்பதில் இலக்கணக் குற்றம் ஒன்றும் இல்லை. அர்த்தமும் விளங்காமற் போக வில்லை. ஆனாலும் அப்படிக் கேட்பது தமிழன்று; தமிழ் மரபன்று. ஒரு கனவானைப் பார்த்து, ‘போஜனம் ஆயிற்றா?’ ‘நிவேதனம் ஆயிற்றா?’ என்று கேட்பதும் சம்பிரதாயங்கள்.”

இது ஒருவர் பேச்சின் ஒரு பகுதி. இது 24-9-41 திருச்சி வானொலியில் பேசப்பட்ட பேச்சின் ஒரு பகுதி. இது யார் பேசினது? முகவரி தெரியாத ஒருவர் பேசினதன்று அப்பேச்சு. தமிழுக்குச் செய்த தொண்டுக்காகப் பெரியபட்டங்கள் பெற்றுத் தமிழர்களால் தமிழ்த் தாத்தா என அழைக்கப் பெற்ற - மஹாம ஹோபாத்யாய, தக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் பேச்சுத்தான்!

இது, ஐயரவர்களால், ‘தமிழ் மரபு’ என்னும் தலைப்பில் பேசப்பட்ட பேச்சின் ஒரு பகுதியாகும்.

இதில் ஐயரவர்கள், ‘சோறு தின்றாயா?’ என்று கேட்கலாம். இதில் இலக்கணக் குற்றம் ஒன்றும் இல்லை என்கிறார். “சோறு தின்றாயா?”என்பது இலக்கணக் குற்றமாகும். “சோறு உண்டாயா?”என்பதே தமிழ் மரபு மேலும் “போஜனம், நிவேதனம், பிக்ஷை ஆயிற்றா?”என்பதே தமிழ் மரபு என்கின்றார். ‘போஜனம், நிவேதனம், பிக்ஷை’ என்னும் அயற் சொற்கள் எங்ஙனம் தமிழ் மரபாகும்? “போஜனம் ஆயிற்றா?”என்பன வெல்லாம் இழிவழக்கேயன்றி, உயர்ந்தோரிடை வழங்கும் தமிழ் மரபாகா.

மேலும், ‘தமிழ் மரபு’ என்னும் அக்கட்டுரையில், மகா மகோபாத்தியாயர், தக்ஷிணாத்திய, கலாநிதி, வாசனை, சந்தோஷம், சங்கீதம், வித்வான், சபை, அமிர்தம், சுருதி, சந்தர்ப்பம், சம்பிரதாயம், தந்தி, வாத்தியம், பூரணம், கச்சேரி, வருஷம், சாரீரம், அபஸ்வரம், சுத்தம், சாதாரணம், அங்கம், மேகம், இருதயம், ஆதாரம், பாஷை, வசனம், சமாச்சாரம், கோபம், துக்கம், பரிகாசம், சாதித்தல், தந்திரம், வார்த்தை, வித்தியாசம் அர்த்தம், உபயோகம், பிராணிம், விஷயம், சமஸ்கிருதம், ஆரம்பம், சக்தி, வாசித்தல், நிர்வாகம், துவிபாஷி, சம்பாஷணை, சுவாசம், ஜாதி, போஜனம், நிவேதனம், பிக்ஷை என ஐம்பத்தோர் அயல் மொழிச் சொற்கள் உள்ளன.

தமிழ்த்தாத்தா இவ்வாறு எழுதிய குற்றம், இத்தமிழ்க் கொலை, முன்னே அதற்கு வழிவகுத்துக் கொடுத்த இலக்கண ஆசிரியரை யன்றோ சாரும்? இவ்விலக்கண விதி இல்லை யேல், ஐயரவர்கள் இவ்வாறு எழுதத்துணிவார்களா?

நெல்லிடைப் புல்


ஒரு நாள் இரவு எட்டுமணியிருக்கும். ஒரு காலத்தே சோழ நாட்டின் தலைநகராகச் சீருஞ்சிறப்புடன் திகழ்ந்த திருவாரூர்ப் பார்ப்பனச் சேரித் தெருத்திண்ணை யொன்றில் முதிர்பருவ முடைய நாலைந்து மறையவர்கள் உட்கார்ந் திருந்தனர். அவ்வீட்டுக் காரர் வாயிலில் நின்றுகொண்டிருந்தார். ஏழாண்டுப் பருவமுள்ள சிறுவன் ஒருவன் அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். அச்சிறுவன் ஏதோ கூறிக்கொண்டிருந்தான். அச்சிறுவன் கூறுவதை அவர்கள் மிக்க வியப்புடன் கண்ணுங் கருத்துமாய் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தனர். அச்சிறுவனுக்குப் பக்கத்தில் நின்றவர், உவகையும் வியப்பும் ஒருங்கு கலந்த முகத்துடன் அச்சிறுவனைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தார்.

யார் அந்தச் சிறுவன்? அம்முதியோர்களைப் பார்த்து அவன் என்ன கூறினான்? அம்முதியோர்கள் அவ்வாறு வியப் போடு கேட்கும்படி அச்சின்னஞ் சிறுவனால் அப்படி என்ன கூறியிருக்க முடியும்? அவன் அம்முதியோர்களைப் பார்த்துக் கைநீட்டிக் கைநீட்டிப் பேசுவதைப் பார்த்தால், கடாவிடை யோடு, கருத்துச் செறிவுடன் பேசும் பெரும் பேச்சாளனாக வன்றோ தோன்றுகிறான்? அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவனைப் பார்த்தபடியே அவ்வளவு உவகையுடன் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர் யார்? இக்காட்சி சிறந்த ஒரு நாடகக் காட்சியாகவன்றோ இருக்கிறது? ஆம்; தமிழர் வாழ்க்கை வரலாறென்னும் அமிழ்திடை நஞ்சைக் கலக்கும் நாடகக் காட்சிதான்!

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ ‘யாமறிந்த புலவரிலே வள்ளுவர் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’ என்னும் சிறப்பிற்குரிய வள்ளுவர் வாழ்க்கை வரலாற்று நாடகக் காட்சிக்குள் ஒன்று தான் இக்காட்சி. ‘வள்ளுவர் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் பார்ப்பானுக்கும் பிறந்தவர்’ என்று தொடங்குகிறது வள்ளுவர் வரலாற்று நாடகம். அந்நாடகத்தின் கட்டியக்காரன் காட்சிதான் மேலே கண்ட காட்சி.

தமிழர் வாழ்க்கைச் சட்டநூலாகிய திருக்குறளைச் செய்து, தமிழர் பெருமையைக் கல்மேல் எழுத்துப்போல் நிலைபெறச் செய்த வள்ளுவரின் பெற்றோர் எனப்படும் ஆதியும் பகவனும், அக்காலத் தமிழர் வழக்கப்படி ஒருவரை யொருவர் காதலித்து, களவொழுக்க மொழுகிக் காதல் முதிர்ந்து, பெற்றோரும் சுற்றமும் அறிய மணஞ் செய்து கொண்டு இல்லறம் இனிது நடததி வள்ளுவரைப் பெற்று வளர்த்துப் பெருமையுடன் வாழ்ந்தார் களில்லை. அவர்கள் தமிழர் பண்பாட்டுக்கு, பழக்க வழக்கத்திற்கு மாறாக, மணஞ் செய்து கொள்ளாமல் வள்ளுவரைப் பெற்றனர்.

ஆதியைக் காதலித்த பகவன், அவளை மணக்கத் தன் உயர்சாதி இடந்தராதென மறுத்து, அவளைக் கூட்டிக் கொண்டு ஒருவருக்கும் தெரியாமல் ஊரை விட்டே ஓடி விட்டான். அவ்வாறு ஓடினவன் தன் ஊருக்குச் சென்றிருந்தால் அது உடன் போக்கு, அல்லது கொண்டு தலைக்கழிதல் என்னும் களவியற் பிரிவில் ஒன்றாயடங்கும். ஆனால், பகவன் தன் ஊர் செல்லாமல் எங்கேயோ ஓடித் தமிழர் ஒழுக்க முறைக்கே ஓர் இழுக்கை உண்டாக்கி விட்டான். அவ்வாறு ஓடிய ஆதியும் பகவனும் நாடோடிகளாக ஊரூராய்த் திரிந்து வந்தார்கள்.

அவ்வாறு நாடோடி வாழ்க்கை நடத்திவந்த அவர்கட்கு உப்பை, உறுவை, வள்ளி, ஒளவை என்ற நான்கு பெண் மக்களும், வள்ளுவன், அதியமான், கபிலன் என்ற மூன்று ஆண்மக்களும் பிறந்தனர். ஆதியும் பகவனும் தாங்கள் செய்து கொண்ட முன்னேற்பாட்டின்படி அப்பிள்ளைகளைப் பெற்ற அவ்விடத்திலே வைத்துவிட்டுச் சென்றனர். அக்குழந்தைகளைக் கண்டோர் எடுத்து வளர்த்து வந்தனர். அக்குழவிகள் எழுவருள் ஒருவரான வள்ளுவர், சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு பறைய ரால் எடுத்து வளர்க்கப்பட்டார். இவ்வாறு தொடங்குகிறது வள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு நாடகம்! அப்பிள்ளைகள் எழுவருள் கடைப் பிள்ளை யான கபிலன் தான் நமது சின்னஞ் சிறுவன்.

ஆதியும் பகவனும் ஊரூராய்ச் சுற்றிக் கொண்டே திருவாரூர் சென்றபோது ஓர் ஆண்குழந்தை பிறந்தது. வழக்கம் போல் அவர்கள் பெற்ற அப்பிள்ளையை அங்கே வைத்து விட்டுச் சென்றனர். அப்பிள்ளையை ஒரு பார்ப்பனர் கண்டு எடுத்துப் போய்க் கபிலன் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்.

கபிலன் ஏழாண்டுப் பருவத்தைக் கடந்து எட்டாவ தாண்டை அடைந்தான். மனுமுறைப்படி (மனு-2:36) அது பூQலணிய வேண்டிய பருவம். எனவே, கபிலனது வளர்ப்புத் தந்தை அவனுக்குப் பூQற் சடங்கு (உபநயனம்) செய்ய அவ்வூர்ப் புரோகிதரை அழைத்தார். அஃதறிந்த அவ்வூர்ப் பார்ப்பன முதியோர் சிலர் கபிலன் வீட்டுக்கு வந்து, அவன் தந்தையை அழைத்து, ‘இச்சிறுவன் நமது மரபில் பிறந்தவன் அல்லனாகை யால் இவனுக்குப் பூணூற் சடங்கு செய்யக் கூடாது’ என மறுத்தனர். அது கண்ட கபிலனது வளர்ப்புத் தந்தையார் செய்வதறியாது மனங்கலங்கி நிற்கக் கண்ட கபிலன், கடவுள் திருவருள் பெற்று, உண்மை யறிவுற்று, சாதி வெறி பிடித்த அப்பார்ப்பன முதியோர் களைப் பார்த்து, ‘பிறப்பிலே சாதிவேற்றுமையில்லை. இது ஒரு சிலர் உயர் வாழ்வுக்காக ஏற்படுத்திய சூழ்ச்சித் திறனேயாகும்’ என்பதை, ஏதுவும் எடுத்துக்காட்டும் பொருந்த, எளிய இனிய அகவற் பாவினால் ஆணித்தரமாக எடுத்தியம்பினான். சிறுவனின் சீரிய அத்தெளிவுரையைக் கேட்ட அப்பார்பனர்கள் பூQற் சடங்கு செய்ய உடன்பட்டனர். கபிலன் கூறிய-பாடிய-அவ்வகவல், கபிலர் அகவல் என வழங்குகிறது.

“ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்
பற்பலர் நாட்டிலும் பார்ப்பார் இலையால்”
“நால்வகைச் சாதியிந் நாட்டினில் நாட்டினீர்
பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியின் ஆண்பெண் மாறிக்
கலந்து கருப்பெறல் கண்ட துண்டுமோ”

எனச் சாதிவேற்றுமைக் கொடுமையைத் தவிடு பொடியாக்கு கிறான் ஏழாண்டுப் புலவன்!

அவன் அத்துடன் நிற்கவில்லை. தன் உடன் பிறந்தவர் களான உப்பை, உறுவை முதலிய அறுவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறான். உப்பை, உறுவை, வள்ளி, ஒளவை வள்ளுவர் அதியமான், கபிலன் என்னும் எழுவரும் உடன்பிறந்தார் என்பதற்கும் சான்றாக உள்ளது கபிலரகவல் என்னும் இச்சிறு நூலே யாகும்.

134 அடிகளை உடைய அவ்வகவல் சொல்லில் சிறிதே யெனினும், பொருளில் மலையினும் மாணப்பெரிதாகும். அத்தகு ஆன்ற பொருட் செறிவும் செய்யுட் சிறப்புமுடைய அவ்வகவல், ஏழாண்டுச் சிறுவனால் பாடப்பட்டதென்பது, அதுவும் ஆசுகவி யாக அறையப்பட்ட தென்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போலாகுமன்றோ? ஏதோ பல்லாயிரத்திலொரு வருக்குப் புத்தாண்டுப் பருவத்திலே கவியுள்ளம் வாய்க்கப்பெறு மெனினும், கபிலரகவல் போன்ற அத்தகு சிறந்த கருத்தமைந்த கவிபாட முடியாததொன்றாகும்.

பின் எப்படிப்பாட முடிந்தது என்பதற்குத்தானே, எதற் கெடுத்தாலும் கடவுளின் திருவருட்டன்மை கற்பித்துத் தமிழ் மக்களின் அறிவிய லாராய்ச்சித்திறனைக் கெடுத்துக் குட்டிச்சுவ ராக்கி வரும் அத்திருவருள் வந்து குறுக்கே நிற்கிறது? அத்திரு வருட்பேறின்றி அச்சிறுவன் அவ்வகவலைப் பாடியிருந்தால் அவனுக்குத் தனிப்பெருமையுண்டு. தமிழ் மக்கள் தனிப்பெரு மையடையக் கூடாது என்பதற்காகக் குறுக்கே நிற்பதுதானே திருவருள்!

இத்திருவருட் பேறு முன்னுக்குப்பின் முரணாக அமைந் துள்ளது. ஆதி பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளைப் பெற்ற அப்போதே, பெற்ற இடத்திலே எறிந்து விட்டுச் செல்ல மனந் துணியாமல் பிரிவாற்றாது வருந்துவது கண்ட ஒவ்வொரு பிள்ளையும் பிறந்த அப்போதே, தாய் வயிற்றிலிருந்து வெளிவந்த அப்போதே கடவுளின் திருவருளால் உண்மை யறிவும் கவிப் புலமையும் கைவரப்பெற்று, ‘எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி’ என்னும் வெண்பாவினால் திருவருட் பேற்றை கடவுள் திரு வருட்டன்மையை எடுத்துக் கூறித் தாயைத் தேற்றியனுப்பினதாகக் கூறப்படும் ஏழு வெண்பாக்கள் உள்ளன. அவ்வெண்பாக்கள் ஒவ்வொன்றும், ‘காரிகை யோடுதொல் காப்பியங் கற்றுக் கவிசொலும் நாவலர்களும்’ கண்டு பொறாமைகொள்ளும் படி அத்தகு சீருஞ்சிறப்புடன் திகழ்கிறது.

“கண்ணுழையாக் காட்டில் கடுமுள் மரத்துக்கும்
உண்ணும் படி தண்ணீர் ஊட்டுவார் - எண்ணும்
நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்
தமக்குந் தொழிலதுவே தான்.”

இவ்வெண்பா, கபிலர் பிறந்த போது பாடித்தாயைத் தேற்றிய வெண்பா வெனக் கூறப்படுகிறது. என்னே கடவுளின் திருவருட்பெருக் கிருந்தவாறு! இத்தகைய சீருஞ்சிறப்பும் செறிவும் நிறைவும் திட்பமும் நுட்பமும் உடைய அழகிய வெண்பாப் பாடுதற் கமைந்த திருவருளிருக்க, ஏழாண்டுக்குள் மீண்டும் கடவுட்டிருவருள் பெறுவானேன்? அன்றடைந்த புலமை என்னானது? அப்பொழுதே நீங்கிவிட்ட தெனின், அத்திருவருனிள் பெருமைப் பாடு எத்தகையது? கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போற் றோன்றி அப்போதே மருங்கறக் கெட்டுவிடுவதா திருவருளின் தன்மை?

இரண்டாண்டுப் பருவத்தில் திருவருள் பெற்ற மெய்கண்ட தேவரும் (சிவஞானபோத ஆசிரியர்), மூன்றாண்டுப் பருவத்தில் திருவருள் பெற்ற திருஞான சம்பந்தரும், ஐந்தாண்டுப் பருவத்திலே திருவருள் பெற்று ஊமை நீங்கிப் புலமையுற்றுக் கவிபாடிய குமரகுருபரும் என்றும் அப்புலமை நீங்காமல் அப்படியே விளங்கியிருந்ததாகக் கூறும்போது கபிலருக்கு மட்டும் பிறந்த போது பெற்ற திருவருட்பேறு நீங்கி மறுபடியும் அப்பேறு பெறவேண்டியதன் காரண மென்ன?

எனவே, கபிலரகவல் ஏழாண்டுச் சிறுவனான கபிலன் பாடினானென்பதும், கபிலன் கூற்றைக் கேட்ட பார்ப்பன முதியோர் தங்கள் கொள்கையை விட்டுப் பூகல் சடங்கு செய்ய உடன்பட்டனர் என்பதும் கட்டுக் கதையேயாகும். இன்னார் பிள்ளை யென்றே தெரியாத போது உடன்படாத அப்பார்ப்பன முதியோர், புலைச்சி பிள்ளை என்பதை அறிந்த பின் எங்ஙனம் உடன்படுவர்?

இனி, கபிலர் பாடியதாகக் கூறப்படும் அவ்வகவற் பாவில் கபிலர் தன்னைப் பற்றியும், தன் உடன் பிறந்தாரைப் பற்றியும், தன் பெற்றோரைப் பற்றியும், விளக்மாகக் கூறுகிறார். அப்பகுதிதான் இங்கு ஆராய்ச்சிக்குரியது.

“பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்!
அருந்தவ மாமுனி யாம்பக வற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றில் அன்றவ தரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே
என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில்
ஆண்பால் மூவர், பெண்பால் நால்வர்
யாம்வளர் திறஞ்சிறி தியம்புவல் கேண்மின்!
ஊற்றுக் காடெனும் ஊர்தனில் தங்கியே
வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்தில் கள்வினைஞர் சேரியில்
சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள்.
நரம்புக் கருவியோர் நண்ணீடு சேரியில்
பாண ரகத்தில் ஒளவை வளர்ந்தனள்.
குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்.
தொண்டைமண் டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறைய ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்.
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி
அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன்.
பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில்
அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்”

(—கபிலரகவல்)

அருளிளங் கவியாகிய கபிலரோ தம்மைக் கடைசிப் பிள்ளையெனக் கூறிக்கொள்கிறார். தம் அக்கைமார்களையும் அண்ணன்மார்களையும் வரிசையாகக் கூறுகிறார். அருட்கவி யல்லவா!

ஊற்றுக்காடு, காவிரிப்பூம் பட்டினம், வள்ளி வளர்ந்த திருத்தணிகை, மயிலை, வஞ்சி, திருவாரூர் ஆகிய ஊர்களோ ஒன்றுக்கொன்று நூற்றுக்கணக்கான கல் தொலைவில் உள்ளவை. உப்பை முதலியோர் பெற்றோராகிய ஆதியும் பகவனும், இவர்களைப் பெற்ற அப்பொழுதே, இவர்கள் பிறந்த அவ்விடத்திலே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அப்பிள்ளைகளை யார் யார் எடுத்து வளர்த்தனர், அல்லது அப்பிள்ளைகள் என்னாயின என்பது அப்பெற்றோர்க்கே தெரியாது. என்னவோ பிள்ளை பெற்றோம் என்பதுதான் அவர்கட்குத் தெரியும். அக்காலத்தோ ஊரி, தொடர்வண்டி, அஞ்சல் முதலிய போக்குவரத்து வசதிகள் ஒன்றும் இல்லை. இப்பிள்ளைகளை எடுத்து வளர்த்தவர்களுக்கும் இவர்கள் இன்னாருடைய பிள்ளைகள் என்பது தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் இவர்களை அவர்கள் எடுத்து வளர்த் திருக்கவே மாட்டார்கள்.

கபிலருடைய வளர்ப்புத் தந்தைக்கே கபிலர் இன்னாரு டைய பிள்ளை என்பது தெரியாதல்லவா? ‘யாரோ பாவம்! பெற்றுவைத்து விட்டுச் சென்று விட்டனர். என்ன காரணமோ, யார் கண்டார்? பச்சைக் குழந்தை பாவம்! தனியாகக் கிடக்கிறது’ என்றுதானே எடுத்துப்போய் வளர்த்து வந்தனர்? பார்ப் பானுக்கும் பறைச்சிக்கும் பிறந்த குழந்தையென்று தெரிந்திருந் தால் அவர் கையால் தொட்டிருப்பாரா என்ன? அதன் பக்கத்தில் கூடப் போயிருக்க மாட்டாரல்லவா?

இவ்வாறிருக்க, கபிலருக்கு எப்படித் தெரியும் தன் உடன் பிறந்தார் அறுவரின் பேரும், அவர் பிறந்து வளர்ந்துவரும் ஊரும், எடுத்து வளர்த்து வருபவர் சாதியும் அவ்வளவு பொட்டுக் குறித்தாற் போல? தன் அண்ணன்மார் ஊர்கட்கும் அக்கைமார் ஊர்கட்கும் அடிக்கடி போய் வருபர்போலல்லவோ கூறுகிறார்? எங்கேயோ ஒரு மூலையில் உள்ள ‘ஊற்றுக் காடு’ என்னும் சிற்றூர் கூடத்தெரிந்திருப்பதைப், பார்த்தால், உலக வரலாற்றையே இன்றுவரை அன்றே இவர் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார் போலல்லவோ தோன்றுகிறது?

கபிலரகவல் என்னும் நூல், நமது ஏழாண்டுச் சிறுவனான கபிலன் பாடியதன்று; வேறு கபிலரும் பாடியதன்று. அது பிற்காலத்தே யாரோ ஒருவரால் பாடப்பட்டது. அவரோ அல்லது வேறொருவரோ வள்ளுவர் வாழ்க்கைக் குறிப்புக்காக, இப்பகுதியைப் பாடி அதில் சேர்த்துவிட்டனர் என்பதில் ஐயமில்லை. இதற்கு அவ்வகவலிலேயே சான்றுகள் பலவுள்ளன.

‘உப்பை வளர்ந்தனள், உறுவை வளர்ந்தனள், வள்ளுவர் வளர்ந்தனர், அதிகமான் வளர்ந்தனன்’ என இறந்த காலத்தால் கூறுவதை நோக்கினால், அன்னார் காலத்திற்கு நெடுங் காலத்திற்குப் பின்னர் இருந்த ஒருவர் பாடியதென்பது வெளிப் படை. அதிய மான் கபிலர்க்கு ஓரிரண்டு ஆண்டுக்கு முன்னரும் வள்ளுவர் கபிலர்க்கு மூன்றல்லது நான்காண்டுகட்கு முன்னருந்தானே பிறந்திருப்பார்? கபிலருக்கு ஏழாண்டென் றால், அதிகமானுக்கும் வள்ளுவருக்கும் முறையே எட்டு, பத்து ஆண்டுகள் தானே இருக்கும்? அப்படியிருக்க, வளர் கின்றான், வளர்கின்றார் என நிகழ்காலத்தால் கூறுவதுதானே பொருத்தமுடையதாகும்? ஏதோ நெடுங்காலத்திற்கு முன் இருந்தவர்களைப் போல, ‘வளர்ந்தனன், வளர்ந்தனர்’ என்பதே கபிலருக்கும் இக்கூற்றுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை யென்பதற்குச் சான்றாகும்.

மேலும், பகவனுக்கு, ‘அருந்தவ மாமுனி’ என்ற அடையும், ஆதிக்கு, ‘பெரும் புலைச்சி’ என்ற அடையும் கொடுத்திருப்பதே இது கபிலர் கூற்று அல்லவென்பதைத் தெள்ளத்தெளியக் காட்டுவ தாகும். தந்தையை, ‘அருந்தவ மாமுனி’ என்று உயர்த்திக் கூறிவிட்டு, பத்து மாதஞ் சுமந்து பெற்ற தாயை, ‘பெரும்புலைச்சி’ என்று அவ்வளவு இழிவுபடக் கூறுவதா பிள்ளைக் கழகு? தாய் இன்னார் என்று தான் கபிலர்க்குத் தெரியாதே. மேலும், பார்ப்பனப் பிள்ளையல்ல வென்று பூQற் சடங்கு செய்ய மறுப்போரிடம், பெரும்புலைச்சி பெற்ற பிள்ளை என்று தன்னைக் கூறிக் கொள்வது எங்ஙனம் அறிவோடு பட்டதாகும்? பகவன் உயர் குலத்தினன் என்பதையும் ஆதிஇழிகுலத்தினள் என்பதையும் காட்டற் கெழுந்த தேயாகும் இக்கூற்று.

இனி, வள்ளுவரை, ‘வளர்ந்தனர்’ எனவும், ‘அதியமான் வளர்ந்தனன்’ எனவும் கூறியிருப்பதிலிருந்தே இது வள்ளுவரைப் பற்றி, வள்ளுவர் வாழ்க்கை வரலாறு பற்றிப் பிற்காலத் தொருவர் கூறிய கூற்றேயென்பதும், கபிலர் கூற்று அல்ல வென்பதும் தெளிவாகும். வள்ளுவரைப் புலவர் நிலையில் வைத்து ‘வளர்ந்தனர்’ என உயர்வுப் பன்மையாகவும், அதியமானை அரசன் நிலையில் வைத்து ‘வளர்ந்தனன்’ என ஒருமையாகவும் கூறுகிறார். இது தன்காலத்தவரான, தனக்கு இரண்டு மூன்றாண்டுகட்கு முன் பிறந்தவரான தன் அண்ணன்மார் களைப் பற்றிக் கபிலர் கூறிய கூற்றேயாகாது. எனவே இப்பகுதி வள்ளுவர் வரலாற்று நாடகத்திற் காகவே அண்மைக் காலத்திலிருந்த ஒருவரால் பாடிக் கபிலரக வலிற் சேர்க்கப்பட்ட தென்பதில் சிறிதும் ஐயமில்லை. பெற்றோர் இன்னார் என்று தெரியாது ஐயுற்றுச் சடங்கு செய்ய மறுத்த மறையவர்களிடம், ‘பெரும்புலைச்சி கான்முளை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே இது கபிலர்கூற்றல்லவென் பதற்குச் சான்றாகும்.

கபிலர், வள்ளுவர் காலத்தே இருந்த கடைச்சங்கப் புலவருள் ஒருவராவர். கடைச்சங்க நூல்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய மூவகை நூல்களிலும் கபிலர் பாட்டுக்கள் உள்ளன. ‘கபிலரது பாட்டு’ என்னும் இலக்கண எடுத்துக்காட்டு இவரது புலமைத் திறனைப் புலப்படுத்தும். இவர் பாடிய பாட்டுக்கள் எதிலும் கபிலர் அகவல் போன்ற புரட்சிக் கருத்துக்கள் இல்லை.

கபிலர் கடைச்சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மரில் (49) ஒருவராவர். திருக்குறள் அரங்கேற்றியபோது சங்கப் புலவர்கள் 49 பேரும் திருவள்ளுவரையும் திருகுறளையும் புகழ்ந்து ஒவ்வொரு வெண்பாப் பாடினர். அவ்வெண் பாக்கள். திருவள்ளுவமாலை என்னும் பெயருடன் வழங்குகின்றன. திருவள்ளுவமாலையின் ஐந்தாவது பாட்டான ‘தினையளவு போதா’ என்பது கபிலர் பாடிய வெண்பா வாகும். அதில், ‘வள்ளுவனார்’ வெள்ளைக் குறட்பா விரி என, மற்ற புலவர்கள் போலவே இவரும் வள்ளுவரைப் பொதுவாகவே கூறுகிறார். வள்ளுவரின் ஊர்பேர் முதலியன வெல்லாந் தெரிந்திருந்த கபிலர் வள்ளுவரைக் கண்டதும், வள்ளுவர் தம்மை இன்னார். இன்ன ஊர் எனச் சொன்னதும் அளவிலா மகிழ்ச்சி கொண்டு, ‘என் உடன்பிறந்தார், என் அண்ணார்’ என்று சங்கப் புலவர்களிடம் வள்ளுவரை அறிமுகம் செய்திருப் பாரல்லவா? ஒன்று விட்ட, அல்லது தூரத்துப் பங்காளி ஒருவர் செல்வத்திலோ, கல்வியிலோ, அதிகாரத்திலோ சிறப்புற் றிருந்தால், ‘எங்கண்ணன்’ என்று உரிமை கொண்டாடுதல் மக்களியல்பாயிருக்க, தமிழ்ச் சங்கமே புகழும் அத்தகு சிறப்புடைய வள்ளுவரை, ‘எங்கண்ணா’ என்று உரிமை பாராட்டாமல், பிறர் போல, மூன்றாமவன் போல, ‘வள்ளுவனார்’ என்றா கூறியிருப்பர்?

“தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி”

என்பதை,

“வள்ளைக் குறங்கும் வளநாட எம்முன்னோன்
வெள்ளைக் குறட்பா விரி”

என்றல்லவோ பாடியிருப்பார்?

இனி, இக் கபிலர் இளமையில் கபிலரகவல் பாடியிருந் தால், தமது தோழர்களான சங்கப் புலவர்களுக்கு அதைக் காட்டாமலா இருந்திருப்பர்? அப்புலவர்கள் அவ்வகவலைப் படித்திருந்தால் வள்ளுவரைப் பற்றி முன்னரே அறிந்திருப்பார் களல்லவா: மேலும், தாம் பாடிய மற்ற பாக்களை அரங்கேற்றிய கபிலர், அவ்வகவலையும் அரங்கேற்றியிருப்பாரல்லவா? அப்படி அரங் கேற்றியிருந்தால், நாற்பத்தெண்மரில் ஒருவராவது வள்ளுவர் கபிலருடன் பிறந்தவர் என்று குறிப்பிடாமலா இருந்திருப்பர்? தாம் பாடும் பாட்டுக்களிலெல்லாம் ஏதாவ தொரு வரலாற்றுக் குறிப்பைக் கூறும் சிறப்புடைய கபில பரணர், எனக் கபிலருடன் உடனெண்ணப்படும், கபிலரது நண்பரான பரணர் கூறாமலா இருந்திருப்பர்; மற்றும், திருக்குறள் அரங்கேற்றத்தின் போது அங்கு வந்திருந்த ஒளவையாரைப் பற்றியும் கபிலர் இன்னா ரென்று - தம்முடன் பிறந்தாரென்று தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

திருவாலங்காட்டில் சிவன் ஆடிய திருக்கூத்தை மயிலையி லிருந்த படியே கண்டு களித்த வள்ளுவருக்கே கபிலர் தம் உடன்பிறந்தவர், ஒளவை தம் உடன்பிறந்தவர் எனத் தெரியா திருக்க, கபிலருக்கு மட்டும் எப்படி வள்ளுவர் முதலியோரைத் பற்றித் தெரிந்திருக்கக் கூடும்? வள்ளுவர் திருவருட்டிறனை விடவா கபிலர் திருவருட்டிறன் சிறந்தது?

மேலும், சங்ககால வள்ளல்களிலொருவனான தகடூர் அதிகமானே கபிலருடன் பிறந்தானென்னும் அதிகமானாவான். ‘அரும்பார் சோலைச் சுரும்பார் தகடூர்’ என்பதே ‘வஞ்சி’ என மாறியிருக்கலாம் போலும்! அல்லது கொங்கு நாட்டுக் கருவூருக்கு ‘வஞ்சி’ என்ற பெயரும் உண்டு. அதியமானை எடுத்து வளர்த்த அதியமான் தகடூரிலிருந்து அவ்வஞ்சி வரையிலும் ஆண்டிருக் கலாம். ஒளவையார் அதியமானுக் காகத் தொண்டை மானிடம் தூது சென்றுள்ளார். அதியமான் ஒளவைக்கு அருநெல்லிக் கனி கொடுத்துப் போற்றியுள்ளான். ஆனால், ஒளவையார்க்கு அதிய மானும் தானும் உடன் பிறந்தவர் என்பது தெரியாது.

எனவே, ‘கபிலரகவல்’ என்பது, திருவருள் பெற்ற ஏழாண்டுச் சிறுவனான கபிலன் பாடிய தன்று. கபிலரகவலில் வரும் ஆதிபகவன் மக்களான உப்பை உறுவை முதலியோர் வரலாறு வள்ளுவரின் போலிக் கதைக்காகப் பிற்காலத்தே எழுதிச் சேர்க்கப்பட்டதாகும். அல்லது கபிலரகவலே, இப்போது உள்ளபடி - வள்ளுவர் பிறப்பு வளர்ப்பெல்லாம் கூறும் பகுதியுடன் - பிற்காலத்தில் ஒருவர் பாடி, இளங்கவிஞனாகிய கபிலன் பாடினது என எழுதி வைத்ததேயாகும்.

இத்தகைய கற்பனைக் கதைகள், ‘நெல்லிடை முளைக்கும் புல்’ போன்ற போலிக் கூற்றுக்கள் தமிழர் வரலாற்றிடை நிரம்ப வுள்ளன. அப்போலிப் பொய்க் கூற்றுக் களான புற்களைக் களைந்து தமிழர் வரலாறென்னும் நெற் பயிரை வளமுற வளர்ப்பது தமிழறிஞர் பெரு மக்களின் நீங்காக் கடமையாகும். உடனடியாகத் தமிழர் வாழ்க்கை வரலாற்று நெல்லிடைப் புல்லாகியபோலிப் பொய்க் கூற்றுக்களைக் களைந்தெறி வோமாக.